தஞ்சை ப்ரகாஷ்

என்னை ஆசிரியனாக நினைக்கும் வாசகர்களுக்கும் நண்பர்களுக்கும் இந்த வேண்டுகோள். அதேபோல் தஞ்சை ப்ரகாஷை மதிக்கும் மற்றவர்களும் இந்த வேண்டுகோளை செவி மடுக்கலாம்.  காரியத்தில் இறங்கலாம்.  எனக்காக இல்லாவிட்டாலும் தஞ்சை ப்ரகாஷுக்காக இதை நீங்கள் (அதாவது, லட்சுமி சரவணகுமார் போன்று தஞ்சை ப்ரகாஷை தமிழ் இலக்கியத்தில் முக்கியமாக நினைப்பவர்கள்). மற்றவர்கள் வெறுமனே படித்து விட்டுக் கடந்து விடலாம். தஞ்சை ப்ரகாஷ் பற்றி மிக விரிவாக என் பழுப்பு நிறப் பக்கங்களில் எழுதி இருக்கிறேன்.  அவரைச் சுற்றி பல இலக்கிய நண்பர்கள் இருந்தனர்.  அவர் ஒரு பணக்கார குடும்பத்தைச் சேர்ந்தவர்.  வேலைக்குப் போய்தான் சாப்பிட வேண்டும் என்ற நிலை இல்லை.  அவருடைய தகுதி பற்றித் தெரிந்தவர் அவர் மனைவி மங்கையர்க்கரசி. ப்ரகாஷைப் போற்றிப் பாதுகாத்தவர் மங்கை.  அந்த வகையில் ப்ரகாஷ் ஒரு அதிர்ஷ்டசாலி.  நண்பர்களுடன் இலக்கியம் பேசுவதற்காகவே தஞ்சாவூரில் அவர் ஒரு மெஸ் ஆரம்பித்தார்.  அவர் எதை ஆரம்பித்தாலும் அது நஷ்டத்தில் முடியும்.  தெரிந்ததுதானே?  கலைஞன் என்ற வார்த்தைக்கு ஒரு உதாரணம் என்றால் அவர்தான்.  சி.சு.செ., க.நா.சு., தி.ஜா. போன்ற நம் முன்னோடிகளின் தலைமுறையில் கடைக் கொழுந்து தஞ்சை ப்ரகாஷ்.

ஆறடிக்கு மேல் உயரம்.  தொப்பை இல்லாத ஆஜானுபாகுவான தோற்றம்.  இரும்பு மனிதர் போல் இருப்பார்.  அவர் பேண்ட் அணிந்து நான் பார்த்ததில்லை.  மென்மையான பேச்சு.  தாகூரைப் போன்ற தாடி.  ஆனால் கருப்பு தாடி.  பார்க்கவே ஒரு ஞானியைப் போல் இருக்கும்.  நிஜமாகவும் ஞானிதான்.  அசோகமித்திரனின் நெருங்கிய நண்பர்.  அவருக்கு எல்லாருமே நண்பர்கள்தான்.  எல்லோரையும் திட்டிக் கொண்டிருந்த வெங்கட் சாமிநாதனைத் தன் குருவாகக் கொண்டவர் தஞ்சை ப்ரகாஷ்.  அந்த குருவுக்காகவே வெ.சா.எ. என்று ஒரு பத்திரிகை நடத்தினார் ப்ரகாஷ்.  எல்லாமே சொத்தை விற்றுத்தான்.  அது என்ன வெ.சா.எ.?  வெங்கட் சாமிநாதன் எழுதுகிறார்.  இதுதான் பத்திரிகையின் பெயர்.  வெங்கட் சாமிநாதன் மட்டுமே அதில் எழுதுவார்.  முறம் சைஸில் நாற்பது ஐம்பது பக்கம் இருக்கும்.  அப்பேர்ப்பட்ட வெங்கட் சாமிநாதன், தஞ்சை ப்ரகாஷ் இறந்ததும் ”அடடா, தஞ்சை ப்ரகாஷ் நாவல் எல்லாம் எழுதியிருக்கிறாரா? தெரியாமல் போயிற்றே?” என்று இரங்கல் கட்டுரை எழுதினார்.  இப்படியாகத்தான் புறக்கணிக்கப்பட்டார் ப்ரகாஷ்.

அவரைச் சுற்றியிருந்தவர்கள் அவர் மீது மிகுந்த அபிமானம் கொண்டவர்கள்.  ஆனால் அவரது சமகால எழுத்தாளர்கள் யாருமே அவரைப் பற்றி நல்ல வார்த்தையாக ஒரு வார்த்தை சொல்லவில்லை.  எல்லோருமே அவரை செக்ஸ் எழுத்தாளர் என்றே சொல்லி வந்தனர்.  இப்போதும் கூட அவரை அப்படி நினைப்பவர்கள் பலர் உண்டு.

தஞ்சை ப்ரகாஷ் அளவுக்குத் தன் வாழ்நாளில் புறக்கணிக்கப்பட்ட எழுத்தாளர் உலக மொழிகளிலேயே கிடையாது.  தர்மு சிவராமு போன்றவர்கள் வறுமையில் வாடி செத்தாலும் அவர்களின் எழுத்தை உலக மகா எழுத்து என்று கொண்டாடியவர்கள் அவரது நண்பர்கள்.  அந்த நண்பர் கூட்டத்தில் இல்லாவிட்டாலும் அப்படி அவரைக் கொண்டாடியவர்களில் நானும் ஒருவன்.  ஆனால் தஞ்சை ப்ரகாஷுக்கு அப்படிப்பட்ட அங்கீகாரம் கூட அவர் வாழ்நாளில் கிடைக்கவில்லை.  ஆனாலும் அவர் தொடர்ந்து எழுதிக் கொண்டே இருந்தார்.  எழுதி எழுதிக் குவித்தார்.  ஏழெட்டு மொழிகளில் பாண்டித்யம் பெற்றிருந்தார், வங்காளம் உட்பட.

