தடம் நின்றதில் ஆச்சரியமில்லை…

தடம் இதழ் நின்று போன விஷயத்தை நேற்று சாதனா செய்தியாக அனுப்பியிருந்தார்.  அதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை என்று பதில் அனுப்பினேன்.  இன்று காயத்ரி சொன்ன போது ரொம்ப நல்ல விஷயம், சந்தோஷமாக இருக்கிறது என்றேன். ஒரு இலக்கியவாதியான நான் அப்படிச் சொன்னது அவளுக்கு ஆச்சரியமாக இருந்தது.  அந்த ஆச்சரியத்தை மட்டுப்படுத்துவதற்காக ஏதேதோ உளறி விட்டு உரையாடல் திசையை மாற்றி விட்டேன்.

உங்களுக்குத் தெரிந்திருக்கும், நான் தடம் இதழில் எதுவும் எழுதியதில்லை.  ஆரம்பத்தில் என்னுடைய ஒரு பேட்டி வந்ததோடு சரி.  தடம் இதழை நான் வாங்கியதும் இல்லை.  ஒன்றிரண்டு இதழைப் பார்த்திருக்கிறேன்.  அதில் எனக்கு எதுவுமே இல்லை.  என் வயது 66 என்றாலும் நான் எப்போதுமே ஒரு 25 வயதுக்காரனாகவே வாழ்பவன், சிந்திப்பவன்.  எனக்கு அந்த இதழில் படிக்கவோ பாதுகாக்கவோ எதுவுமே இல்லை.  அதில் எழுதுவதை விட என் இணைய தளத்தில் எழுதுவது எத்தனையோ மேல்.  ஒரே நாளில் ஆயிரக் கணக்கான பேர் வாசிக்கும் தளம் அது. குமுதத்திலிருந்து கூட தீராநதி என்று ஒரு இலக்கிய இதழ் வருகிறது.  அந்த இதழில் என்னுடைய பேட்டி ஒன்று வந்தது.  ஏழெட்டு ஆண்டுகள் இருக்கும்.  அந்த இதழை மட்டும் பார்த்தேன்.  அவ்வளவுதான்.  மற்றபடி அந்த இதழை நான் தொட்டுக் கூட பார்த்ததில்லை.  குமுதம் மீதோ விகடன் மீதோ எனக்கு எந்தப் பகையும் இல்லை.  குமுதத்தில்தான் நான் தொடர்ந்து தொடர் கட்டுரை எழுதி வருகிறேன். குமுதம் ப்ரியா கல்யாணராமன் என் நெருங்கிய நண்பர்.  விகடனில் அதன் ஆசிரியரைத் தவிர மற்ற எல்லோருமே நண்பர்கள்.  தீரா நதியில் ஒரு தொடர் எழுதுங்களேன் என்று ப்ரியா கல்யாணராமன் ஏழெட்டு ஆண்டுகளுக்கு முன்பு கேட்ட போது “ஐயோ தலைவரே, உங்களுக்கு என் மீது என்ன பகை?  நாற்பது ஆண்டுகளாக நான் தீரா நதி மாதிரி பத்திரிகைகளில்தானே எழுதி எழுதி மாய்ந்தேன்?  இந்த 60 வயதிலுமா என் டயரியில் எழுதுவது போல் ஆயிரம் பேர் வாசிக்கும் இலக்கியப் பத்திரிகையில் எழுத வேண்டும்?  குமுதத்தில் எழுதுவதானால் சொல்லுங்கள், இன்றே தொடர் ஆரம்பித்து விடுவோம்” என்றேன்.  இப்போதும் தீரா நதியில் எழுதுவதைத்தான் குமுதத்தில் எழுதிக் கொண்டிருக்கிறேன்.

