ராஸ லீலா கலெக்டிபிள்

சுமாராக 50 பேர் பணம் கொடுத்திருக்கிறார்கள். இது மிகப் பெரிய விஷயம். ஏற்கனவே வெளிவந்த ஒரு புத்தகத்தை 10000 ரூ. கொடுத்து வாங்க முன்வந்தது என் மீதும் என் எழுத்தின் மீது நீங்கள் கொண்ட அன்பினால் மட்டும்தான். அதற்கு என் மனமார்ந்த நன்றி. உலகில் வேறு எந்தப் புத்தகமும் இப்படி வெளிவந்திருக்குமா என்று தெரியவில்லை. இன்னமும், என்னுடைய 50க்கும் மேற்பட்ட நூல்கள் விற்பனையில் இருந்தும் ராயல்டி இரண்டு லட்சத்தைத் தாண்டவில்லை. இந்த நிலையில் ராஸ லீலா கலெக்டிபிளுக்கு இவ்வளவு பெரிய ஆதரவு மிகப் பெரிய வெற்றிதான். நீங்கள் கொடுத்த பணம்தான் சீலே பயணத்தில் எனக்கு ஏற்பட்ட இரட்டிப்பு செலவுக்கு உதவியாக இருந்தது. உங்கள் அனைவருக்கும் என் அன்பார்ந்த நன்றி.

மேற்கண்ட 50 பேரில் ஒரே ஒருவர்தான் பெண். அதிலும் அவர் வெளிநாட்டில் வசிப்பவர். மற்ற அனைவரும் ஆண்கள். இது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. என் வாசகர்களில் 50 சதவிகிதத்தினர் பெண்கள். நண்பர்களிலும் பாதிப்பேர் பெண்கள். அப்படியிருக்க ராஸ லீலா கலெக்டிபிளில் ஏன் எந்தப் பெண்ணும் இணையவில்லை? பெண்களுக்கு இன்னமும் பணம் செலவழிக்கும் சுதந்திரம் வரவில்லையா? கணவர் திட்டுவார் என்று தயங்குகிறார்களா? ’படிப்பதற்கு சுதந்திரம் கொடுத்ததே பெரிய விஷயம், இதில் இதெல்லாம் வேறா’என்று கேட்பார்களோ? எப்படியோ, 49 ஆண்கள், ஒரு பெண். என்னுடைய தோழி ஒருவரிடம் “நீ இல்லாமல் ராஸ லீலா கலெக்டிபிளா? எப்போது போட்டோ எடுக்கலாம்?” என்றேன். அதற்கென்ன, எடுத்து விடுவோம் என்று மொபைலில் ஏதோ பிஸியாக வேலை செய்து கொண்டே சொன்னார். நான் எதையும் ஒருமுறைதான் சொல்வேன். இருந்தாலும் பெண் என்பதால் கொஞ்சம் இடைவெளி விட்டு இன்னொரு முறையும் சொன்னேன். ஓ எடுத்து விடுவோம் என்று மொபைலிலிருந்து கண்களை எடுக்காமலேயே சொன்னார். அதோடு விட்டு விட்டேன்.

29 பேருக்கு டெடிகேஷன் எழுதி விட்டேன். மீதிப் பேருக்கு எழுதிக் கொண்டிருக்கிறேன். கவி பழனி, சீனி, கருப்பசாமி, செல்வா, முருகன் கடற்கரை போன்ற நண்பர்களிடமிருந்து புகைப்படம் கிடைக்கவில்லை. கோவையில் என்னிடம் இதற்காகப் பணம் கொடுத்தவர்கள் தயவுசெய்து எனக்கு ஒரு வார்த்தை மின்னஞ்சல் அனுப்புங்கள். யாரையும் விட்டு விடக் கூடாது என்று நினைக்கிறேன். இதற்காக எல்லோருடைய பெயரையும் பட்டியலாக வெளியிடுவதையும் நான் விரும்பவில்லை. அது, இத்திட்டத்தில் சேராதவர்களுக்கு தர்மசங்கடமாக இருக்கும். எனவே எனக்கு ஒரே ஒரு வார்த்தை எழுதுங்கள். charu.nivedita.india@gmail.com

இன்னொரு விஷயம். இன்னும் ஒரு வாரத்தில் பணம் அனுப்பக் கூடியவர்களை இத்திட்டத்தில் இணைத்துக் கொள்ள இயலும். விருப்பமுள்ளவர்கள் என்னைத் தொடர்பு கொள்ளலாம்.

மீண்டும் சொல்கிறேன். உங்களுடைய உதவி இருந்திராவிட்டால் என்னுடைய சீலே பயணம் சாத்தியமாகி இருக்காது. உங்கள் அனைவருக்கும் என் நன்றி.