உரையாடல் தொடர்கிறது…

அன்புக்குரிய அய்யனார், நேற்று (14.9.2019) உங்கள் கேள்வியைப் படித்து விட்டு சந்நதம் வந்தது போல் மேற்கண்ட பதிலைத் தட்டினேன்.  படு வேகத்தில் தட்டச்சு செய்ததில் முழங்கையிலிருந்து மணிக்கட்டு வரையிலான நரம்புகளும் விரல்களும் நடுங்க ஆரம்பித்து விட்டன.  அத்தனை வேகம்.  மனதில்.  திடீரென்று யூரிபிடஸின் (Euripides) மெடியா நாடகத்தில் வரும் மெடியாவின் சோகம் என்னை ஆக்ரமித்துக் கொண்டது.  மெடியாதான் சிறுபத்திரிகைச் சூழலில் இயங்கி வந்த இலக்கியவாதிகள்.  கணவனால் புறக்கணிக்கப்பட்டு தன் குழந்தைகளைக் கொன்ற அவளது கண்ணீர்தான் இலக்கியவாதிகளின் கதை.  இன்றைய இளைஞர்களுக்கு இது வேடிக்கையாக இருக்கலாம்.   கல்கியும் ஜெயகாந்தனும் கொண்டாடப்பட்டார்கள்.  ஜெயகாந்தனைப் பார்த்து அரசியல்வாதிகளே அஞ்சினார்கள்.  கஞ்சா புகைப்பதற்கு எதிராக எம்ஜியார் சட்டம் கொண்டு வந்த போது கூட ஜெயகாந்தன் பொது இடங்களிலும் கஞ்சா புகைத்தார்.  அவர் வீட்டு மொட்டை மாடியில் தினந்தோறும் நடக்கும் சந்திப்புகளிலும் நண்பர்களோடு சேர்ந்து கஞ்சா புகைத்தார்.  சிவாஜி கணேசனின் மேடையிலேயே போய் சிவாஜிக்கு நடிக்கத் தெரியாது என்றார்.  பெரியாரின் மேடையிலேயே போய் பெரியாரை விமர்சித்தார்.  அப்படிப்பட்ட மரியாதையை சமூகம் அவருக்குக் கொடுத்தது.  இன்று நான் கஞ்சா புகைத்தால், கஞ்சா வைத்துக் கொண்டிருந்தால் பத்து ஆண்டுகள் உள்ளே தள்ளுவார்கள்.  ஜெயமோகன் மளிகைக்கடையில் மாவைத் தூக்கி வீசியதற்காக அவரை இணைய போராளிகள் அத்தனை பேரும் கல்லால் அடித்தார்கள்.  ஃப்ரான்ஸிஸ் கிருபா வலிப்பு நோய் வந்து உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த ஒருவரைக் காப்பாற்றப் போன போது பைத்தியத்தைக் கொலை செய்த பைத்தியம் என்று செய்தி போட்டன தினசரிகள்.  எழுத்தாளன் என்றால் என்ன புடுங்கியா?  கொலை செய்தவனைத் தூக்கில் போடு என்று எழுதினான் இன்னொரு எழுத்தாளன். இப்படி அத்தனை எழுத்தாளன்களும் பைத்தியமாகவும், கொலைகாரர்களாகவும், தற்கொலை செய்து கொண்டவர்களாகவும், குடி அடிமைகளாகவும் மாறியதற்குக் காரணம் என்ன?  இளம் கவிஞர்களும் இளம் எழுத்தாளர்களும் குடி அடிமைகளாக மாறிச் செத்துக் கொண்டிருப்பதற்குக் காரணம் என்ன?  க.சீ. சிவகுமார் எப்படிச் செத்தான்?  சாகிற வயதா அது?  காலையிலேயே குடித்து விட்டு மாடியிலிருந்து விழுந்து செத்தான். 

