சாரு – அய்யனார் உரையாடல் – அடுத்த பகுதி

”இலக்கியவாதிகள் தங்கள் இலக்கியப் பயணத்தில் திடார் திடாரென அரங்கத்துக்கு வருவதும், உறக்கத்தில் ஆழ்வதும் புதிய விஷயமல்ல. ஆனால் செல்லப்பா தன்னுடைய கடைசி மூன்று ஆண்டுகளில் (1995-1998) காட்டிய வேகமும் வெளிப்படுத்திய சக்தியும் ஆச்சரியப்படக்கூடியவை. இந்த நாட்களில் பல ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்டு கையெழுத்து வடிவில் நைந்து போயிருந்த அவருடைய என் சிறுகதை பாணி (250 பக்கம்) சுதந்திர தாகம் (1800 பக்கம்) ராமையாவின் கதைப்பாணி (368 பக்கம்) ஆகிய பழைய பிரதிகள் புத்தக வடிவம் பெற்றன. இவையெல்லாவற்றையும் அவரே பிழைதிருத்தம் பார்த்து சரி செய்திருக்கிறார். சுதந்திர தாகத்தின் பல பக்கங்களை மீண்டும் திருத்தி எழுதியிருக்கிறார். தூக்கம் வராதபோது இரவு ஒரு மணிக்குக்கூட எழுந்து புரூப்களைத் திருத்தியிருக்கிறார். அவருடைய வேகத்துக்கு ஈடு கொடுக்காத அச்சகங்களை உறவு முறியும் அளவுக்குக் கடுமையாக சாடியிருக்கிறார். புத்தகங்கள் விஷயத்தில் அவர் யாரிடமும் தயவு காட்டியதில்லை. தான் படித்த புத்தகங்கள் குறித்தும், பழகிய மனிதர்கள் குறித்தும் அவருடைய நினைவுகள் மிகமிகத் துல்லியமானவை.செய்யுளியல் என்கிற கவிதையில் உபயோகப்படுகிற பல குறியீட்டு வார்த்தைகளின் விளக்கமாக ஒரு புதிய அகராதியை கிட்டத்தட்ட 10 நாட்களில் எழுதி முடித்தார். இலக்கிய விமர்சனம் அதன் சரியான பரிமாணத்தில் இன்று செயல்படவில்லை என்ற தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தும் விதமாக நம் விமர்சனப் பாதை என்ற் நீண்ட கட்டுரையை (விருட்சம் 36) சமீபத்தில் எழுதினார்.

என் சிறுகதைப் பாணியிலிருந்து துவங்கி புத்தகங்கள் அச்சாக்கம் பெறுவதும் அடுத்த புத்தகத்தைப் பற்றி சிந்திப்பதுமாகவே அவர் இயக்கம் கொண்டிருந்தார். அதுவே அவருடைய வாழ்வை நீட்டித்தது. பலமுறை அவரை மரணம் நெருங்கி நெருங்கி விலகியபோது புத்தகம் பதிப்பாவதைப் பற்றிய செய்தி அவரை மீண்டும் மீண்டும் உயிர்ப்பிக்கும். அவருடைய சுதந்திர தாகம் நாவல் நூலகங்களில் ஏற்றுக்கொள்ளப்பட்டால் அந்தப் பணத்தில் அவருடைய செய்யுளியல், எழுத்துக் களம், விமர்சனத் தேட்டம், தமிழ்ப் படைப்பாளிகளின் விமர்சனங்களுக்கு பதில்கள் ஆகிய பிரதிகளை பதிப்பிக்கத் திட்டமிட்டிருந்தோம். சாதாரண நாட்களில் நூலக ஆர்டர்களை அவர் நம்பியவர் அல்ல. தானே புத்தகங்களை சுமந்துகொண்டு கால்நடையாக அலைந்தவர்தான். ஆனால் இயலாத சூழலில், சுதந்திர தாகம் நாவல் நூலகங்களில் ஏற்றுக்கொள்ளப்படாமல் சிறிய வீட்டில் வீடு முழுவதும் புத்தகங்கள் நிறைந்திருந்த காட்சி செல்லப்பாவுக்கு பெரிய மனத்தளர்ச்சியை உண்டாக்கியது. மரணத்திலிருந்து மீள அவருக்கு வழி இல்லாது போயிற்று. உண்மையான இலக்கியவாதிகளை அடையாளம் கண்டு கொள்ளத் தெரியாமல் தமிழ்வாழ்க என்று முழங்கிக்கொண்டிருக்கும் அரசாங்கம் நம்முடையது. புத்தகங்களின் மதிப்பு தெரியாத ஆட்கள் நூலகங்களுக்குப் பொறுப்பாளர்களாக இருப்பதும் இங்கேதான் இயலும்.

