பிக் பாஸ் (3) – 1

பிக் பாஸ் நிகழ்ச்சியை முதல் 60 நாட்கள் பார்க்காமல் இருந்தேன்.  என்ன நடக்கிறது என்றே தெரியாது.  யார் யார் என்றும் தெரியாது.  ஆனால் ரொலான் பார்த்தைப் (Roland Barthes)  படித்தவர் யாரும் அப்படி இருக்க இயலாது.   அவர் மூலமாக மட்டுமே முதன்முதலாக நான் கற்றுக் கொண்டேன், வெகுஜன கலாச்சாரத்தை நாம் புறக்கணிக்கக் கூடாது;  அதை ஆய்வு செய்ய வேண்டும் என்று.  இருந்தாலும் அந்தப் பக்கம் எட்டிப் பார்த்தால் அதன் ஆபாசத்தை என்னால் தாங்க முடியாதிருந்தது.  60 நாட்கள் கழிந்த பிறகு “அந்த நிகழ்ச்சியின் மூலம் இந்த சமூகத்தின் அவலத்தை நான் புரிந்து கொள்கிறேன்” என்று என் நண்பர் ஒருவர் சொன்னதால் பார்த்தேன்.  கொடுமையான, தாங்க முடியாத சித்ரவதையாக இருந்தது கஸ்தூரியும், சேரனும்.  ஆபாசத்தில் யார் முதலிடம் என்பதை என்னால் சொல்ல முடியவில்லை.  நகரத்தில் வசிக்கும் மேட்டுக்குடியினரின் திமிர்த்தனம், முட்டாள்தனம், அகந்தை, அடாவடித்தனம், பணக்கார ரவுடித்தனம், தடித்தனம் போன்றவற்றின் மொத்த உருவமாக இருந்தார் கஸ்தூரி.  ஒரே ஒரு உதாரணம் போதும்.  கஸ்தூரி ஒரு மொக்கை ஜோக் அடிக்க வேண்டும்.  ஷெரினைப் பார்த்து கஸ்தூரி சொல்கிறார்.  இப்போ ஒன்னோட நாய் செத்துப் போச்சு என்று ஜோக்கை ஆரம்பிக்கிறார்.  உடனே ஷெரின் அழ ஆரம்பிக்க, ஏய் ஏய் ஜோக் தானே ஜோக் தானே என்று சொல்லியபடி ஜோக்கைத் தொடர்கிறார் கஸ்தூரி.  உன் நாய்க்குட்டி செத்துப் போச்சு.  அதைத் தூக்கி கூடையில் போடுறோம்.  உடனே நிறைய நாய்க்குட்டிங்க வந்துடுச்சு.

எப்படீ?????

Empty vessels make most noise. 

இது தன்னைப் பற்றியே அவர் சொல்லிக் கொண்ட ஜோக்காகவே எடுத்துக் கொள்ளலாம்.  இதே ஜோக்கைக் கொஞ்சம் மாற்றி ஷெரின், இப்போ க…வின் புள்ளை செத்துப் போச்சு என்று ஜோக்கை ஆரம்பித்தால் அங்கே க… ஷெரினைக் கழுத்தை நெறித்துக் கொன்றிருப்பார் இல்லையா?  இந்தக் காட்சியைப் பார்த்த போது என் கணினித் திரையை அடித்து உடைத்து விட வேண்டும் போல் கோபம் வந்தது.   இப்படியா கேடு கெட்டவர்களாக இருப்பார்கள் நகரத்து மேட்டுக்குடியினர்?  இவர்களா தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் வருகிறார்கள்? 

இதெல்லாம்தான் சமூக அவலம்.  இதை இந்த சமூகத்துக்கே வெளிச்சம் போட்டுக் காட்டுவதால் பிக் பாஸ் நிகழ்ச்சியை பார்க்கத்தான் வேண்டியிருக்கிறது.  ஆனாலும் முழுசாகப் பார்க்க இயலவில்லை.  ஒன்னேகால் மணி நேர நிகழ்ச்சியில் விட்டு விட்டு பத்து நிமிடம் பார்க்கிறேன்.  அதற்குள்ளேயே இந்த சேரன் செய்யும் அக்கிரமத்தைத் தாங்க முடியவில்லை.  ஏதோ அப்பா மகள் என்று சொல்லிக் கொண்டு ஒரே கச்சடாவாக இருக்கிறது.  ஒரு பெண் வயதில் மூத்தவரைப் பார்த்து அப்பா என்று சொல்வதில்லை தப்பு இல்லை.  ஆனால் இந்த ஆள் அவளை ஏன் அவளுக்குப் பிடித்தவனோடு பழகக் கூடாது என்று சொல்கிறார்?  வெளியே அந்த ஆளை மிகக் கேவலமாகப் பேசுகிறார்கள் என்பது அவருக்குத் தெரியுமா?  கேவலம்.  கேவலம்.  இப்படியெல்லாமா மனிதர்கள் மலம் தின்னும் பன்றியை விடக் கேவலமாக இருப்பார்கள் என்று இருக்கிறது.  சேரன் செய்யும் அநியாயத்தை அங்கே ஒரே ஒரு ஆள்தான் தட்டிக் கேட்கிறார்.  வேறு யாருக்கும் தைரியம் இல்லை.  இம்மாதிரி ஆட்கள்தான் சமூகத்தில் ஆணவக் கொலைகளை நிகழ்த்திக் கொண்டிருக்கிறார்கள்.  இனிமேல் சேரனின் முகத்திலேயே முழிக்க மாட்டேன்.  சரியாகத்தான் சொல்கிறான் கவின்.  அவர் என்ன அப்பா அப்பான்னு சொல்லி டிராமா போட்டுக்கிட்டுருக்காரு?