தமிழ்நாடு வெட்கித் தலைகுனிய வேண்டும்…

இந்தியாவில் வசிப்பதன் அவலம் பற்றிய என் புகார்களையும் கதறல்களையும் அலறல்களையும் அவ்வப்போது என் எழுத்தில் நீங்கள் படித்துப் படித்து சலித்திருக்கலாம்.  ஏன் இந்த ஆள் இப்படிப் புலம்புகிறார் என்று நீங்கள் அலுத்துக் கொண்டு கூட இருக்கலாம். ஜெயமோகன் இன்று மதியமே எனக்காக கோவை வந்து விடுவதாக எனக்கு மெஸேஜ் செய்திருந்தார். இன்று இரவு அவரோடு பேசலாம் என்று நினைத்திருந்தேன்.  ஜெயமோகனோடு நான் சாவகாசமாக அளவளாவியதே இல்லை. நாளை விழாவுக்கு இன்று மதியமே வந்து விடுவதாகச் சொல்லியிருந்தார்.  அதற்கு இப்படி ஒரு தடங்கல் வந்திருக்கிறது. கீழ் வரும் செய்தியைப் படியுங்கள்.

இந்தியாவில் வாழ்வதே அவலம் என்றால் இந்திய கிராமங்கள் அவலத்திலும் அவலம். யார் எந்தப் பக்கத்திலிருந்து தாக்குவான் என்று தெரியாது. ஜெயமோகன் ஒரு கிராமத்து ரௌடியிடம் மாட்டி தாக்கப்பட்டது பற்றி என் கடும் கண்டனங்களை இங்கே பதிவு செய்கிறேன்.  தாக்கியவனுக்குக் கடுமையான தண்டனை கிடைக்க அரசும் மற்ற நீதித்துறையினரும் காவல் துறையினரும் ஆவன செய்ய வேண்டும்.   தமிழ்நாடே வெட்கித் தலை குனிய வேண்டிய சமாச்சாரம்.  ஜெயமோகன் அவரது தாய்மொழியான மலையாளத்தில் எழுதியிருந்தால் இந்நேரம் கேரளத்தின் தலைமகனாக, முதல் மந்திரி போன்றவர்களே வீடு தேடி வருபவராக இருந்திருப்பார்.  அவர் தலையெழுத்து, தமிழில் எழுத முடிவு செய்தது.  இன்னும் நிறைய எழுத வேண்டும். கோவை விமானத்தைப் பிடிக்க ஓடிக் கொண்டிருக்கிறேன்.