செல்லப்பாவின் பத்திரிகையான எழுத்து இயங்கிய காலத்திலிருந்து வெளியே வரவே இல்லை. ஆனால் அதுவே அவருக்குப் போதுமானதாக இருந்தது. அவரை இந்தக் காலத்துக்குள் இழுக்க முடியவில்லை. பல சந்தர்ப்பங்களில் அது தேவையற்றது போலும் தோன்றியது. இனி அந்தக் காலக் குழப்பத்துக்கு இடமில்லை. செல்லப்பா நீண்ட தமிழ் இலக்கியத்தின் ஒரு பகுதியாகி விட்டார். நிறைவான இலக்கிய வாழ்க்கை அவருடையது.”

மேலே கண்ட பத்தி வெளி ரங்கராஜன் எழுதியது. 

எத்தனையோ சிறுபத்திரிகைகளைப் போல் எழுத்துவும் ஒரு சிறுபத்திரிகை அல்ல; அது ஓர் இயக்கம். அந்த இயக்கத்தின் ஒரே தலைவனும் போராளியும் செல்லப்பாதான். இதை சரியாகப் புரிந்து கொள்ள வேண்டுமானால் உலகில் உள்ள மற்ற மொழிகளுக்கும் தமிழ்க் கலாச்சார சூழலுக்கும் உள்ள அடிப்படை வித்தியாசத்தைப் புரிந்துகொள்ள வேண்டும். எல்லா மொழிகளிலும் Pulp writing எழுதப்பட்டு வாசிக்கப்படுகிறது. நான் அதற்கு எதிர்ப்பாளன் அல்லன். ஆனால் ஓர் ஆங்கில வாசகருக்கு சிட்னி ஷெல்டன், ஸோஃபி கின்ஸெல்லா போன்றவர்களுக்கும் கார்ஸியா மார்க்கேஸுக்குமான வித்தியாசம் தெரியும். ஆனால் தமிழில் அசோகமித்திரனை எழுத்தாளர் என்றால் ரமணி சந்திரனும் எழுத்தாளர்தான். இரண்டு பேருக்குமான வித்தியாசம் தமிழ்ச் சூழலில் இல்லை.  முன்பு ஒரு எழுத்தாளர் பிரபலமாக இருந்தார்.  ஏழு வாரப் பத்திரிகைகளில் தொடர்கதைகள் எழுதிக்கொண்டிருந்தார். ஆன்மீகமும் எழுதுவார், செக்ஸும் எழுதுவார். பத்திரிகைகளிலிருந்து உதவி ஆசிரியர்கள் போய் அவர் வீட்டில் நிற்பார்கள். எழுத்தாளர் ஓர் உதவி ஆசிரியரைக் கூப்பிட்டு ‘போன வாரக் கதை என்ன, எங்கே முடித்தேன்?’ என்று கேட்பார். அவர் சொன்னதும் அந்த வாரக் கதையை டிக்டேட் செய்வார். அடுத்து, இரண்டாவது பத்திரிகையின் உதவி ஆசிரியரை அழைத்து அதே கேள்வி. அதே பாணியில் அடுத்த அத்தியாயம். அவர் ஏழு பத்திரிகைகளில் எழுதிக் கொண்டிருந்தபோது அவர் பெயரைத் தெரியாதவர் கிடையாது. இப்போது அவர் பெயரை எல்லோரும் மறந்து விட்டார்கள். ஆனாலும் தமிழ்ச் சூழலில் ரமணி சந்திரனும் ஒன்றுதான்; அசோகமித்திரனும் ஒன்றுதான். இதைத்தான் தன் வாழ்நாள் பூராவும் எதிர்த்தார் செல்லப்பா. ‘உங்களையெல்லாம் நூறு பேர் தானே படிக்கிறார்கள்; எங்களை லட்சம் பேர் படிக்கிறார்கள்’ என்று சொல்லியே செல்லப்பாவை எதிர்த்தது பாமர ரசனைக் கூட்டம். ஆனால் செல்லப்பா மனம் தளராமல் எழுத்து பத்திரிகையை நடத்தி தமிழ் இலக்கியத்தில் பாரதி துவங்கி வைத்த நவீனத்துவ கால கட்டத்தை மேலும் பல படிகள் முன்நகர்த்தினார்.  இன்றைய தமிழின் சமகால இலக்கியச் செழுமைக்கு நாம் நன்றிக்கடன் பட்டிருக்கிறோம் என்றால் அதில் முதலில் வருபவர் சி.சு. செல்லப்பாதான்.  அவர் நடத்திய எழுத்து பத்திரிகைதான் தமிழ் நவீனத்துவத்தின் முக்கியமான தடம் என்று சொல்லலாம்.   

அதன் பொருட்டு இரண்டு தடைகளை ஒற்றை ஆளாக நின்று எதிர்க்க வேண்டியிருந்தது செல்லப்பாவுக்கு.  ஒன்று, வெகுஜன எழுத்து ரசனை.  இரண்டாவது, திராவிட இயக்கம் மற்றும் தமிழாசிரியர் கூட்டம். 

