ஒரு கடிதம்…

அன்புள்ள சாரு…
ஓஷோ ஒரு உதாரணம் சொல்கிறார்..
இனிப்புக் கடைக்காரர் ஒருவருக்கு யார் மீதோ கோபம்.. கோபத்தில் தன் கடைசியில் இருந்த  இனிப்புகளை அவன் மீது எறிகிறார்.  அக்கம்பக்கத்தினருக்கு இனிப்புகள் கிடைக்கின்றன..  ஒரு சராசரி மனிதன் காட்டும் அன்புகூட பிறருக்கு இம்சைதான். ஆனால் படைப்பின் உச்சத்தில் இருப்பவனின் கோபம்கூட அவனது படைப்பாற்றலின் வெளிப்பாடு என்பதால் பிறருக்கு நன்மைதான் என்கிறார் அவர்..
அதுபோல  ஒரு சம்பவத்திற்கான உங்கள் கோபமான எதிர்வினையால் “பிணந்தின்னிகளும் நட்சத்திரங்களிடமிருந்து செய்தி கொண்டு வந்தவர்களும் ”   என்ற மகத்தான சிறுகதை மீண்டும் பரவலாக விவாதிக்கப்படும் நல்நிகழ்வைப் பாரக்கமுடிகிறது..
என் போன்ற ஆரம்ப கால வாசகர்களுக்கெல்லாம் இந்த கதை எங்களுடனே குடியிருந்து எங்களுடனேயே வளர்ந்து வரும் ஒரு சக ஜீவியாக இருக்கிறது..   அதாவது அது வெளிவந்தபோது அது குறித்த புரிதல் வேறு.. இன்று Sapiens: A Brief History of Humankind , guns germ and steel  போன்ற அபுனைவுகளை வாசித்தபின் அந்த கதை தரும் புரிதல் வேறு..
அந்த கதை வெளிவந்தபோது தொண்ணூறுகளில் அது குறித்த விவாதகூட்டம் நடந்தது..   சு.ரா , ஜெ பாரம்பரியத்தை சேர்ந்த ஒருவர் கதைகள் குறித்த தன் பார்வையை சொன்னார்..  கதையின் சாராம்சத்தை அவர் தொடவில்லை..
சில நாட்களுக்கு முன் கல்லூரியில் படிக்கும் உறவுக்கார பையனிடம் பேசியபோது அவன் சாருவின் வாசகன் என அறிந்து மகிழந்தேன். ஒரு நாள் அவரை பார்க்க வேண்டும் என்றான்.  அவருடன் தயக்கமின்றி பேசலாமா.. அவர் எப்படி பழகுவார் என்றெல்லாம் கேட்டான்.
நியாயமான கேள்விகளாக இருந்தால் பதிலளிப்பார்.. முட்டாள்தனமாக பேசினால் குட்டு வைப்பார்.  ஒரு வாசகனாக ஒரு இலக்கிய மாணவனாக இரண்டுமே உனக்கு நல்லதுதான். என்று சொல்லிவிட்டு இரண்டு உதாரணங்கள் சொன்னேன்
ஒரு முறை செல்வா , ஶ்ரீராம் மற்றும் நான் உங்களுடன் பேசிக்கொண்டிருந்தோம். அப்போது செல்வா உங்களிடம் கேட்டார் ; சாரு.. பழுப்பு நிறப் பக்கங்களில் சில முன்னோடிகளைப் பற்றி எழுதுமபோது அவரகள் எழுத்துகளின் சில பகுதிகளை அப்படியே கட் , பேஸ்ட் செய்து வாசகர்கள் பார்வைக்கு வைப்பதை சிலர் விமர்சிக்கிறார்களே.. அதற்கு உங்கள் பதில் என்ன என கேஷுவலாக கேட்டார்.. எனக்கு சற்று அதிர்ச்சிதான். அதன்பின் இருக்கும் உழைப்பறியாமல் யாராவது விமர்சிக்கலாம். அதையெல்லாம் கேட்கலாமா என நினைத்தேன்.  ஆனால் நீங்கள் வெகு இயல்பாக புன்னகையுடன் அதன்பின் இருக்கும் லாஜிக்கை விளக்கினீர்கள். அட  !! என தோன்றியது
