சில நாட்களுக்குக் கிடைத்த கட்டாய ஓய்வு…

வாழ்நாளில் ஒருநாள் கூட எழுதாமல் படிக்காமல் இருந்ததில்லை.  ஆனால் முந்தாநாளிலிருந்து கட்டாய ஓய்வு கிடைத்திருக்கிறது.  உணவுப் பழக்கத்தில் நான் சீனர்களைப் போல.  சூடாக சாப்பிடும் பதார்த்தங்களை அதி சூடாக சாப்பிடுவேன்.  தனுப்பான பண்டங்களை அதி தனுப்பாக.  கோக்கைக் கூட சீனர்கள் ஐஸ் கட்டிகளைப் போட்டுத்தான் குடிப்பார்கள்.  அதேபோல் அவர்கள் சாப்பிடும் அளவு சூடாக இந்தியர்களால் சாப்பிட முடியாது.  மற்றவர்கள் காபி குடிப்பதைப் பார்க்கும் போது எனக்கு ஐஸ் காப்பி குடிக்கிறார்களோ என்று தோன்றும்.  காப்பியை யாராவது ஆற்றுவார்களா?  ஆற்றினால் குடிக்க மாட்டேன்.  முடிந்த வரை பித்தளை டம்ளரில்தான் குடிப்பேன்.  பித்தளைதான் சூட்டைத் தக்க வைக்கும்.  கையால் பிடித்தால் கை சூடு தாங்காது என்பதால் கர்ச்சீஃபால் பிடித்தபடி குடிப்பேன்.  இதன் காரணமாகவே மற்றவர்கள் வீடுகளில் காப்பி டீ சாப்பிடும் பழக்கம் இல்லை என்று சொல்லி விடுவேன்.  தண்ணீர் என்றால் குளிர்ந்த நீர் மட்டுமே.  சாதா தண்ணீரே குடிப்பதில்லை.  ஆனால் இந்தியாவில் ஐஸ் கட்டிகளை எதிலும் போடக் கூடாது.  அதெல்லாம் மட்டமான தண்ணீரில் செய்யப்படுவது என்பதால் ஐஸ் கட்டிகளை மட்டும் சேர்த்துக் கொள்வதில்லை.  நம் வீட்டிலேயே தயார் செய்த ஐஸ் கட்டிகளாக இருந்தால் சேர்க்கலாம்.

ஆனால் பாவம் இந்தியர்கள்.  நச்சு அரசியல்வாதிகளைப் போலவே நச்சுக் காற்று, நச்சு நீர், நச்சு உணவு என்பது போலவே இந்தியர்களுடன் கூடப் பிறந்தது ஜுகாம் புக்கார் காஸீங்.  இதை jukam bukar kasi(ng) என்று சொல்ல வேண்டும்.  சளி இருமல் ஜுரம்.  பிறந்ததிலிருந்தே இந்தியர்கள் இந்த மூன்றோடும்தான் வாழ்கிறார்கள்.  ஜுரம் அளவுக்குப் போகாவிட்டாலும் மாதம் ஒருமுறை சளி இருமல் இல்லாமல் இந்திய வாழ்க்கை இல்லை.  இந்த சளி இருமலுக்கு இவர்கள் சொல்லும் ஒரே காரணம், ஃப்ரிஜ்ஜிலிருந்து எடுத்து ஜூஸ் குடித்தேன்; மழையில் நனைந்தேன்; ஐஸ்க்ரீம் சாப்பிட்டேன்.  அடப் பாவிகளா, என்ன உடம்புடா இது என்று நினைத்துக் கொள்வேன்.