இப்படிப்பட்ட சூழலில் கல்கி போன்ற மாபெரும் வாசகர் பரப்பைக் கொண்ட எழுத்தாளர்களை எதிர்த்து தன் மனைவியின் நகைகளை அடகு வைத்த காசில் ஐநூறு பிரதிகளுடன் ஒரு பத்திரிகையை அச்சடித்து வெளியிட்டு தமிழின் வெகுஜன கலாச்சாரத்தை ஒற்றை ஆளாக நின்று எதிர்த்திருக்கிறார் என்றால் அது எப்பேர்ப்பட்ட விஷயம்?

எழுத்து தொடங்கியபோது பல லட்சங்கள் என வாசகர்களைக் கொண்டிருந்த பத்திரிகைகளுக்கு எதிரான ஒரு குரல், ‘எழுத்து 2000 பிரதிகளுக்கு மேல் அச்சிடப்படமாட்டாது’ என்று பிரகடனப் படுத்திக்கொண்டு வந்த முதல் இதழே 700 பேருக்கு மேல் சென்றடையவில்லை. 104 இதழ்களோ என்னவோ வந்த எழுத்துவின் கடைசி இதழ் 120 பேருக்கு மேல் சென்றடையவில்லை. ஆனால் அதற்குள் அது ஒரு புத்தம் புதிய விமர்சன மரபை தமிழ் மண்ணில் ஸ்தாபித்துவிட்டது. தமிழ்க்கவிதையிலும் ஒரு புதிய மரபை ஸ்தாபித்தது. சிறு பத்திரிகை என்ற மரபையும் ஸ்தாபித்தது.

செல்லப்பாவின் முயற்சியைக் கேலி செய்தவர்களுக்கும் எதிர்த்தவர்களுக்கும் அதிகார பலம் இருந்தது. அவர்கள் பேராசிரியர்களாக இருந்தார்கள்.

‘அவர்கள் மாத்திரமல்ல, சி.சு. செல்லப்பாவின் மணிக்கொடிக் கால சினேகிதரான சிட்டி கூட கேலி செய்தார். செல்லப்பா தனக்கு வழிகாட்டியாகக் கொண்டாடிய பி.எஸ் ராமையா கேலி செய்தார். இருப்பினும் செல்லப்பாவின் துணை நின்று பலம் அளித்தது அவரது நம்பிக்கையும் பிடிவாதமும். ஆறு மாத காலம் அவருடன் துணை நின்ற மணிக்கொடி அன்பர்கள் எல்லாம் ஒதுங்கிவிட்ட பிறகு செல்லப்பா தனித்துவிடப்பட்ட போதிலும் அவருக்கு நம்பிக்கையும் மன உறுதியும் தந்தது, சிவராமு, ந.முத்துசாமி, கி.அ.சச்சிதானந்தம், நகுலன், பசுவய்யா, தி.சொ.வேணுகோபாலன், எஸ் வைதீஸ்வரன், இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். ஒரு நீண்ட அணிவகுப்பே திருவல்லிக்கேணி 19-A பிள்ளையார் கோயில் தெரு, கதவைத் திறந்து உள்ளே நுழைந்தது. அத்தோடு, தமிழ்ப் பண்டிதர் உலகிலிருந்தும் சி. கனகசபாபதி, தொடர்ந்து புதுக்கவிதையின் தோற்றத்தையும் அதன் வளர்ச்சியையும் பற்றி, சங்கப் பாடல்களின் பின்னணியில் விரிவாக எழுதத் தொடங்கினார். அவர் காரணமாக மதுரை பல்கலைக் கழகத்தில் புதுக் கவிதைக்குத் தமிழ்ப் புலவர் உலக அங்கீகாரமும் கிடைத்தது.’

‘ஒரு பல்கலைக்கழக பேராசிரியர், நாவலாசிரியர், சிறுகதைக்காரர் தில்லி எழுத்தாளர் கூட்டத்தில், ‘ஆசிரியப்பா, கலிப்பா போல இப்பொது ஒரு புது பா வகை தோன்றியுள்ளது. அது செல்லப்பா’ என்றார். அவர் முகத்தில் ஒரு புன்னகை தவழ்ந்தது. அவர் கூட்டத்துக்கு தலைமை வகித்தவர்.’