கோபி கிருஷ்ணன் அப்படிச் சாகவில்லை.  அவருக்குத் தேவை தினம் ஐந்து ரூபாய்க்கு சிகரெட்.  பத்து ரூபாய்க்குத் தேநீர்.  மாதம் ஒரு ஐநூறு ரூபாய்க்கு ஏற்பாடு செய்யுங்கள் என்றார் என்னிடம்.  அவர் எழுதிய கதைகளைத் தூக்கிக் கொண்டு ஒவ்வொரு பத்திரிகை அலுவலமாக அலைந்தேன்.  அலைந்து கொண்டிருக்கும் போதே அவரது சாவுச் செய்தி வந்தது.  அஞ்சு ரூபாய் வேண்டும்; கொடுத்தனுப்புங்கள் என்று சீட்டு எழுதி அனுப்பினார் பாரதி.  புதுச்சேரியில் இருக்கும் போது.  பணமும் வரவில்லை.  பதிலும் வரவில்லை.  மாலையில் வாக்கிங் போகும் போது அந்த நபர் பாரதியின் எதிரே சாலையில் வருகிறார்.  பணம் கொடுத்தால் உங்கள் கவித்துவ நெருப்பு அணைந்து விடும் என்று கருதித்தான் பணம் அனுப்பவில்லை என்கிறார் தனவந்தர்.  ஒரு மாதம் கூட வீட்டு வாடகை ஒழுங்காகக் கொடுத்ததில்லை.  ஆனால் அதே காலகட்டத்தில் தாகூர் ஒரு சுல்தானைப் போல, ஒரு மஹாராஜாவைப் போல் வாழ்ந்தார்.  பரம்பரைப் பணக்காரர்தான் என்றாலும், அவர் சென்னை மாகாணத்துக்கு வந்த போது இங்கே உள்ள பிரபலமான பத்து கல்லூரிகளில் உரையாற்றினார்.  அந்தப் பேச்சைக் கேட்க நூற்றுக் கணக்கில் கட்டணம்.  அப்போது பாரதி பிச்சை எடுத்துக் கொண்டிருந்தார்.  பிச்சையும் கிடைத்தபாடில்லை.  புதுமைப்பித்தனும், தி.ஜ. ரங்கநாதனும் பட்ட கஷ்டத்தை எழுதினால் இந்த பதில் ஆயிரம் பக்கம் தாண்டும்.    

காந்தி தாகூரை குருதேவ் என்று அழைத்தார்.  ஆனால் ராஜாஜி இங்கே புதுமைப்பித்தன் எப்படி கதை எழுத வேண்டும் என்று சிறுகதையின் திருமூலர் என்று சொல்லப்பட்ட புதுமைப்பித்தனுக்கே  பாடம் எடுத்துக் கொண்டிருந்தார்.  இங்கே உள்ள மூடர்கள் எழுத்தாளனைப் பிச்சைக்காரனைப் போல் பார்க்கிறார்கள்.  எழுத்தாளனைப் பார்த்து யார்ரா நீ என்று கேட்கிறார்கள்.  இந்தத் திமிரை இந்த மூடர்களுக்கு யார் கொடுத்தது என்று யோசித்தீர்களா அய்யனார்?  நீங்கள் சொல்லும் வெகுஜன இதழ்களும், சமூகம் இந்த மடையர்களுக்குக் கொடுக்கும் intellectual அங்கீகாரமும்தான் இந்த அவலத்துக்குக் காரணம்.  ஒரு இலக்கிய மேடையில் வைத்து ரஜினிகாந்த்தோ உலக நாயகனோ எனக்கு இலக்கியப் பாடம் எடுத்தாலும் ஆச்சரியம் இல்லை.  ஏனென்றால், அவர்களிடம் பணம் இருக்கிறது.  அந்தஸ்து இருக்கிறது.  அதிகாரம் இருக்கிறது.  நானோ வாசகர்களிடம் பணம் கேட்டு வாழும் ஒரு எழுத்தாளன். 

ஜெயகாந்தனின் இடத்தில் இன்று வைரமுத்து இருக்கிறார்.  டாக்டர் அயெந்தேவின் நெருங்கிய கூட்டாளி பாப்லோ நெரூதா.  ஃபிதல் காஸ்த்ரோவின் நெருங்கிய கூட்டாளி கார்ஸியா மார்க்கேஸ்.  நிகானோர் பார்ராவைப் பார்க்க – அவருடைய தேதி கேட்டு – தென்னமெரிக்க அதிபர் பலர் மாதக் கணக்கில் காத்திருந்தார்கள்.  எழுத்தாளன் பிச்சை எடுத்துக் கொண்டிருக்கிறான்.  வணிக எழுத்தாளன் தந்தக் கோபுரத்தில் அமர்ந்திருக்கிறான்.  வைரமுத்துவின் பிறந்த நாளின் போது ஒரு இலக்கியப் பரிசு அளிக்கப்படுகிறது.  முன்பு அது ஐம்பதாயிரமோ என்னமோ இருந்ததாக ஞாபகம்.  அதை வாங்கினார் கலாப்ரியா.  என்ன செய்வது, அதுதான் தமிழ் எழுத்தாளனின் தலையெழுத்து. 