நான்கு நாட்களுக்கு முன்பு கீழே போய் கரும்பு ஜூஸ் வாங்கிக் கொண்டு வந்து வழக்கம் போலவே கொஞ்ச நேரம் ஃப்ரீஸரில் வைத்துக் குடித்தேன்.  கரும்பு ஜூஸில் ஐஸ் கட்டியெல்லாம் போடுவதில்லை.  நேரடி ஜூஸ்.  அன்று இரவே தொண்டை வலி வந்து மறுநாள் ஜுரம்.  100 டிகிரி.  கச்சேரி ரோட்டில் இருக்கும் மணிகண்டனிடம் சென்றேன்.  அன்று பூராவும் படுத்தே கிடந்தேன்.  எழுந்து எந்த வேலையும் செய்ய முடியவில்லை.  மறுநாள் ஜுரம் போய் விட்டது.  ஆனால் மூக்கிலிருந்து ஜலதாரை.  நெஞ்சு சளி வேறு.  இருமல் வேறு.  ஜுரம் இல்லாத காரணத்தால் உடம்பு தெம்பாகத்தான் இருந்தது என்பதால் வேலை செய்யலாம் என்று பார்த்தால் அதற்கும் ஒரு தடங்கல்.  பிழை திருத்தம் செய்வதற்கு ஏராளமான பக்கங்கள் இருந்தன.  ஒரு நிமிடத்தைக் கூட வீணடிக்காமல் பிழை திருத்தம் செய்து கொண்டிருந்தேன்.  இந்த நிலையில் முந்தாநாள் இரவு கண்ணாடி உடைந்து விட்டது.  நேற்று சரி செய்து கொள்ளலாம் என்று பார்த்தால் நேற்று தேர்தல் காரணமாக எல்லா கடைகளும் மூடி விட்டார்கள்.  சாய்ங்காலம்தான் போக முடிந்தது.  அது பெரிய ரிப்பேர், செவ்வாய்தான் தர முடியும் என்றார்கள்.  பிறகு பெரிய பெயர்களையெல்லாம் பயன்படுத்தி ஃபேக்டரியில் பேசி, திங்கள்கிழமை கிடைக்க ஏற்பாடு செய்திருக்கிறார்கள்.  ஆக, திங்கள் வரை எதுவும் படிக்க முடியாது.  தட்டச்சு செய்யலாம்.  எழுத்து இரண்டு இரண்டாகத் தெரிகிறது.  அட்ஜஸ்ட் செய்து படித்துக் கொள்ளுங்கள்.  திங்கள் வரை என்ன செய்வது?

எப்போதுமே ஒன்றுக்கு இரண்டு கண்ணாடிகள்தான் வைத்திருப்பேன்.  ஆனால் இந்த முறை ஒரே ஒரு கண்ணாடியோடு இருந்தேன்.  அது இப்போது படுத்துகிறது.  இனிமேல் இரண்டு கண்ணாடிகள்தான் வைத்துக் கொள்ள வேண்டும்.  ஒன்று, நல்ல கண்ணாடி.  இன்னொன்று, ஜனதா கண்ணாடி.

ஆனால் நெட்ஃப்ளிக்ஸ் சீரியல்கள் பார்க்க முடிகிறது. பிரச்சினை இல்லை.  The Inmate என்ற மெக்ஸிகன் சீரியல் பார்த்தேன். சின்ன சீரியல்தான்.  ஒரே சீஸன் – பத்துப் பனிரண்டு எபிசோடோடு முடிந்து விட்டது.  Gotham சீரியல்தான் பயங்கரம்.  ஆறு சீசன்.  நான்கு சீஸன் தான் பார்த்தேன்.  அதற்கு மேல் ரப்பர் போல் இழுக்க ஆரம்பித்து விட்டார்கள்.  அதில் பெங்குவின் பாத்திரம் பின்னி எடுத்திருப்பான்.  நடிப்பிலும் சரி, வசனத்திலும் சரி.  மறக்கவே முடியாத பாத்திரம்.  பொதுவாகவே இது போன்ற சீரியல்களில் ஹீரோவை விட வில்லன்கள்தான் கலக்குகிறார்கள்.  இன்மேட் பற்றி நிறைய எழுதலாம்.  அதிலும் Santitoவாக நடித்திருப்பவர் அந்தப் பாத்திரத்தில் வாழ்ந்திருக்கிறார்.  நடிப்பா அது!  லேசாக மனநிலை பிறழ்ந்த பாத்திரம்.  சீரியல் முழுவதும் கையைத் தன் ஆண்குறியிலேயே வைத்திருக்கிறான்.  ஸ்பானிஷ் பேசினால் கொஞ்சம் புரிந்து கொள்வேன்.  அதிலும் கெட்ட வார்த்தைகளைப் பொறுத்தவரை – ஸ்பானிஷில் கிட்டத்தட்ட எல்லா கெட்ட வார்த்தைகளும் எனக்கு அத்துப்படி.  தமிழில் ங்கோத்தா அளவுக்கு அங்கே பிரபலம் பூத்தா மாத்ரே (Puta madre).

