சீலே – 2 To Bury Our Fathers…

ஹோர்ஹே பார்ரோஸ் தொர்ரியல்பா (Jorge Barros Torrealba) சந்த்தியாகோவிலுள்ள ஒரு புத்தக வெளியீட்டாளர். செப்டம்பர் 11, 1973லிருந்து 1988 வரையிலான பதினைந்து ஆண்டுகளில் பத்துக்கு ஒருவர் வீதம் சீலேயை விட்டு வெளியேறினார்கள். அதிபர் சால்வதோர் அயெந்தேயின் ஆட்சியில் பார்ரோஸ் அரசாங்கப் புத்தக வெளியீட்டு நிறுவனத்தில் பணிபுரிந்தார். பிறகு அயெந்தே கொல்லப்பட்ட பிறகு இவரும் மற்றவர்களைப் போலவே நாட்டை விட்டு வெளியேறினார். 1976இலிருந்து 1980 வரை வெனிஸுவலாவில் இருந்தார். 1978 இல் சீலேயில் அடக்குமுறை அதன் உச்சகட்டத்தை எட்டியது. 1980ஆம் ஆண்டு சீலே திரும்பிய பார்ரோஸ் 1984ஆம் ஆண்டு ஒரு முக்கியமான புத்தகத்தை வெளியிட்டார். அது பினோசெத்துக்கு முன்னதாக ராணுவத் தளபதியாக இருந்த ஜெனரல் கார்லோஸ் ப்ராட்ஸ் கொன்ஸாலஸ் என்பவரது நினைவுக் குறிப்புகள். ஜெனரல் ப்ராட்ஸ் 1974இல் அயெந்தேயின் ஆட்சிக் கவிழ்ப்புக்குப் பிறகு ஒரு ஆண்டு கழித்து புவனோஸ் அய்ரஸில் அவரது மனைவியுடன் காரில் குண்டு வைக்கப்பட்டு கொலை செய்யப்பட்டவர்.  இந்தக் கொலைக்குக் காரணம் பினோசெத் தான் என்பதும், இந்தக் கொலையை செய்து முடிப்பதற்காக அமர்த்தப்பட்ட நபர் பற்றிய விபரமும் பின்னால் அர்ஹெந்த்தீனிய அரசினால் கண்டுபிடிக்கப்பட்டது. (1976இல் வாஷிங்டனில் சீலேயை விட்டு வெளியேறிய சீலே தூதர் ஓர்லாந்தோ பெத்தேலியரும் இதே கூலியாளால் காரில் வெடிகுண்டு வைக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார்.)

ஆட்சிக் கவிழ்ப்புக்கு ஒரு மாதம் முன்னர்தான் கார்லோஸ் ப்ராட்ஸ் கொன்ஸாலஸ் டாக்டர் அயெந்தேயிடம் சீலேயின் அரசியல் மற்றும் பொருளாதார அமைப்பு மிக மோசமாக சீர்குலைந்து விட்டது என்றும், கடந்த நூறு ஆண்டுகளாக சீலேயின் ஜனநாயகத்தில் இதுவரை ஒரு முறைகூட குறுக்கிட்டிராத ராணுவம் இப்போது நாளுக்கு நாள் பொறுமையிழந்து வருகிறது என்றும் எச்சரித்து விட்டு ராஜினாமா செய்தார்.

கார்லோஸ் ப்ராட்ஸின் நினைவுக் குறிப்புகள் வெளிவந்துவிடக் கூடாது என்பதில் பினோசெத் மிகவும் அக்கறை கொண்டிருந்தார். ஏனென்றால், ப்ராட்ஸ் இந்த ஆட்சிக் கவிழ்ப்புக்கு ஆரம்பத்திலிருந்தே எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார். மேலும் ஜெனரல் பினோசெத்தும் ஆட்சிக் கவிழ்ப்புக்கு மூன்று அல்லது நான்கு தினங்களுக்கு முன்புதான் – அதிலும் இந்த ஆட்சிக் கவிழ்ப்புத் திட்டம் நிச்சயம் வெற்றிகரமாக நடத்தப்பட்டுவிடும் என்று உறுதியாகத் தெரிந்து கொண்டபிறகுதான் – இதில் தன்னை இணைத்துக்கொண்டார் என்பது போன்ற விபரங்களெல்லாம் இந்த நினைவுக் குறிப்புகளில் இருக்கக்கூடுமென்று பயந்தார் பினோசெத். ஆனால் இந்த நூலில் பினோசெத் பற்றி அதிகம் குறிப்பிடப்படவில்லை என்றாலும் சில இடங்களில் கூறப்பட்டிருப்பவற்றிலிருந்தே அயெந்தேயின் வீழ்ச்சிக்கான காரணத்தை ஊகித்து அறிய முடிகிறது. ஒரு உதாரணம்: ஆட்சிக் கவிழ்ப்புக்கு சில தினங்களுக்கு முன்னர் கார்லோஸ் ப்ராட்ஸிடம் அயெந்தே பேசிக்கொண்டிருந்த பொழுது பினோசெத் பற்றி மிகவும் அன்புடன் “நம்முடைய அவ்குஸ்தோவுக்கு இப்போதெல்லாம் என்ன ஆயிற்று?” என்று விசாரிக்கிறார் அயெந்தே. (பினோசெத்தின் முதல் பெயர் அவ்குஸ்தோ).