இப்போது முதல் முறையாக தஞ்சை ப்ரகாஷின் சில முக்கியமான சிறுகதைகள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு வெளிவந்துள்ளன. Boundless and Bare என்பது தொகுப்பின் தலைப்பு.  வெளியீடு:  Zero Degree Publishing.   பொதுவாக ஸீரோ டிகிரி என்ற பெயரைப் பார்த்து விட்டு அந்தப் பதிப்பகத்தோடு என்னை சம்பந்தப்படுத்திப் பேசுவதால் அவர்களின் நூல்களைப் பற்றி நான் அதிகம் பேசுவதில்லை.  ஆனால் தஞ்சை ப்ரகாஷின் Boundless and Bare அதற்கு விதிவிலக்கு.  இது என்னுடைய நூல்.  என் தகப்பனின் நூல்.  என் ஆசானின் நூல்.  இதில் உள்ள பொறா ஷோக்கு போன்ற ஒரு கதையை நீங்கள் உலகின் எந்த ஒரு மொழியிலும் படிக்க முடியாது. 

இந்த நூலின் ஒரு பிரதியை வாங்குங்கள் என்று நான் சொல்ல மாட்டேன்.  அந்த வேலையை மட்டும் செய்யாதீர்கள்.  நீங்கள் ஒரு பிரதி வாங்குவதால் எந்தப் பயனும் இல்லை.  நான் உங்களிடம் கேட்பது அது அல்ல.  நான் கேட்பது அதையெல்லாம் விடப் பெரிய விஷயம்.  தோஹாவில் உள்ள நூலகத்தில் காலச்சுவடு மற்றும் க்ரியா பதிப்பகங்களின் நூல்கள் மட்டுமே பத்து பத்து பிரதிகள் அடுக்கப்பட்டுள்ளன.  தமிழிலும் ஆங்கிலத்திலும்.  அந்த வேலையைச் செய்யுங்கள்.  உடனே செய்யுங்கள்.  அமெரிக்காவில் இருக்கிறீர்களா?  இந்த நூலின் ஒரு பிரதியை வாங்கி உங்கள் பகுதி நூலகத்திற்கு அன்பளிப்பாகத் தாருங்கள்.  அப்படியெல்லாம் நீங்கள் கொடுத்ததும் வாங்கி விட மாட்டார்கள்.  ரெவ்யூ கமிட்டியில் படித்துப் பார்த்துத்தான் வாங்கிக் கொள்வார்கள்.  எனவே ஒரு இயக்கத்தைப் போல் இதைச் செய்யுங்கள்.  பிறகு உங்களுக்கென்று ஒரு பிரதி வாங்குங்கள்.  சிங்கப்பூரிலும் இப்படிச் செய்யலாம்.   சிங்கப்பூர் நூலகத்தில் பத்து பிரதி காசு கொடுத்தே வாங்குவார்கள்.  நீங்கள் செய்ய வேண்டியது அறிமுகம்.  ஒரு ஐந்து பிரதியை வாங்கி வைத்துக் கொண்டு முக்கியமானவர்களிடம் தாருங்கள்.  தயவுசெய்து தமிழ்ச் சங்கங்களிடம் பேசாதீர்கள்.  அவர்களுக்கு சாலமன் பாப்பையாவும் நீயா நானா கோபியும் போதும்.  அவர்களைத் துன்புறுத்தாதீர்கள்.

மற்றொரு முக்கியமான விஷயம்: பொதுவாக தமிழில் வெளிவரும் மொழிபெயர்ப்புகளைப் பற்றிப் பெரும் புகார்கள் உண்டு.  உலக அளவில் மில்லியன் கணக்கில் விற்ற புத்தகங்களின் மொழிபெயர்ப்பை மூன்று வரி படிக்க முடியவில்லை.  தமிழிலிருந்து ஆங்கிலத்துக்குப் போகும் மொழிபெயர்ப்புகளின் நிலையும் கிட்டத்தட்ட அதுதான்.  தஞ்சை ப்ரகாஷின் Boundless & Bare அப்படி இருக்காது.   

இப்போது நீங்கள் செய்ய வேண்டியது ஆங்கிலம் தெரிந்த, ஆங்கிலத்தில் வாசிக்கக் கூடிய முக்கியமானவர்களிடம் இந்த நூலைக் கொண்டு சேர்க்க வேண்டும்.  பல்கலைக்கழகங்களில் இருப்பவர்களிடமும் கேட்டுக் கொள்கிறேன்.  பைபிளை ஏழைகளிடம் கொண்டு சேர்ப்பது போல் செயல்படுங்கள் என்கிறேன்.  ப்ளீஸ்…  தஞ்சை ப்ரகாஷ் பற்றிப் பேசுவது நம்முடைய பெருமையைப் பேசுவது போல.  புத்தகம் வாங்க:

தொடர்புக்கு:

Zero Degree Publishing

No.55(7), R Block, 6th Avenue,

Anna Nagar,

Chennai 600040

Phone: 98400 65000

E mail: zerodegreepublishing@gmail.com