தஞ்சை ப்ரகாஷ்

”நிறைய வார்த்தைகளை உச்சரிப்பு புரியாமல் கையாண்டிருக்கிறார் பிரகாஷ்.”
இப்படி ஒரு நண்பர் என் முகநூல் பின்னூட்டத்தில் எழுதியிருக்கிறார். தஞ்சாவூர் இஸ்லாமிய வாழ்க்கையை இலக்கியத்தில் பதிவு செய்த முதல் எழுத்தாளர் பிரபஞ்சன். அவர் உபயோகப்படுத்தியிருக்கும் வார்த்தைகளுக்கு பெரிய அகராதியே போடலாம். அதற்காக அவருக்காக நாம் நன்றிக்கடன் பட்டிருக்கிறோமே தவிர எடுத்தோம் கவிழ்த்தோம் என்று வாய்க்கு வந்ததைப் பேசக் கூடாது. ஒரு விஷயம் தெரிய வந்தால் அதன் பின்னணி என்ன என்று பார்க்க வேண்டும். தஞ்சை இஸ்லாமிய வாழ்க்கையை ஒருவன் தன் குருதிக்குள்ளேயும் ஆத்மாவுக்குள்ளேயும் வாங்கியிருந்தால் மட்டுமே ப்ரகாஷ் போல் எழுத முடியும். ப்ரகாஷின் கதைகள் அனைத்தையும் நண்பர் படித்து விட்டாரா என்று அறிந்து கொள்ள விரும்புகிறேன். ப்ரகாஷை இன்றளவும் ஆபாச எழுத்தாளர் என்று சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். அவர் காலத்து எழுத்தாளர்கள் அத்தனை பேரும் அவர்கள் அறிந்த பிராமண வாழ்க்கையை எழுதிக் கொண்டிருந்த போது (அதில் எனக்கு எந்தப் புகாரும் இல்லை) – ஆனால் அப்படி பிராமண வாழ்க்கை மட்டுமே இலக்கியத்தில் பதிவாகிக் கொண்டிருந்த போது ப்ரகாஷ் மட்டுமே தஞ்சை முஸ்லீம் மக்களின் வாழ்க்கையை எழுதினார். அவர் இறந்து போன பிறகு, அவரது வாழ்க்கை முழுவதும் அவர் வியந்தோதிய நண்பர் வெங்கட் சாமிநாதன் ப்ரகாஷ் கதையெல்லாம் எழுதுவாரா, நேக்குத் தெரியாதே என்று எழுதியிருக்கிறார். அப்படிப்பட்ட கொடூரமான புறக்கணிப்பே ப்ரகாஷ் அறிந்தது. இந்த நிலையில் இன்று ஒரு நண்பர் எழுதுகிறார், ப்ரகாஷ் அர்த்தம் தெரியாமல் எழுதி விட்டார் என்று.

நண்பரிடம் சொல்லிக் கொள்கிறேன். ப்ரகாஷ் எல்லா அர்த்தமும் தெரிந்தே எழுதினார். ஆனால் பிரசுரகர்த்தர்கள், பதிப்பாளர்கள் அவர் எழுதியதையெல்லாம் கைமா பண்ணி வெளியிட்டிருக்கிறார்கள். அதற்காக ப்ரகாஷின் ஆவி இப்போது ரத்தக் கண்ணீர் வடித்துக் கொண்டிருக்கும்…