கடல் கன்னி

ரொஹேலியோ சினான்

பனாமா நாட்டைச் சேர்ந்த Bernardo Domínguez Alba என்பவரின் புனைப்பெயர் ரொஹேலியோ சினான் (Rogelio Sinán 1902-1994). 1938-ஆம் ஆண்டு கல்கத்தாவில் பனாமா நாட்டுத் தூதராக நியமிக்கப்பட்டவர். பிறகு தொடர்ந்து பல ஆசிய நாடுகளில் பனாமாவின் தூதராக இருந்தார். பனாமா திரும்பிய பிறகு பல்கலைக்கழகத்தில் நாடகப் பேராசிரியராக இருந்தார். கவிதை, நாடகம், நாவல் மற்றும் சிறுகதைகள் எழுதியிருக்கிறார். இவரது ‘சிவப்புத் தொப்பி’ என்ற கதை இங்கே ‘கடல் கன்னி’ என்ற பெயரில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.  இந்தக் கதையை நான் 1980வாக்கில் தில்லியில் படித்தேன்.  படித்த போதே உலகின் மிகச் சிறந்த நூறு கதைகளில் ஒன்று எனத் தோன்றியது.  அதற்குப் பிறகும் கூட அவ்வப்போது இந்தக் கதையைப் படிப்பது வழக்கம்.  பனாமா  நகரத்திலிருந்து 20 கி.மீ. தூரத்தில் உள்ள Taboga தீவில் பிறந்தவர் ரொஹேலியோ சினான்.  இன்னமும் இவர் வாழ்ந்த வீட்டை அப்படியே பாதுகாக்கிறார்கள்.  உலகத்தில் உள்ள எல்லா ஊர்களோடும் இவ்வாறுதான் நான் ரத்த பந்தம் உள்ளவனாக மாறுகிறேன்.  இந்த ஆயுளில் பனாமா போக நேர்ந்தால் பனாமா நகரிலிருந்து 20 கி.மீ. தூரத்தில் உள்ள தபோகா தீவுக்குப் போய் ரொஹேலியோ சினான் வாழ்ந்த வீட்டைப் பார்க்க வேண்டும்.  தபோகா தீவு இப்போது பெரியதொரு சுற்றுலாத் தீவாகத் திகழ்கிறது.

பனாமா நாட்டுக்கும் நமக்கும் என்ன தொடர்பு?  பனாமா பிளேடு, பனாமா சிகரெட், பள்ளிக்கூடங்களில் படித்த பனாமா கால்வாய்.  ஆனால் எனக்கு பனாமாவோடு ரொஹேலியோ சினான் மூலமாகத் தொடர்பு உண்டானது.  ஒரு ஆன்மீகவாதிக்கு அவருடைய புனித நூல் எப்படியோ அப்படி ஒரு புனிதப் பிரதியாக எனக்கு இந்தக் கதை தோன்றுகிறது.  இப்படி ஒரு கதையை ஒரு மனிதனால் எழுத முடியுமா?  இந்த ரொஹேலியோ சினான் முப்பதுகளில் நம் கல்கத்தாவில் பனாமாவின் தூதராக எல்லாம் இருந்திருக்கிறார்.   பாப்லோ நெரூதா கூட கல்கத்தாவில் சீலேவின் தூதராக இருந்தார் என்று நினைக்கிறேன்.  பின்னர் இலங்கையில் தூதராக இருந்தார்.  ரொஹேலியோ சினான் பற்றி இன்னும் அதிகம் தெரிந்து கொள்ள விரும்புகிறேன்.  விக்கிபீடியாவில் கூட அவரைப் பற்றி நாலைந்து வரிகளே உள்ளன.  இந்தக் கதையை நான் தொண்ணூறுகளில் மொழிபெயர்த்ததாக ஞாபகம்.  கோணங்கியின் கல்குதிரையில் வெளிவந்தது.  இந்தக் கதையைப் படித்து விட்டு கோணங்கி நீண்டதொரு கடிதம் போட்டான்.

ரொஹேலியோ சினான் பற்றி விக்கியில் உள்ள நாலைந்து வரிகளைத் தவிர மற்ற விவரங்களை எப்படித் தெரிந்து கொள்வது என்று உங்களில் யாருக்காவது தெரியுமா?  அவரைப் பற்றி ஏதேனும் நூல்கள் வந்துள்ளனவா?

கடல் கன்னியைப் படியுங்கள்.  என்னுடைய மொழிபெயர்ப்புத் தொகுதியான ஊரின் மிக அழகான பெண் நூலில் இந்தக் கதை இருக்கிறது.  இன்னும் ஓரிரு மாதங்களில் இது புத்தகமாக ஸீரோ டிகிரி பதிப்பகத்திலிருந்து உங்களுக்குக் கிடைக்கும்.  இந்தக் கதையை உங்கள் வாழ்நாளில் ஒருபோதும் மறக்க இயலாது என்பதை உறுதியாகச் சொல்லுவேன்.

கடல் கன்னி

சிறுகதை

ரொஹேலியோ சினான்

 

“இதோ பாருங்கள் டாக்டர் பால் எக்கர், இந்த வழக்கில் உங்கள் மீது நாங்கள் காட்டியிருக்கும் பொறுமைக்கு நீங்கள் இப்போது சாதிக்கும் மௌனம் எந்த விதத்திலும் நியாயமாக இல்லை. நீதிக்குத் தேவை அழுத்தமான ஆதாரங்கள் என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். ஆனால் நீங்கள் ஏன் இப்படி மௌனம் சாதிக்கிறீர்கள் என்பதை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை.”

பால் எக்கர் தன் பச்சை நிறக் கண்களால் சூன்யத்தை வெறித்துக் கொண்டிருக்கிறார். மிகவும் வெக்கையாக இருப்பதுபோல் தோன்றுகிறது. வியர்த்துப் போகிறது. இடையிடையே, பெரிய மின்விசிறி வெளித்தள்ளிய சிறிதளவு காற்று அவருடைய தாடியின் சிவந்த முடிகளைக் கலைக்கிறது.

(…அந்தச் சிறிய தீவில் அவ்வளவு வெக்கை இல்லை. கடலோரத்தில் பாறை மீது அமர்ந்திருப்பது மிகவும் இனிமையாக இருக்கும்… முடிவேயில்லாமல் தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்கும் பரந்த அந்த நீர்ப்பரப்போடு கலந்து மூழ்கிப் போகும் பார்வை… லாவகமாகத் துள்ளிக் குதிக்கும் சுறாக்களின் விளையாட்டு… அலைத்துளிகளை முகத்தின் மீது பனித்துகள்களாய் விசிறிவிடும் காற்றின் வருடல்…)

“டாக்டர், ஒரு பிரபலமான உயிரியல் நிபுணர் மற்றும் மருத்துவர் என்ற முறையில் உங்களுக்கு இருக்கும் சமூக அந்தஸ்தை மட்டும் நாங்கள் கவனத்தில் கொள்ளவில்லை. மிகவும் பிரபலமான மனிதர்கள், பல்கலைக்கழகங்கள், கல்வி நிறுவனங்கள், கலைக்கூடங்கள் என்று ஏராளமான இடங்களிலிருந்து உங்களை மன்னிக்கும்படி வந்து கொண்டிருக்கும் வேண்டுகோள்களைப் பற்றியும் நாங்கள் யோசிக்கிறோம்… லண்டனிலிருந்தும், புவனோஸ் அய்ரஸிலிருந்தும், ஸ்டாக்ஹோமிலிருந்தும், பாரிஸிலிருந்தும் வந்து குவிந்திருக்கும் இந்தக் கடிதங்களைப் பாருங்கள்…  இரண்டு வருடங்களுக்கு முன் ஸோர்போனில் கூடிய மீனியல் ஆய்வு பற்றிய மாபெரும் சர்வதேச மாநாட்டுக்கு நீங்கள் தலைமை தாங்கியிருக்கிறீர்கள்; உங்களுக்கு நினைவிருக்கிறதா?… பரவாயில்லை, குறைந்தபட்சம் முறுவலிக்கிறீர்களே!”

(ஸோர்போன்!… ஆம், அங்குதான் அவர் அவளைப் பார்த்தார்… ஒரு அப்பாவிச் சிறுமியைப் போல் இருந்தாள். என்ன ஒரு மயக்கும் வசீகரம்! அவரை அதீதமாகக் கவர்ந்திழுத்தது அவளுடைய கருநீல குட்டைப் பாவாடையும், தலையின் ஒரு பக்கம் சாய்ந்திருந்த சிவப்புத் தொப்பியும்தான்…. “எனக்கு உங்கள் கையெழுத்து மட்டும் வேண்டும்” என்று சொன்னாள். “என் பெயர் லிண்டா ஆல்சன், ஸோர்போனில் படித்துக் கொண்டிருக்கிறேன். எனக்கு விஞ்ஞானத்தில் ஆர்வம் அதிகம். மேடம் க்யூரியைப் போல் நான் பிரமிக்கத்தக்க சாதனைகளைச் செய்ய வேண்டும்…” “நீங்கள் எந்த மாநிலம்?” “நான் அட்லாண்டா.”)

பால் எக்கர் நடுங்குகிறார். அந்த நடுக்கம் மின்விசிறியிலிருந்து வந்த காற்றினாலா அல்லது மறக்க நினைத்து முடியாமல் போன வேறு பல விஷயங்களினாலா என்று அவருக்கே தெரியவில்லை.

நீதிபதி தொடர்கிறார்: “கருணை காட்டச்சொல்லி அவர்கள் எங்களை இந்தக் கடிதங்களில் வற்புறுத்துகிறார்கள்… மீனியல் ஆய்வில் நீங்கள் செய்திருக்கும் சாதனைகளைப் பற்றிக் குறிப்பிடுகிறார்கள். மேலும், ஜான் ஹாமில்டன் சொல்வதுபோல Monograph on the Erotic Life of Fish என்ற உங்களுடைய நூலின் முக்கியத்துவம் பற்றியும், அதில் சில ஜீவராசிகள் முட்டையிடும் பருவத்தில் அடையும் நிற மாற்றங்களுக்கும் நிலவின் வளர்ச்சி நிலைகளுக்கும் இடையே உள்ள தொடர்பை நீங்கள் விளக்கியிருப்பதைப் பற்றியும் குறிப்பிடுகிறார்கள்.

(….அவர் அவளை மறுபடியும் பென்சில்வேனியாவில் சந்தித்தது ஜான் ஹாமில்டனின் தவறுதான்… “என்னை ஞாபகம் இல்லையா? நான்தான் லிண்டா ஆல்சன், சிவப்புத் தொப்பி அணிந்திருந்த பெண்!… என்னை ஞாபகம் இருக்கிறதா, டாக்டர்? இப்போதைக்கு நான் சிவப்புத் தொப்பியும், நீல ஸ்கர்ட்டும் அணிந்திருக்கவில்லை… மூக்குக் கண்ணாடியோடு எப்படி இருக்கிறேன்? ரொம்பவும் சீரியஸ் டைப்பாகத் தெரிகிறேன், இல்லையா? ஒருவேளை அதனால்தான் உங்களுக்கு என்னை அடையாளம் தெரியவில்லையோ…”

“பாரீஸில் பல சமயங்களில் நாம் இருவரும் சேர்ந்து வாக்கிங் போனதை என்னால் ஒருபோதும் மறக்க முடியாது… இலையுதிர்காலத்தில் அங்கே இலைகள் எப்படி உதிர்ந்தன என்று உங்களுக்கு நினைவிருக்கிறதா?… மாலை நேரங்களில் ஸெய்ன் நதியின் படகுகளில் நாம் சென்ற சவாரி ஞாபகம் இருக்கிறதா? ஈஃபிள் டவரின் உச்சியில் கழித்த அந்த இனிமையான மதிய நேரம்? அந்தப் படத்தை நான் வீட்டில் வைத்திருக்கிறேன்.”

“சரி டாக்டர், நான் உங்களை அதிகம் தொந்தரவு செய்ய விரும்பவில்லை… சுருக்கமாகச் சொல்லிவிடுகிறேன். செயற்கை மீன் வளர்ப்பு நிறுவனம் உங்களை பனாமாவுக்கு அருகில் பவளத் தீவுக் கூட்டத்திற்கு மீன்களைப் பற்றி ஆய்வு செய்வதற்காக அனுப்புவதை செய்தித்தாளில் பார்த்து விட்டு உங்களைச் சந்திப்பதற்காக இங்கே வந்திருக்கிறேன்.

“ஆண்டு முழுவதும் மிதமான சீதோஷ்ணத்தை அனுபவிப்பது எவ்வளவு அற்புதமான விஷயம்! கடல், சூரியன், காற்று என்று இயற்கையோடு நெருக்கமாகவும், சுதந்திரமாகவும் உறவாடக் கூடிய அந்த சூழல்!… நீங்கள் என்னையும் உங்களோடு அழைத்துச் செல்ல வேண்டும்! நான் உங்களுக்கு உதவியாளராக இருப்பேன்.”

“டாக்டர், நான் உங்களைக் கெஞ்சிக் கேட்டுக் கொள்கிறேன். என்னுடைய இந்த வேண்டுகோளுக்குக் காரணங்கள் உண்டு. நான் இப்போது மிகவும் மனம் உடைந்திருக்கிறேன். உங்களால் முடியாவிட்டால் சொல்லி விடுங்கள். நான் பாரிஸில் கல்லூரிப் படிப்பை முடித்தவள் என்று உங்களுக்குத் தெரியும். ஆனால் எனக்கு அது பயன்படவில்லை…”

“நான் இன்னும் வேலையில்லாமல்தான் இருக்கிறேன். ஜான் ஹாமில்டனிடமிருந்து எனக்கு ஒரு வாய்ப்பு வந்தது என்பதை மறுக்க முடியாது. ஆனால் என்ன ஒரு அவமரியாதை! கற்பனை செய்து பாருங்கள், வெள்ளையர் அல்லாத ஒருவருக்கு உதவியாளராக நான்! நிச்சயமாக அவர் பிரபலமானவர்தான். அது எனக்குத் தெரியும். நோபல் பரிசுக்காக சிபாரிசு செய்யப்பட்டவர் என்பதும் தெரியும். ஆனால் இருந்தாலும்… உங்களுக்குப் புரியும் என்று நினைக்கிறேன் டாக்டர்…”)

நீதிபதி சங்கடத்தோடு நெளிகிறார். ஈரமான கைக்குட்டையால் தன் வழுக்கைத் தலையைத் துடைத்துக்கொள்கிறார். நிதானத்தை இழந்து விடாமல் இருக்க மிகவும் பிரயாசை எடுத்துக் கொண்டு பேசினார்: “இந்த விஷயங்களெல்லாம் நம்மைச் சற்று சலுகை காட்டத் தூண்டுகின்றன. இருந்தாலும் மிஸ் ஆல்சனின் தற்போதைய இருப்பிடம் பற்றிய தகவல் நமக்குத் தெரிந்தாக வேண்டும். அவர்கள் சபோகா கடற்கரையில் உங்களைக் கண்டுபிடித்த போது நீங்கள் இயல்பான நிலையில் இல்லை. அவளுடைய சிவப்புத் தொப்பியை நீங்கள் அணிந்து கொண்டிருந்திருக்கிறீர்கள். நார்நாராய்க் கிழிந்திருந்த உங்கள் உடை, மரக்கட்டைகளுடன் அலைகளோடு நீங்கள் போராடியதற்கு அடையாளமாக இருந்திருக்கிறது.”