கார்லோஸ் ப்ராட்ஸின் இந்த நினைவுக் குறிப்புகள் பினோசெத்தின் ராணுவ சர்வாதிகார அடக்குமுறை ஆட்சியின்போதே வெளியாயிற்று. 200 அச்சகத் தொழிலாளிகள் இந்தப் புத்தகம் அச்சாவது பற்றிய ரகசியம் எந்த நிலைமையிலும் காக்கப்படும் என்று உறுதிமொழி கொடுத்தபிறகு 5000 பிரதிகள் அச்சிடப்பட்டன. புத்தகம் வெளியாவதற்கு முன்பே ராணுவத்தால் புத்தகப் பிரதிகள் கைப்பற்றப்பட்டு விடலாம் என்ற அச்சத்தில் புத்தகம் அச்சிடப்பட்ட உடனேயே 1000 பிரதிகள் வெளிநாடுகளுக்கு ரகசியமாக அனுப்பப்பட்டன. கடைசியாக, 1985ஆம் ஆண்டு வெளிநாட்டுத் தூதர்கள், பெரும் அதிகாரிகள் மற்றும் முக்கிய புள்ளிகள் அனைவருக்கும் அழைப்பு அனுப்பப்பட்டு ஒரு புத்தக வெளியீட்டு விழாவே நடத்தப்பட்டது.

“இந்தப் புத்தகம் இப்படி அச்சடிக்கப்பட்டது குறித்து உளவுப் போலீசாருக்குத் தெரியாமல் போனது குறித்து பினோசெத் மிகவும் கோபமடைந்தார். அந்தப் புத்தகத்தின் பிரதிகள் அனைத்தையும் கைப்பற்ற நினைத்தார். ஆனால் சட்ட மந்திரி இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவே பினோசெத்தினால் அப்படிச் செய்ய முடியவில்லை. அந்தப் புத்தகத்தைப் பற்றி பிரஸ்தாபிப்பது மட்டுமே தடை செய்யப்பட்டது” என்கிறார் பார்ரோஸ். பிறகு பர்ரோஸஸுக்கு பலவிதமான தொலைபேசி மிரட்டல்கள் வந்தன. கடைசியாக 1986 செப்டம்பர் மாதம் கார்லோஸ் ப்ராட்ஸின் நினைவுதினத்தன்று இரவு நேரத்தில் பினோசெத்தின் போலீசார் பார்ரோஸின் அலுவலகத்தைச் சூறையாடினார்கள். ஆனால் அதற்குள்ளாகவே ப்ராட்ஸின் நினைவுக் குறிப்புகள் 20,000 பிரதிகள் விற்றிருந்தது. ஆங்கில மொழி பெயர்ப்பு ஏற்பாடுகளும் நடந்துகொண்டிருந்தன.

62 வயதாகும் பார்ரோஸ் சீலேயின் புத்தக வெளியீட்டாளர் சங்கத்தின் செயலாளர். குழந்தைநூல்கள் வெளியிடுபவர். மேலும், சீலேயிலிருந்து வெளியேறி வெளிநாட்டில் வசிக்கும் இரண்டு சிறந்த நாவலசிரியர்களின் நாவல்களையும் வெளியிட்டிருக்கிறார். ஒருவர்: Ariel Dorfman. மற்றொருவர் I Dreamt the Snow was Burning என்ற அற்புதமான நாவலை எழுதிய Antonio Skarmeta.

