தண்ணீர்

கடந்த முப்பது ஆண்டுகளாக சென்னையில் வசிக்கிறேன்.  சென்னையில் வசிக்கிறேன் என்று பேர்தானே தவிர ஒவ்வொரு ஊருக்கும் உரிய ஏராளமான குணாம்சங்களோடு சென்னையை நான் அறிந்தவன் அல்ல.  சென்னையை விட எனக்கு தில்லி நன்றாகத் தெரியும்.  தில்லியின் ஒவ்வொரு மூலை முடுக்கும் எனக்கு அத்துப்படி.  அதற்குக் காரணம், தில்லியின் நான்கு மூலைகளிலும் நான் வசித்திருக்கிறேன்.  கிழக்கு மூலையான கல்யாண்வாஸ், கல்யாண்புரி, திர்லோக்புரியின் (ஞாபகம் இருக்கிறதா?) எதிரே உள்ள மயூர் விஹார், மேற்கு மூலையான பொஸங்கிப்பூர், ஜனக்புரி, தெற்குப் பகுதியான சரோஜினி நகர், நேதாஜி நகர், ஆர்.கே. புரம், கரோல்பாக், வடக்கு மூலையான மஜ்னூ கா டில்லா.  வடக்குப் பகுதியில் தமிழர்கள் வசிக்க மாட்டார்கள்.  அது பஞ்சாபிகளுக்கான ஏரியா.  நான் வேலை பார்த்த சிவில் சப்ளைஸ் அலுவலகம் (ராஷனிங் டிபார்ட்மெண்ட்) வடக்கில் இருந்ததால் அங்கே இருந்தேன். எழுபதுகளில் மற்றும் எண்பதுகளில் சிவில் சப்ளைஸில் பணி புரிந்த ஒரே தமிழன் நான்தான்.  தில்லியில் சத்தர் பஸார் என்று ஒரு வணிகச் சந்தை இருக்கிறது.  ஆசியாவிலேயே பெரிய மார்க்கெட் இதுதான் என்கிறார்கள்.  ரேஷன் கார்ட் விநியோகிப்பதற்காக என் அதிகாரியுடன் வாரம் ஒருமுறையாவது அங்கே போவேன்.  அதை ஒருவர் வாழ்நாளில் பார்க்க வேண்டும். இந்தியாவின் மிக முக்கியமான சுற்றுலா மார்க்கெட்டாகவும் விளங்குகிறது. ஆனால் ஒருவரை ஒருவர் இடித்துக் கொள்ளாமல் நடக்கவே முடியாது.  அத்தனை குறுகின சந்துகள்; நெருக்கடி. 

saddar bazaar

ரேஷன் கார்ட் கொடுக்கும் அலுவலகத்தில் யாருமே ஒரு மதறாஸியை எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.  மேலும், அப்போது என்னைப் பார்க்கும் எல்லோருமே என்னிடம் கேட்கும் ஒரே கேள்வி, முதல் கேள்வி – ”நீ ஏன் மற்ற மதறாஸிகள் மாதிரி இல்லை?” அவர்கள் கேட்டவுடனே எனக்குப் புரிந்து விடும். நான் மற்ற மதறாஸிகள் மாதிரி இந்தி பேசுவதில்லை.  பெஹன்சூத் போடவில்லை என்றால் அது இந்தியே இல்லை.  மதறாஸிகள் அந்த வார்த்தையைக் கேட்டாலே காதை மூடிக் கொள்வார்கள்.  மேலும், நான் ஆட்டுக் கடா மீசை வைத்திருந்தேன். சர்தார்களைப் போல் முழு சிக்கனை வெட்டுகிறேன். இதெல்லாம்தான் காரணம்.  இந்தக் குழப்பத்துக்கெல்லாம் காரணம், தில்லிக்கு அந்தக் காலத்தில் போய்ச் சேர்ந்த தமிழ் பிராமணர்கள்.  மீசை மழித்த முகம்.  கெட்ட வார்த்தை கலக்காமல் அழுத்தி அழுத்திப் பேசும் இந்தி.  பணிவு.  தயிர் சாதம்.  இதைப் பார்த்துப் பழகிய பஞ்சாபிகளுக்கு நான் வித்தியாசமாக இருந்தேன்.