”உங்கள் கைகளும் பாதங்களும் அடிபட்ட காயங்களோடு இருந்தன. ஆழமான ஒரு காயத்திலிருந்து வழிந்த ரத்தம் உங்கள் சட்டையின் ஒரு பகுதியை நனைத்திருந்தது. இயல்பு நிலைக்குத் திரும்பிய பிறகு விபத்தைப் பற்றி நீங்கள் முரண்பாடான விளக்கத்தைக் கொடுத்திருக்கிறீர்கள். கரையிலிருந்த மாலுமி நடந்த நிகழ்ச்சிகளைப் பற்றி புதுப்புது வதந்திகளைக் கிளப்பி விடுவதற்கும் இதுவே காரணமாக இருந்திருக்கிறது. சிறிய படகு உடைந்து விழுந்ததைப் பார்த்த சிலர் நீங்கள் எதிர்பாராமல் புயலால் தாக்கப்பட்டபோது மிஸ் ஆல்சனோடுதான் இருந்ததாக நினைத்திருக்கிறார்கள்.

நீங்களே உங்களை அறியாமல் சொன்ன, ஒன்றுக்கொன்று சம்பந்தமில்லாத சிறுசிறு தகவல்களைக் கொண்டு மற்றவர்கள் அனுமானித்துக் கொண்டிருக்கிறார்கள். அதாவது, நீங்களே மிஸ் ஆல்சனை சுறாக்கள் நிரம்பிய கடலில் தள்ளி விட்டு விட்டதாக. இதை ஏதோ ஒரு உணர்ச்சிவசப்பட்ட மனநிலையில் செய்துகொண்ட தற்கொலை என்றும் சிலர் நினைக்கிறார்கள்.”

(…நான் ஏன் அவளைக் கொல்லப் போகிறேன்? தற்கொலை? சாத்தியமே இல்லை! காரணங்களும் காரியங்களும் மிகவும் வித்தியாசமானவை; ஆனால் அது எல்லாமே படகு உடைந்ததால் ஏற்பட்ட மயக்கத்தின் விளைவுதான் என்ற சந்தேகத்தை எழுப்பாமல் எப்படி நான் ஒவ்வொன்றாக ஞாபகப்படுத்திச் சொல்ல முடியும்? முதுகுத் தண்டை சிலிர்க்க வைக்கும் அந்த எய்த்தியக் கிழவியின் சிரிப்பு இப்போது அவர் காதில் ஒலிக்கிறது. அது மட்டுமல்ல, லிண்டா ஆல்சனின் பாட்டும் கூட அலைகளினூடே நீராவிப் படகைப்போல் மிதந்து வருவதை அவரால் உணர முடிகிறது…)

“அதனால்தான் இந்த ஆரம்ப கட்ட விசாரணையைத் தனிமையில் நடத்த முடிவு செய்தோம். மிகவும் அவசியமானவர்கள் மட்டுமே இங்கு இருப்பார்கள். பத்திரிகையாளர்களுக்குக்கூட நாங்கள் அனுமதி அளிக்கவில்லை. இதெல்லாம் உங்களுக்குப் புரிகிறதா? விஞ்ஞானத்துறைக்கு அது பெரிய தர்மசங்கடத்தைக் கொடுக்கும். மீனியல் ஆய்வகத்திலிருந்து இதுபற்றி எங்களுக்குத் தந்தி மூலம் தெரியப்படுத்தினார்கள்.

பிரபலமான ஒருவர் சம்பந்தப்பட்ட இந்த விசாரணையை ரகசியமாக நடத்த வேண்டுமென்று வற்புறுத்தி வாஷிங்டனிலிருந்துகூட செய்தி வந்திருக்கிறது. இருந்தாலும் வழக்கமான சில நடைமுறைகளை நாங்கள் கடைப்பிடிக்காமல் இருக்க முடியாது.

எல்லாம் ஒரு வெளித்தோற்றத்திற்காக மட்டும்தான். பல்கலைக்கழகத்தில் உங்களுடைய சகாக்கள் நிச்சயப்படுத்தியிருப்பதிலிருந்து பார்த்தால் உங்களுடைய குற்றமற்ற தன்மையை நிரூபிக்கும் சாட்சியங்கள் ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை. அப்படியிருந்தாலும் நீங்கள் எங்களோடு ஒத்துழைக்க வேண்டும். ஏன் இப்படிப் பிடிவாதமாக மௌனம் சாதிக்கிறீர்கள்? உங்களுக்கு உதவி செய்வதற்காக நான் ஒன்றை ஞாபகப்படுத்துகிறேன்.

கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கு முன், நீங்கள் ஒரு மதிப்பிற்குரிய விஞ்ஞானியாக உங்கள் உதவியாளர் லின்டா ஆல்சனுடன் சபோகா ராணுவத் தளத்தில் வந்து இறங்கினீர்கள். அந்தத் தீவுக் கூட்டத்தின் நீண்ட கடலோரம் முழுவதும் விரிவான சோதனைகள் செய்து உங்கள் ஆராய்ச்சியைத் தொடர்வதற்காக வந்தீர்கள்!

‘. . . மீன்களின் உடலுறவு இல்லாத இனப்பெருக்கம் மற்றும் விதவிதமான வடிவங்களில் முட்டையிடும் சில குறிப்பிட்ட வகை மீன்களின் முட்டையிடும் பருவம் பற்றிய ஆய்வுகள்’ என்று ஆய்வுக் கூடத்தின் குறிப்பில் காணப்படுகிறது. ராணுவத்தளத்தின் கமாண்டர் தன் முழு ஒத்துழைப்பையும் உங்களுக்குத் தர முன் வந்திருக்கிறார். உங்களுக்கும் உங்கள் உதவியாளருக்குமான பிரத்தியேக உபயோகத்திற்காக அவர் ஒரு மோட்டார் படகும் கொடுத்திருக்கிறார். அதோடு ஜோ வார்ட் என்ற கறுப்பின மெக்கானிக்கையும், பென் பார்க்கர் என்கிற வெள்ளைப் படகோட்டியையும் உங்கள் உதவிக்காக நியமித்திருக்கிறார்.”

(பால் எக்கர் சபோகா ராணுவத்தளத்தில் தன்னைக் காண்கிறார். கமாண்டர் அவரை அன்புடன் வரவேற்றார். சிவப்புத் தொப்பி அணிந்திருந்த மிஸ் ஆல்சனைப் பார்த்ததில் சந்தோஷப்பட்டார். “அந்தச் சிறிய வறண்ட தீவு உங்களுக்கு சலிப்பைத் தரப்போகிறது,” என்றார். ஆச்சரியப்பட்ட மிஸ் ஆல்சன், “அப்படியானால் நாங்கள் இங்கே தங்கப் போவதில்லையா?” என்று கேட்டாள். கதவை நோக்கி நகர்ந்த கமாண்டர், “இல்லை, நீங்கள் இங்கே தங்கப் போவதில்லை. என்னோடு வாருங்கள்” என்று சொல்லி அவர்களை அழைத்துக் கொண்டு போய் அருகில் தெரிந்த சிறிய தீவை சுட்டிக் காட்டினார்.

“அங்கே பார்த்தீர்களா? கடலுக்குள்ளிருந்து அங்கங்கே பாறைகள் நீட்டிக்கொண்டிருக்கும் அந்தச் சிறிய தீவில்தான் ஆய்வுக்கூடம் இருக்கிறது. நீங்கள் அங்கே சௌகரியமாக இருப்பீர்கள். அந்தத் தீவில் சகல வசதிகளுடன் கூடிய ஒரு வீடு இருக்கிறது. கோழி வளர்த்துக்கொண்டு தோட்டத்தைப் பராமரிக்கும் யேயோ என்கிற எய்த்தியக் கிழவி அந்த வீட்டை மிகவும் சுத்தமாக வைத்திருக்கிறாள். அவளை எல்லோரும் ‘வூடூ’ என்றுதான் அழைக்கிறார்கள். புதிரான ஒரு மொழியைப் பேசுகிறாள் அவள். ஆனால் ஆங்கிலத்தைப் புரிந்துகொள்வாள்.

எது தேவையானாலும் அது உங்களுக்குக் கிடைக்கும்படிப் பார்த்துக் கொள்வாள். அதற்கு மேல் ஏதாவது தேவைப்பட்டால் ‘ஜோ’வை நீங்கள் என்னிடம் அனுப்பலாம். நல்ல பையன். அவன் உங்களுக்கு மிகவும் உபயோகமாக இருப்பான். அவனுக்குத் தெரியாததே எதுவுமில்லை என்று சொல்லலாம். அவன் ஒரு நல்ல சமையல்காரன், மெக்கானிக், மாலுமி. அது மட்டுமல்லாமல் இன்னொரு ஆச்சரியமான விஷயம் – அவன் பிரமாதமாக ‘பாஞ்ச்சோ’ வாசிப்பான்! பென் பார்க்கர் ஒரு நல்ல அசிஸ்டெண்ட். ஹார்மோனிகா வாசிப்பான். ஜோவும் கூடவே இருப்பான். எப்போதும் இரண்டு பேரும் ஒன்றாகவே சுற்றுவார்கள்.”)

நீதிபதி மலை போன்ற தன் உடலை அசைக்க, நாற்காலியின் பலகீனமான பகுதிகள் அகோரமாகக் கிறீச்சிட்டன.

“ஏனென்று என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. ஆனால் சில தினங்கள் கழித்து நீங்களே அந்த இரண்டு இளைஞர்களையும் விடுவிக்க வேண்டி கேட்டுக் கொண்டீர்கள் அல்லவா?”

“அவர்கள் குற்றமற்றவர்கள் என்பதற்கு சாட்சி இருந்தால், அவர்களுக்கு ஒரு தீங்கும் வராது. அதையும்விட – நான் ஏற்கனவே உங்களிடம் சொல்லியிருக்கிறேன் – இந்த விசாரணை மிகவும் ரகசியமாக நடத்தப் படுகிறது. இங்கு நீங்கள் சொல்லும் எதுவும் இந்த நான்கு சுவர்களை விட்டு வெளியேறாது. எனவே நீங்கள் நடந்தது எல்லாவற்றையும் சொல்லலாம்.”

“தீவில் எங்களுடைய ஆரம்ப நாட்கள் ரம்மியமானவை. வார்த்தைகளால் விளக்க முடியாதவை. வீடும் மிகவும் வசதியாக இருந்தது. கிழவி சமையலையும் வீட்டையும் கவனித்துக்கொண்டாள். நானும் லின்டாவும் மற்ற இரண்டு பையன்களோடு அழகான அந்தக் கடற்கரையில் பாறைக்குப் பாறை அலைந்து திரிந்துகொண்டிருந்தோம். பறவைகளின் பாடல்களும், அந்த இதமான சூழலும் சேர்ந்து எங்களுக்குள் தூண்டிய ஒரு அமானுஷ்யமான உணர்வை என்னால் வார்த்தைகளால் விவரிக்க முடியாது.

நான் என்னுடைய நேரத்தை விஞ்ஞானப் பரிசோதனைகளில் ஈடுபட்டு வீணடித்தேன் என்று சொல்லலாம். பென், ஜோ என்ற அந்த இரண்டு இளைஞர்களும் என் கருவிகளைச் சுமந்துகொண்டு என்னோடு அலைய வேண்டியதாயிற்று. தங்கள் நேரத்தை அவர்கள் அப்படித்தான் கழித்தார்கள்.

ஆனால் விம்மும் இளமைத் துடிப்பிலிருந்த லின்டாவோ சலிப்படைந்தாள். சமயங்களில் சிப்பிகளையும் சோழிகளையும் பொறுக்கிக்கொண்டு எங்கள் பின்னே வருவாள். ஆனால் மரங்களுக்கிடையே அலைவதுதான் அவளுக்குப் பிடித்திருந்தது. நாங்கள் இல்லாமல் அவளால் வீட்டில் தனியாக இருக்க முடியவில்லை என்பதுதான் காரணம். கிழவியைப்பற்றி அவளுக்கு ஒரு இனம் புரியாத பயமும் வெறுப்பும் இருந்தது. மதிய வேளைகளில் வேலை முடிந்த பிறகு நான் அவளோடு சேர்ந்து நடப்பது ஒரு இனிமையான அனுபவம்!

இன்னொன்றும் சொல்ல வேண்டும்.  வழக்கமான ஒரு காதல் விவகாரம் எங்களுக்குள் சாத்தியம் என்று நான் ஒருபோதும் நினைத்ததில்லை. அது ஒரு கேலிக்குரிய விஷயமாகியிருக்கும் அல்லவா? என்னுடைய வயதும், நான் மேற்கொண்டிருந்த வேலையும் என்னை அவளுடைய ஆசிரியர் என்ற நிலையில் நிறுத்தியிருந்தது. அதையும்மீறி இப்படி ஒரு விஷயம் நடந்துவிட்டது.”

தன் முகத்தில் தோன்றிய ஏளனச் சிரிப்பையும் எரிச்சலையும் அடக்கிக்கொண்டார் பால் எக்கர். அவருடைய உள்மனதைத் தான் தொட்டுவிட்டதை உணர்ந்துகொண்ட நீதிபதி தன்னிச்சையாய் அழைப்பு மணியை அழுத்தினார்.

“சற்று இளைப்பாறுங்கள் டாக்டர்.”

உள்ளே நுழைந்த பணியாளனிடம், “எங்களுக்குக் குளிர்ந்த நீர் கொண்டு வா,” என்று சொல்லிவிட்டு முகத்தைத் துடைத்துக்கொண்டார் நீதிபதி.

டாக்டர் எக்கர் மறுபடியும் தன் நினைவில் விரிந்த தொலைதூரத்துப் பசும்வெளியில் பார்வை கொண்டார்.

கடலோரப் பாறைகளிடம் தாங்கள் கண்ட அந்தரங்கமான அர்த்தத்தை இந்த கனத்த மனிதருக்கு எப்படிப் புரிய வைப்பது? வெப்ப மண்டல தேசத்தைச் சேர்ந்த ஒரு நாட்டுப் பாடலைப்போல், ஒரு முல்லை நிலச் சந்தத்தைப்போல் இனிமையைக் கொடுத்த அந்த அனுபவத்தை எப்படி அவர் மண்டைக்குள் ஏற்றுவது?

(அந்தச் சிறிய தீவின் இனிமையான இயற்கையழகில் ஈர்க்கப்பட்டு, கடலுக்கும் வானத்துக்கும் இடையில் இருந்த பிரமிப்பூட்டும் ஏகாந்தத்திலும், லின்டா ஆல்சனின் பீறிடும் உற்சாகத்திலும் மனமிழந்த டாக்டர் எக்கர் தான் இதுவரை கற்பனையிலும் கண்டிராத ஒரு உலகத்தில் இருப்பதாக உணர்ந்தார். ஒருவகை மாய உருமாற்றத்துக்கு உள்ளானார். அவரை ஒரு அதி தீவிர விஞ்ஞானியாகக் காட்டிய கூட்டைவிட்டு வெளியேறிய உடனே திடீரென்று சூரியக் கதிர் வீச்சையும், அலைகளின் கிளர்ச்சியூட்டும் நறுமணத்தையும் உணர்ந்தார்.