நான் இலக்கியப் பத்திரிகைகளின் எதிரி அல்ல.  நிறப்பிரிகை என்று ஒரு பத்திரிகை இருந்தது.  அதன் பின்னணியில் ஒரு தத்துவம் இருந்தது.  அரசியல் இருந்தது.  ஒரு குழு இருந்தது.  இன்று கல்விச் சீர்திருத்தச் செயல்பாடுகளில் பிரபலமாக இருக்கும் கல்யாணி, தமிழின் அரிதான புத்திஜீவிகளில் ஒருவரான அ. மார்க்ஸ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி செயலாளர் ரவிக்குமார் போன்றவர்கள் அந்தப் பத்திரிகையின் மூளையாகச் செயல்பட்டார்கள்.  நானும் அதில் ஒரு பங்கேற்பாளனாக இருந்தேன்.  கோவை ஞானி, மார்க்சீய சிந்தனையாளர் எஸ்.என். நாகராஜன் போன்றவர்கள் அதில் பங்கேற்று விவாதித்தார்கள்.  அன்றைய நிறப்பிரிகை பத்திரிகை விவாதித்த கருத்துக்கள்தாம் இன்று அரசியல் மற்றும் சமூக வெளிகளில் பொதுக்கருத்துக்களாக உலவி வருகின்றன.  சொல்லாடல் போன்ற வார்த்தைகள் நிறப்பிரிகையிலிருந்து உருவாயின.  பெண்ணியம் சார்ந்த பல புதிய கருத்தியல்கள் அப்பத்திரிகையின் மூலம்தான் வெளியே வந்தன.  இன்றைய விடுதலைச் சிறுத்தை போன்ற கட்சிகளுக்கான, மாற்றுச் சிந்தனைகளுக்கான வித்து நிறப்பிரிகையில் இடப்பட்டதுதான்.

ஆனால் நிறப்பிரிகை என்ற ஒரு பத்திரிகை, ஒரு இயக்கம் உருவாகக் காரணமாக இருந்தது படிகள் என்ற பத்திரிகை.  அது பெங்களூரிலிருந்து வந்தது.  படிகளுக்கு முன்னோடியாக இருந்தவை எழுத்து (சி.சு. செல்லப்பா), இலக்கிய வட்டம் (க.நா.சு.) போன்ற இலக்கியச் சிறுபத்திரிகைகள்.  இப்படி இந்த விஷயம் ஒன்று தொட்டு ஒன்று போய்க் கொண்டே இருக்கும். 

இப்போதும் இலக்கியச் சிறுபத்திரிகைகள் வந்து கொண்டுதான் இருக்கின்றன.  அவைகளுக்கான அவசியம் இன்றும் இருக்கின்றன.  அப்படி ஒரு பத்திரிகை     

விகடன் ஆசிரியரும் ஆசிரியர் குழுவினரும் புரிந்து கொள்ள வேண்டிய விஷயம் என்னவென்றால், இப்போதைய காலம் இணையம்.  இலக்கியப் பத்திரிகையாக கால் பதிக்க வேண்டுமென்றால், அது இணையப் பத்திரிகையாக இருக்க வேண்டும்.  அதில் வரும் விஷயங்கள் எல்லாமே எல்லோராலும் பேசப்படுகின்றவையாக, விவாதிக்கப்படுகின்றவையாக இருக்க வேண்டும்.  உதாரணமாக, மணல்வீடு பத்திரிகையைச் சொல்லலாம்.  ஹரி கிருஷ்ணனை ஆசிரியராகக் கொண்டு வெளிவருகிறது.  நாட்டார் கலைகளுக்கும், சமகால இலக்கியத்துக்குமான பத்திரிகை அது.  எட்டு ஆண்டுகளாகத் தொடர்ந்து நடத்திக் கொண்டிருக்கிறார் ஹரி.  இப்படியான செயல்பாடுகள்தான் இப்போது தேவை.

நான் ஒரு புத்தக வெளியீட்டு விழா நடத்தினால் காமராஜர் அரங்கில் நடத்த முடிகிறது.  1500 பேர் வருகிறார்கள்.  அவ்வளவு பிரபலம் நான்.  ஆனால் என் புத்தகங்கள் அதிக பட்சம் 500 தான் விற்கிறது.  எனக்குக் கிடைக்கும் ராயல்டி 1,50,000.  ஒரு ஆண்டுக்கு.  ஆக, என் மாத வருமானம் சுமார் 12,000.  இதுதான் இலக்கியத்தின் நிலை.  இந்த நிலையில் இலக்கியப் பத்திரிகையை யார் வாங்குவார்?  ஏன் நான் தடம் வாங்கவில்லை?  என்னுடைய டயரியை நானே விலை கொடுத்து வாங்குவது அவலம் இல்லையா?

