அய்யனார் விஸ்வநாத்துடன் ஓர் உரையாடல்… (தொடர்ச்சி)

கேள்வி:  இங்கே தமிழ்ச் சூழலில் எழுத்தாளர்களைப் பற்றிய விபரங்கள் எதுவும் கிடைப்பதில்லை.  தி.ஜ.ரங்கநாதன் பற்றிய கட்டுரையை பழுப்பு நிறப் பக்கங்கள் தொகுதியில் சேர்த்து விட்டு, தி.ஜ.ர.வின் புகைப்படத்தையும் இணைத்திருந்தேன்.  பதிப்பாளரிடமும் போன் செய்து எந்தக் குழப்பமும் இருக்கக் கூடாது என்று அறிவுறுத்தினேன்.  மாதிரி பிரதி என் பார்வைக்கு வந்தது.  பார்த்தால் தி.ஜ.ர.வின் கட்டுரையில் தி.ஜானகிராமனின் புகைப்படம்.  கோபத்தில் உடல் நடுங்க பதிப்பாளரை அழைத்தேன்.  அவரோ அழாக்குறையாக ஒரு விசாரணை கமிஷன் அமைத்தார்.  விஷயம் என்னவென்றால், தி.ஜா. பற்றிய கட்டுரையில் யார் புகைப்படமோ இருக்கிறதே என்று பதிப்பகத்தில் பணிபுரியும் ஒருவர்தான் புகைப்படத்தை மாற்றினாராம். 
இதேபோல் நாளை எனக்கும் நடக்கலாம்; உங்களுக்கும் நடக்கலாம்.  என்னை விடப் பல மடங்கு பிரபலமான சுஜாதாவிடம் பலர் “உங்களுடைய கண்மணித் தாமரை படித்து என் வாழ்க்கையே மாறியிருக்கிறது” என்று சொல்வார்களாம்.  பாலகுமாரனின் தாடியைக் கூட மறந்து போனார்களே என்று எழுதியிருக்கிறார் சுஜாதா.  அவருக்கே அப்படி என்றால், நம் நிலைமையை யோசித்துப் பாருங்கள்.  இந்தப் பின்னணியில் கேட்கிறேன், உங்களுடைய வாழ்க்கை பற்றிச் சொல்லுங்கள்.  உங்களின் இலக்கியப் பின்னணி, நீங்கள் எழுத வந்த கதை, உங்கள் கதைகள் எப்படி நெட்ஃப்ளிக்ஸ் சீரீஸ் அளவுக்குப் பரபரப்பாக இருக்கின்றன… இதையெல்லாம் பற்றிச் சொல்லுங்கள்.  சமகால இலக்கியத்தில் சுவாரசியம் என்பதே இல்லாமல் போய் விட்டது.  சுவாரசியமாக இருந்தால் அது இலக்கியம் இல்லை என்ற முட்டாள்தனமான கருத்து வேறு இங்கே பல காலமாக உலவிக் கொண்டிருந்தது.  அந்த நிலையை உங்கள் எழுத்து பிரமாதமாக மாற்றிப் போட்டிருக்கிறது.   இதையெல்லாம் பற்றிப் பேசுவோமே?

கேள்வி: கிட்டத்தட்ட நான் இலக்கியம் வாசிக்க ஆரம்பித்த நாளிலிருந்தே இந்தக் கேள்வி என்னை அலைக்கழித்துக் கொண்டிருக்கிறது.  நான் ஒரு கவிஞரைப் பற்றி மிகவும் சிலாகித்துப் பேசினேன்.  உடனே இன்னொரு கவிஞர் (அவரும் என்னுடைய மதிப்புக்குரியவர்தான்) என்னிடம், “உங்களுடைய கவிதை மதிப்பீடு பற்றியே சந்தேகம் கொள்ள வேண்டியிருக்கிறதே!  அந்த ஆளைப் போய் நல்ல கவிஞர் என்று பாராட்டுகிறீர்களே?” என்று சொன்னார்.  அவருடைய மதிப்பீட்டில் நானும் என் இலக்கிய ரசனையும் ரொம்பவும் கீழே போய் விட்டோம் என்று நினைத்துக் கொண்டேன்.  ஆனால் மறுநாள் பார்த்தால் ஒரு தினசரியில் ஒரு ஆக மட்டமான கவிதையை அவர் எழுதியிருந்தார்.  அவர் அப்படி எழுதக் கூடியவர் அல்ல.  மாற்றானை விமர்சிக்கத் தெரிந்த அவரால் எப்படி ஒரு மட்டமான கவிதையை எழுதி பிரசுரத்துக்கும் கொடுக்க முடிந்தது?  
நம் இருவரையே எடுத்துக் கொண்டாலும் எனக்கு மிகவும் செயற்கையாகத் தோன்றும் எழுத்தை உருவாக்கும் ஒருவரை நீங்கள் வெகுவாக சிலாகிப்பதைப் பார்த்தேன்.  அதேபோல் நான் மிகவும் சிலாகித்த ஒரு நாவலை நீங்கள் கிழித்துத் தோரணம் கட்டியிருந்தீர்கள்.  
ஆகக் கடைசியில், இலக்கிய மதிப்பீடு, இலக்கிய விமர்சனம் என்பது வெறும் அபிப்பிராயம்தானா?  

கேள்வி: நம் முன்னோடிகள் பற்றி உங்கள் கருத்து என்ன?  நான் தனித்தனியாக ஒவ்வொரு எழுத்தாளரைப் பற்றியும் கேட்கவில்லை.  தமிழ் இலக்கியச் சூழலில் இரண்டு விதமான பள்ளிகள் இருந்தன.  இருக்கின்றன.  நகுலன் பள்ளி, சுந்தர ராமசாமி பள்ளி.  இந்தப் பிரிவில் உங்களுக்கு ஒப்புதல் இல்லாமல் இருக்கலாம்.  இருந்தாலும், சி.சு.செல்லப்பா, க.நா.சு., கு.ப.ராஜகோபாலன், லா.ச.ரா., தி.ஜானகிராமன், எம்.வி. வெங்கட்ராம், ஆதவன், ஆ. மாதவன் போன்றோர் உங்கள் எழுத்தில் செலுத்திய தாக்கம் அல்லது பாதிப்பு பற்றிச் சொல்ல முடியுமா?