விஞ்ஞானத்தோடு விடாப்பிடியாக ஒட்டிக்கொண்டு பகுத்தறிவுவாதத்தின் இண்டு இடுக்குகளுக்குள் தன்னை ஒளித்துக்கொள்ளும் அவரது முயற்சி வீணாயிற்று. விலாங்கு மீன்கள் வெப்பத்தில் தங்கள் நிறத்தை மாற்றிக்கொள்கின்றன, பிட்யூட்டரி சுரப்பிகள் ஹார்மோன்களைச் சுரக்கின்றன என்பது போன்ற ஆச்சரியமான விஞ்ஞான நிகழ்வுகளிலும், அவை பற்றிய ஆராய்ச்சிகளிலும் அவர் தன்னை எவ்வளவுதான் கடுமையாக ஈடுபடுத்திக்கொண்டாலும் அவர் காதுகளுக்கு லின்டா ஆல்சனின் குரல் மட்டுமே கேட்டுக்கொண்டிருந்தது. மரங்களின் இடையிலிருந்தோ அல்லது அலைகளினூடாகவோ அவர் லின்டாவின் குரலைக் கேட்டு அவளுடைய சிவப்புத் தொப்பியை தன் மனக்கண்ணில் கொண்டுவருவார்.

படிகளைப் போலவே நின்றிருந்த செங்குத்துப் பாறைகளில் கடல் விட்டுச் சென்ற நீர்க்குளங்களை பால் எக்கர் நினைவு கூர்ந்தார். அக்குளங்ககளில் லின்டா குளிப்பது வழக்கம். விளிம்புகளில் வழுக்கி ஒருமுறை உள்ளே விழுந்துவிட்டாள். ஏறிவர முடியாமல் அவள் போட்ட கூச்சலைக் கேட்டு ஓடினார் டாக்டர். பூதத்தால் தாக்கப்பட்ட ஆந்த்ரோமெடாதான் அவர் நினைவுக்கு வந்தது. மீண்டும் மீண்டும் முயற்சித்து, அபாயகரமாக பலமுறை வழுக்கி, கடைசியாக அவளை வெளியே தூக்கியபோது அவள் நிர்வாணமாக இருந்தாள் – அதில் வெட்கம் வேறு அவளுக்கு!

அன்றிரவு அந்த நிலவொளியில் லின்டா ஆல்சன் அவருடைய ஆண்மையைப் பரிகசித்தாள். கடைசியில் அவர் ரத்தம் சூடேறிய அந்தக் கணமும் வந்தது. ஒரு அதலபாதாளத்தில் தான் மூழ்கிக்கொண்டிருப்பதை அவர் உணர்ந்தார். அன்றிரவு ஆந்த்ரோமெடாதான் பெர்சியூஸை விழுங்க நேர்ந்தது. அந்தக் கணத்திலிருந்து…)

பெரிய மின்விசிறியின் தகடுகளில் பேராசை கொண்ட ஒரு பூச்சி சிக்கியது.

கன்னக் கதுப்புகள் தடித்த அந்த நீதிபதி தானாகவே விசிறிக்கொள்கிறார்.

“லின்டா ஆல்சன் கருவுற்றிருந்தாள் என்கிறார்களே, அது உண்மையா?”

“ஆமாம்.”

“அப்படியானால் அதற்குக் காரணம்…”

“காரணம்?”

“உங்கள் காதல் விவகாரம்.”

“நீங்கள் எதைக் குறிப்பிடுகிறீர்கள் என்று எனக்குப் புரியவில்லை.”

“சரி, சுருக்கமாகச் சொன்னால், அந்த விஷயம் ஏறக்குறைய நிரூபணமாகிவிட்ட ஒன்று.”

“அதாவது, குழந்தை என்னுடையது அல்ல என்பது?”

“என்ன சொல்கிறீர்கள் மை டியர் டாக்டர்?!”

“லின்டா அந்தத் தீவின் இண்டு இடுக்குகளிலெல்லாம் அலைந்து திரிந்துகொண்டிருந்ததைப் பற்றி உங்களிடம் நான் ஏற்கனவே சொல்லியிருந்தேன். துடிப்பும் யௌவனமும் ததும்பி வழிய அதன் அரூப கிளர்ச்சிகளில் ஜொலித்துக் கொண்டிருந்தாள் அவள். எப்போதும் அவளுடனேயே இருக்க எனக்கு வாய்ப்பு இருந்ததில்லை. சிறு குளங்களிலும் பாறைகளிலும் மீன்களின் ஒழுங்கு மீறிய கருத்தரிப்பைக் (heteroclite ovulation) கண்காணிப்பதிலேயே நான் என்னை முற்றாக இழந்திருந்தேன். என்னுடைய கடுமையான பழக்கவழக்கங்களும் எங்களிடையே ஒரு இறுக்கமான சுவரை எழுப்பியிருந்தது.

(ஆனால் அந்தச் சுவற்றின் மறு பக்கத்திலோ எல்லாமே ஆதிவாசிகளின் கிளர்ச்சியூட்டும் பாடலாகத்தான் இருந்தது. உடல் சூடேறித் தகிக்கும் அந்தப் பெண்ணின் மீது காதல் தெய்வத்தைப் போல் காமவெறியுடன் பாய்கிறார் டாக்டர்.)

“அப்படியானால் லின்டா ஆல்சனைப் பற்றி என்னதான் சொல்ல வருகிறீர்கள்?”

“என்னைப் பேச விடுங்கள். தன் இளமை வேட்கைக்கு ஈடுகொடுப்பவன் நானல்ல என்று தெரிந்துகொண்ட பின் அவள் பென், ஜோ இருவரையும் தன் பக்கம் இழுத்தாள். பழம் பறிக்கப் போகிறேன் என்ற சாக்கில் அவர்களோடு சேர்ந்து சுற்றினாள். இதில் எதுவும் எனக்குத் தவறாகப்படவில்லை. லின்டா, பென் பார்க்கரோடு சுற்றுவதில் கிளர்ச்சியுற்றாள் என்று ஆரம்பத்தில் எனக்குத் தோன்றியது. வெள்ளையர் அல்லாதவரிடம் அவள் கொண்டிருந்த வெறுப்பைப் பார்க்கும்போது அது இயல்பானதுதான். உண்மையில், பென்னும் லின்டாவும் அடிக்கடி காணாமல் போய்விடுவதை நான் கவனித்திருக்கிறேன். ஆனாலும், கூடிய சீக்கிரமே பென் பார்க்கர் அவளிடமிருந்து விலக ஆரம்பித்தான் என்பதையும் என்னால் உணர முடிந்தது.

அதிலிருந்து அவள் வெளியில் சுற்றுவதற்குக் கறுப்பன் ஜோவைத் தேர்ந்தெடுத்துக்கொண்டாள். அது அவளுக்கு சந்தோஷமாகத்தான் இருந்தது என்பது அவளுடைய உற்சாகமான சிரிப்பில் தெரிந்தது. கறுப்பன் ஜோ ஸ்டைலாக உடை உடுத்திக்கொண்டு தனது பாஞ்ச்சோவுடன் நிலவொளியில் சோகப் பாடலைப் பாடிக்கொண்டு திரிவதைப் பார்த்து நான் ஆச்சரியப்பட்டேன்.

ஒரு மதிய வேளை – நன்றாக ஞாபகம் இருக்கிறது. மைக்ரோஸ்கோப்பின் மூலம் ஏதோ ஒரு பிராணியின் மேல் தோலை பரிசோதித்துக் கொண்டிருந்தேன். வெப்பத்திலும் புழுக்கத்திலும் நான் களைத்துப்போயிருந்த அந்தத் தருணத்தில் லின்டாவின் அலறல் கேட்டது. கடல் பாம்போ அல்லது பெருஞ்சிலந்தியோ கடித்திருக்கும் என்று நினைத்து எட்டிப்பார்த்த நான், ‘உதவி! உதவி! என்னைக் கற்பழித்துவிட்டான்!’ என்று அலறிக்கொண்டே அலங்கோலமாக ஓடி வந்த லின்டாவைப் பார்த்துத் திடுக்கிட்டேன். கறுப்பன் ஜோ பைத்தியம் பிடித்தாற்போல் கடலோரத்தை நோக்கிப் பறப்பதுபோல் ஓடிக்கொண்டிருந்தான். அவனைத் துரத்திக்கொண்டு ஒரு குறுகிய கணவாய் வழியாக ஓடினேன். ஆனால் அதற்குள் அவன் மின்சாரப் படகில் தொற்றிக்கொண்டு பென் பார்க்கரிடம் கிசுகிசுத்தான். அவ்வளவுதான். இருவரும் பறந்துவிட்டார்கள்.

ஒருக்கணமும் தாமதிக்காமல் கடலுக்கு மேல் நீண்டிருந்த ஒரு பாறைக் கூம்பில் ஏறி எங்கள் தளத்துக்கு அபாயக் கொடியை காட்டித் தகவல் சொல்ல எத்தனித்தேன். ஆனால் அப்போது ஒரு ஆச்சரியமான, நம்ப முடியாத ஒன்று நிகழ்ந்தது. பரபரப்பு அடங்கி மெதுவாக என் அருகில் வந்த மிஸ் லின்டா, ‘தயவுசெய்து அபாய அறிவிப்பு எதுவும் கொடுக்க வேண்டாம்,’ என்று என்னை மன்றாடுவதுபோல் கேட்டாள்.

பெருத்த அவமானம் உண்டாகும் என்று விளக்கம் சொன்னாள். பலாத்காரம் செய்தவன் தண்டனையின்றிப் போகட்டும் என்றாள். அவளை ஒரு தவறான பெண்ணாக எண்ணியிருந்த என் மனதில் அவள் மீது ஆழமான மரியாதை உண்டாயிற்று. வேண்டிய உதவிகள் செய்து அவளைப் பாதுகாக்க முடிவு செய்தேன். மனமுதிர்ச்சியைக் காட்டிய அவளது அணுகுமுறை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அதனாலேயே அவளுடைய பிரச்சினைக்கு நானே பொறுப்பேற்றுக் கொள்ளவும் முடிவு செய்தேன். மனமுடைந்து போயிருந்த அவளை அதிலிருந்து மீட்டு அவள் அதுவரை ஈடுபாடு காட்டாதிருந்த விஞ்ஞான ஆய்வுகளில் மறுபடியும் ஈடுபடுத்த முடிவு செய்தேன். ஏன், எப்படி இது நிகழ்ந்தது என்பதெல்லாம் எனக்குத் தெரியாது.”

“மன்னிக்க வேண்டும். அதற்குப் பிறகு பென்னும் ஜோவும் தீவுக்குத் திரும்பவில்லையா?”

“இல்லை, நிச்சயமாக இல்லை. விசாரணைக்காக கமாண்டர் வந்தபோது…”

“அவர்கள் என்ன கண்டுபிடித்தார்கள்?”

“நான் தனியாக இருக்க விரும்பினேன் என்று அவர்களிடம் சொல்லப்பட்டது. நானும் அது உண்மைதான் என்று நிச்சயப்படுத்தினேன். அதுமட்டுமல்ல, மீன்கள் முட்டையிடும் அந்தப் பருவத்தில் கமாண்டரின் ஆட்கள் அங்கு வருவதால் மீன்கள் மிரண்டு முட்டையிடுவது தடைபடும் என்பதால் அவர்கள் அங்கே வருவதைத் தடை செய்திருந்தேன் என்றுகூட கமாண்டரிடம் தெரிவித்தேன். அவர் மேலும் துருவித் துருவி கேள்விகள் கேட்டபோது வீட்டு வேலைகளைக் கவனிக்க ‘வூடூ’ போதும் என்று காரணம் சொல்லிச் சமாளித்தேன். அதிலிருந்து வேறு எந்தக் குறுக்கீடுகளும் இல்லை.

எங்களை முற்றாக மீன்கள் தொடர்பான சோதனைகளிலும் அதன் முடிவுகளைப் பரிசோதிப்பதிலும் அர்ப்பணித்துக்கொண்டோம். எய்த்தியக் கிழவி எங்களிடமிருந்து விலகியே இருந்தாள். அவளைப் பார்ப்பதே அரிதாக இருந்தது. கடலில் மீன் பிடிப்பதிலேயே அவளுடைய நேரம் கழிந்தது என்பதும் மற்றொரு காரணம். அவளுடைய பழைய படகு அலைகளுக்கிடையில் ஒரு நத்தைக்கூடு போல் தெரிந்தது. அதற்குப் பிறகுதான் லின்டா தன் வயிற்றின் கனத்தை உணர ஆரம்பித்தாள். ”

“குழந்தையா? அப்படியானால் அது அந்தக் கறுப்பனுடையதா?”

“அது அவளுடையது என்று மட்டும்தான் என்னால் சொல்ல முடியும். அதை என்னுடைய குழந்தையாக ஏற்றுக்கொள்ளவும் முடிவு செய்திருந்தேன். ஆனால் எல்லாமே ஒரு புதிய திருப்பத்தை அடைந்துவிட்டன.”

டாக்டர் எக்கர் எதையோ கூர்ந்து கேட்பதற்காக நிறுத்துகிறார். தொலைதூரத்தில் அலைகளிலிருந்து எழும் மாயப்பாடல் ஒன்றை தான் கேட்க முடியும் என்று எதிர்பார்க்கிறார். அவரை விடாமல் துரத்தும் எய்த்தியக் கிழவியின் எரிமலை போன்ற வெடிச்சிரிப்பு மறுபடியும் அவருக்குக் கேட்கிறது.

நீதிபதி திரும்பவும் சொல்கிறார்: “ஆக, சுருக்கமாகச் சொன்னால், குழந்தை உங்களுடையதா, நீக்ரோவினுடையதா என்று உங்களுக்குத் தெரியாது. ஆனால் ஒரு உண்மை எனக்குத் தெரியும் – அதாவது நீங்களும் அவளும்…”

“சரியாகச் சொன்னீர்கள் அவளும் நானும்… உங்களுக்குப் புரிகிறது. அதுதான் என்னுடைய இந்த மனநிலைக்கும் சந்தேகங்களுக்கும் காரணம். எல்லாவற்றுக்கும் மேல் என் வாழ்க்கையில் எனக்கு நேர்ந்த ஒரு அனுபவம் – வரும் பிரச்சினைகளை முன்கூட்டியே அறிந்துகொள்ள எனக்குக் கற்பித்திருந்தது. அதாவது, மரபு வழி வந்த உடல் குறைபாட்டால் நிகழ்ந்த என்னுடைய முதல் திருமண முறிவைப் பற்றியும் நான் உங்களுக்குச் சொல்ல வேண்டும்.

மரபு பற்றிய முட்டாள்தனமான கருத்துக்களைக் கொண்டிருந்த என் பணக்கார மாமனார் எப்படியாவது தனக்கு ஒரு ஆரோக்கியமான, உடல் வலிமை கொண்ட பேரன் இருக்க வேண்டுமென விரும்பினார். அவன்தானே குடும்பப் பெயரையும், செல்வத்தையும் அடுத்த தலைமுறைக்கு சுமக்கப் போகிறவன்! ஒரு குழந்தையும் பிறந்தது. நல்லவேளை, அந்த சிசு சில மணிநேரங்களே பிழைத்திருந்தது.