இப்போது உங்களுக்குப் புரிந்திருக்கும், தமிழ்நாட்டைப் பொறுத்தவரை வெகுஜன கலாச்சாரம்தான் பொதுவான கலாச்சார சீரழிவுக்குக் காரணம்.  கேரளமும் வங்காளமும் கன்னடமும் இலக்கிய ரீதியாக உலக அரங்கில் பெருமையுடன் தங்களை முன்னிறுத்தும் போது அவர்களையெல்லாம் விடப் பல மடங்கு சாதனையாளர்களைக் கொண்ட தமிழ் விலாசமே இல்லாமல் கிடக்கிறது.  உலக இலக்கிய அரங்குகளிலும் இன்னமும் சங்க இலக்கியத்தையே வைத்து பஜனை செய்து கொண்டிருக்கிறார்கள்.   உலகமெங்கும் உள்ள தமிழ்ச் சங்கங்களில் நடந்து கொண்டிருக்கும் காரியங்களைப் பார்த்தாலே தமிழ் எங்கே இருக்கிறது என்பதைப் புரிந்து கொண்டு விடலாம்.  இதையெல்லாம் பற்றித் தொடர்ந்து எழுதிக் கொண்டேதான் இருக்கிறேன்.  எனவே பிற மொழிகளில், பிற சமூகங்களில் உள்ள வெகுஜன கலாச்சாரத்துக்கும் இலக்கியத்துக்குமான அடையாளங்களையும் சூழலையும் தமிழுக்குப் பொருத்திப் பார்க்க முடியாது.  ஒரு இலக்கிய விழாவில் என்னோடு சில வணிக எழுத்தாளர்கள் அமர்ந்திருந்ததைப் பார்த்தவுடனேயே என்னுடைய நெருங்கிய நண்பர்கள் விழாவைப் புறக்கணித்து வெளியேறி விட்டார்கள்.  என்னுடைய நூலை அவர்களுக்குக் கொடுக்கலாம் என்று அழைத்த போது அவர்களைக் காண முடியவில்லை.  அப்போது அது பற்றிக் கோபமடைந்தேன்.  ஆனால் அவர்கள் வெளியேறியதற்குப் பின்னால் இவ்வளவு பெரிய வரலாற்றுப் பின்னணி இருக்கிறது. 

ஆமாம் அய்யனார், நீங்கள் சொல்வது போல் இலக்கியத்தில் பல சோடைகள் சொத்தைகள் போலிகள் எல்லாம் இருக்கத்தான் செய்யும்.  உங்கள் வார்த்தைகளை மேற்கோள் காட்டுகிறேன்.   

“இலக்கிய எழுத்து என ஒரு தரப்பால் முன் வைக்கப்படும் அல்லது வியந்தோந்தப்படும் பல படைப்புகள் என் வாசிப்பில் மலினமானவை. வெறும் ஜிகினா பூசியவை. அந்த படைப்புகளில் இருக்கும் பதினைந்து சொற்களைக் களைந்து விட்டால் வணிக இலக்கியத்தில் வைத்துப் பேசக்கூடத் தகுதி இல்லாதவை. தமிழ்ச் சூழலில், குறிப்பாய் தமிழின் தீவிர இலக்கியச் சூழலில் நிலவும் சாதிய மற்றும் குழு மனப்பான்மை அடிப்படையில்தான் இந்தப் படைப்புகள் என்று சொல்லப்படும் அபத்தங்கள் முன் நிறுத்தப்படுகின்றன. மாறாய் வணிக இலக்கியத்திற்கு இந்தச் சிக்கல் கிடையாது. நேரம் போக வேண்டும் என்பதைத் தாண்டி அவற்றிற்குப் பெரிய கடமைகள் எதுவும் இல்லை. எனவே சில வணிக இலக்கியங்கள் எனச் சொல்லப்படும் ஆக்கங்கள் அதன் சுதந்திரத் தன்மையால் அசல் படைப்புகளாக மிளிர்கின்றன.”