இன்மேட் சிறைச்சாலைக்குள் நடக்கும் கதை என்பதால் – அதிலும் மெக்ஸிகோ சிறை – மெக்ஸிகோவே லத்தீன் அமெரிக்காவின் சிறைச்சாலை என்றால் சிறைக்குள் சிறை எப்படி இருக்கும் – முழுக்க முழுக்க கெட்ட வார்த்தைதான்.  ஸாந்த்தித்தோ சொல்கிறான், ”என் அப்பா என்னை ஒரு mierdaவாக ஆக வேண்டும் என்றே விரும்பினார்.  இப்போது நான் ஒரு மியர்தாவாக ஆகியிருக்கிறேனா இல்லையா மாமா சொல்?”  ஸாந்த்தித்தோவின் மாமா தான் அந்த சிறைச்சாலையின் தாதா.  அவன் சொல்கிறான், ”ஆமாம் ஆமாம், உன் அப்பன் உன்னை மியர்தாவாகத்தான் ஆக வேண்டும் என்று சொல்லுவான்.  நீ இப்போது மியர்தாவாக ஆகி விட்டாய்.  பூத்தா மாத்ரே ஸாந்த்தித்தோ மியர்தா…” என்று கத்த எல்லோரும் பூத்தா மாத்ரே ஸாந்தித்தோ மியர்தா என்று கோரஸாகக் கத்துகிறார்கள்.  மியர்தா என்றால் ஷிட் என்று பொருள்.  பூத்தா bitch.  மாத்ரே அம்மா.  கொஞ்சினாலும் பூத்தாதான்.  திட்டினாலும் பூத்தாதான்.

இந்த சீரியலைப் பற்றி இன்னும் எழுத நிறைய இருக்கிறது.  எழுத்துக்கள் இரண்டு இரண்டாகத் தெரிவதால் இத்தோடு நிறுத்திக் கொள்கிறேன்.  திங்கள் கிழமை வரை இப்படியே ஓட்ட வேண்டும்.  இப்போது Money Heist என்று மற்றொரு சீரியலை ஆரம்பித்திருக்கிறேன்.  ஜிஓடி?  அதெல்லாம்  ஈடு இணையில்லாத காவியம்.  அதைப் பார்க்காதவர்கள் வாழ்வில் எதையோ தவற விட்டு விட்டார்கள் என்றே சொல்வேன்.  அதில் எனக்குப் பிடித்த பாத்திரம் குள்ளன்.

இந்த சீரியல்களில் எல்லாம் ஒரு பொதுத்தன்மை என்னவென்றால், வசனத்தின் பின்னி எடுக்கிறார்கள்.  மணி ஹீஸ்ட்டில் ஒருத்தன் ரொம்ப நல்லவனாக இருக்கிறான்.  உடனே இன்னொருத்தன் ஏய் நீ பெரிய காந்தியா, போடா மூடிக்கிட்டு என்கிறான்.

பின்குறிப்பு: இந்தப் பிரச்சினையெல்லாம் முடிந்து ஆயுர்வேத டாக்டர் சுப்ரஜாவை சந்தித்து ஒரு விஷயத்தை சரி செய்து கொள்ள வேண்டும் என்று இருக்கிறேன்.  ஃப்ரிஜ்ஜிலிருந்து எடுத்துச் சாப்பிட்டாலும், குளிர்ந்த நீர் குடித்தாலும் ஜலதோஷப் பிரச்சினை வராமல் உடம்பைத் தகவமைத்துக் கொள்வது எப்படி என்று கேட்டு அதற்கேற்ற மூலிகை பச்சிலை கஷாயங்களை உட்கொள்ள வேண்டும்.