என் குடும்பத்தின் மருத்துவ வரலாற்றைப் பற்றி ஒரு ஆராய்ச்சி நடத்தப்பட்டது உங்களுக்குத் தெரியுமா? ஆனால் அது பற்றியெல்லாம் பேச வேண்டிய அவசியமில்லை. இனவிருத்தி குறித்த சந்தேகத்துக்கிடமற்ற இன்னொரு தடியனுக்கு என் இடத்தை விட்டுக் கொடுக்க என் மாமனார் என்னைக் கட்டாயப்படுத்தினார். விஞ்ஞானத்துறையில் நான் கண்ட பெருமைகளெல்லாம் அந்த ஆரம்பத் தோல்விக்குச் சமர்ப்பணம்.

என் எதிர்காலத்தின் போக்கைப் பற்றி அறிந்து கொண்ட நான் புத்தகங்களில் புகலிடம் நாடினேன். குடும்ப வாழக்கையின் சந்தோஷங்களைப் புறக்கணித்தேன். என் குழந்தைகள் ஊனமாகத்தான் பிறக்கும் என்று அறிந்த பின் குடும்ப வாழ்வின் சந்தோஷங்களைப் பற்றி நினைத்து என்ன பயன்? அதனாலேயே அந்தச் சிறிய தீவில் மிஸ் லின்டாவிடமிடமிருந்து விலகியிருக்க முயற்சித்தேன்.

என்ன இருந்தாலும் நாம் விரும்பியபடியே எல்லாம் நடந்துவிடுவதில்லை அல்லவா? தனிமை சில சமயங்களில் நம்மை காமத்தின் பிடியில் தள்ளிவிடுவதுண்டு. என்னால்தான் உருவாயிற்று என்று நம்பிய அவள் துடிதுடிப்பான, துறுதுறுவென்ற, அழகான ஒரு குழந்தையை எதிர்பார்த்தாள். குழந்தையின் கருமூலத்தைப் பற்றி நிச்சயமற்றிருந்த நான் மனம் வெதும்பினேன். பிரசவ தினம் நெருங்க நெருங்க என் பயம் அதிகரித்தது. அது என் குழந்தை என்ற நினைவையே தவிர்க்க நினைத்தேன்.

பூதங்களையும், அபூர்வ மனிதப் பிறவிகளையும், பைத்தியங்களையும் பற்றி நினைக்க ஆரம்பித்தது மனம். அது கறுப்பனின் குழந்தை என்று நான் கற்பனை செய்தால் – சற்று யோசித்துப் பாருங்கள்! அப்படி ஒரு ரகசிய நம்பிக்கை என்னை அவ்வப்போது இதப்படுத்தியது. தீவின் அழகான இயற்கைச் சூழல் ஒருவேளை சிசுவின் கருக்காலத்தில் ஏதேனும் நல்விளைவை உண்டாக்குமோ என்ற சாத்தியக் கூறுதான் அது. அந்தக் காரணத்தினால்தானோ அல்லது ஒருக்கால் என்னுடைய விஞ்ஞான ஈடுபாட்டினாலோ, இயற்கையாய் விளைந்த ஒன்றை நான் அழிக்கத் துணியவில்லை.

என் குறைபாட்டைப் பற்றித் தெரிந்தால் லின்டா என்னை உதறிவிட்டு விடுவாளோ என்ற நினைவுதான் என்னைப் பீதி கொள்ளச் செய்தது; அதனால் இரண்டில் ஒன்றைத் தேர்ந்தெடுக்க வேண்டுமென்றால், அது கறுப்பனுடையதாக இருப்பதையே விரும்பினேன். லின்டா தன்னை எங்கள் தளத்திற்கு அழைத்துச் சென்றால் நல்ல பராமரிப்பு கிடைக்கும் என நினைத்தாள். நிச்சயம் அழைத்துச் செல்கிறேன் என்று வாக்களித்தேன். ஆனால் பிரசவத்தை நானே அந்தத் தீவிலேயே, கூட்டம் எதுவும் கூட்டாமல் கவனித்துக் கொள்ள வேண்டுமென்று தீர்மானித்திருந்தேன். சரியான தருணம் வரும் வரை உண்மை தெரியாமலிருக்க அவளுக்கு மருந்து கொடுத்து மயக்கத்தில் இருக்கச் செய்ய முடிவு செய்திருந்தேன்.

ஆனால் என் பதற்றமோ நாட்களையும் மாதங்களையும் இயல்புக்கு மீறி நீண்டதாய்க் காட்டியது. இன்னும் ஏழு வாரங்கள் இருக்கும்போதே என் கணக்கு தவறாகிவிட்டதோ என்று சந்தேகம் எழ ஆரம்பித்துவிட்டது. காரணம், அவள் பட்ட அவஸ்தை அப்படியிருந்தது. வயிறு அளவுக்கு மேல் பெரிதாகி வெடிப்பதுபோல் ஊதிப் போயிருந்தது. இன்னொரு விஷயம் சொல்ல மறந்துவிட்டேன். வயிற்றில் கரு வளர வளர அவள் போக்கு மிகவும் விசித்திரமாக மாற ஆரம்பித்தது. மணிக்கணக்கில் கடலில் ஊறிக்கொண்டிருந்தாள்.

பார்க்கச் சகிக்காத அந்த அசிங்கமான பூதாகரமான உடம்பை வைத்துக்கொண்டு குளியல் உடை கூட வேண்டாம் என்று மறுத்தாள். உடை அணிந்து குளிப்பது சிரமம் என்று சொன்னாள். சாப்பாட்டு நேரங்களில் அறவே பசியில்லாமல் இருந்தாள். இருந்தாலும் பின்னால் அவள் சிப்பிகளையும், நண்டுகளையும், மீன்களையும் பச்சையாகவே சாப்பிடும்போது அவளைக் கையும் களவுமாகப் பிடித்திருக்கிறேன்.

அன்றிரவு இடியும் மின்னலும் லிண்டாவை மிகவும் பயமுறுத்தியது. தீவிலேயே இறந்துபோய் விடுவோமோ என்று எண்ணி பயந்து போயிருந்தாள். தான் எந்தவிதச் சிரமும் இன்றி உயிரை விடுவதற்கு அந்த எய்த்தியக் கிழவி உதவுவாள் என்று நினைத்து அவளை அழைத்திருந்தாள். அந்தக் கருப்பு வூடு கிழவி நான் இல்லாத நேரங்களில் லிண்டாவின் வலியைப் போக்குகிறேன் என்று சொல்லி ஏதோ பில்லி சூனிய வித்தைகள் செய்ததாகப் பின்னர் தெரிந்துகொண்டேன்.

கடும் மழையுடன் புயல் சுழன்றடித்தது. பிரசவ வலியின் உக்கிரம் தாங்காமல் உடலை முறுக்கிக்கொண்டு புரண்ட கர்ப்பிணிப் பெண் கதறினாள். நரம்புகள் முறுக்கேறி பைத்தியமாகிக்கொண்டிருந்த நான் லின்டாவின் உயிரை மீட்பதற்காக பிரசவத்தையே நிறுத்திவிடலாம் என்று முடிவு செய்தேன். (வேறு வழியே எனக்குத் தெரியவில்லை.) எனக்கு நிச்சயமாகத் தெரியும். அவள் உடம்பு அதைத் தாங்காது. என் நெஞ்சு வெடித்துவிடும் போலிருந்தது. மனம் ஜுர வேகத்தில் அடித்துக்கொள்ள ஆபரேஷன் செய்துவிடலாம் என்று தீர்மானித்தேன்.

ஊசிமூலம் அவளுக்கு மருந்தைச் செலுத்தினேன். சற்று நேரத்தில் ஆழ்ந்த தூக்கத்தில் அவள் தன்னை மறந்தாள். அந்த நிலையில்தான் கடைசியாக அது பிறந்தது. அதை இப்போது நினைவு கூர்வதில் எனக்குக் கொஞ்சமும் விருப்பமில்லை. உடல் ஊனமுற்ற, வினோதமான ஒரு ஜந்து அது! கண் விழித்தவுடன் லின்டா ஆல்சன் உண்மையை அறிந்துகொண்டு விடுவாள் என்று பயந்து இன்னும் புயல் நின்றிராத அந்த இரவில் ஓடிப்போய் அந்தக் குட்டிப் பிசாசை கடலுக்குள் வீசி எறிந்தேன். இப்படியாக அந்த அவலட்சணத்தின் தடயங்கள் அனைத்தையும் அழித்து முடித்தேன். அதிலிருந்து என் நரம்புகள் ஒரு நிலையில் இல்லாமல் தெறிக்க ஆரம்பித்தன.”

“நீங்கள் கவலைப்படக் கூடாது. லின்டா ஆல்சனைக் காப்பாற்றுவதுதான் உங்களுடைய முக்கியமான நோக்கமாக இருந்தது இல்லையா?”

“ஆமாம், அவளை நான் காப்பாற்றினேன். ஆனால் உண்மை தெரிந்தால் அவள் என்னை நிராகரித்துவிடுவாள் என்ற பயத்தில், ‘பிறந்தது ஒரு கருப்புக் குழந்தை’ என்ற பொய்யைக் கண்டுபிடித்தேன். ‘எங்கே அது?’ என்று என்னைப் பார்த்து அலறினாள். ‘நான் அதைப் பார்த்தாக வேண்டும்,’ என்றாள். எப்படி அவளிடம் மேலும் பொய் சொல்வதென்று அறியாமல் சிக்கலில் மாட்டிக்கொண்ட நான் அவள் கண்ணெதிரே ஒரு சாதாரண கொலைகாரனாக மாறி நின்றேன்.”

(பால் எக்கர் நடுங்குகிறார். ஏதோ ஒரு விசித்திரமான காட்சியைக் கண்டு பயந்துவிட்டதுபோல் இயல்புக்கு மாறாக கண்களை அகல விரித்துப் பார்க்கிறார். சூறாவளியின் மர்மமான பாடலும், எய்த்தியக் கிழவியின் வெடிச்சிரிப்பும் அவருக்குக் கேட்பது போல் தோன்றுகிறது. தீர்க்கமான கடல் அவர் கண்களுக்கு முன்னே விரிகிறது. விழிப்பாவைகள் ஏதோ வசியத்திற்கு உட்பட்டவை போல் நிலையாகக் குத்திட்டு நிற்க, அலைகளிலிருந்து எழுவது போல் லின்டாவின் தலை அவர் கண்களுக்குத் தெரிகிறது.

பால் எக்கருக்கு மட்டும் அவள் குரல் கேட்கிறது: “எனக்குக் கருப்பர்களைப் பிடிக்காது. ஏனென்று தெரியவில்லை. நான் சிறுமியாக இருந்த காலத்திலிருந்து என் ரத்தத்தில் ஊறியது அது. குடும்பத்தின் ஒரு குறைபாடு என்று கூட சொல்லலாம். அதைப்பற்றிப் பேசுவதில் பயனில்லை. இருந்தாலும் நான் ஒத்துக்கொள்கிறேன், ஜோ வார்ட் எந்த விதத்திலும் நம் பிரச்சினைக்குக் காரணமல்ல. யாரவது குற்றம் சாட்டப்பட வேண்டுமென்றால் அது நான்தான். நான் உங்களிடம் பொய் சொன்னேன் பால் எக்கர். சரியாக யோசிக்காமல் நான் அந்தப் பொய்யைச் சொல்லிவிட்டேன். இன்னும் சரியாகச் சொன்னால், அது பொய்கூட அல்ல. தவறான புரிதல். அவ்வளவுதான்.

எது உண்மை என்று கேட்டால், என் சித்தத்தை மயக்கி என்னை உருமாற்றிய இந்தத் தீவின் சூழல்தான் என்று சொல்வேன். இதுதான் என்னை இயல்புக்கு மாறான ஒரு வித்தியாசமான ஆளாக என்னையே உணரவைத்தது. சமூகம் விதித்த தடைகளுக்கும் சம்பிரதாயங்களுக்கும் பலியாகியிருந்த எனக்கு அது விடுதலையின் அதிசயம். என்னைக் கட்டுப்படுத்தும் விதிமுறைகள் எதுவும் இந்தத் தீவில் இல்லை.

என்னைப் பிணைத்திருந்த தளைகளையெல்லாம் அறுத்தெறிந்துவிட்டுப் பூரண ஆசுவாசம் பெற்றேன். வாய்விட்டுக் கத்த வேண்டும் போலிருந்தது. சந்தோஷமான அந்தச் சூழலில் முழுமையாக மூழ்கிவிடத் துடித்தேன். தீவிலிருந்த ஒவ்வொன்றும் இயற்கையின் மாய வித்தையைப் போலிருந்தது எனக்கு. விதவிதமாய் ஜொலிக்கும் கடலின் வண்ணங்கள். கடல்பறவைகளுக்கும் நுரைக்கும் இடையிலான முடிவிலா விளையாட்டு. பறவைகளின் கானம். கண்களைக் கவரும் ஒளியின் ஜாலம். பொங்கும் வாழ்வின் துடிப்பு. கோடையின் ஈரப்பதமற்ற வெப்பம். புயலுக்குப்பின் மூக்கைத் துளைக்கும் மண் வாசனை. ஒவ்வொன்றும் காதலைப் பேசியது.

ஒவ்வொன்றும் பரவசமான கிராமியப் பாடலாய் பெருக்கடுத்து என்னை அடித்துக்கொண்டு சென்றது. உன்மத்தம் பிடித்து காமத்தைக் கிளறும் அலைகளின் சுழற்சியைப்போல் என் இளமை கொழுந்துவிட்டு எரிந்தது. தளிரைப் போன்ற என் உடல் கட்டற்று, நிலைகொள்ளாமல் தன்னைத் தானே விழுங்கிக்கொண்டது. அதனாலேயே என் விளையாட்டுகளை முழுமையாக அனுபவித்துக்கொண்டு வெறுங்காலோடு மழையில் ஆடினேன். இயற்கையின் உன்னதப் பாடலில் நானொரு ராகமாக ஒன்றிப் போக விழைந்தேன். இழந்துபோன வாழ்வை ஈடுகட்ட எத்தனை சந்தோஷத்தோடு ஏங்கினேன்! 

அதனால்தான் எந்தவிதத் தயக்கமும் இன்றி வெள்ளையனான பார்க்கரிடம் என்னைக் கொடுத்தேன். அதை வெகு இயல்பாகச் செய்தேன். கானம் பாடும் பட்சிகளைப்போல்! கடல்மீது திரியும் பறவைகளைப் போல்! ஆனால் பென் தற்காலிகமாகத்தான் தன்னை இழந்தான். விளைவுகளைப் பற்றி யோசித்துப் பார்த்து என் அருகில் வருவதை நிறுத்திக்கொண்டான். என்னை ஒதுக்கினான். இருந்தாலும் எந்தக் கைம்மாறும் கருதாமல் அவனை நான் நாடினேன். என் தாகத்தைத் தணித்துக்கொள்ள விரும்பினேன். அவனுடைய பயங்களை மீறுவதற்காக ஜோவுடன் சுற்ற ஆரம்பித்து அவனைப் பொறாமையில் தவிக்கவிடத் திட்டமிட்டேன்.

கறுப்பர்களிடம் எனக்கு வெறுப்பு இருந்தாலும் ஜோவுடன் மையல் கொள்வதில் எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை என்பதை நான் மறுக்கப் போவதில்லை. உண்மையில் எனக்கு அது கிளுகிளுப்பாக இருந்தது. அவனது சேஷ்டையில் பூரித்துப்போனேன். அவன் பேச்சையும் அவன் செய்யும் ஆச்சரியகரமான விஷயங்களையும் பார்த்து ரசித்தேன். ஒளிரும் இளமை, உடல் வலிமை, பால் போன்ற பற்கள், மற்றவர்களையும் தொற்றிக்கொள்ளும் அந்த வசீகரமான சிரிப்பு… தீவின் சூழலும், உப்பு மணத்தைச் சுமந்து வரும் அந்தக் கடல்காற்றும் அவனை ஒரு அழகான கருப்பு அப்போலோவாக எனக்குக் காட்டின.