மீண்டும் மெடியாவுக்கு வருகிறேன்.  யூரிபிடஸின் அந்த நாடகத்தை அடிப்படையாகக் கொண்டு கிரேக்க இயக்குனர் Jules Dassin 1978-இல் A Dream of Passion என்ற படத்தை இயக்கியிருக்கிறார்.  பெற்றோரையும் உற்றார் உறவினரையும் தேசத்தையும் மொழியையும் தன் காதலன் ஜேஸனுக்காக முற்றாய்த் துறந்து விட்டு அவனுடைய தேசத்துக்கு வந்த மெடியாவுக்கு அவன் துரோகம் இழைக்கிறான்.  இரண்டு குழந்தைகளுக்குப் பிறகு அந்நாட்டு இளவரசியை மணக்கத் திட்டமிடும் அவனை அவள் தன் இரண்டு குழந்தைகளைக் கொல்வதன் மூலம் பழி தீர்க்கிறாள்.  எத்தனையோ நூற்றாண்டுகளாய் ஒடுக்கப்படடு வந்த பெண்ணின் துயரத்தை அவளது கதறலும் கண்ணீரும் குறியீடாகக் கொண்டது.   யூரிபிடஸ் ஒரு பெண்ணின் கதையையோ ஒரு காலகட்டத்தின் கதையையோ அந்த நாடகத்தில் எழுதவில்லை.  

நான் நேற்று எழுதிய வார்த்தைகளையெல்லாம் என்னையே மெடியாவாக நினைத்துக் கொண்டே எழுதினேன்.  சமூகத்தால் புறக்கணிக்கப்பட்ட எழுத்தாளன்.  மெடியா தன் குழந்தைகளைக் கொன்றாள்.  நாம் நம்மையே கொஞ்சம் கொஞ்சமாகக் கொன்று கொண்டிருக்கிறோம்.  அப்படி செத்துப் போன நம் சகாக்களின் நினைவாக நான் உகுத்த கண்ணீரையே நேற்று உங்களுக்கு வாசிக்கக் கொடுத்தேன்.   

அசோகமித்திரனின் கடைசிக் காலத்தில் அவரைச் சந்திக்க மாதம் ஒருமுறை போவேன்.  அழகிய சிங்கரோடு.  தனியாகப் போனால் பதற்றமாகி விடுவார்.  நாங்கள் ஒவ்வொரு முறை அவரைப் பார்க்கப் போகும் போதும் ஒரே ஒரு மிளகாய் பஜ்ஜி வாங்கிக் கொண்டு போவோம்.  மருத்துவமனைகளில் தரப்படும் அறைகளைப் போன்ற ஒரு அறை.  அவர் மகன் வீட்டில் தங்கியிருந்தார்.  மகனும் ஒன்றும் கோடீஸ்வரர் அல்ல.  நடுத்தர வர்க்கம்.  அந்த வீட்டில் அசோகமித்திரனுக்கு அவ்வளவு கிடைத்ததே அதிகம்.  வயது ஆகி விட்டது 83.  முதுமையும் தள்ளாமையும் அவர் உடலை மிகவும் தளரச் செய்திருந்தது.  தன் நண்பர் ஒருவரிடம் சொன்னாராம், சாரு வரும் போதெல்லாம் பயமாக இருக்கிறது.  குண்டு கிண்டு வைச்சிடுவாரோன்னு.  தன் மீது செலுத்தப்படும் அன்பைக் கூட புரிந்து கொள்ள முடியாத அளவுக்கு எழுத்தாளர்களை ஆக்கியிருந்தது தமிழ்ச் சமூகம்.  அவரும் வேறு என்ன செய்வார்?  வாழ்நாள் பூராவும் ஒரு மனுஷன் கசப்பையே பார்த்துக் கொண்டிருந்தால் எப்படிப் பேசுவான்?  ஏன் அவருடைய ஆரோக்கியம் அப்படிக் கெட்டுப் போயிருந்தது?  ஏன் எப்போதும் ஒரு கைப்பு உணர்வு?  “ஆமாம், சாப்பிட வேண்டிய வயதில் சோறு கிடைக்கவில்லை…”  இவ்வளவுதான் அவர் சொன்னது.  மீதியையெல்லாம் அவர் கரைந்த நிழல்கள் நாவலில் எழுதியிருக்கிறார்.