நீங்கள் என்னை கோபித்துக் கொள்ளக் கூடாது.  இதை நான் ஸ்டாக்ஹோம் சிண்ட்ரம் என்றுதான் குறிப்பிடுவேன் அய்யனார்.  நீயும் நானும் ஒன்னு, நீயும் நானும் ஒன்னு என்று இருபது முப்பது ஆண்டுகளாக வணிக எழுத்தாளர்களும் சமூகமும் நம்மிடம் சொல்லிக் கொண்டே இருந்தால் நானும் அதை நம்ப ஆரம்பித்து விடுவேன் தானே?  இந்த ஸிண்டமிலிருந்து தப்புவதற்காகத்தான் நான் இப்போதெல்லாம் ’நான் கடவுள்’ என்று சொல்லிக் கொள்ள ஆரம்பித்திருக்கிறேன்.  அந்த இடத்துக்குப் போவதற்கு முன்னால் ஒன்று:  ஆம்.  நமக்குள் ஆயிரம் சண்டைகள் இருக்கும்.  போலி, வெத்துவேட்டு, அடிதடி வெட்டுக் குத்து எல்லாம் இருக்கும்.  கொலை தற்கொலை கூட இருக்கும்.  ஆனால் இவர்கள் அத்தனை பேரும் இலக்கியவாதிகள்.  இவர்கள் யாரும் பணத்துக்கு சோரம் போக மாட்டார்கள்.  லௌகீக வாழ்வின் எந்த நிழலும் இவர்கள் மீது படிய வாய்ப்பில்லை.  உங்கள் ஊரில் திரியும் சந்நியாசிகளைப் போன்றவர்கள் இவர்கள்.  கமலுக்கும் ரஜினிக்கும் முன்னே ஈ என்று இளித்துக் கொண்டு நின்றாலும் கூட இவர்கள் துறவிகளே!  ஏனென்றால், அந்த இளிப்பும் உடல் நெளிப்பும் ஒரு கெரில்லா தந்திரம்.   அல்லாமல் கோபி கிருஷ்ணன் மாதிரி அற்பாயுளில் சாகச் சொல்கிறீர்களா?  ம்ஹும்.  எப்படியாவது எழுதியாக வேண்டும்.  நான் அப்படிச் செய்ய மாட்டேன் என்பது வேறு விஷயம்.  ஆனால் நானும் கூட இருபது வருஷம் அரசு அலுவலகத்தில் மாமா வேலை மாதிரியான ஒரு வேலைதானே பார்க்க வேண்டியிருந்தது?  அதிகாரிகளின் உள்ளாடைகளைத் துவைக்கவில்லை.  அதைத் தவிர வேறு எல்லா முறைவாசலையும் செய்திருக்கிறேன்.  அதை சில எழுத்தாளர்கள் பொதுவெளியில் எல்லோருக்கும் முன்னே நடிகர்களுக்கும் இயக்குனர்களுக்கும் செய்கிறார்கள்.  எப்படியிருந்தாலும் இது இலக்கியம்.  அது பொழுதுபோக்குக் கச்சடா.  இது வேறு; அது வேறு.  உதாரணமாக, பன்றிகளில் நல்ல பன்றி இருக்கும்.  கெட்ட பன்றி இருக்கும்.  பரத்தை பன்றி இருக்கும்.  ரவுடி பன்றி இருக்கும்.  ஞானி பன்றி இருக்கும்.  ஆனால் பன்றி பன்றிதானே?  இலக்கியவாதிகளிலும் அதேபோல் நல்லவன், கெட்டவன், போலி, ரவுடி, கொலைகாரன், ஞானி எல்லோரும்தான் இருப்பான்.  ஆனால் பன்றி பன்றிதான்.  இலக்கியவாதி இலக்கியவாதிதான்.

இன்னொரு உதாரணம் தருகிறேன்.  லெஸ்பியன் மற்றும் கே வாழ்முறை என்பது ஆண் பெண் உறவுக்கு மாற்றான ஒரு மகத்தான வாழ்முறை என்று நம்புவது அசட்டுத்தனம் இல்லையா?  ஆண் பெண் வாழ்வியலுக்கு அது ஒரு மாற்று.  அது ஒரு மனநோய் அல்ல.  அவ்வளவுதான்.  மற்றபடி, ஆண் பெண் தாம்பத்தியத்தில் என்னென்ன விதமான பிரச்சினைகள் உண்டோ அத்தனை பிரச்சினையும் லெஸ்பியன் – கே வாழ்வியலிலும் உண்டு.  கொலை உண்டு. விவாகரத்து உண்டு.  அடிதடி உண்டு.  எல்லாம் உண்டு.  அதேபோல், இலக்கியத்திலும் எல்லா பிரச்சினையும் உண்டு.  ஆனால் அதில் இயங்குபவர்கள் ஒரு மொழியின், கலாச்சாரத்தின், பண்பாட்டின், தேசத்தின் அடையாளமாக விளங்குகிறார்கள்.  தமிழ் என்ற மொழி – நமக்குத் தெரிந்து – ஒரு ஐயாயிரம் ஆண்டுகளாக தன் இலக்கியத்தை எடுத்துக் கொண்டு இன்று புயலிலே ஒரு தோணியாகவும் ஜீவனாம்சமாகவும் இடைவெளியாகவும் மோகமுள்ளாகவும் பதினெட்டாவது அட்சக் கோடாகவும் நின்றுகொண்டு இருக்கிறது என்றால் அதற்குக் காரணம் இந்த இலக்கியக் கோட்டிப்பயல்கள்தான்.  மகாபாரதத்தையும் வேதத்தையும் தொல்காப்பியத்துக்கும் மூலமாக இருந்த ஆதிவார்த்தைகளையும் உருவாக்கிய ஆதிகவிகளின் வாரிசுகளாகிய நம் நிழலைக் கூட  இந்த வணிக எழுத்தாளர்களும் இவர்கள் முன்வைக்கும் மதிப்பீடுகளும் நெருங்க முடியாது. 