என்னையே இழந்துவிடும் அபாயத்தில் இருந்ததை மெல்ல உணர ஆரம்பித்தேன். காரணம், அவன் ஏற்கனவே அதைப் பற்றிக் கோடிட்டுக் காட்டியிருந்தான். தான் விரும்பப்படுவதை அறிந்து, தன்னை விழுங்கக் காத்திருக்கும் கன்னியிடம் தானே விழுந்தான். ஒரு மதியம் – பென் பாக்கர் மின்சாரப் படகில் காத்திருந்தான். ஆனால் ஜோ என்னுடன் விளையாட வத்துவிட்டான் – மரத்திலிருந்து நான் அவனிடம் பழங்களை வீசிக் கொண்டிருந்தபோது திடீரென்று ஒரு பெரிய வண்டு என்னருகில் ரீங்காரமிட்டது.

மருண்டு போன நான் மரத்திலிருந்து இறங்க முயன்றபோது வழுக்கிவிட்டது. என்னை நோக்கி நகர்ந்த ஜோ கீழே விழ இருந்த என்னைத் தன் கரங்களில் ஏந்தி என் உதடுகளில் முத்தமிட்டான். ஏதோ ஒருவித அலையின் சுழல் என்னை இழுத்துச் செல்வதுபோல் உணர்ந்தேன். விழுந்த அந்தக் கணத்தில் என்னையும் மீறிக் கூச்சலிட்டேன். பயத்தில் நடுங்கிப்போய் ஓடிவிட்டான்.

பால், சத்தம் கேட்டு நீங்கள் என்னை நோக்கி வந்தபோது கூச்சமாக இருந்தது. என்னை அறிவற்ற ஒரு சிறுமி என்று நீங்கள் நினைத்துவிடக் கூடாது என்று எண்ணி, சிறிதும் சிந்திக்காமல் பித்தம் பிடித்தவளைப்போல், “உதவி! உதவி! அவன் என்னைக் கற்பழித்துவிட்டான்!” என்று அலறிவிட்டேன். பாவம் ஜோ! பயத்தில் ஒன்றும் புரியாமல் மலையிலிருந்து இறங்கி ஓடிப்போய் மின்சாரப்படகில் பென் பார்க்கருடன் கரையை நோக்கிப் பறந்துவிட்டான். அதற்குப் பிறகு இருவரும் இங்கே திரும்பி வரப்போவதில்லை என்று ஒப்பந்தம் செய்துகொண்டார்கள். தீவில் பேய்களைக் கண்டதாக கருப்பன் சொன்னான். சந்தேகமேயில்லாமல் அவன் மனதில் இப்போது பேயாய் ஆட்டிப் படைப்பதெல்லாம் தூக்குமேடையும், கூட்டத்தின் கையால் அடிபட்டுச் சாவதும்தான். எனக்கு உதவ ஓடி வந்த உங்கள் வேகம், உங்களுடைய நுண்ணிய கவனம் என்னை உங்கள் பக்கமும் உங்கள் ஆராய்ச்சிகளின் பக்கமும் ஈர்த்தது. பின்னால், நான் தாயாகப் போகும் உண்மையை உணர்ந்த பிறகு அவசரமாக உங்கள் திருமண யோசனையை ஏற்றுக் கொண்டேன்.

குழந்தை பார்க்கருக்குப் பிறந்ததுதான். அதில் எந்தச் சந்தேகமும் இல்லை. ஆனால் அதனால் என்ன? உங்களுக்கு என் மீது நாட்டம் இருப்பது எனக்குத் தெரியும். நான் உங்களை மணந்துகொள்வேன். குழந்தைக்கு ஒரு மாலுமியை விட நல்ல தகப்பன் கிடைப்பான். நான் உடல் நலிந்து படுத்துவிட்டபோது… எனக்கு ஞாபகம் இருக்கிறது. அந்த இரவில் மழை ஆக்ரோஷமாகப் பெய்துகொண்டிருந்தது. ஆயிரம் வெடிகளை ஒன்றாக வெடித்த மின்னல் கண்களைக் குருடாக்கியது. இடியும் கடலின் ஓங்காரமும் என்னை நடுங்கச் செய்தன. பிறகு – அவ்வளவுதான் எனக்குத் தெரியும், நான் கண் விழித்தபோது ஏற்கனவே காலை விடிந்திருந்தது.

என் மகளைப் பற்றி நான் நினைத்தேன். அழகைக் குழைத்துச் செதுக்கிய குட்டி முகத்தையும், பிஞ்சுக் கைகளையும் நான் முத்தமிட எனக்குப் பிறந்தது ஒரு பெண் குழந்தைதான் என்று ஏன் நினைத்தேன் என்று எனக்குத் தெரியவில்லை. அது பென்னை அப்படியே உரித்து வைத்திருக்குமா? கண்களைத் திறந்தேன். அந்த அறையில் நான் மட்டுமே தனித்திருக்கக் கண்டேன். யோசித்தேன். ‘பால் எக்கரும் குட்டிப் பாப்பாவும் எங்கே போயிருக்க முடியும்?’ கூப்பிட்டுப் பார்த்தேன். பதில் இல்லை. திடீரென்று உங்கள் காலடி ஓசையைக் கேட்டேன். ஆர்வத்தோடு காத்திருந்தேன். நீங்கள் உள்ளே நுழைந்தீர்கள்.

உங்களுக்கு என்ன ஆயிற்று? கவலையுடன், உடைகள் நனைந்து, முகத்தில் சோகம் அப்பிக்கொண்டிருக்க உங்களைக் கண்டேன். ‘பாவம் பால்!’ என்று நினைத்து உங்களைப் பற்றி வருந்தினேன். ‘நிச்சயம் அதீதமான களைப்பினால் சோர்வடைந்திருக்கிறார்’ என்று நினைத்தேன். அளவிட முடியாத அன்புடன் என்னை அணுகி வந்தீர்கள். உங்கள் முத்தங்களை என் மணிக்கட்டுகள் மீது பதித்தீர்கள். என்னை மணந்துகொள்வது பற்றிப் பேசினீர்கள்.

ஃபிலடெல்ஃபியாவுக்குத் திரும்புவதற்கு இன்னும் குறுகிய காலமே இருப்பதாகச் சொன்னீர்கள். ஆனால் நானோ குழந்தையைப் பார்ப்பதில் மட்டுமே குறியாக இருந்தேன். ஆனால் நீங்கள் அது பற்றிக் கண்டுகொள்ளவே இல்லை. ஒன்றுமே நடக்காதது போல் உங்கள் பேச்சு தொடர்ந்தது.

சந்தேகப்பட்டு நான் வற்புறுத்தியபோது நீங்கள் தயங்கினீர்கள். சிசவைக் காப்பாற்ற உங்களால் முடிந்ததெல்லாம் செய்ததாக முதலில் சொன்னீர்கள். பிறகு அந்தக் குழந்தை ஒரு கறுப்புப் பெண் குழந்தை என்று சொன்னீர்கள். அப்போதுதான் எனக்கு உண்மை விளங்கியது. கொடுமையான உங்கள் செயலின் முழுப் பரிமாணத்தையும் அது எனக்குக் காட்டியது. பென் பார்க்கரின் மீதான பொறாமையால் அந்தப் பிஞ்சுக் குழந்தையைக் கொன்றுவிட்டீர்கள் என்பதை அந்தக் கணத்தில் நான் புரிந்துகொண்டுவிட்டேன். குழந்தை அவனுடையதுதான் என்று உங்களுக்கு நிச்சயமாகத் தெரியும். நீங்கள் கொலை செய்துவிட்டீர்கள். அழகு கொஞ்சும் என் தளிர்ப் பிஞ்சுவை நீங்கள் கொன்றுவிட்டீர்கள். நீங்கள் ஒரு கொலைகாரன்! கொலைகாரன்!)

நீதிபதி பொறுமையிழந்து மேஜையை பென்சிலால் தட்டி குற்றவாளியின் கவனத்தை மீட்கிறார். பிறகு மிகுந்த பொறுமையுடன் பேசுகிறார்: “உங்களுக்கு ஏற்பட்ட இழப்புக்களும், நீங்கள் பார்த்த துயர சம்பவங்களும் உங்களை ஆழமாகப் பாதித்துவிட்டன. அதனாலேயே நடந்த நிகழ்ச்சிகள் உங்கள் மனதில் ஆழப் பதிந்துவிட்டன. எரிச்சலூட்டும் ஒரு குற்ற உணர்வு உங்களை ஆட்டிப்படைக்கும் அளவு நீங்கள் விஷயங்களை மிகைப்படுத்திப் புரிந்துகொண்டிருக்கிறீர்கள். இருந்தாலும் அந்த இரவில் நீங்கள் செய்தது இயல்பானதுதான். அந்த சிசுவைக் காப்பாற்றவில்லை என்று உங்களை யார் குற்றம் சாட்டப் போகிறார்கள்?

நான் தெரிந்துகொள்ள விரும்புவதெல்லாம் புயல் அடித்த சமயத்தில் ஒரு பலகீனமான படகில் லின்டா ஆல்சனுடன் நீங்கள் புறப்பட்டதன் காரணம் என்ன என்பதுதான். உங்களால் அவளுக்கு அறுவை சிகிச்சை செய்ய இயலாது என்று நீங்கள் நினைத்ததால் எப்படியாவது அவளை கரைக்கு அழைத்துச் செல்ல வேண்டுமென்று நீங்கள் முயற்சி செய்ததாகத்தான் முதலில் நினைத்தேன். ஆனால் அதற்கு வேறு காரணமும் இருந்திருக்க வேண்டும் என்று தோன்றுகிறது. அப்படி எதுவுமில்லையா?”

(உண்மையை நெருங்க நெருங்க அதன் உண்மைத்தன்மை மேலும் மேலும் குறைந்துவிடுகிறது என்ற உண்மையை எப்படி அவர் நீதிபதிக்கு விளக்கிப் புரியவைக்க முடியும்? அவர் தன் கைகளாலேயே தொட்டு அனுபவித்த அந்த அபூர்வ அற்புதத்தை அவரே இப்போது சந்தேகப்பட ஆரம்பித்துவிட்டார். அந்த அசாதாரணமான அற்புத நிகழ்வு அவரது கற்பனையில் உருவானதல்ல என்பதை சாட்சியங்கள் இல்லாமல் எப்படி இந்த நீதிபதிக்குப் புரிய வைக்கப்போகிறார்? தனக்குத் தெரிந்த உண்மையை வெளியே சொன்னால் தன்னைப் பரிசோதிக்க ஒரு மனோதத்துவ நிபுணரைக் கொண்டுவந்துவிடுவார்கள் என்று பால் எக்கருக்கு நன்றாகவே தெரியும், இருந்தாலும் அவரால் நினைவுகூர முடிந்தது அவ்வளவுதான்.

அந்த இரவில் புயலானது நரகத்தைப் போன்ற இடியையும் மின்னலையும் கொண்டுவந்தபோது, அவர் மேலும் மேலும் வேதனை தாங்காமல் துடித்துக்கொண்டிருந்த லின்டாவைக் காணச் சகிக்காமல் அவளை உறங்க வைக்கலாம் என்று முடிவு செய்தார். அந்தக் கணத்தில்தான் அந்த விசித்திரமான புதிர் வெளிப்பட்டது. அவர் அங்கே கண்டது ஒரு நுண்ணிய சிறிய முகம். பிங்க் திறத்தில் மிருதுவான பூஞ்சையான சிறு கரங்கள். அவருக்கு ஏற்பட்ட சந்தோஷத்தில் வெளியே வந்துகொண்டிருந்த சிசுவைக்கூட கவனிக்க மறந்துவிட்டார்.

குழந்தையைத் தன் கரங்களில் ஏந்திக்கொள்ளவும், தன்னுடையதென சொந்தம் கொண்டாடவும் ஆயத்தத்தோடு நின்றார். அப்போதுதான் அது பூரண ஆரோக்கியத்தோடு குதித்து விழுந்தது. படுக்கையில் விழுந்தவுடன் வாலை ஆட்டிக்கொண்டு துள்ளியது. வெறித்தனமான நம்பிக்கையில், அதனுடைய அடுத்த இயக்கத்தில்தான் தன் உயிர் மூச்சே அடங்கியிருப்பது போல் நாடி ஒடுங்கி உணர்வுகள் ஸ்தம்பித்து நின்றார் அவர்.

ஆனால் அவர் கண்களுக்கெதிரே படுக்கை விரிப்பில் துள்ளி நெளிந்தது உயிர் கொண்ட ஒரு மாயா வினோதம்; வாயருகே மீன்களுக்கே உரிய அழகான தசையிழையுடன் கூடிய ஒரு பிங்க் நிற மீன். ஆனால் இடுப்பு வரை மனித உடல் – குச்சி குச்சியாய் துருத்திக்கொண்டிருந்த கைகள்; தேவதையைப் போன்ற முகம். பெண்மையின் அடையாளங்களோடு அந்த ஜீவன் ஒரு கடல்கன்னியின் உருவத்தை அப்படியே ஒத்திருந்தது. இதை அவர் ஒரு கலை வெளிப்பாட்டில் அல்லது ஒரு கவிதையில் ரசித்திருக்கிறார். ஒடிஸ்ஸியின் தெய்வீக அழகு பொருந்திய ஆறடிச் செய்யுள்கள் இன்னும் அவருக்கு ஞாபகத்தில் இருந்தன. ஆனால் இப்படி ஒரு குழந்தை தனக்குப் பிறக்கும் என்று அவர் கனவுகூட கண்டதில்லை. கடவுளே! எந்த மாந்த்ரீகப் புணர்ச்சியில் உருவானது இது!

அவருக்கு நன்றாக ஞாபகம் இருந்தது. பென்னும் ஜோவும் ஓடிவிட்ட பிறகு லின்டா மறுபடியும் ஆராய்ச்சியில் ஆர்வம் கொண்டு அதில் ஈடுபட்டிருந்த வேளையில் ஒரு விடியற்காலையின்போது – அவர்கள் இருவரும் மலைகளுக்கிடையே நீராடச் சென்றார்கள். ஒரு பாறை விளிம்பிலிருந்து சைகை காட்டி அவரை அழைத்தாள். அவள் சைகையில் தெரிந்த ஆர்வமும் வேகமும் முக்கியமான எதையோ அவள் கண்டுபிடித்துவிட்டது போன்ற சந்தேகத்தை எழுப்பியது. அவசர அவசரமாக உடையை மாட்டிக்கொண்டு அவள் நின்றுகொண்டிருந்த இடத்துக்கு ஓடினார்.