சந்த்தியாகோவின் இரண்டு எதிர்க்கட்சி தினசரிகளில் ஒன்று Fortin Mapocho Diario. இந்த இடதுசாரிப் பத்திரிக்கையின் வெளியீட்டாளர்: செர்ஹியோ பித்தார் (Sergio Bitar). இவர் அயெந்தேயின் மந்திரி சபையில் இருந்தவர்.  Islo 10 என்ற புத்தகத்தின் அசிரியர். சீலேயின் தென்புறக் கடலில் நெடுந்தொலைவிலுள்ள மிகக் கடுமையான குளிருள்ள ஒரு தனித்த தீவு Dawsori Island. இங்குதான் அயெந்தேயின் அரசியலில் முக்கியப் பொறுப்பு வகித்தவர்களுக்கான வதைமுகாமை அமைத்திருந்தார் பினோசெத். இங்குதான் செர்ஹியோ பித்தாரும் சிறை வைக்கப்பட்டார். இந்த சிறைக் குறிப்புகளே Islo 10.

bitar

Sergio Bitar

1985இல் Patricia Politzer என்பவர் Fear in Chile என்ற புத்தகத்தை எழுதினார். பினோசெத் ஆட்சியில் உள்ள நிலைமைகளைப் பற்றியும், தங்கள் அனுபவங்கள் பற்றியும் வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு சூழ்நிலைகளில் வாழ்ந்த பதினான்கு பேரின் பேட்டிகளின் தொகுப்பே இந்நூல். பின்விளைவுகளை நினைத்து பயந்து இரண்டு வெளியீட்டாளர்கள் இந்த நூலைப் பிரசுரிக்க மறுத்துவிட்டார்கள். கடைசியில் செர்ஹியோ பித்தார் இதைப் பிரசுரித்தார். நூல் பெருமளவில் விற்பனையாயிற்று. ஒரு கோடியே இருபது லட்சம் மக்கள் தொகையுள்ள ஒரு நாட்டில் 7000 பிரதிகள் ஒரே ஆண்டில் விற்றது பெரும் சாதனை. பொலிட்ஸருக்கு இதுவரை எந்தத் தொலைபேசி மிரட்டலும் வரவில்லை. ஆனாலும் அவர் சொல்கிறார்: “சில இரவுகளில் பந்து போல் ஏதோ ஒன்று என் வயிற்றுக்குள் உருளுவதை உணர்கிறேன் – பயம்தான்.”

ஹோஸே தொனோஸோ (Jose Donoso) சீலேயின் மிக முக்கியமான நாவலாசிரியர். அந்நாட்டின் சூழ்நிலை பற்றியும், தீவிர இடதுசாரிகளுக்கிடையே நடந்துகொண்டிருக்கும் அரசியல் மோதல் பற்றியும், ஒருவருடைய கூட்டத்தில் மற்றொரு குழு ரகளை செய்வது பற்றியும், இந்த மோதலில் பஸ்கள் கொளுத்தப்படுவது பற்றியும் சொல்கிறார் தொனோஸோ. (இத்தாலிக்கு அடுத்ததாக மிக வலிமையான கம்யூனிஸ்ட் கட்சி சீலேயில்தான் உள்ளது. ஆனால் ஸ்டாலினிஸ்டுகள் மற்றும் மிதவாதிகள் என்று கட்சி பிளவுண்டு கிடக்கிறது. தேர்தலில் கம்யூனிஸ்ட் கட்சி இங்கே 15 சதவிகித ஓட்டுகளைப் பெறுகிறது.) சீலேயின் எல்லா எழுத்தாளர்களையும் போலவே தொனோஸோவும் பினோசெத் ஆட்சியின் தீவிர எதிர்ப்பாளர்தான். ஆனால் வெளிப்படையாகத் தன் நிலைப்பாட்டை முன்னிறுத்துபவர் அல்ல. “காரணம், நான் ஒரு அடிமையைப் போல் உணர்கிறேன். நான் என் அத்தையைப் பற்றி எழுத விரும்புகிறேன். அவர் ஒரு கன்னிகாஸ்திரியாக இருந்தார். ஆனால் அதைப் பற்றி இந்தச் சூழ்நிலையில் எழுதுவது முக்கியமான பிரச்சினையை விட்டு விலகுவதாகும் என்பதால் அதை நான் எழுதவில்லை. ஆனால், நான் அரசியல் மற்றும் சமூகப் பிரச்சினைகளை ஒரு வகையில் கையாளுகிறேன் என்றே சொல்லலாம். இரண்டு ஆண்டுகளாக நான் எழுதவே இல்லை. மண்டைக்குள் சுதந்திர உணர்வே வருவதில்லை. என்ன செய்வது?” என்று ஒருவித அயர்ச்சியுடன் தனது சமீபத்திய நாவலான Curfewவின் கருவை ஞாபகப்படுத்துவது போல் சொல்கிறார்.