அசோகமித்திரனின் மரணத்துக்கு – அவர் உடல் சிதையில் வைக்கப்பட்ட போது அங்கே 25 பேர் நின்று கொண்டிருந்தோம்.  யார் யார் எத்தனை பேர் என்று எண்ணினேன்.  இதற்கு அசோகமித்திரனின் குடும்பத்தாரும் காரணமாக இருந்தனர்.  அவர்களைப் பொறுத்தவரை அசோகமித்திரன் ஒரு அப்பா.  அவ்வளவுதான்.  மகன் ஊரிலிருந்து வந்ததும் பிரேதத்தை மின்மயான மேடைக்கு எடுத்து வந்து எரியூட்டி விட்டனர்.  அசோகமித்திரனின் வாசகர்கள் பலர் வெளியூரிலிருந்து வர வேண்டியிருக்கிறது என்று சொல்லியும் அ.மி. குடும்பத்தினர் கேட்கவில்லை.  பிராமண சமூகத்தில் பிணத்தை ரொம்ப நேரம் கிடத்தியிருக்கக் கூடாது.  இதெல்லாம் ஒரு தேசிய விழா இல்லையா என்று கேட்கிறேன்.  யு.ஆர். அனந்தமூர்த்தி இறந்த போது கர்னாடகா ஒரு வாரம் அதை அந்த மாநில துக்கமாக அறிவித்து அரசே அதை முன்னின்று நடத்தியதே?  ஒருநாள் அரசு விடுமுறை அறிவித்ததே?  தேசியக் கொடி அரைக் கம்பத்தில் பறந்ததே?  பிரேதம் எரியூட்டப்பட்ட போது பீரங்கிகள் முழங்கியதே? 

தமிழ்நாட்டில் எழுத்தாளனுக்கு அடையாளம் கிடையாது.  அந்த அடையாளத்தை நான் என் உயிர்மூச்சின் ஒவ்வொரு கணத்திலும் உருவாக்கிக் கொண்டே போகிறேன்.  சமீபத்தில் நடந்த ஒரு சம்பவத்தை உங்களிடம் சொல்ல வேண்டும்.   

சில மாதங்களுக்கு முன்னால் என் ரத்த அழுத்தம் 120 – 80 இருந்ததால் அதற்கான மாத்திரைகளை நிறுத்தி விடச் சொன்னார் மருத்துவர்.  நானும் நிறுத்தி விட்டேன்.  சில தினங்களுக்கு முன்பு ராகவன் ரத்த அழுத்தம் சோதித்த போது நானும் பார்த்தேன்.  150 – 90 இருந்தது.   மறுநாள் பார்த்த போது 162 – 92. ஏனென்று யோசித்தேன்.  கடந்த சில இரவுகளாக இரவு பனிரண்டரை வரை எழுதிக் கொண்டிருந்தேன்.  அதனால் உறக்கம் நன்றாக இல்லை.  எனக்குப் பத்தரைக்குள் படுக்க வேண்டும்.  ஆழ்ந்த உறக்கம் வரும்.  காலை நாலு மணிக்கு எழுந்து விடுவேன்.  பனிரண்டுக்கு மேல் படுத்தால் உறக்கமும் நன்றாக அமையாது.  எழுந்து கொள்ளவும் ஆறரை ஆகி விடும்.  ரத்த அழுத்த உயர்வுக்கு இது ஒரு காரணமாக இருக்கலாம்.  இன்னொரு காரணம், ஒரு பரிச்சயக்காரர் பற்றி ஆவேசமாக யோசித்தேன்.  அப்படி யோசித்ததாலேயே தியானமும் சரியாகச் செய்ய முடியவில்லை. 

ஒரு நண்பர் ஒரு பிரபலத்தை எனக்கு அறிமுகம் செய்து வைத்தார்.  கை குலுக்க நான் கைகளை நீட்டியபோது பிரபலம் கையை இழுத்துக் கொண்டு வேறு பக்கம் போய் விட்டது.  அறிமுகப்படுத்திய நண்பருக்கு தர்மசங்கடம்.  இப்படிப் பல சந்தர்ப்பங்களில் நடந்திருப்பதால் எனக்கு ஆச்சரியமோ சங்கடமோ இல்லை.  கமலே ஒருமுறை அப்படிச் செய்திருக்கிறார்.  இந்தச் சம்பவத்தில் சம்பந்தப்பட்ட  பிரபலம் ஒரு வக்கீல்.  ஒரு நீதிமன்ற வருகைக்கு 15 லட்சம் வாங்குபவர்.  கை குலுக்க மறுத்த சம்பவத்துக்கு மறுநாள் நாகேஸ்வர ராவ் பூங்காவில் இது பற்றிப் பேசிக் கொண்டிருக்கும் போது ”அடிப்படையில் அவர் நல்லவர்தான்.  ஆனால் உங்களை விட அவர் பெரியவர் என்று நினைக்கிறார்” என்றார் அறிமுகப்படுத்தி முகம் வீங்கிய நண்பர். 

