காஷ்மீர் (3)

அரசியல் ஆதாயத்துக்காக காங்கிரஸ் தேசத் துரோகியாக மாற முடிவு செய்து விட்டது எப்பேர்ப்பட்ட துரதிர்ஷ்டம்! காஷ்மீர் பிரச்சினை ஒரு சர்வதேசப் பிரச்சினை அல்லது இந்தியா பாகிஸ்தானுக்கான பிரச்சினை என்று சொல்லி காங்கிரஸ் கட்சி தேசத்துரோக முடிவை எடுத்து விட்டது. அடுத்த தேர்தலிலும் மோடி இதை விடவும் அதிக பெரும்பான்மையில் வெற்றி பெற காங்கிரஸ் இப்போதே வேலை செய்ய ஆரம்பித்து விட்டது. இப்படியே போனால் அடுத்த பாராளுமன்றத் தேர்தலில் மோடி இதை விட அதிக எண்ணிக்கையில் வெற்றி பெறுவார். பன்முகத்தன்மை கொண்ட இந்தியாவின் ஆன்மா இன்னமும் சீரழியும். மக்கள் நலனையும் தேச நலனையும் நினைத்திருந்தால் காஷ்மீரின் விசேஷ அந்தஸ்தை ரத்து செய்வதை காங்கிரஸ் ஆதரித்திருக்க வேண்டும்.

லடாக் எம்.பி.யின் பேச்சை நீங்கள் கேட்டிருக்கலாம். கேட்காவிட்டால் உடனே கேட்டுப் பாருங்கள். அவர் என்ன பேசுகிறாரோ அதையேதான் நான் லடாக்கை நேரில் பார்த்த போது எண்ணினேன். இந்தியாவிலேயே அதிகம் ஒதுக்கப்பட்ட பகுதியாக அது இருந்தது. செங்குத்தான மலைகளில் நாள் முழுவதும் சாலை போடும் கூலித் தொழிலாளிகளுக்குக் குடிக்கக் கூட தண்ணீர் இல்லை. ஐந்தாறு மணி நேரம் பயணம் செய்தால்தான் ஊர் வரும். அதனால் அவர்கள் அந்த வழியாகப் போகும் சுற்றுலாப் பயணிகளிடம் தண்ணீர்ப் பிச்சை எடுக்கிறார்கள். என்னிடம் கேட்டார்கள். என்னிடம் இருந்ததோ ஒரே ஒரு பாட்டில். நான் கொடுக்கவில்லை. அவர்களோ பத்து இருபது பேர் இருந்தார்கள். என் பாட்டிலைக் கொடுத்து விட்டால் என் நிலைமை பிரச்சினையாகி விடும். இப்படி இருக்கிறது நிலைமை.

நேற்று வரை இந்திய அரசியல் அமைப்பைத் திட்டிக் கொண்டிருந்த காஷ்மீர் பிரிவினைவாதிகள் இன்று பாஜக, அரசியல் அமைப்புக்கு எதிராக நடந்து கொள்வதாகக் கூறுவது நகைப்புக்குரியது. உங்களுக்குத்தான் அரசியல் அமைப்பு மீதே மரியாதை இல்லையே, அப்புறம் ஏன் இப்போது திடீர் கரிசனம்?

மேலும் மிக முக்கியமான விஷயம், காஷ்மீருக்கு விசேஷ அந்தஸ்து கொடுப்பதை அம்பேத்கர் எதிர்த்தார். பல விஷயங்களில் அம்பேத்கர் காந்தியை விட நடைமுறை சாத்தியங்களோடும் எதார்த்தரீதியாகவும் சிந்தித்திருக்கிறார்.