ஒரு இலக்கியப் பத்திரிகை எப்படி இருக்கக் கூடாது என்பதற்கான இலக்கணத்தை நீங்கள் தடத்தைப் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம்.  முதியோர் இல்லம் என்ற இடம் எவ்வளவு மன உளைச்சல் தரக் கூடிய இடம் தெரியுமா?  தடம் ஒரு முதியோர் இல்லம் மாதிரிதான் இருந்தது.  இலக்கியப் பத்திரிகை என்பது ஒரு Pub மாதிரி இருக்க வேண்டும்.  இணையத்தில் மட்டுமே அது சாத்தியம்.  தொலைக்காட்சி வந்த போது அதை அடிக்க எதுவுமே இல்லை என்று நம்பினோம்.  சினிமா வந்த போது அதை அடிக்க எதுவுமே இல்லை என்று நம்பினோம்.  இப்போது என்ன ஆனது? தொலைக்காட்சி சுத்தமாகப் போய் விட்டது.  எல்லோரும் மொபைலில் வெப்சீரீஸ் பார்க்க ஆரம்பித்து விட்டார்கள்.  Sacred Games இரண்டாம் சீரியலை நான் ஒரே நாளில் ஒன்பது மணி நேரத்தில் பார்த்து முடித்து விட்டேன்.  காலம் மாறி விட்டது.  இதைத் தமிழ் இலக்கியவாதிகளும் அதை விட முக்கியமாக விகடன் இலக்கியவாதிகளும் புரிந்து கொள்ள வேண்டும்.  எனக்கு விகடன் நண்பர்களைப் பார்க்கும் போது ஐயா மு. வரதராசனாரையும் அகிலன் சாரையும் பார்ப்பது போல் இருக்கிறது. 

இன்னமும் நீங்கள் சி.சு. செல்லப்பா காலத்திலேயே இருக்கிறீர்கள்.    ஆனால் இப்போதைய காலம் இணைய எழுத்தையும் தாண்டிக் கொண்டு போக ஆரம்பித்து விட்டது. அதாவது, விடியோ இதழாகக் கேட்க ஆரம்பித்து விட்டார்கள்.  ஆயிரக் கணக்கான தமிழர்கள் துபாயிலிருந்து ஷார்ஜாவுக்குக் காரில் போகிறார்கள்.  போக ஒன்னேகால் மணி நேரத்துக்குக் குறையாமல் ஆகிறது.  அப்போது சாரு நிவேதிதாவின், எஸ். ராமகிருஷ்ணனின் பேச்சுக்களைக் கேட்டுக் கொண்டே போகிறார்கள்.  இப்படிக் கேட்பதை சட்டம் அனுமதிக்கிறது. கார் ஓட்டும் போது தொலைபேசியில் பேசத்தான் அனுமதி இல்லையே தவிர இப்படி பேச்சுக்களைக் கேட்டுக் கொண்டே போகலாம்.  என்னுடைய ஒரு பேச்சை இரண்டு லட்சத்துக்கும் மேலான பேர் கேட்டிருக்கிறார்கள். 

ஒரு இணைய இலக்கியப் பத்திரிகையின் ஆசிரியராக நான் இருந்தால், முதல் இதழில் என்னென்ன்ன போடுவேன் என்று சொல்கிறேன், குறித்து வைத்துக் கொள்ளுங்கள்.  முதலில் அது வாரப் பத்திரிகையாக இருக்கும்.  திங்கள் காலை ஆறு மணிக்குப் பதிவேற்றம் செய்யப்படும்.  அதாவது, அமெரிக்காவின் திங்கள் காலை. 