தொனோஸோ அயோவா பல்கலைக்கழகத்தில் எழுத்துப்பட்டறையில் சிலகாலம் பணியாற்றியவர். பிறகு 1962இல் சீலேயிலிருந்து வெளியேறி பலகாலம் பார்ஸலோனாவில் இருந்துவிட்டு 1980இல் சீலே திரும்பி னார். ஆனால் அரியல் டார்ஃப்மனைப் போல் தன்னை ஒரு அரசியல் அகதியாக இவர் உணர்வதில்லை.  டார்ஃப்மன் பல நாவல்களின் ஆசிரியர். டார்ஃப்மன் அமெரிக்காவில் பேராசிரியராக இருந்துவிட்டு 1983இல் சீலே திரும்பினார். அந்தோனியோ ஸ்கார்மேத்தா மேற்கு பெர்லினில் தங்கி எழுதிக்கொண்டிருந்தார். அதே சமயத்தில் செயிண்ட் லூயிஸில் வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் ஆசிரியராகவும் இருந்தார். இஸபெல் அயெந்தே (சால்வதோர் அயெந்தேயின் நெருங்கிய உறவினர்) – The House of Spirits என்ற புகழ்பெற்ற நாவலின் ஆசிரியர் – வெனிஸுவலாவில் தங்கி 1982இல் இந்த நாவலை எழுதினார். பினோசெத்தின் ஆட்சி முடியும் வரை இவர் சீலேவுக்குத் திரும்பவில்லை.

“சீலேவில் நீங்கள் என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஆனால் எழுதியவுடன் கொல்லப்படுவீர்கள்” என்கிறார் ஸ்கார்மேத்தா.  இங்கே சீலேயிலேயே தங்கி ராணுவ ஆட்சியின் கீழ் வாழும் எழுத்தாளர்களுக்கும், சீலேயிலிருந்து வெளியேறி வெளிநாட்டில் வசித்துக்கொண்டிருந்த எழுத்தாளர்களுக்குமிடையே ஒரு ஒற்றுமையும் சகோதரத்துவமும் இருந்தது. ஆனால் இதே போன்றதோர் நிலைமையில் அர்ஹெந்த்தினாவில் வாழ்ந்த எழுத்தாளர்களுக்கும் அந்த நாட்டை விட்டு வெளியேறி வெளிநாடுகளில் வாழ்ந்த எழுத்தாளர்களுக்குமிடையே ஒற்றுமை இருக்கவில்லை. இரு சாராருக்குமிடையே தீவிரமான கருத்து முரண்பாடுகளும் மோதல்களும் நடந்தன.

ஸ்கார்மேத்தா சொல்வது போல் கவிதையும் அரசியலும் சீலேயில் வரலாற்று ரீதியாகவே பிரிக்க முடியாதபடி இணைந்திருந்தன – ஒரு fantasy என்ற அளவில். இதன் ஒரு உதாரணம்தான்: நிகானோர் பார்ரா (1914 – 2018). சீலேயின் மிகச் சிறந்த கவிஞராக கருதப்படுபவர்.  நோபல் பரிசு பெற்ற காப்ரியேலா மிஸ்த்ரால் மற்றும் பாப்லோ நெரூதா வரிசையில் வருபவர்; இயற்பியல் ஆய்வாளர்; சுற்றுச்சூழல் வல்லுநர்; தத்துவரீதியில் ஒரு அனார்க்கிஸ்ட்.  சகோதரத் துவமும் அன்பும் நிலவாத ஒரு சமூகத்தில் அனார்க்கிஸ்டாக வாழ்வதே சரியானது என்றும், தான் எழுதுவது கவிதையல்ல – அது எதிர் கவிதை என்றும் கூறுகிறார் நிகானோர் பார்ரா. சீலேயில் இன்னும் கவிதை சாகாமல் இருந்து கொண்டிருக்கிறது என்பதற்கான காரணமாக பார்ரா கூறுவது: நாம் எதை விரும்புகிறோமோ அதை எழுதலாம். ஏனென்றால் நம்முடைய கவிதைகளுக்கு அரசு எவ்வித முக்கியத்துவமும் தருவதில்லை. காரணம், இவைகளை யாரும் படிப்பதில்லை என்று அவர்களுக்குத் தெரியும்.