தில்லியோடு ஒப்பிட்டால் சென்னையை எனக்குத் தெரியவே தெரியாது என்றுதான் சொல்ல வேண்டும். தில்லியில் நான் வெளியே இருந்தேன். அதன் மண்ணில் புரண்டேன். நிஜமாகவே புரண்டேன்.  முதல் முதலாக செ. ரவீந்திரன் வீட்டில் வோட்கா அடித்த அன்று கரோல் பாக் அஜ்மல் கான் ரோட்டின் மண் தரையை மண்டியிட்டு முத்தமிட்டு “வோட்காவையும் தஸ்தயேவ்ஸ்கியையும் தந்த ரஷ்யாவே உனக்கு வந்தனம்” என்று சொல்லிக் கொண்டே இருந்தேன். நண்பர்கள்தான் இது பீட்டர்ஸ்பர்க் இல்லை; தில்லி என்று சொல்லி அழைத்துக் கொண்டு போனார்கள்.  பெரிய பிஸினஸ்காரர்கள் பெய்ஜிங் போன்ற ஒரு நகருக்குப் போனால் நாள் பூராவும் பிஸினஸ் கூட்டங்களில் கலந்து கொண்டு விட்டு, இரவில் மதுபான விருந்து முடித்து விட்டு மறுநாள் விமானம் ஏறி விடுவார்கள்.  இப்படியே ஒரு வாரம் கூடப் போகும் அவர்களுக்கு.  பிறகு விமானம் ஏறி விடுவார்கள்.  தங்கியிருக்கும் ஓட்டலிலிருந்து மீட்டிங் நடக்கும் இடத்துக்கு டாக்ஸியில் போகும் போது தெரியும் வானுயர்ந்த கட்டிடங்கள்தான் அவர்களைப் பொறுத்தவரை பெய்ஜிங்.  ஆக, அவர்களுக்கு அது பெய்ஜிங்காக இருந்தால் என்ன; பெர்லினாக இருந்தால் என்ன?  இரண்டும் ஒன்றுதான்.  முப்பது முறை அவர்கள் பெய்ஜிங் போனாலும் அவர்கள் ”பார்த்த” பெய்ஜிங் அதுதான்.  கிட்டத்தட்ட கடந்த முப்பது ஆண்டுகளாக எனக்குத் தெரிந்த சென்னையும் அப்படித்தான். என் அறையை விட்டு நான் எங்கே வெளியே போகிறேன்?  வண்ணாரப் பேட்டை தெரியுமா?  தண்டையார் பேட்டை தெரியுமா?  சிந்தாதிரிப் பேட்டைதான் தெரியுமா?  வட சென்னையே தெரியாது. டி. நகரிலும் ஓரிரு இடங்கள்தான். 

மைலாப்பூரிலேயே எனக்குத் தெரிந்த இடம் நாகேஸ்வர ராவ் பூங்கா மட்டும்தான்.  முழு நேரமும் என் அறையில் வாசிப்பிலும் எழுத்திலும் இசை கேட்பதிலும் முடிந்து விடும் போது எங்கே போவது, வருவது?  அதனால் ஒவ்வொரு கோடையிலும் சென்னையின் வெய்யிலைப் பற்றியும் தண்ணிக் கஷ்டத்தைப் பற்றியும் நண்பர்கள் புலம்பும் போது எனக்கு ஒன்றுமே புரியாது.  இதுநாள் வரை நான் இருந்த வீடுகளில் எல்லாம் நிலத்தடி நீர் இருந்ததால் தண்ணிக் கஷ்டமே எனக்கு இருந்ததில்லை. வெய்யிலும் எனக்குத் தெரியாது.  அதனால் நண்பர்கள் வெய்யில், தண்ணி என்று கஷ்டத்தில் சொல்லும் போதெல்லாம் வெறுமனே தலையாட்டிக் கொள்வேன். 