முதலில் என்னவெல்லாம் வராது என்று சொல்லி விடுகிறேன்.  வண்ணதாசனின் சிறுகதை வரவே வராது.  கலாப்ரியாவின் பேட்டி வராது.  பிக்பாஸ் பற்றிய வண்ணதாசனின் பதிவுகள் வரும்.  இந்தி எதிர்ப்பின் போது கலாப்ரியா பார்த்த, கேட்ட, அனுபவித்த விஷயங்கள் பற்றிய பதிவுகள் வரும்.  பிக்பாஸ் பற்றிய சமூகவியல் ஆய்வுகள் வரும்.  ஒரு உதாரணம், சேரனும் கஸ்தூரியும் எவிக்‌ஷனுக்கு அதிக ஓட்டு வாங்குகிறார்கள்.  காரணம் ரெண்டு பேருமே தடம் பத்திரிகை மாதிரி முதியோர் இல்லத்தைச் சேர்ந்தவர்கள். அதில் சேரன் பாசம், அன்பு, குடும்பம் போன்ற நிலப்பிரபுத்துவ மதிப்பீடுகளின் பிரதிநிதி.  கஸ்தூரி நகர்ப்புற தந்திரம், அகங்காரம், எதுவுமே தெரியாமல் எல்லாம் தெரிந்தது போல் பேசும் திமிர்த்தனம் போன்றவற்றின் பிரதிநிதி.  இந்த ரெண்டு பேருமே மற்றவர்களால் புறக்கணிக்கப்படுகிறார்கள்.  நாம் நம் பெற்றோரைப் புறக்கணிப்பதைப் போல.  சேரன் என்னிடம், ”நான் உங்கள் நூல்களைப் படிக்கிறேன்.  ஆனால் ஒளித்து வைத்துப் படிக்க வேண்டியிருக்கிறது; வீட்டில் புள்ளைங்க இருக்கு இல்லியா?” என்று கேட்டவர். கஸ்தூரி யார்?  சாருவை porn site-இல் படித்து விடலாமே என்று சொன்னவர். 

கவின் யார்?  இன்றைய இளைய சமூகத்தின் பிரதிநிதி.  ஒட்டு மொத்த மௌடீகத்தின் குறியீடு.  அவருக்கு மௌடீகம் என்றாலும் தெரியாது, குறியீடு என்றாலும் தெரியாது. 

ஆக, மேற்கண்ட விதமான ஆய்வுகள் பிக்பாஸ் போன்ற வெகுஜன நிகழ்வுகள் பற்றி என் இணைய தள இலக்கியப் பத்திரிகையில் வரும்.  ஜெகா போன்ற இணைய ஜீவிகளின் எழுத்துக்கள் வரும்.  பழைய எழுத்தாளர்கள் பற்றிய புதியவர்களின் வாசிப்பு அனுபவங்கள் வரும்.  பெண்களின் பங்கேற்பு இருக்கும்.  கவிதைக்குத் தடை.  கலர்ஃபுல்லான புகைப்படங்கள் இருக்கும்.  பெண்கள் படமாக இருக்காது.  அதிரடிக்கும் புகைப்படங்கள் பல உள்ளன.  நிச்சயம் பயணக் கட்டுரை இடம் பெறும்.  ஆந்திராவுக்கும், சிங்கப்பூர் மலேசியாவுக்கும் போய் விட்டு வந்து எழுதும் கட்டுரை அல்ல. ஐஸ்லாந்து பயணக் கட்டுரை.  எவனோ எழுதியதன் மொழிபெயர்ப்பு அல்ல.  இப்போது இணையத்தில் பிரபலமாக எழுதும் யாராவது போய் வந்து எழுதும் authenticஆன கட்டுரை.  புகைப்படங்களுடன்.  இதெல்லாம் அச்சு ஊடகத்தில் சாத்தியம் இல்லை. 

இப்படிப்பட்ட பத்திரிகையை ஒரே நாளில் 30,000 பேரைப் படிக்க வைப்பேன்.  எனவே முதியோர் இல்லப் பத்திரிகையான தடம் நின்றதில் எனக்கு மகிழ்ச்சிதான்.