பினோசெத் 1973இல் ஆட்சியைப் பிடித்து 1990 வரை தனது சர்வாதிகார ஆட்சியைத் தக்க வைத்துக்கொண்டார். தான் ஆரம்பத் தில் கொண்டுவந்த எழுத்துச் சுதந்திரத்தின் மீதான கட்டுப்பாடுகளை 80களின் துவக்கத்தில் ஓரளவுக்குத் தளர்த்தினார். ஒரு கட்டத்தில் அரசாங்கம் புத்தகங்களைப் பற்றி கவலைப்படுவதையே நிறுத்திவிட்டது. 1983லிருந்து தணிக்கையே இல்லை. தடை செய்யப்பட்ட ஸ்கார்மேத்தா போன்ற எழுத்தாளர்களின் நாவல்கள் கடைகளுக்கு வர ஆரம்பித்தன. இது பற்றி ஒரு எழுத்தாளர் கூறுகிறார்: ”இந்த சர்வாதிகாரம் இதற்கு வெளியே இருந்து பார்ப்பதைவிட உள்ளே இருந்து பார்க்கும் போதுதான் மிகவும் தந்திரமானது என்று புரியும். பதினைந்து ஆண்டு சர்வாதிகாரத்தில் பினோசெத்தின் முகம் மட்டுமே தொலைக்காட்சியின் எண்பது லட்சம் பார்வையாளர் களுக்கு காட்டப்பட்டது. பல பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டார்கள். துப்பாக்கி ரவைகளால் சல்லடையாக்கப்பட்ட அவர்களின் பிணங்கள் சாலையோரங்களில் கிடந்தன. ஆட்சியை எதிர்த்து எழுதப்பட்டதெல்லாம் தடை செய்யப்பட்டது. Analisis என்ற பத்திரிகையின் ஆசிரியர் கொல்லப்பட்டார். இதே பத்திரிகையின் மற்றொரு ஆசிரியர் 541 தினங்கள் சிறையில் அடைக்கப்பட்டார். ஏனென்றால் இவர் 541 நாட்கள் Analisis பத்திரிகையின் ஆசிரியராக இருந்தார். Apsi என்ற பத்திரிகையின் ஆசிரியர் இரண்டு முறை சிறையில் அடைக்கப்பட்டார். ஓர்லாந்தோ லெத்தேலியர் 1976இல் கொலை செய்யப்பட்டதற்கும் ராணுவத்திற்கும் தொடர்பு இருக்கிறது என்று எழுதியதற்காகவும், ஜெனரல் பினோசெத்தை பனிரெண்டு விதமான போஸ்களில் – அதாவது ஒரு ரத்தக் காட்டேரியைப் போலவும், பதினான்காம் லூயி மன்னனைப் போலவும், உயிரோடு உலவும் சடலத்தைப் போலவும் பனிரெண்டு ஓவியங்களைப் பிரசுரித்தற்காகவும் Apsi ஆசிரியருக்கு சிறைவாசம் கிடைத்தது. இந்தக் கேலிச்சித்திரங்கள் ஜெனரல் பினோசெத்தின் புகழைக் கெடுப்பதற்கான திட்டமே என்று சொல்லப்பட்டு செர்ஹியோ மார்ராஸின் (வயது: 37) மேல் கொலைக் குற்றம் சாட்டப்பட்டது.

பினோசெத்தின் சர்வாதிகாரத்தை சீலேயின் எழுத்தாளர்கள் இப்படித்தான் குறிப்பிடுகிறார்கள்:

கோமாளிகளால் நடத்தப்படும் சர்க்கஸ்  – நிகானோர் பார்ரா

பாழடைந்த விடுதி – ஹோஸே தொனோஸோ

திறந்த வெளிப் பைத்தியக்கார விடுதி  – செர்ஹியோ பித்தார் மூழ்கிக்கொண்டிருக்கும் கப்பல் – மார்க்கோ அந்தானியோ தெ சீலா பார்ரா. சீலேயின் புகழ் பெற்ற நாடக இயக்குனரான இவர் ஒரு உளவியல் மருத்துவரும் கூட.  ஒரு வாரத்தில் நான்கு நாட்களை இவர் நோயாளிகளுக்காக ஒதுக்குகிறார். “சீலேயில் ஏன் மிகச் சிறந்த நாடகாசிரியர் ஒரு உளவியல் நிபுணராக இருக்கிறார்?” என்று கேட்கும் அரியல் டார்ஃப்மன் அதற்கான பதிலையும் கூறுகிறார்: “ஏனென்றால் இந்த நாட்டுக்குப் பைத்தியம் பிடித்திருக்கிறது.”