அவர்கள் இருவரும் அந்தப் பாறை விளிம்பில் சாட்சியங்களாக நிற்க, அங்கே ஒரு காதல் விளையாட்டு – இயற்கையின் அற்புதக் கவிதை அது – நடந்துகொண்டிருந்தது. பலவித வண்ணங்களைக் கொண்ட ஒரு ராட்சச மீன் நீருக்குள் நீந்திக்கொண்டிருந்தது. முத்தின் நிறத்திலான இன்னொரு மீன் – அது ஒரு பெண் மீன் – தன் துடுப்புகளை ஊன்றிக்கொண்டு முட்டைகளை வெளித்தள்ள, முட்டைகள் ஒவ்வொன்றாக நீருக்கடியில் மணல் படுகைக்கு இறங்கிக்கொண்டிருந்தன. தன் வேலை முடிந்தவுடன் நளினமான ஒரு சுழற்சியோடு அது கிளம்பியது. சற்று நேரம் கழித்து மிடுக்கான ஆண் மீன் வந்தது. பக்குவமாக முட்டைகள் மீது மிதந்தது. வழக்கமான கொண்டாட்டத்துக்குத் தன்னைத் தயாராய் நிறுத்திக்கொண்ட பின், தன் வெள்ளைத் திரவத்தைப் பீச்சியடித்து முட்டைகளை மூடி மறைத்தது. தன் துடிப்பின் வேகத்தைத் தீர்த்துக்கொண்டபின் பெருமிதம் பொங்க ஆடம்பரமாக நீந்திச் சென்றது அது. இனம் காக்கப்பட்டுவிட்டது.

விஞ்ஞான ஆர்வத்தினால் உந்தப்பட்டு, கருத்தரிப்பை அருகிலிருந்தே கவனித்த லின்டாவும் அவரும் நீருக்குள் குதித்து விரைந்தார்கள். விஞ்ஞானம் அவர்களை அப்படி ஒன்றாக இழுத்து வந்திருக்கக் கூடாது. அவர்கள் கண்டதன் பாதிப்பும், நீரின் இதமும், அதன் கலவையில் எழுந்த கிளர்ச்சியூட்டும் வாடையும்!… அதைப் பற்றி நினைக்கும்போதே நரம்புகள் முறுக்கேறின. உடலின் அழைப்பை அவர்களால் புறக்கணிக்க முடியவில்லை.  இயற்கையின் கட்டளை அது. அந்தப் பிசுபிசுப்பான வஸ்துவால் அவர்கள் சூழப்பட்டு அதற்குப் பலியானார்கள்.

ஒவ்வொன்றும் தெளிவாகப் புரிந்தது. பிங்க் நிற தோல் போர்த்திய அந்தச் சின்னஞ்சிறிய கடல்கன்னி சமுத்திர மூதாதையர்களையே ஒத்திருந்தது. மனிதருக்கும் மீனுக்கும் இடையே நிகழ்ந்த கலவி அது. இருந்தாலும் விஞ்ஞானத்தின் மீதான அவரது தீவிர ஆர்வமே எல்லாவற்றையும்விட மேலோங்கி நின்றது. அவருடைய இனவிருத்தி தோல்வி கண்டதை விட அது உயர்வானது. இயற்கையின் விதி தன்னுடன் ஆடிய சூட்சும விளையாட்டை மறந்துவிட்டு அந்தச் செயலின் அறிவு கடந்த நிலையைப் பற்றி யோசித்தார். அந்த விஞ்ஞானபூர்வமான நிகழ்வைத் தவிர உலகில் வேறெதுவும் முக்கியமாக இருக்க முடியாது. அவரது பெயர் வெற்றிச் சிறகுகளில் பறக்கும்; அவருடைய புகழ் பாடி, அவரது அறிவின் வீர்யம் பேசி கொடி கட்டிப் பறக்கும்! பல்கலைக் கழகங்கள் அவருக்குப் பெருமையையும் கேடயங்களையும் அளிக்கும்.

அந்தக் கடல்கன்னி தரையிலிட்ட மீனைப் போலவே சக்தியிழந்துகொண்டிருப்பதை அதன் துடிப்பு குறைந்துகொண்டிருப்பதிலிருந்து கண்டுகொள்ள முடிந்தது. கடலே அதன் உறைவிடம் என்ற நிலையில் வெளியில் இருக்கும் அது ஜீவ மரணப் போராட்டத்தில் மூச்சடைத்து உயிரிழக்க வெகு நேரமாகாது என்பதை உணர்ந்தார். அந்தக் கணத்தில் அந்த உயிரைக் காப்பாற்ற அவர் எதையும் இழக்கத் தயாராகயிருந்தார். வெகு பத்திரமாக அதைத் தன் கரங்களில் ஏந்தி கடலை நோக்கி ஓடினார். காலையின் முதல் வெளிச்சத்தில் சூறாவளி அடங்கி விட்டிருந்தது தெரிந்தது. லேசான தூறல் மட்டுமே விடாமல் தொடர்ந்துகொண்டிருந்தது.

இடுப்பளவு தண்ணீரில் இறங்கி ஞானஸ்நானம் செய்வதுபோல் பவ்யமாக அந்தக் கடல்கன்னியை தண்ணீருக்குள் மூழ்கவிட்டார். கொஞ்சம் கொஞ்சமாகத் தன் உயிர்த் துடிப்பை மீண்டும் பெற்ற அது துள்ளி நெளிவதைக் கண்டார். வாலை ஆட்டி ஆட்டி தண்ணீரை அடிப்பதைக் கண்டதும், அதற்கு நீந்தத் தெரியுமா என்ற சந்தேகத்துடன் மிகவும் மெதுவாக அதைத் தன் கைகளிலிருந்து விடுவித்தார். என்ன பைத்தியக்காரத்தனம்! மீன் குட்டிக்கு நீந்தக் கற்றுக்கொடுக்க வேண்டுமா? அவர் அதைச் செய்திருக்கவே கூடாது. கடல்கன்னி வீர்யத்துடன் தன் வாலைச் சுழற்றி அடித்துவிட்டு, அவர் பிடிக்க வருவதாக நினைத்ததுபோல் சட்டென்று நீருக்குள் மூழ்கி ஓடிப்போனது. கண்ணாடி போல் தெளிந்திருந்த அந்த நீரில் ஒருக்கணம் அதன் பிரதிபலிப்பைக் கண்டார். நிரந்தரமாக அதைப் பிரிந்து போனதில் பிரமை பிடித்தவராய் அப்படியே ஸ்தம்பித்து நின்றார்.

வர இருந்த புகழையும் பெருமையையும் தனது விரலிடுக்குகளின் வழியே அவர் நழுவ விட்டுவிட்டார். எல்லாம் கண்ணிமைக்கும் பொழுதில் நடந்து முடிந்துவிட்டது. யோசித்துப் பார்த்தபோது பால் எக்கருக்கே ஏதோ கனவில் தென்பட்ட பனி மூட்டம்போல்தான் இருந்தது. அந்த மாயாஜால விந்தையை அவர் லின்டாவிடம் எப்படி விளக்குவார்? அவருக்கே எல்லாம் நம்ப முடியாதிருந்தது என்பதை எப்படி அவர் லின்டாவிடம் சொல்லி நம்ப வைப்பார்?)

நீதிபதி வலியுறுத்தினார்: “நீங்கள் விவரித்தது போலவே எல்லாம் நிகழ்ந்திருக்கிறது என்றால், புயலை எதிர்க்க வலுவற்ற அந்தப் படகில் லின்டா ஆல்சனுடன் நீங்கள் கிளம்பியது ஏன்? உண்மையை ஏற்றுக்கொண்டு கடைசியில் அவள் அடங்கிவிடவில்லையா?”

“உண்மையில், நான் சொன்னதை நம்பி தன்னுள் சுருங்கிவிட்டது போல்தான் இருந்தாள். அவளைப் பக்குவமாக கவனித்துக் கொள்வதற்காக எய்த்தியக் கிழவியை வரவழைத்திருந்தேன். லின்டா மிகவும் நலிந்து பலவீனமாகத்தான் இருந்தாள். திரும்பவும் அவளைப் பழைய நிலைக்கு மீட்க டானிக் வகைகளும் சத்துணவும் தேவைப்பட்டன. அவள் சற்றுத் தெம்பாக உணர ஆரம்பித்தவுடன் அவளோடு நானும் சில நாட்கள் நடைப் பயிற்சி போய்வந்தேன். மழையும் குறைந்து விட்டதால் பாறை வெடிப்புகளுக்கிடையே என் ஆராய்ச்சிகளை மீண்டும் ஆரம்பித்தேன். அதற்குப் பிறகுதான் அந்த விஷயத்தைக் கவனித்த நான் சற்று எச்சரிக்கையானேன்.

லின்டாவின் நரம்பு மண்டலம் கட்டுக்கடங்காமல் குலைந்து போய்க்கொண்டிருப்பதற்கான அறிகுறிகள் தென்பட ஆரம்பித்தன. ஏதோ ஆழ்ந்த சோகத்தில் வாடிக்கொண்டிருந்தாள் லின்டா. காரணங்கள் எதையும் என்னால் அனுமானிக்க முடியவில்லை. அலைக்கழிக்கும் சொப்பனங்களில் கடல் பூதங்கள் வந்து அவளை முற்றுகையிட்டன. கனவுலகம் என்பதே அவளுக்குச் சித்ரவதையாகி விட்டது. பயந்து அலறிக்கொண்டு கண் விழித்துத்தான் அதிலிருந்து அவள் தன்னை விடுவித்துக்கொண்டாள். அதனால் அவள் தூங்குவதற்கே பயந்தாள். தூங்கினால் உடனே மீன் உருவ பூதங்கள் அவளைச் சுற்றி வட்டமிட்டுக் கூச்சலிடும். விசித்திர ஒலமும் எக்காளமுமாக பாட்டுப் பாடி, நுரை தள்ளி, வாலை நெளித்து நெளித்து அவைக் கொட்டமடிக்கும்.

குடித்துவிட்டு ஆடும் வெறியாட்டத்தைப்போல் ஆடி, வேகம் ஏறிக் கொண்டே போய், உச்சக் கட்டத்தில் ஏதோ நீர்ச்சுழலில் மாட்டிக் கொண்டதுபோல் உள்ளே இழுக்கப்பட்டு கீழே தரையைத் தொடும் அளவுக்கு மூழ்கிவிடுவாள். குளிரில் அவள் கால்கள் மரத்துப்போய்விடும். பெரிய பனிக்கட்டி தன் மேல் விழுந்துவிட்டதென அடம் பிடிப்பாள். பிறகு நான் அவள் கால்களைத் தேய்த்துவிட வேண்டும். நீண்ட நேரம் கடல் நீரில் ஊறிக் கிடந்ததால் ஏற்பட்ட ஒருவித முடக்குவாதம்தான் அது என்பது எய்த்தியக் கிழவியின் கணிப்பு.

கடலில் குளிக்கும் ஆனந்தத்திற்காக மட்டுமல்ல; நத்தைகளையும் சிப்பிகளையும் நறநறவென்று உயிரோடு மென்று விழுங்கும் அருவருப்பான பழக்கத்தினாலும்தான் அப்படி அவள் நீரிலேயே ஊறிக்கொண்டு கிடந்தாள். இந்த விசித்திரமான பழக்கம் பேறு காலத்தின் பிரத்தியேகமான நாட்டங்களில் ஒன்றாக இருக்கலாம் என ஆரம்பத்தில் எண்ணியிருந்த எனக்கு நாள் ஆக ஆக அந்தப் பழக்கம் தீவிரமாகிவிடவே நாளடைவில் சகிக்க முடியாதபடியாகிவிட்டது. அவளுடைய அகோரப் பசிக்கு கடற்பாசிக்கும் நத்தைக்கும் வித்தியாசம் தெரியவில்லை. வெல்லப்பாகை அள்ளி அள்ளி விழுங்குவதைப்போல் ஜெல்லி மீன்களை அவள் அரையும் குறையுமாக கடித்தும் கடிக்காமலும் விழுங்குவதைப் பார்த்திருக்கிறேன்…”

நீதிபதி வாந்தியே எடுத்துவிடுவார் போலிருந்தது. குழம்பிப்போய், என்ன பேசுவதென்றே புரியாமல் சொன்னார்: “என்னைப் பொறுத்த வரை நீங்கள் ஒரு புதிரான மனப்பிறழ்வு ஒன்றைச் சந்தித்திருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன். அதிர்ஷ்டவசமாக அந்த உளவியல் ஆராய்ச்சி…”

“சூரியன், கடல், சுத்தமான காற்று இவற்றை விட மேலான சிகிச்சை எதுவுமில்லை. இதில் மிகவும் கவலை தரக் கூடிய விஷயம் என்னவென்றால் பயத்துக்கும் மிரட்சிக்கும் இடையிலான அவளது மனப்போராட்டம் தீவிரமடைந்து ஒவ்வொரு கணமும் அது வெளிப்பட்டுக் கொண்டிருந்ததுதான். ஆழமான பள்ளத்தாக்கில் கண் கவரும் ஒளிச்சிதறல்களால் தான் கவரப்பட்டதாக அவள் விவரித்தாள். அது ஏதோ ஒரு இனம்புரியாத அரூப சக்தி என்று சொன்னாள். காம இச்சையால் உந்தப்பட்டு அவ்வப்போது குற்றவுணர்வின் பயத்தில் தயங்கித் தடுமாறும் ஒரு அனுபவமற்ற விடலையைப்போல், வேதனையோடு கூடிய பரவசத்தை நோக்கிய எதிர்பார்ப்பு அவளை கவர்ச்சியும் வெறுப்பும் கலந்த உணர்ச்சிக் குவியலுக்குள் தள்ளியது.

அவளுடைய மனப்பிறழ்வு வெறித்தனமான சிரிப்பாகவோ அல்லது காம இச்சையைத் தூண்டும் Trilonகளைப் போன்று வடிவமெடுத்த ஆபாசப் பாடல்களாகவோ வெளிப்படும். அதனாலேயே இடைவிடாமல் அலைகளுக்கிடையே விளையாடிக் கொண்டிருப்பதில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தாள் அவள். சில சமயங்களில் படுக்கையை விட்டு எழுந்து உறக்கத்திலேயே நிர்வாணமாக ஒட்டமும் குதியுமாகக் கடலைத் தேடிப் போகும் அளவுக்கு அவளுடைய உணர்வு தீவிரமாகியிருந்தது.

வித்தியாசமான இந்த அறிகுறிகள், கூடிய சீக்கிரமே அவள் ஒரு கடல் மோகினியாக மாறிவிடுவாள் என்று எனக்கு அறிவுறுத்தின. நானும் கூடவே ஓடிப்போய் அவளை சுயநினைவுக்குக் கொண்டு வந்து திரும்பவும் படுக்கைக்கு இட்டுச் செல்வேன். உன்மத்தம் பிடித்த அந்த நிலையில், தான் செய்த விஷயங்களைப் பற்றிய எந்தவிதப் பிரக்ஞையுமில்லாமல் என்னோடு ஏதேதோ பேசிக்கொண்டு வருவாள்.