ஆனால் முதல் முறையாக தண்ணிக் கஷ்டத்தை நானே உணர்கிறேன்.  எங்கள் அடுக்குமனைக் குடியிருப்பில் நிலத்தடி நீர் கடல் நீரை விட அதிக அளவு உப்புக் கரிப்பதால், அதைக் குளிப்பதற்குக் கூட பயன்படுத்த முடியாது. கடல் நீரில் குளித்தது போலவே உடம்பெல்லாம் உப்பு பூத்து விடும்.  காசு கொடுத்து வாங்கும் லாரித் தண்ணீரான மெட்ரோ வாட்டர் நாம் லட்ச ரூபாய் கொடுத்தால் கூடக் கிடைக்காது.  ஆனால் போட் கிளப்புக்கு மட்டும் காலையில் – ஹோலகாஸ்ட் படங்கள் பார்த்திருப்பீர்கள்தானே, அதில் வருவது போல் வரிசையாக லாரிகள் போய்க் கொண்டிருக்கின்றன, பார்த்தால் தண்ணி லாரி.  போட் கிளப்வாசிகள் இன்னமும் ஷவரில்தான் குளிக்கிறார்கள் போல.  அது வேறு வாழ்க்கை.  ஒரு வீட்டின் (அரண்மனை என்று சொன்னால்தான் சரியாக இருக்கும்) வாசலில் ஒரு பெரிய ஆலமரம்.  நூறு விழுதுகள் தாய் மரத்தோடு சேர்ந்து பத்துப் பதினைந்து பேர் சேர்ந்து அணைக்கிறாற்போல் பிரம்மாண்டமாக நிற்கிறது.  அத்தனைக்கும் அங்கே இடம் இருக்கிறது.  நான் மைலாப்பூர் அப்பு தெருவில் என் வீட்டு வாசலில் வைத்த வாதநாராயணன் மரத்தையே பக்கத்து வீட்டுக்காரகள் காரில் எல்லாம் ஒரே இலையாக விழுகிறது என்று வெட்டி விட்டார்கள். 

நண்பர் ஒருவர் தண்ணி இல்லாததால் இரண்டு தினங்களுக்கு ஒருமுறைதான் குளிப்பதாகச் சொன்னார்.  அதிலும் அவர் பெற்றோர் வீட்டுக்குப் போய்.  என்னுடைய முப்பது ஆண்டுக்கால சென்னைவாசத்தில் இந்த ஆண்டுதான் தண்ணிக் கஷ்டத்தை உணர்கிறேன்.  ஒரு சின்ன பிளாஸ்டிக் பக்கட்டை வைத்து இந்த பக்கெட்டில் குளித்துக் கொள் என்றாள் அவந்திகா.  அத்தனை கஷ்டமா, அப்போ நான் இன்னிக்குக் குளிக்கலெ என்றேன்.  சீச்சி, அப்படியெல்லாம் குளிக்காமல் இருக்கக் கூடாது என்று கண்டிப்பாள் என்று நினைத்து அப்படிச் சொன்னேன்.  ஆனால் அவளோ அடடா, நீ முன்னியே சொல்லியிருந்தா கஷ்டப்பட்டு கிச்சன்லேர்ந்து உன் பாத்ரூமுக்கு தண்ணியத் தூக்கிட்டு வந்திருக்க மாட்டனே என்றாள்.  அடப் போடி, ரொம்பக் கஷ்டம்னா ஓட்டல்ல ரூம் போட்டுக் குளிச்சிடுவேன் என்றேன்.  ஏனென்றால், இதுவரை வாழ்நாளில்  குளிக்காமல் நான் ஒருநாள் கூட இருந்ததில்லை. பைபாஸ் சர்ஜரி செய்த அன்று கூட வெந்நீர் நனைத்த துண்டால் உடம்பு முழுவதும் துடைத்து விட்டார்கள்.

மின்சாரம் கொடுக்காமல் தாலியறுத்தது திமுக.  இப்போது அதிமுக தண்ணியே கொடுக்கவில்லை.  இந்தக் கட்சிகளுக்குத்தான் ஓட்டுப் போட்டாக வேண்டும். ஓட்டுப் போட போகாவிட்டால் உன் கடமையிலிருந்து தவறி விட்டாய் என்கிறார்கள்.  பெஹன்சூத்.   

