சக்ரவாகம், சூரியகாந்தி

காந்தியை மகாத்மாவாக மாற்றிய புத்தகம் டால்ஸ்டாய் எழுதிய The Kingdom of God is Within You.  அதேபோல் இப்போது இருக்கும் நான் இப்போது இருக்கும்படி மாற்றிய எழுத்தாளர் ந. சிதம்பர சுப்ரமணியன்.  அவருடைய நூல்களைப் படிக்கும் போது கடவுளையே நேரில் தரிசிப்பது போல் இருந்தது.  ஏதோ வாய் வார்த்தையாகச் சொல்லவில்லை.  அப்படியே தான் இருந்தது.  படிக்கப் படிக்க அது ஆன்மாவையே ஏதோ செய்தது என்றுதான் தோன்றியது.  இதய நாதம் என்று ஒரு நாவல்.  அதைப் படிக்காதவன் மனிதனே இல்லை என்றெல்லாம் நினைத்தேன்.  இப்படி ஒரு சொர்க்கத்தை அனுபவிக்காமல் இருக்கிறார்களே என்று மற்றவர்கள் மீது பரிதாபம் தோன்றியது.  புனிதம், பரவசம் ஆகிய உணர்வுகளில் தத்தளித்தேன்.  பிறகுதான் ந. சிதம்பர சுப்ரமணியனின் எழுத்தைப் படித்து நா. பார்த்தசாரதியும் இதே விதமான உணர்வுகளை அடைந்திருக்கிறார் என்று தெரிந்தது.  நா.பா.வின் இந்தக் கடிதத்தைப் படியுங்கள்.

‘பாராட்ட வேண்டும் என்பதற்காக மட்டும் இந்தக் கடிதத்தை எழுதவில்லை. உங்களுடைய கதைகளைப் பாராட்டுகிற அளவுக்குக்கூட அடியேன் தகுதி உடையவன் அல்லன். கோயில்களில் கற்பூர தீபாராதனை நடக்கும்போதும், காலை நேரத்தில் விகசிக்கும் புஷ்பங்களைக் காணும்போதும், கீதை உபநிஷதங்களை உணர்ந்து படிக்கும்போதும் ஏற்படும் புனிதமான தெய்விக உணர்ச்சி அடியேனுக்கு உங்கள் சிறுகதைகளைப் படிக்கும்போது உண்டாகிறது. காவிரி போன்ற ஒரு புண்ணிய நதியில் நீராட இறங்கும்போதோ, சிதம்பரம் கோயிலைப் போன்ற பேராலயத்தினுள் நுழையும்போதோ எத்தகைய சாந்தமும் தூய்மையும் மிகுந்த எண்ணங்கள் உண்டாகுமோ, அந்த எண்ணங்கள் உங்கள் கதைகளைப் படிக்கத் தொடங்கும்போதே எனக்கு உண்டாகிவிடுகின்றன.’

– ந. சிதம்பர சுப்பிரமணியனுக்கு நா. பார்த்தசாரதி 1957-ல் எழுதிய கடிதத்தில்…

ஸீரோ டிகிரி பப்ளிஷிங் சிதம்பர சுப்ரமணியனின் இரண்டு சிறுகதைத் தொகுப்புகளைக் கொண்டு வந்திருக்கிறது.

https://tinyurl.com/sooryagandhiManage

https://tinyurl.com/chakaravagam