பின்குறிப்பு 2: ஓரிரு நண்பர்கள் paypal மற்றும் google pay மூலம் பணம் அனுப்பலாமா என்று கேட்டார்கள்.  நான் paypal-இல் இருக்கிறேன்.  கூகிள்பே மூலம் அனுப்ப என் தொலைபேசி எண் வேண்டும் என்று நினைக்கிறேன்.  மின்னஞ்சல் செய்தால் தொலைபேசி எண் தருகிறேன்.  பொதுவில் போட இயலாது.  charu.nivedita.india@gmail.com

***

www.charuonline.com என்ற இந்த இணையதளம் 2002-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.  சினிமா, இசை, அரசியல், இலக்கியம் போன்ற தலைப்புகளில் இதில் இத்தனை ஆண்டுகளாகத் தொடர்ந்து எழுதி வருகிறேன்.  இந்த இணையதளத்தை ஒரு மாதத்தில் 60000 பேர் வாசிக்கிறார்கள்.  தமிழில் எழுத்தாளர்கள் இணையத்தில் எழுத ஆரம்பிப்பதற்கு வெகுகாலம் முன்னரே ஆரம்பிக்கப்பட்ட பழைய இணைய தளம் இது.  அப்போது விகடன், தினமலர் போன்ற பத்திரிகைகளின் இணைய தளங்கள்தான் இருந்தன.  இப்போது இந்த இணையதளத்தைக் கட்டணம் செலுத்திப் படிக்கும் தளமாக மாற்றலாமா என யோசித்தேன்.  அறுபது ஆயிரத்தில் ஆறு பேர் கூட எஞ்ச மாட்டார்கள்.  முன்பே அதைப் பரிசோதித்துத் தோற்றிருக்கிறேன்.  எனவே மீண்டும் அந்தச் சோதனையில் ஈடுபட மாட்டேன்.  ஆக, இப்போது என் வேண்டுகோள் என்னவெனில், இதை வாசிக்கும் அன்பர்களில் விருப்பமுள்ளவர்கள் தாமாகவே முன்வந்து கட்டணம் செலுத்தலாம்.  விருப்பம் இல்லாதவர்கள் கட்டணம் செலுத்தாமலும் படிக்கலாம்.  அவரவர் விருப்பம்.  பணம் எப்போதும் என் சிந்தனையில் இருந்ததில்லை.   இனிமேலும் இருக்காது.  பணம் பற்றி யோசிக்காமல் இருக்கக் கூடிய சூழல் இருந்தது.  யோசிக்காமல் இருந்தேன்.  இப்போது நிலைமை மாறி விட்டதால் பணத்துக்கான ஒரு சிறிய ஏற்பாடு இது.  எவ்வளவு கட்டணம் என்பதும் அவரவர் விருப்பம்.  மாதாமாதம் அனுப்ப முடியாவிட்டால் மூன்று மாதத்துக்கான தொகையை அனுப்பலாம்.   கட்டணம் செலுத்தவில்லையே, படிக்கலாமா கூடாதா என்ற அறம் சம்பந்தமான கேள்விக்குள் நுழைந்து விடாதீர்கள்.  அது 60000 என்ற வாசகர் எண்ணிக்கையைக் குறைத்து விடும்.  முடிந்தவர்கள் கட்டணம் செலுத்துங்கள்.  முடியாவிட்டால் எந்தப் பிரச்சினையும் இல்லை.

என் மின்னஞ்சல் முகவரி:  charu.nivedita.india@gmail.com

கட்டணம் செலுத்துவதற்கான வங்கிக் கணக்கு விவரம்:

UPI ID: charunivedita@axisbank

பெயர்: K. ARIVAZHAGAN

Axis Bank Account No. 911010057338057

Dr Radhakrishnan Road, Mylapore

IFSC No. UTIB0000006

ஒரு நண்பர் பெயரில் உள்ள K என்பதன் விரிவு என்ன என்று கேட்டிருந்தார்.  அவர் வங்கியில் கேட்கிறார்களாம்.  Krishnasamy.  என் தந்தையின் பெயர்.  ஆக்ஸிஸில் அனுப்ப முடியாவிட்டால் என் ஐசிஐசிஐ கணக்கு விபரம் கீழே:

K. ARIVAZHAGAN

ICICI a/c no.  602601 505045

MICR Code: 600229065

IFS Code ICIC0006604

T. NAGAR BRANCH chennai