***

 

www.charuonline.com என்ற இந்த இணையதளம் 2002-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.  சினிமா, இசை, அரசியல், இலக்கியம் போன்ற தலைப்புகளில் இதில் இத்தனை ஆண்டுகளாகத் தொடர்ந்து எழுதி வருகிறேன்.  இந்த இணையதளத்தை ஒரு மாதத்தில் 60000 பேர் வாசிக்கிறார்கள்.  தமிழில் எழுத்தாளர்கள் இணையத்தில் எழுத ஆரம்பிப்பதற்கு வெகுகாலம் முன்னரே ஆரம்பிக்கப்பட்ட பழைய இணைய தளம் இது.  அப்போது விகடன், தினமலர் போன்ற பத்திரிகைகளின் இணைய தளங்கள்தான் இருந்தன.  இப்போது இந்த இணையதளத்தைக் கட்டணம் செலுத்திப் படிக்கும் தளமாக மாற்றலாமா என யோசித்தேன்.  அறுபது ஆயிரத்தில் ஆறு பேர் கூட எஞ்ச மாட்டார்கள்.  முன்பே அதைப் பரிசோதித்துத் தோற்றிருக்கிறேன்.  எனவே மீண்டும் அந்தச் சோதனையில் ஈடுபட மாட்டேன்.  ஆக, இப்போது என் வேண்டுகோள் என்னவெனில், இதை வாசிக்கும் அன்பர்களில் விருப்பமுள்ளவர்கள் தாமாகவே முன்வந்து கட்டணம் செலுத்தலாம்.  விருப்பம் இல்லாதவர்கள் கட்டணம் செலுத்தாமலும் படிக்கலாம்.  அவரவர் விருப்பம்.  பணம் எப்போதும் என் சிந்தனையில் இருந்ததில்லை.   இனிமேலும் இருக்காது.  பணம் பற்றி யோசிக்காமல் இருக்கக் கூடிய சூழல் இருந்தது.  யோசிக்காமல் இருந்தேன்.  இப்போது நிலைமை மாறி விட்டதால் பணத்துக்கான ஒரு சிறிய ஏற்பாடு இது.  எவ்வளவு கட்டணம் என்பதும் அவரவர் விருப்பம்.  மாதாமாதம் அனுப்ப முடியாவிட்டால் மூன்று மாதத்துக்கான தொகையை அனுப்பலாம். கட்டணம் செலுத்தவில்லையே, படிக்கலாமா கூடாதா என்ற அறம் சம்பந்தமான கேள்விக்குள் நுழைந்து விடாதீர்கள்.  அது 60000 என்ற வாசகர் எண்ணிக்கையைக் குறைத்து விடும்.  முடிந்தவர்கள் கட்டணம் செலுத்துங்கள்.  முடியாவிட்டால் எந்தப் பிரச்சினையும் இல்லை.

ஓரிரு நண்பர்கள் paypal மற்றும் google pay மூலம் பணம் அனுப்பலாமா என்று கேட்டார்கள்.  நான் paypal-இல் இருக்கிறேன்.  Paypal மூலம் அனுப்ப முடியாவிட்டால் Xoom.com மூலமும் அனுப்பலாம். பேபாலின் கிளை நிறுவனம்தான் அது. கூகிள்பே மூலம் அனுப்ப என் தொலைபேசி எண் வேண்டும் என்று நினைக்கிறேன்.  மின்னஞ்சல் செய்தால் தொலைபேசி எண் தருகிறேன்.  பொதுவில் போட இயலாது.  charu.nivedita.india@gmail.com

கட்டணம் செலுத்துவதற்கான வங்கிக் கணக்கு விவரம்:

UPI ID: charunivedita@axisbank

பெயர்: K. ARIVAZHAGAN

Axis Bank Account No. 911010057338057

Dr Radhakrishnan Road, Mylapore

IFSC No. UTIB0000006

ஒரு நண்பர் பெயரில் உள்ள K என்பதன் விரிவு என்ன என்று கேட்டிருந்தார்.  அவர் வங்கியில் கேட்கிறார்களாம்.  Krishnasamy.  என் தந்தையின் பெயர்.  ஆக்ஸிஸில் அனுப்ப முடியாவிட்டால் என் ஐசிஐசிஐ கணக்கு விபரம் கீழே:

K. ARIVAZHAGAN

ICICI a/c no.  602601 505045

MICR Code: 600229065

IFS Code ICIC0006604

T. NAGAR BRANCH chennai