தெ லா பார்ராவின் The Secret Obscenity of Everyday Life என்ற நாடகத்தில் வரும் இரண்டு மனநிலை பிறழ்ந்த பாத்திரங்கள், ஒன்று தன்னை கார்ல் மார்க்ஸாகவும், மற்றொன்று தன்னை ஃப்ராய்டாகவும் நினைத்துக்கொள்கின்றனர். இருவரும் தங்கள் கோட்பாடுகளையும், ஆய்வு முடிவுகளையும் பற்றி ஒரு பெண்கள் பள்ளியின் வாசலிலுள்ள பார்க் பெஞ்சில் அமர்ந்து விவாதிக்கிறார்கள். இரண்டு பேருக்கும் பைத்தியம் பிடிப்பதற்கு முன்னால் இருவருமே போலீஸால் சித்ரவதை செய்யப்பட்டு, பிறகு போலீஸுக்கு உளவு சொல்பவர்களாக மாறியிருக்கிறார்கள். மிகவும் சீரியஸான தளத்திலும், அதே சமயம் கிண்டலாகவும் இயங்கும் நாடகம் இது. மார்க்ஸ், “ஏன் நீ மூலதனம் பற்றி எழுதிக்கொண்டிருப்பதை விட்டுவிட்டு அந்த மூலதனத்தை சம்பாதிக்க ஆரம்பிக்கக் கூடாது?” என்று தன் அம்மா தன்னைத் திட்டியதைப் பற்றி குறிப்பிடுகிறார்.

சீலேயில் கடுமையான அடக்குமுறைக்கு மத்தியிலும் கூட ராணுவ ஆட்சியின் பதினேழு ஆண்டுக் காலத்தில் நாடகம்தான் மிகவும் தீவிரத்துடன் தனது வீர்யத்தை இழக்காமல் இருந்தது. உதாரணமாக, பினோசெத் அரசால் பார்வையாளர்களுக்கு டிக்கட் ஒன்றுக்கு இருபத்தொரு சதவிகிதம் வரி விதிக்கப்பட்டது. நாடகத்தைப் பொறுத்தவரை இந்த இருபத்தொரு சதவிகிதமே ஒரு தணிக்கை முறையாகத்தான் செயல்பட்டது. ஆனாலும் நாடகத்துக்கு எதிரான இவ்வளவுக்கு அடக்குமுறைக்கு இடையிலும் நாடகம் நடத்துவதற்கு தடை விதிக்கப்படவில்லை. ஒருக்கால், ஒரு சிறு பார்வையாளர் கும்பலால் தனக்கு எவ்வித ஆபத்துமில்லை என்று பினோசெத் நினைத்திருக்கலாம். நவம்பர் 1987இல் ஒரு வலதுசாரி கொலைப்படை 77 நாடகாசிரியர்களுக்கும் நடிகர்களுக்கும் ஒரு மிரட்டல் விடுத்தது. அதன்படி, அவர்கள் நாட்டை விட்டு வெளியேறிவிட வேண்டும்; இல்லாவிட்டால் விளைவுகளைச் சந்திக்க வேண்டியிருக்கும். அதற்கு எதிராக பல்வேறு மனித உரிமை அமைப்புகளும் நடிகர் சங்கங்களும் சேர்ந்து சந்த்தியாகோவில் ஒரு நாடக விழாவையே ஏற்பாடு செய்தன.

தெ லா பார்ரா கூறுகிறார்: “நோய் பிடித்த இந்த நாட்டை மருத் துவமனைக்கு அனுப்புவதாகத்தான் அந்த ஆட்சிக் கவிழ்ப்பு அமைந்தது. ஆட்சிக் கவிழ்ப்பு நடந்து நெடுநாட்கள் ஆகிவிட்ட பிறகும் கூட சீலேயின் மக்கள் தாங்கள் மருத்துவமனையில் இருப்பதுதான் உயிர் வாழ்தலுக்கான விலை என்பதை ஒப்புக்கொண்டு விட்டார்கள்.”