இன்னொரு சந்தர்ப்பத்தில் நான் உங்களைக் கேட்டேன்;  சாரு , உங்கள் சாதனைகளின் உச்சம் சிறுகதைகளில்தான் நிகழ்ந்துள்ளது..  ஒரு சின்ன கோவைப்பழ அளவுள்ள உறுப்புதான் என் வாழ்க்கையை என் சிந்தனையை தீர்மானிக்கிறதா என்று அதிர வைக்கும் உன்னத சங்கீதம் ,  யாரழ் பத்தேல் சொன்ன பாலியலும் மரணமும் என்பதை பேசும் நேநோ ,முதலாளித்துவம் புரட்சி எதிர்புரட்சிஅன்புமார்க்கம் ஆயுதமார்க்கம் எனஅனைத்திலும் நெக்ரோஃபீலியா இருக்கிறதா என வினவும் பிணந்தின்னிகளும் நட்சத்திரங்களிடம் இருந்து செய்திகொண்டு வந்தவர்களும். என சொல்லிக் கொண்டே போகலாம். உங்கள் சிறுகதை சாதனைகள் யாராலும் செய்யப்பட முடியாதது. ஆனால் நீங்கள் அபுனைவு , நாவல்கள் என செயல்படுவது சிறுகதை உலகத்துக்கு இழப்பு என கருதுகிறேன். இதை உணர்ந்திருக்கிறீர்களா என கேட்டேன்.  இதை பாராட்டும் தொனியில் கேட்டாலும் நீங்கள் அதை ரசிக்கவில்லை.ஒரு நல்ல வாசகன் எழுத்தாளனை இப்படித்தான் செயல்பட வேண்டும்நிர்ப்பந்திக்க மாட்டான். எனது அபுனைவுகளிலும் நாவல்களிலும் சிறுகதை அம்சங்கள் உண்டு. அதை இனம்காண தெரியாதவர்கள்தான் இப்படி கேட்கிறார்கள் என சற்று கடுமையாக சொன்னீர்கள் இதை அந்த பையனிடம் சொன்னேன்பிணத்தை தின்னும் கதையைப் பற்றி அவரிடம் பாராட்டிவிட்டு அது போல இப்போது ஏன் எழுவதில்லை என கேட்பதே ஒரு முரண்தானே. அப்படி கேட்பதே நெக்ரோ தன்மைதானே என்றான் அவன்.
இதை ஏன் சொல்கிறேன் என்றால் 60 களில் 70 களில் பிறந்த அன்றைய விமர்சகர்கள் நான் முன்பே சுட்டிக்காட்டியபடி கதையைசம்பந்தம் இன்றிவிமர்சிக்கிறார்கள். அப்போது பிறந்தே இராத பையன் இன்று உணரந்து படிக்கிறான். நீங்கள் எதிர்காலத்துக்காக எழுதும் எழுத்தாளர்
மொழியையே கொன்றபின்புதான் அதை ரசிக்க நினைக்கிறார்கள். சமஸ்கிருதம் அழிக. தமிழ் வாழ்க என்கிறார்கள். தமிழ் கண்டிப்பாக வாழ வேண்டும். சமகால தமிழ் இலக்கிய நூல்கள் பற்றி  கேட்டால் நாக்கு தெலிதே என்கிறார்கள்
அதாவது தமிழ் இவர்களுக்கு தேவையில்லை.. அதைப்பற்றிய கற்பனைதான் தேவை..
அந்த கதையில் கடைசியில் வரும் கேள்விகள் இன்றைய சூழலில் மிக மிக பொருத்தமாக உள்ளன;
என்றென்றும் உங்கள் மாணவனாக,

பிச்சைக்காரன்