வீரமணியின் சமூக விரோதப் பேச்சு

இந்திய சமூகமும் அரசியலும் சமூக விரோதிகள் மற்றும் கிரிமினல்களின் கைகளுக்குப் போய் எத்தனையோ காலமாகி விட்டது.  கிருஷ்ணர் பற்றிய வீரமணியின் பேச்சு அதற்கு ஒரு உதாரணம்.  ஏற்கனவே இந்திய சமூகம் மதவெறியர்களிடம் மாட்டிக் கொண்டிருக்கிறது.  இந்து மற்றும் முஸ்லீம் தீவிரவாதிகள் சமூகத்தின் சமநிலையைக் குலைக்கத் துவங்கி விட்டனர்.  மோடி ஆட்சியில் இந்துத் தீவிரவாதம் ஒருங்கிணைக்கப்பட்டு வருகிறது.  இந்த நிலையில் பொள்ளாச்சி பாலியல் கொடுமைகளோடு இந்துக் கடவுள் கிருஷ்ணரை சம்பந்தப்படுத்திப் பேசியிருக்கும் வீரமணியின் சமூக விரோத செயலை முதல்முதலில் முஸ்லீம்களும் முஸ்லீம் அமைப்புகளும்தான் கண்டித்து இருக்க வேண்டும்.  அது நம் நாட்டில் நடக்காது.  இதே வீரமணி மற்ற மதங்களின் புனிதர்களைப் பற்றி இப்படிப் பேசுவாரா?  பேசினால் தலை உடம்பில் இருக்காது என்று அவருக்கு நன்றாகவே தெரியும்.  அப்படியிருக்கும்போது நாங்கள் மட்டும் என்ன இளிச்சவாயர்களா என்று கேட்கும் இந்து மதவெறிக்கு மட்டுமே வீரமணியின் பேச்சு உதவி செய்யும்.  அதனால்தான் சமூக ஒழுங்கைக் குலைக்கும் சமூக விரோதி வீரமணி என்று குறிப்பிடுகிறேன்.

வீரமணி இந்துக்களிடம் உடனடியாக மன்னிப்புக் கேட்க வேண்டும்.  இல்லாவிட்டால் தமிழக அரசு ஜாமீனில் வர முடியாத பிரிவில் வீரமணியைக் கைது செய்ய வேண்டும்.

என் வார்த்தைகளை இந்துத்துவ ஆதரவுக் குரலாக எடுக்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்.  நான் சகலவிதமான மதவெறிக்கும் எதிரானவன்.  என்னைப் பொறுத்தவரை எல்லா மதங்களும் எல்லா கடவுள்களும் சமமாக பாவிக்கப்பட வேண்டியவர்களே.  எந்த ஒரு கடவுள் நம்பிக்கையாளரின் உணர்வுகளையும் அவமதிக்க எவருக்கும் உரிமை கிடையாது.  விஸ்வரூபம் படத்தை அப்படத்தின் இஸ்லாமிய விரோதப் போக்குக்காக நான் கடுமையாக கண்டித்தவன் என்பதை இங்கே நினைவு கூரவும்.