ஒரு இரவில் அவள் என்னிடம் ஒப்புக்கொண்டாள். கடலால் தான் மிகவும் வசீகரிக்கப்பட்டதாகவும், அதன் கவர்ச்சியால் தூண்டப்பட்டு தன்னை அந்தக் கடலுக்கே முழுமையாக அர்ப்பணித்துவிடும் அந்தக் கணம் நிச்சயம் வரத்தான் போகிறது என்றும் சொன்னாள். அதைப்பற்றித் தொடர்ந்து சிந்தித்த நான் செய்தித்தாள்களில் அதிகம் விவாதிக்கப்பட்ட Glacus Comples தான் இது என்ற முடிவுக்கு வந்தேன். உங்களுக்கு நிச்சயம் நினைவிருக்கலாம் – அந்தப் புராண நாயகன் ஒருவகை மூலிகைகளை உட்கொண்டு அதன் காரணமாக கடலால் அதீதமாகக் கவரப்பட்டான். தன்னுடைய கண்மூடித்தனமான உந்துதலை அவனால் நிறுத்திக்கொள்ளவே முடியவில்லை. கடைசியில் தன்னையே இழப்பதைத்தவிர அவனுக்கு வேறு வழி எதுவும் புலப்படவில்லை. கடலின் அலைகளுக்குள் மூழ்கியிருந்த அவனை Triton-ஆகவோ, அதுபோன்ற வேறு ஒன்றாகவோ உருமாற்றின Nereids.

நான் என்னுடைய ஆராய்ச்சிக் கட்டுரையில் நம் காலத்தில் இந்த வகையான காம்ப்ளெக்ஸ் அடிக்கடி தென்படக்கூடிய ஒன்றுதான் என்பதை எடுத்துக்காட்ட முயற்சித்தேன். இந்த விசித்திரமான நோய் பல மட்டங்களில் தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறது. சந்தோஷமான ஒரு சிறிய நேரக் குளியலிலிருந்து துவங்கி தவிர்க்க முடியாத தற்கொலை வரை. நீரில் மூழ்கி உயிரைவிடும் மனிதன் கடைசியில் பாசிகளாலான சவச்சிலையைப் போர்த்திக் கொண்டுதான் ஓய்வெடுக்கிறான்.”

நீதிபதி சற்று நடுங்கினார். பிறகு கோபத்துடன் கேட்டார்: “அவளுடைய மனப்பிறழ்வு அதீதத்தின் பயங்கர எல்லைக்குப் போகும் என்பதை அறிந்திருந்தும் ஏன் நீங்கள் அலட்சியமாக இருந்தீர்கள்? ஏன் அதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கவில்லை? நீங்கள் செய்திருக்க வேண்டிய சரியான செயல் அவளைக் கரைக்கு அழைத்து வந்திருப்பதுதான் அல்லவா?”

“அதற்கு வழியே இருக்கவில்லை.”

“ஏன் இல்லை? கொஞ்சம் விளக்கமாகக் கூறமுடியுமா?”

“காரணம் மிகவும் எளிமையானது – ஏனென்றால் லின்டாதான் என் ஆராய்ச்சிக்கான ஒரே நபராக இருந்தாள். அவள்தான் என்னுடைய ஒரே ஆராய்ச்சிப் பொருள்… ஓ! ஒரு விஞ்ஞானிக்கு அது எவ்வளவு அர்த்தம் வாய்ந்த ஒன்று என்பது உங்களுக்குத் தெரியாது.

அந்தப் புதிய வகை நோயைப் பற்றிய முடிவுகளை நான் தீர்மானிக்க முனைந்தேன். அதன் ஆரம்பத்திலிருந்து அதற்கான தீர்வைக் காணும்வரை அதன் முழுப் பரிமாணத்தையும் ஆராயாமல் இருந்தால் என் முயற்சி தோல்வியடைந்திருக்கும்.

இது ஒரு சுயநலமான காரணமாக உங்களுக்குத் தோன்றலாம். ஆனாலும்… என்னால் லின்டா ஆல்சனை குணப்படுத்த இயலும் என்று நினைக்கும் பட்சத்தில் எப்படி நான் என் முயற்சியைக் கைவிட்டிருக்க முடியும்? அப்படிச் செய்திருந்தால் அது என்னுடைய தோல்வி என பிரகடனப்படுத்தப்பட்டிருக்கும். மற்றவர்களை இந்த விஷயத்தில் ஈடுபட வைத்து அதை நான் வெறுமனே பார்த்துக்கொண்டிருப்பது மிகவும் அபத்தமானது. என்னுடைய அந்த ‘காம்ப்ளெக்ஸ் தியரி’யே சிதைந்து போயிருக்கும், இல்லையா? அதுதான் காரணம்.”

“ஒரு உயிரை ஆபத்துக்குள்ளாக்குவதைப் பற்றி உங்களுக்கு எந்தக் கவலையும் இல்லையா?”

“இல்லை, அப்படியில்லை! உங்களிடம் நான் சத்தியம் செய்கிறேன். இந்த விஷயத்தில் என்னை விட அதிகத் தகுதி வாய்ந்த நபர் யாராக இருக்க முடியும்? எல்லாவற்றுக்கும் மேல் அவளை நான் ஒரு சாதாரண நோயாளியாகக் கருதவில்லை. மாறாக, அவள் என் அன்புக்கு உரியவளாகவும், எனக்கு நெருங்கிய ஒருத்தியாகவும் அல்லவா இருந்தாள்? லின்டா ஆல்சனை தியாகம் செய்யும் அளவுக்கு விஞ்ஞானத்தின் மீதான என் ஈடுபாடு அவ்வளவு தீவிரமானதல்ல. அதற்கு மாறாக அவள் வாழ்க்கைக்காக நான் என் உயிரையே தந்திருப்பேன்.

தீர்மானித்த ஒரு திட்டத்தின்படி அவளுக்கு சிகிச்சை அளித்து குணப்படுத்த விரும்பினேன். இதில் மோசமான விஷயம் என்னவென்றால், சிலசமயங்களில் நாங்களே உருவாக்கும் அறிகுறிகள் நோயாளியின் கற்பனையில்கூடக் கண்டிராததாக இருக்கும். டாக்டர்களாகிய நாங்கள்தான் நோய்களை உருவாக்குகிறோம் என்று நியாயமாகவே சொல்லப்படுகிறது. லின்டாவின் விஷயத்தில் க்ளாகஸ் காம்ப்ளெக்ஸைத் தவிர வேறு எதைப் பற்றியும் பேச முடியாத அளவுக்கு என்னை அது கவர்ந்திருந்தது. ஒருவேளை எல்லாம் எதிர்மறை விளைவுகளாகவும் இருந்திருக்கலாம்…”

“ஆக, நீங்கள் சொல்ல வருவது என்ன?”

“தெரியவில்லை, அனுமானங்கள். ஒருவேளை என்னுடைய வலியுறுத்தல்தான் அவளை தான் ஒரு கடல்கன்னியாக மாற முடியும் என்று யோசிக்க வைத்திருக்கலாம்.”

“சொல்லுங்கள்.”

“உண்மையில் நான் க்ளாகஸ் காம்ப்ளெக்ஸின் அறிகுறிகளைத்தான் அவளிடம் பார்த்தேன். உதாரணமாக, அவள் கால்கள் மரத்துப்போய் முடங்கிப்போனது ஓரளவுக்கு அவளுடைய கற்பனைதான். காரணம், அவள் தன் கால்களை இயக்க முடிந்ததை நான் பார்த்திருக்கிறேன். ஆனால் கண்ணுக்குத் தெரியாத ஏதோ ஒரு சக்தி அவள் கால்களின் தன்னிச்சையான இயக்கத்தை முடக்கி, இரண்டு கால்களையும் ஒன்றாய்ப் பிணைத்துவிட்டதுபோல் அவள் கற்பனை செய்துகொண்டாள். அடிக்கடி தன் கால்களை கவலையோடு தொட்டுப் பார்த்துக்கொள்வாள். தன்னுடைய தோல் கொழகொழப்பாகிக்கொண்டிருப்பதாக அவள் மனதில் பதிந்துவிட்டது. குணப்படுத்துவதற்கு நான் வழி தேடிக்கொண்டிருக்கும்போதே நோய் தீவிரமாகிக்கொண்டிருந்தது என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை…

அவளுடைய வேதனைக்கான காரணங்களை மனதில் போட்டு அலசிக்கொண்டிருந்தபோது எனக்கு ஒரு விஷயம் ஞாபகம் வந்தது. பிரசவத்தின்போது அந்த இரவில் அவளை வெகுவாகப் பாதித்தது சூறாவளியின் இடியோசைதான். இடி, மின்னல், காதைச் செவிடாக்கிய கடலின் உறுமல், காற்றின் விசிலோசை எல்லாம் சேர்ந்து அவள் மனதில் மூழ்கி அமுங்கிப்போகும் ஓர் அந்திமக் காலத்தின் அழிவைப் பற்றிய நினைவை விதைத்திருக்க வேண்டும். அதுபோலவே, ஒரு கற்பனையைத் தனக்கு உகந்ததாக மனதில் சிருஷ்டித்துக்கொள்வதும் அவளுக்குச் சிரமமானதாக இருக்கவில்லை.

அதனாலேயே நான் விளைவை எதிர்நோக்கி உண்மையான ஆர்வத்தோடு காத்திருந்தேன்.

அது வெளிப்பட ஏன் அவ்வளவு காலம் ஆனது என்றுதான் எனக்குப் புரியவில்லை. உங்களுக்கு நன்றாகத் தெரியும்… வெப்ப மண்டலத் தீவுகளில் புயல் அடிக்கடி வீசும். வசதியான தட்ப வெப்பம் ஒருசில வாரங்களே நீடித்திருக்கும். ஆனால் மூல காரணிகளே என் திட்டத்துக்கு எதிராக இருக்கின்றனவோ என்று கூட நான் யோசித்திருக்கிறேன். முட்டையிடும் பருவத்தைப் பற்றி ஆய்வு செய்வதற்கு நல்ல தட்பவெப்பம் எனக்குத் தேவைபட்டபோது அடைமழை அடித்துக்கொண்டு பெய்தது. நீரை சேற்றோடு சேர்த்துக் குழப்பியது. சூறாவளியை நான் தேடியபோது ஒரு தென்றல் காற்றுகூட வீசுவதில்லை.

ஒவ்வொன்றையும் சரியான வரிசைக் கிரமத்தில் நான் உங்களிடம் சொல்லாதிருந்திருக்கலாம். ஆனால் என் அவஸ்தையை உச்சகட்டத்திற்கு எடுத்துச் சென்ற ஒரு அறிகுறியை நான் ஞாபகம் வைத்திருக்கிறேன். ஒருநாள் காலையில் வேட்டையாடலாம் என்று நினைத்து காட்டுக்குள் நடந்துசென்று கொண்டிருந்தபோது மழை பெய்ய ஆரம்பித்தது. நான் திரும்பிவிட்டேன். கடல்முனைக்கு வந்தபோது அது மழை அல்ல என்றும், பயம் காட்டும் வெறும் பாசாங்குத் தூறல்தான் என்றும் புரிந்துகொண்டேன்.

விசையால் இயக்கப்பட்டதுபோல் கிளம்பிய கடல் காகங்களின் கூட்டத்தை மனம் லயிக்காமல் பார்த்துக்கொண்டு நின்றபோது திடீரென்று லின்டா ஆல்சனைப் பார்த்தேன். நிர்வாணமாக அலைகளை நோக்கி ஓடிக்கொண்டிருந்தாள். அவளைத் தூக்கி வருவதற்காக அவள் பின்னே நானும் ஒடினேன். எய்த்தியக் கிழவியும் அவளை அழைத்து வருவதற்காக வந்துகொண்டிருந்தாள். ஆனால் அந்த நோயாளிப் பெண் லின்டா ஒவ்வொரு அலைக்கும் போட்ட குதியாட்டத்தைப்பார்த்து சிரிக்க ஆரம்பித்துவிட்டாள் கிழவி. நீக்ரோக்களுக்கே உரிய விலங்கினச் சிரிப்பு.

அந்தச் சிரிப்பைக் கேட்ட மாத்திரத்தில் லின்டா ஆல்சனிடம் அதிருப்தியின் அறிகுறிகள் தெரிந்தன. குதிப்பதை நிறுத்திவிட்டு இயல்பு நிலைக்குத் திரும்புவாள் என்று நினைத்தேன். ஆனால் எய்த்தியக் கிழவியின் பைத்தியக்காரத்தனம் என்னையும் தொற்றிக் கொள்ள நானும் சிரிக்க ஆரம்பித்தேன். இப்படியாக நானும் எய்த்தியக் கிழவி யேயோவும் லின்டாவை எங்களுடைய அதிரடிச் சிரிப்பினால் முற்றுகையிட்டோம்.

ஆனால் நான் எதிர்பார்த்தது நடக்கவில்லை. குதிப்பதை நிறுத்திக்கொள்ள முடியாமல் லின்டா தன் நிலை மறந்து ஆவேசமாகத் தொடர்ந்து குதித்துக்கொண்டிருந்தாள்; பிறகு சக்தியிழந்து களைத்துப் போய் மயங்கிய நிலையில் தரையில் சாய்ந்தாள். ஏதோ அருவமான ஒன்றினால் தாக்கப்பட்டவளைப்போல் கிறீச்சிட்டாள். அவளை நோக்கி நான் ஓடினேன். பக்கத்தில் நெருங்கிய பிறகுதான் அவள் மூச்சுவிட முடியாமல் திணறிக்கொண்டிருந்ததைப் பார்த்தேன்.

அவளைக் கடலுக்குள் தூக்கிச் செல்வதுதான் சரியான வழி என்று எனக்கு அந்தக் கணத்தில் எப்படித் தோன்றியதென்றே தெரியவில்லை. அவளைத் தூக்கிக்கொண்டு போய் நீருக்குள் அமுக்கினேன். அப்போது அவளுடைய எதிர்வினையைக் கண்டு அதிசயித்தேன். நீருக்குள் போனதும் அவள் சந்தோஷமாகச் சிரிக்க ஆரம்பித்துவிட்டாள். கால்கள் இரண்டையும் பிணைத்துக்கொண்டு விசித்திரமாக நீருக்குள் நீந்தினாள்.

அவளுடைய பிரச்சினைக்குக் காரணமாக இருந்த கடலே தீர்வாகவும் இருக்கும் என்பது அந்தக் கணத்தில் எனக்குச் சந்தேகமில்லாமல் தெரிந்துவிட்டது. கடலுக்குள் மூழ்க வைத்துத்தான் அவளைக் காப்பாற்ற முடியும். ஆனால் அந்தப் போராட்டத்தில் கடல் மேலோங்கி நின்று அவளைப் பூரணமாகத் தன்னுடையவளாக உள்வாங்கிக்கொண்டால்தான் அவள் பிழைப்பாள் என்று நினைத்தேன். நிகழ்ந்ததும் அதுதான்…”

“எய்த்தியக் கிழவியின் சிரிப்பினால் ஏதும் விரும்பத்தகாத விளைவுகள் ஏற்பட்டதா?”

“ஏற்பட்டது. துரதிர்ஷ்டவசமாக அந்த நையாண்டிச் சிரிப்பு ஒரு கெட்ட அசரீரியாகத்தான் இருந்தது. எதிர்பார்த்தபடியே அன்றைய தினத்திலிருந்து வூடு தன்னருகில் வருவதையே லின்டாவினால் சகிக்க முடியாமல் போய்விட்டது. நாராசமான அந்தச் சிரிப்பின் சப்தம் அவள் உள்மனதின் மென்மையான திரைகளை ஆழமாகக் கிழித்துவிட்டது. ஒவ்வொரு இடத்திலும் அந்த ஒலிதான் அவள் காதில் விழுந்தது. கடலின் இரைச்சலில், காற்றின் முணுமுணுப்பில், கடல் பறவைகளின் பாடலில்… என்று எல்லா சப்தங்களிலும் அந்த நாராசமான சிரிப்பின் ஒலிதான் கேட்டது.