சீலேயின் அரசியல் நெருக்கடி அறுபதுகளிலேயே துவங்கிவிட்டது என்றே பல எழுத்தாளர்களும் கருதுகிறார்கள். “ஆனால் ஜனநாயம் இந்த நெருக்கடிகளையெல்லாம் தரைக்கடியில் மறைத்து வைத்திருந்தது” என்கிறார் Raul Zurita. (சீலேயின் மிகச் சிறந்த கவிஞர்களுள் ஒருவர்.) “இந்த ராணுவ ஆட்சி த்ருஹியோவைப் (Trujillo)  போன்றதோ சொமோஸாவைப் போன்றதோ அல்ல, இங்கே பொருளாதாரம் நெருக்கடியில் இல்லை. இவர்கள் சாதித்தவற்றையெல்லாம் அப்படியே தூக்கி கம்யூனிஸ்டுகளின் கையில் கொடுத்துவிட மாட்டார்கள். இந்த மோசமான சர்வாதிகாரமும் தனக்கென்று ஒரு தர்க்கத்தைக் கொண்டிருந்தது. அவர்கள் ஆட்சியில் இருக்க வேண்டும் என்பதற்காகவே ஆட்சியில் இருந்து கொண்டிருக்கவில்லை. இதை ஒத்துக்கொள்வது எனக்கு வேதனையாகத்தான் இருக்கிறது. ஆனால் அதுதான் உண்மை” என்கிறார் சர்வதேசப் பொது மன்னிப்புச்சங்கத்தின் சீலே பொறுப்பாளர்.

பதினேழு ஆண்டுகால ராணுவ சர்வாதிகார ஆட்சி சீலேயின் பல எழுத்தாளர்களைப் பாதித்து, அது அவர்களின் எழுத்திலும் நாடகத்திலும் வெளிப்பட்ட அளவுக்கு சீலேயைவிட அடக்குமுறையும் படுகொலைகளும் அதிக அளவில் இருந்த அர்ஹெந்த்தினாவின் ஏழு ஆண்டு சர்வாதிகார ஆட்சிபற்றி அர்ஹெந்த்தினா எழுத்தில் வெளிப்படவில்லை. ஃபாக்லண்ட் தீவுகளுக்கான போரில் தோல்வி யடைந்ததால் அர்ஹெந்த்தினாவில் திடீரென்று சர்வாதிகாரம் முடிவுக்கு வந்தது.

“சர்வாதிகாரத்தின் போது வரலாற்றுக்கு பைத்தியம் பிடித்திருந்ததது. கடந்த காலத்தையும் நிகழ்காலத்தையும் புரிந்துகொள்வதற்கு எழுத்தாளர்களுக்கு அவகாசம் தேவைப்பட்டது” என்கிறார் Enrique Penzoni.  இவர் புவனோஸ் அய்ரஸ் பல்கலைக்கழகத்தில் போர்ஹெஸ் பற்றி பாடம் எடுக்கும் விரிவுரையாளர்; விமர்சகர். “கதையாடல் என்ற வகையில் பார்த்தால் – நாவலில் எதார்த்தம் என்பதில் பிரச்சினை வந்துவிட்டது. இதுதான் அரசியலையும், நிகழ்கால வரலாற்றையும் எழுதுவதற்குத் தடையாக இருந்தது” என்கிறார் தாவித் வினாஸ். இவரும் புவனோஸ் அய்ரஸ் பல்கலைக்கழகத்தில் பணிபுரிபவர். எழுத்தாளர்களிடம் சர்வாதிகாரத்திற்கான எதிர்வினை இல்லாமல் போனதற்கு இந்த இருவருமே ஒரே காரணத்தைத்தான் சொல்கிறார்கள். அது, அர்ஹெந்த்தீனிய எழுத்தாளர்களிடம் இருந்த போர்ஹெஸின் பாதிப்பு. பெரோனின் ஆட்சிக்காலத்தில் 1948இல் ”அரசியலுடன் மோதுவதை இலக்கியம் தவிர்க்க வேண்டும்” என்றார் போர்ஹெஸ். அதேபோல் பின்னர் ராணுவ ஆட்சியின் மிகக் கொடுமையான அடக்குமுறையின் போதும் அவர் மௌனமாகவே இருந்தார். பல ஆண்டுகளுக்குப் பிறகு, ராணுவ ஆட்சியின் போது ஆயிரக்கணக்கில் மறைந்து போனவர்கள், கொல்லப்பட்டவர்கள், சித்திரவதைக்கு உள்ளானவர்கள் பற்றியெல்லாம் பேசும்போது ”இப்படி நடந்தது உண்மைதான்” என்று இப்போது எப்படி ஒப்புக்கொள்கிறீர்கள் என்று போர்ஹெஸிடம் கேட்கப்பட்டபோது அவர் “இதை ஒரு பெண்தான் எனக்குச் சொன்னாள். நான் எப்போதுமே பெண்களை நம்புகிறவன்” என்றார். புவனோஸ் அய்ரஸில் போர்ஹெஸ் இருந்தவரை ஒவ்வொரு வியாழக்கிழமை இரவும் போர்ஹெஸுடன் இரவு விருந்தில் கலந்து கொள்ளும் வழக்கமுடைய பென்ஸோனி வருத்தம் தோய்ந்த சிரிப்புடன் “ஒருவேளை நாம் போர்ஹெஸ் என்ற அந்த legendary figureஐக் கொன்றுவிட்டுத்தான் மேலே செல்ல வேண்டும் போலும்” என்கிறார்.

