ராஸ லீலா கலெக்டிபிள்

ராஸ லீலா கலெக்டிபிள் வேலை இன்னும் ஒரு வாரத்தில் முடிந்து விடும். அதில் சில நண்பர்களுக்கான டெடிகேஷன் பக்கத்தில் எழுதியது:

அய்யனார் விஸ்வநாத் பற்றிய ராஸ லீலா கலெக்டிபிள் குறிப்பு கீழே:

அய்யனார் விஸ்வநாத்தை, அவர் இந்தியாவில் இருந்த போது இரண்டு முறை சந்தித்திருக்கிறேன். முதல் சந்திப்பு திருவண்ணாமலையில். உடன் இருந்தவர் கருந்தேள் ராஜேஷ். எங்கள் பேச்சுக்களாலும் கொண்டாட்டங்களாலும் அந்த இரவு நிறைந்தது. விடியலில்தான் தூங்கப் போனோம். இரண்டாவது சந்திப்பு மிஷ்கின் அலுவலகத்தில். நந்தலாலா ப்ரிவியூ படம் பார்த்துவிட்ட வந்த இரவுக் கொண்டாட்டம். ஒரு கட்டத்தில் அனைவரும் தூங்கப் போய்விட, அய்யனாரும் நானும் மிஷ்கினும் மீதமுள்ள இரவை இசையால் நிறைத்தோம். அதற்குப் பிறகு அய்யனாரோடு தொடர்பு இல்லை. மேலே குறிப்பிட்ட இரண்டு சந்திப்புகள் கூட எனக்கு சுத்தமாக ஞாபகம் இல்லை. அய்யனார் சொல்லித்தான் ஒரு செய்தி மாதிரி கேட்டுக் கொண்டேன். அவர் சொல்லித்தான் நாங்கள் ஏற்கனவே சந்தித்திருக்கிறோம் என்பதையே தெரிந்து கொண்டேன். இன்னும் பத்து இருபது முறை சந்தித்திருந்தாலும் ஞாபகத்தில் நின்றிருக்காது. ஏனென்றால், நான் மனிதர்களை ஞாபகம் வைத்துக் கொள்வது சந்திப்புகளால் அல்ல. வேறு பல விஷயங்களால். அதில் முதன்மையானது கலை.

சில ஆண்டுகளுக்கு முன், தான் எழுதிய ஓரிதழ்ப் பூ என்ற நாவலை அனுப்பி வைத்து என்னை வாசிக்கச் சொல்லியிருந்தார் அய்யனார். பொதுவாக நான் சமகால எழுத்தாளர்களை வாசிப்பதில்லை. அதனால் அதைத் தூக்கிக் கிடப்பில் போட்டு விட்டேன். பிறகு சென்ற ஆண்டு நான் துபாய்க்கும் ஷார்ஜாவுக்கும் செல்ல இருந்த போது அய்யனாரின் ஓரிதழ்ப் பூவை எடுத்துத் தூசி தட்டிப் படிக்க ஆரம்பித்தேன். என்னிடம் ஒரு பழக்கம் உண்டு. யாரையேனும் சந்திக்கச் சென்றால், அவர் எழுத்தாளராக இருந்தால் அவரது படைப்புகளில் ஏதேனும் ஒன்றையாவது படிக்காமல் போக மாட்டேன். ஏனென்றால், என்னைச் சந்திக்கும் பல அன்பர்கள் என்னுடைய ஒரு புத்தகத்தைக் கூட வாசித்ததில்லை என்று சொல்லும் போது ‘அப்புறம் எதற்கு என்னைச் சந்திக்கிறீர், எழுந்து போம்’ என்று சொல்லும் ஆத்திரம் வரும். அதே நிலைமையை நான் வேறு ஒரு எழுத்தாளருக்குக் கொடுத்து விடக் கூடாது என்பதால் அப்படி ஒரு பழக்கத்தை மேற்கொண்டேன். அதன்படி துபாய்க்குச் செல்வதால் அங்கே வசிக்கும் அய்யனாரின் ஓரிதழ்ப் பூவை வாசித்து விட வேண்டும் என்று எடுத்தேன்.

அந்த அனுபவத்தை என்னவென்று சொல்ல? துபாயில் ஒரு நண்பரின் வீட்டில் வைத்து அய்யனாரின் அந்த நாவலை ஒரு இரவு முழுவதும் நான் எப்படிக் கொண்டாடினேன் என்பதை நீங்கள் அய்யனாரிடம்தான் கேட்க வேண்டும். மனிதர் சந்தோஷம் தாங்காமல் அழுதே விட்டார்.

கடந்த முப்பது ஆண்டுகளாக எனக்குள் ஒரு ஏக்கம் இருந்து கொண்டே இருந்தது, தமிழில் ஒருத்தர் கூட மரியோ பர்கஸ் யோசாவைப் போல் thrilling-ஆக எழுதுவதில்லையே என்று. த்ரில்லும் இருக்க வேண்டும்; இலக்கியமாகவும் இருக்க வேண்டும். தமிழிலோ இலக்கியம் என்றால் அலுப்பு சலிப்பாக இருக்க வேண்டும் என்ற ஒரு நம்பிக்கை நிலவுகிறது. அந்தச் சூழலை தன் நாவல்களால் உடைத்து எறிந்தவர் அய்யனார். முதல் பக்கத்தை எடுத்தால் கடைசி பக்கம் வரை நம்மால் வேறு எந்த வேலையும் செய்ய முடியாது. முழுமையான வசியத்தில் நம்மைக் கட்டிப் போட்டு விடுவார் அய்யனார்.

பொதுவாக எழுத்தாளர்களோடு பழகுவது ஒரு எழுத்தாளனான எனக்கே சிரமமாக உள்ளது. அடிக்கடி ’என்ன இது, சைக்கோ பயலுவளா இருக்கானுவொளே’ என்று தோன்றும். (பெண்களோடு பழகும் போதும் அப்படித்தான் தோன்றுகிறது. அது வேறு விஷயம்!) அப்படிப்பட்ட சூழலில் அய்யனார் அதற்கு விதிவிலக்காக இருக்கிறார். அத்தனை பணிவு, அத்தனை எளிமை.

இப்போது அய்யனார் என் குடும்பத்தில் ஒருவர். அவருக்கு இந்த ராஸ லீலா…