அந்தச் சிரிப்பையும், அவளை அலைக்கழித்து ஆட்டி வைத்துக்கொண்டிருந்த அந்த விவரிக்க முடியாத மாயப்பாடலையும் கேட்காமல் இருப்பதற்காக சில சமயங்களில் தூக்கத்திலிருந்துகூட எழுந்து தன் காதுகளைப் பொத்திக்கொள்வாள். ஒரு இரவின் மத்தியில் அவளைக் கவனிப்பதற்காக எழுந்த என் காதிலும்கூட அந்தச் சிரிப்பும் பாடலும் கேட்டதாக நான் உணர்ந்தேன்.

 

ஆனால் அதற்குள் நான் என் முயற்சியில் களைத்துப் போய்விட்டேன். வெறுக்கத்தக்க தனது உருமாற்றமானது (Metamorphosis) முழுமையடையும் நிலைக்கு வந்துவிட்டதாய் உணர்வதாக அவள் அந்தக் கொடூரமான சொப்பனத்திலிருந்து விடுபட்ட பிறகு சொன்னது எனக்கு ஞாபகம் இருக்கிறது. கடல் கன்னியாக உருமாறி கடலில் வாழ்வதாக அவள் கனவுகள் கண்டாள். கால்கள் வாலாய் மாறிவிட்டதாக உணர்ந்தாள். ‘அப்படி நடக்கக் கூடாது. அதில் எனக்கு விருப்பமில்லை,’ என்று என்னிடம் சொன்னாள். ‘என்னைக் கைவிட்டு விடாதீர்கள்!’ என்று என் கழுத்தைக் கட்டிக்கொண்டு கதறினாள்.

மறுநாள் மிகவும் அமைதியடைந்து அந்தப் புதிரான ரகசியத்தை என்னிடம் சொன்னாள். என் தாடியைப் போன்ற அடர்த்தியான தாடியும், சுருள் சுருளான நீண்ட தலைமுடியுமாய் இருந்த வலிமை மிக்க Triton-ஐத் தான் பார்த்ததாக ஒரு வஞ்சகமான குரூரப் பார்வையோடும், அதேசமயம் கூச்சத்தோடும் என்னிடம் சொன்னாள். கனவை நினைவுகூர்ந்து சந்தோஷமாகச் சிரிக்க ஆரம்பித்தாள்.  Triton அவளை மென்மையற்று நடத்தியதாகத் தெரிகிறது. கடற்கரையை நோக்கி அவளை நெட்டித்தள்ளி கடித்துக் குதறி ஆக்ரமித்திருக்கிறான். ‘இன்னும் அவன் கடிகளை என் உடல் முழுவதும் உணர்கிறேன்,’ என்று சொன்னாள் அவள்.”

எரிச்சலுற்ற நீதிபதி தானே விசிறிக்கொண்டு தொண்டையைப் பலமுறை செருமுகிறார். எக்கர் தொடர்கிறார்: “இதையெல்லாம் உங்களிடம் ஏன் சொல்கிறேன் என்று எனக்குத் தெரியவில்லை. விபரங்களை மறந்துவிட்டு பயங்கரமான அந்த முடிவைப் பற்றிப் பேசுவோம். குடிப்பதற்கு கொஞ்சம் தண்ணீர் கிடைக்குமா?”

“நிச்சயம், டாக்டர்.”

பால் எக்கர் நீர் அருந்துகிறார்.

“பிறகு…?”

“காற்று திசை மாறியது.  வரப்போகும் மழையின் நிச்சயத்தை அறிவித்து கடல் கொந்தளித்தது. காந்தக் கதிரோட்டம் நிறைந்த வாயு மண்டலம் அந்த இரவுகளில் லின்டா ஆல்சனைத் தூண்டிவிட்டு மீண்டும் மீண்டும் அவள் கோபத்தை விசிறிவிட்டது. எப்படியாவது வெளியில் ஓடிவிட வேண்டுமென்று அவள் துடித்தாள். ‘கடலோடு ஒரு கலவி இருக்கிறது எனக்கு,’ என்று கத்துவாள்.

ஏற்கனவே மிகவும் களைத்துப்போயிருந்த நான் எய்த்தியக் கிழவியைக் கூப்பிட்டு அவளை கவனித்துக்கொள்ளச் சொல்வேன். சூறாவளி வீசிய இரவிலும் நிலைமை அப்படித்தான் இருந்தது. இடியும் மின்னலுமாய் வெடித்த வாண வேடிக்கையில் மழை தன் வருகைக்குக் கட்டியம் கூறியது.

வாயுமண்டலத்தின் சப்தம் லின்டா ஆல்சனிடம் ஏற்படுத்திய பாதிப்பை அறிவதற்காக அவளையே உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டிருந்தேன். அவளைப் பற்றிய என் முடிவு தவறாகவில்லை என்று என்னால் நிச்சயப்படுத்திக்கொள்ள முடிந்தது. காரணம், அவள் அமைதியானாள். தன் கால்களின் இறுக்கத்தை அவள் மறந்துவிட்டதையும் கவனித்தேன். நல்ல உறக்கத்தில் இருந்ததைக் கண்டு நெருக்கடியின் உச்சநிலையை அவள் தாண்டி விட்டாள் என்று நினைத்தேன். திரும்பிப் போக விரும்பிய எய்த்தியக் கிழவியை அதுதான் சமயம் என்று அனுப்பிவிட்டேன். ‘ஒன்றும் ஆபத்தில்லை; நீ போகலாம்,’ என்று சொல்லி அனுப்பினேன்.

எய்த்தியக் கிழவி தான் திரும்பிப் போவதற்கான காரணத்தை என்னிடம் விளக்கினாள் – தன்னுடைய படகு பாறைகளில் இடித்து சேதமடைந்துகொண்டிருப்பதாகவும், அதைப் பாறைகளின் பிளவுகளிலிருந்து வெளியே கொண்டுவர வேண்டுமென்றும் சொல்லிச் சென்றாள். அவள் கதவை மூடிய உடனே அசதியின் அழுத்தத்தில் கால்களை நீட்டிக்கொண்டு துணித் தொட்டிலில் சாய்ந்து புகைக்கத் தயாரானேன். ஆனால் குழாயைப் பற்ற வைக்கும் முன்பே உறக்கத்தில் என்னை மறந்தேன்…”

“தடக்கென்ற மெதுவான ஒரு சப்தம் என்னை எழுப்பியது. கதவு திறந்திருந்தது. சூறாவளியின் ஆவேசம் தீவிரமடைந்திருந்தது. திரைச் சீலைகள் கிழிந்து விடுகிறாற்போல் அடித்துக்கொண்டிருந்தது காற்று. எய்த்தியக் கிழவி கதவைச் சரியாக மூடாமல் போயிருப்பாள் என்றுதான் முதலில் நினைத்தேன். ஆனால் திரும்பிப் பார்த்தபோது லின்டா அறையில் இல்லாதது தெரிந்தது. வீடு பூராவும் தேடினேன். காணவில்லை. திடீரென்று எனக்கு பிரச்சினையின் பயங்கரம் புலப்பட்டது. மழையிலேயே கடற்கரையை நோக்கி ஓடினேன். ஒசைகளும் வெளிச்சங்களும் மோதிச் சிதறிய எரிமலையாக இருந்தது அந்த இரவு.

“லின்டா ஆல்சன்! லின்டா ஆல்சன்!” என்று குரலைக் கிழித்துக்கொண்டு கத்தினேன்.

பதில் சொல்ல யாருமில்லை. கிழவி தன் படகை கரைக்கு அருகில் கொண்டு வந்திருந்தாள். ஆனால் காற்றும் அலைகளும் படகை அலையோட்டத்திலிருந்து வெளியே இழுக்க முடியாமல் அவளைத் தடுத்தன. மழை விடாமல் பொழிந்துகொண்டிருந்தது. இடியோசையும் காற்றின் ஊளையும் சேர்ந்த இசைக் கச்சேரி ஒன்றை அந்த இருண்ட இரவில் நடத்திக்கொண்டிருந்தது புயல். பாறை மீது ஏறினேன். பளிச்சிட்ட மின்னல் ஒளியில் லின்டா ஆல்சன் அலைகளுக்கிடையே தூக்கிச் செல்லப்படுவதை நான் பார்த்ததாக என் மனதுக்குப் பட்டது. கைகளை வாய்க்கருகே குவித்து, ‘லின்டா ஆல்சன்! லின்டா ஆல்சன்!’ என்று கூப்பிட ஆரம்பித்தேன்.

செயலிழந்து கூச்சலிடும் அவள் குரல் தூரத்திலிருந்து எனக்குக் கேட்பது போலிருந்தது.

கடற்கரைக்கு ஓடிப்போய் கிழவியைத் தள்ளிவிட்டு படகில் ஏறிக்கொண்டேன்.

“காலம் கடந்துவிட்டது!” என்று உறுமினாள் கிழவி.

துடுப்பைப் பிடித்துக்கொண்டு படகை கடலை நோக்கித் திருப்பினேன். அலைகளின் கோபத்தோடும் காற்றின் வேகத்தோடும் போராடி நான் அவளைக் கண்டுவிட்டதாக நினைத்த அந்த இடத்தை நெருங்கினேன். அலையோடு மிதந்துகொண்டிருந்த அவளை மின்னல் ஒளி இடையிடையே எனக்குக் காட்டி மறைத்துக்கொண்டிருந்தது. ஆனால் இப்போதுதான் நான் உணர்கிறேன்… ஒருவேளை நான் அவளைப் பார்க்கவோ அல்லது இதயத்தைப் பிழியும் அவள் குரலைக் கேட்கவோ இல்லையென்று… ஒருவேளை அது என் பிரமையாகவும் இருந்திருக்கலாம். உண்மையில் நான் அவளை நெருங்கிவிட்டதாக நினைத்தபோது வெகு தூரத்தில் இருந்தாள் அவள்.

கடைசியில் அந்தக் கணம் வந்தது. என் சக்தியெல்லாம் போய் நான் பிரக்ஞையிழந்தேன். நான் படகில் பயணித்ததாகவோ அல்லது படகு அடுத்த தீவின் பாறைகளில் மோதி உடைந்ததாகவோ இப்போது எனக்கு ஞாபகமில்லை. தொப்பியை எப்போது என் தலையில் மாட்டிக்கொண்டேன் என்பதும் நினைவில்லை. ஒருவேளை அறையைவிட்டு வரும்போதே மாட்டிக்கொண்டு வந்திருக்கலாம். ஆனால் ஒரு விஷயத்தை மட்டும் என்னால் மறக்கவே முடியாது – என்னுடைய பயத்தினாலோ அல்லது மழையின் சப்தத்தினாலோ… மிஸ் ஆல்சனின் ஓலமும் அந்த மாயப்பாடலும் காதில் விழுவது மட்டும் ஒருக்கணமும் நிற்கவில்லை…

கரைக்கு நான் எப்படி வந்து சேர்ந்தேன் என்று எனக்குத் தெரியாது. ஒருக்கால், பாறைகளைச்சுற்றி நான் நடந்துகொண்டிருக்கும் போது பிரக்ஞையிழந்து மணலில் விழுந்திருக்கலாம். ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம் – எனக்குப் பிரக்ஞை மீண்டபோது ஏற்கனவே பொழுது புலர்ந்திருந்தது. புயலும் நின்றிருந்தது. ஆனால் என்னுள் வெகு தூரத்துப் பாடலின் எதிரொலியும், கடலின் ஆழமான ஒலி அதிர்வுகளும் கலந்து தொடர்ந்து ஒலித்துக்கொண்டிருந்தது… என் ஆத்மா முழுவதும் ஒரு பிரம்மாண்டமான சங்காக உருமாறி விட்டிருந்தது.

***

www.charuonline.com என்ற இந்த இணையதளம் 2002-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.  சினிமா, இசை, அரசியல், இலக்கியம் போன்ற தலைப்புகளில் இதில் இத்தனை ஆண்டுகளாகத் தொடர்ந்து எழுதி வருகிறேன்.  இந்த இணையதளத்தை ஒரு மாதத்தில் 60000 பேர் வாசிக்கிறார்கள்.  தமிழில் எழுத்தாளர்கள் இணையத்தில் எழுத ஆரம்பிப்பதற்கு வெகுகாலம் முன்னரே ஆரம்பிக்கப்பட்ட பழைய இணைய தளம் இது.  அப்போது விகடன், தினமலர் போன்ற பத்திரிகைகளின் இணைய தளங்கள்தான் இருந்தன.  இப்போது இந்த இணையதளத்தைக் கட்டணம் செலுத்திப் படிக்கும் தளமாக மாற்றலாமா என யோசித்தேன்.  அறுபது ஆயிரத்தில் ஆறு பேர் கூட எஞ்ச மாட்டார்கள்.  முன்பே அதைப் பரிசோதித்துத் தோற்றிருக்கிறேன்.  எனவே மீண்டும் அந்தச் சோதனையில் ஈடுபட மாட்டேன்.  ஆக, இப்போது என் வேண்டுகோள் என்னவெனில், இதை வாசிக்கும் அன்பர்களில் விருப்பமுள்ளவர்கள் தாமாகவே முன்வந்து கட்டணம் செலுத்தலாம்.  விருப்பம் இல்லாதவர்கள் கட்டணம் செலுத்தாமலும் படிக்கலாம்.  அவரவர் விருப்பம்.  பணம் எப்போதும் என் சிந்தனையில் இருந்ததில்லை.   இனிமேலும் இருக்காது.  பணம் பற்றி யோசிக்காமல் இருக்கக் கூடிய சூழல் இருந்தது.  யோசிக்காமல் இருந்தேன்.  இப்போது நிலைமை மாறி விட்டதால் பணத்துக்கான ஒரு சிறிய ஏற்பாடு இது.  எவ்வளவு கட்டணம் என்பதும் அவரவர் விருப்பம்.  மாதாமாதம் அனுப்ப முடியாவிட்டால் மூன்று மாதத்துக்கான தொகையை அனுப்பலாம்.   கட்டணம் செலுத்தவில்லையே, படிக்கலாமா கூடாதா என்ற அறம் சம்பந்தமான கேள்விக்குள் நுழைந்து விடாதீர்கள்.  அது 60000 என்ற வாசகர் எண்ணிக்கையைக் குறைத்து விடும்.  முடிந்தவர்கள் கட்டணம் செலுத்துங்கள்.  முடியாவிட்டால் எந்தப் பிரச்சினையும் இல்லை.

என் மின்னஞ்சல் முகவரி:  charu.nivedita.india@gmail.com

கட்டணம் செலுத்துவதற்கான வங்கிக் கணக்கு விவரம்:

UPI ID: charunivedita@axisbank

பெயர்: K. ARIVAZHAGAN

Axis Bank Account No. 911010057338057

Dr Radhakrishnan Road, Mylapore

IFSC No. UTIB0000006

ஒரு நண்பர் பெயரில் உள்ள K என்பதன் விரிவு என்ன என்று கேட்டிருந்தார்.  அவர் வங்கியில் கேட்கிறார்களாம்.  Krishnasamy.  என் தந்தையின் பெயர்.  ஆக்ஸிஸில் அனுப்ப முடியாவிட்டால் என் ஐசிஐசிஐ கணக்கு விபரம் கீழே:

K. ARIVAZHAGAN

ICICI a/c no.  602601 505045

MICR Code: 600229065

IFS Code ICIC0006604

T. NAGAR BRANCH chennai