தொடரும்…

***

www.charuonline.com என்ற இந்த இணையதளம் 2002-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.  சினிமா, இசை, அரசியல், இலக்கியம் போன்ற தலைப்புகளில் இதில் இத்தனை ஆண்டுகளாகத் தொடர்ந்து எழுதி வருகிறேன்.  இந்த இணையதளத்தை ஒரு மாதத்தில் 60000 பேர் வாசிக்கிறார்கள்.  தமிழில் எழுத்தாளர்கள் இணையத்தில் எழுத ஆரம்பிப்பதற்கு வெகுகாலம் முன்னரே ஆரம்பிக்கப்பட்ட பழைய இணைய தளம் இது.  அப்போது விகடன், தினமலர் போன்ற பத்திரிகைகளின் இணைய தளங்கள்தான் இருந்தன.  இப்போது இந்த இணையதளத்தைக் கட்டணம் செலுத்திப் படிக்கும் தளமாக மாற்றலாமா என யோசித்தேன்.  அறுபது ஆயிரத்தில் ஆறு பேர் கூட எஞ்ச மாட்டார்கள்.  முன்பே அதைப் பரிசோதித்துத் தோற்றிருக்கிறேன்.  எனவே மீண்டும் அந்தச் சோதனையில் ஈடுபட மாட்டேன்.  ஆக, இப்போது என் வேண்டுகோள் என்னவெனில், இதை வாசிக்கும் அன்பர்களில் விருப்பமுள்ளவர்கள் தாமாகவே முன்வந்து கட்டணம் செலுத்தலாம்.  விருப்பம் இல்லாதவர்கள் கட்டணம் செலுத்தாமலும் படிக்கலாம்.  அவரவர் விருப்பம்.  பணம் எப்போதும் என் சிந்தனையில் இருந்ததில்லை.   இனிமேலும் இருக்காது.  பணம் பற்றி யோசிக்காமல் இருக்கக் கூடிய சூழல் இருந்தது.  யோசிக்காமல் இருந்தேன்.  இப்போது நிலைமை மாறி விட்டதால் பணத்துக்கான ஒரு சிறிய ஏற்பாடு இது.  எவ்வளவு கட்டணம் என்பதும் அவரவர் விருப்பம்.  மாதாமாதம் அனுப்ப முடியாவிட்டால் மூன்று மாதத்துக்கான தொகையை அனுப்பலாம்.   கட்டணம் செலுத்தவில்லையே, படிக்கலாமா கூடாதா என்ற அறம் சம்பந்தமான கேள்விக்குள் நுழைந்து விடாதீர்கள்.  அது 60000 என்ற வாசகர் எண்ணிக்கையைக் குறைத்து விடும்.  முடிந்தவர்கள் கட்டணம் செலுத்துங்கள்.  முடியாவிட்டால் எந்தப் பிரச்சினையும் இல்லை.

என் மின்னஞ்சல் முகவரி:  charu.nivedita.india@gmail.com

கட்டணம் செலுத்துவதற்கான வங்கிக் கணக்கு விவரம்:

UPI ID: charunivedita@axisbank

பெயர்: K. ARIVAZHAGAN

Axis Bank Account No. 911010057338057

Dr Radhakrishnan Road, Mylapore

IFSC No. UTIB0000006

ஒரு நண்பர் பெயரில் உள்ள K என்பதன் விரிவு என்ன என்று கேட்டிருந்தார்.  அவர் வங்கியில் கேட்கிறார்களாம்.  Krishnasamy.  என் தந்தையின் பெயர்.  ஆக்ஸிஸில் அனுப்ப முடியாவிட்டால் என் ஐசிஐசிஐ கணக்கு விபரம் கீழே:

K. ARIVAZHAGAN

ICICI a/c no.  602601 505045

MICR Code: 600229065

IFS Code ICIC0006604

T. NAGAR BRANCH chennai