”ஓ, அப்படியா?  தெரியாமல் போயிற்றே?”  என்றேன் நான். 

”தெரிந்திருந்தால்?”

”தெரிந்திருந்தால் நான் அவர் பக்கமே திரும்பியிருக்க மாட்டேன்” என்றேன். 

நண்பரிடம் மேலும் சொன்னேன்.  இப்படிப்பட்டவர்களெல்லாம் என்னிடம் பேச வேண்டுமானால் என் பாதங்களில் விழுந்து நமஸ்கரித்தால்தான் அவர்கள் முகத்தையே பார்ப்பேன்.  பேசுவதற்குத்தான் அது; என்னோடு பழக வேண்டுமானால் என் முன்னே மண்டியிட வேண்டும்.  ஒரு வார்த்தை பேசாமல் மண்டியிட வேண்டும்.  ஏன் மண்டியிட வேண்டும் என்று கேட்டவர்களை விரட்டி விட்டிருக்கிறேன்.  எவ்வளவு நேரம் மண்டியிட வேண்டும் என்று கேட்டவர்களையும் விரட்டி விட்டேன்.  நானாகச் சொல்லும் வரை மண்டியிட்டபடியேதான் இருக்க வேண்டும். 

அராஜகமாக இருக்கிறதே என்றார் நண்பர்.  ”இல்லை, நான் ஒரு ஜென் குரு.  என்னிடம் வருபவர்கள் இந்தச் சோதனையில் தேர்வு பெற்றால்தான் நான் பெற்ற ஞானத்தில் சில துளிகளை அளிப்பேன்” என்றேன்.  நானாகவா அழைக்கிறேன்?  என்னை அணுகினால் இதுதான் சோதனை. ஆனால் இந்தச் சோதனையில் தேர்வு பெற்று விட்டால் நீ என்னை மண்டியிடச் சொன்னால் நான் ஏனென்று கேட்காமல் மண்டியிடுவேன்.  ஏனென்றால், இது ஒரு குடும்பம்.  இங்கே சிறியவன் பெரியவன் என்ற பாகுபாடெல்லாம் கிடையாது.  சில உதாரணங்கள் தருகிறேன்.  என் கதைகளில் இரண்டு நன்றாக இல்லை என்று காயத்ரி சொன்னதால் அந்த இரண்டு கதைகளையும் முழுமையாக ரத்து செய்து விட்டேன்.  அவளுடைய வயது, அனுபவம் என்ன என்பதெல்லாம் முக்கியமே இல்லை. 

இந்த உரையாடலுக்காக உங்களிடம் என் கேள்விகளை அனுப்பிய போது கேள்விகள் மொக்கையாக இருந்தால் ரத்து செய்து விடலாம் என்றே உங்களிடம் சொன்னேன்.  உங்கள் வயது என்ன, அனுபவம் என்ன என்ற கேள்வியெல்லாம் எனக்குத் தோன்றவே தோன்றாது.  நீங்கள் என் சகா.  அவ்வளவுதான் என் ஞாபகத்தில் இருக்கும். குமுதத்துக்குக் கட்டுரை அனுப்பும் போது கூட ”தேறுமா?” என்றே கேட்பது என் வழக்கம்.  எடிட்டர் அது பற்றி ஆச்சரியப்படும்போது “இன்னமும் தன் முதல் கதையைப் பத்திரிகைக்கு அனுப்பி விட்டு முடிவுக்காகக் காத்திருக்கும் ஒரு 20 வயது இளைஞனின் மனநிலையில்தான் நான் எப்போதுமே இருக்கிறேன்” என்று சொன்னேன்.  ஆனால் ஒரு ஆள், ”என் ஒருநாள் வருகைக்கு 15 லட்சம் வாங்குகிறேன், எனவே நீ என்னை விட மட்டம்” என்று நினைத்தால் நான் என் அடையாள அட்டையை நீட்டுவேன்.  அந்த அடையாள அட்டைதான் மேலே உள்ளது.  என் பூங்கா நண்பருக்கு நான் சமீபத்தில் எழுதி அனுப்பிய மடல் இது:

நண்பரே, நீங்கள் அறிமுகப்படுத்திய ‘ஒரு மணி நேரத்துக்குப் பதினைந்து லட்சம்’ அன்பரிடம் இதைக் கொடுத்து விடுங்கள், முடிந்தால்:

கேட்டுக் கொள் மானிடனே, நான் கூரத்தாழ்வானைப் போல் முக்குறும்பு அறுத்தவன்.   செல்வச் செருக்கு, குலச் செருக்கு, கல்விச் செருக்கு ஆகிய முக்குறும்புகளையும் அறுத்தவர் கூரேசர்.  என்னைப் பொறுத்தவரை பணம் என்பது காகிதம்.  அன்றாட வாழ்வுக்கு அந்தக் காகிதம் தேவைப்படுவதால் அதை நான் கையாள்கிறேன்.  ஆனால் அந்தக் காகிதத்துக்காக நான் இதுவரை எந்த சமரசமும் செய்தவன் இல்லை.  இல்லாவிட்டால் மகாநதிக்கு நான் எழுதிய மதிப்புரையைப் படித்து விட்டு கமல்ஹாசன் எனக்குக் கடிதம் எழுதிய போதே அவரை நான் சந்தித்திருக்கலாம்.  ஆனால் நான் அடுத்து வந்த குருதிப் புனல் படத்தை சாக்கடைப் புனல் என்று கட்டுரை எழுதி அந்தக் கட்டுரையை எந்தப் பத்திரிகையும் பிரசுரிக்காததால் நானே தனிப்புத்தகமாக வெளியிட்டேன்.  எனவே, சமூகத்தினர் மதிக்கும் – கடவுளாக வணங்கும் – பணத்தை நான் மதிப்பதில்லை. 

இந்திராவை ஆசீர்வதிக்கும் புகைப்படம் கிடைக்கவில்லை

அடுத்து வரும் குலச் செருக்கு என்பதுதான் உறவு பந்தம் பாசம் எனும் குடும்பப் பிணைப்பு.  நான் பார்க்கும் ஒவ்வொரு மனிதரும் தன் பிள்ளைகள் மேல் பாசத்தையும் அன்பையும் கொட்டுகிறார்கள்.  தங்கள் பிள்ளைகளுக்காக உயிரையும் கொடுக்கத் திண்ணமாயிருக்கிறார்கள்.  என் நண்பர் சொன்னார், தன் உறவுக்கார பெண்மணி ஒருவர் தன் 32 வயது மகனுக்கு இன்னமும் சோறு ஊட்டுவதாக.  அதுவும் அமெரிக்காவில்.  அதுவும் அந்தப் பையனுக்குத் திருமணம் ஆகி குழந்தையும் இருக்கிறது.  நூற்றுக்குத் தொண்ணூறு பெற்றோர் அப்படித்தான் இருக்கிறார்கள்.  அவர்களின் உயிரே அவர்கள் குழந்தையின் மீதுதான் இருக்கிறது. காரணம், தங்கள் குழந்தைகளை அவர்கள் தங்களின் பிரதிபிம்பமாக, பூமியில் தங்கள் தொடர்பை நிலைநாட்ட வரும் தொடர் நிகழ்வாகப் பார்க்கிறார்கள்.  ராஸ லீலாவில் கோபாலகிருஷ்ணன் என்ற வண்ணமயமான பாத்திரம் வருகிறது.  அவன் ஒரு ஸ்த்ரீலோலன்.  திடீரென்று தன் விளையாட்டுகளை நிறுத்தி விடுகிறான்.  பெருமாள் அவனிடம் ஏன் இப்படி என்று கேட்கும் போது, ”என் மகள் வயதுக்கு வந்து விட்டாள்; இனிமேலும் நான் விளையாட்டுப் பிள்ளையாக இருக்கலாமா?  அவளுடைய எதிர்காலம் பாழாகி விடாதா?” என்று கேட்கிறான்.  இப்படி நூறு பேரை நான் பார்த்திருக்கிறேன். 

ஆனால் நானோ ஊரார் பிள்ளைகளை என் பிள்ளைகளாகக் கருதுபவன்.  என் தந்தை இறந்து விட்ட போது நான் எழுதிக் கொண்டிருக்கும் கட்டுரையை முடித்து விட்டுத்தான் வருவேன்; தாமதமாகி விட்டால் இறுதிச் சடங்குகளை முடித்து விடுங்கள் என்று என் தம்பியிடம் சொன்னவன்.  இங்கே நான் மட்டும் அல்ல; எல்லா எழுத்தாளன்களும் அப்படித்தான் இருக்கிறான்கள்.  அப்படி இருக்கும் போது தன் பிள்ளைப் பாசத்தைக் கூட விட முடியாத நீயும் நானும் ஒன்று என எப்படி நினைத்தாய் மூடனே?  உன்னுடைய மதிப்பீடுகள் அனைத்தையும் காலில் போட்டு மிதித்து எறிபவன் நான்.  அப்படியிருக்க நானும் நீயும் எப்படிச் சமமாக முடியும்?  இந்த லட்சணத்தில் நீ என்னை விடப் பெரிய ஆள் என்று வேறு நினைத்துக் கொண்டிருக்கிறாய்!  மூடனே… இந்திரா காந்தி எப்பேர்ப்பட்ட சர்வாதிகாரியாக இருந்தார்?  அப்பேர்ப்பட்ட இந்திரா தேவ்ரஹா பாபாவின் முன்னே கை கூப்பி நின்ற போது அந்த நிர்வாணப் பக்கிரி தன் பாதங்களை எடுத்து இந்திராவின் தலையில் வைத்து ஆசீர்வாதம் செய்தாரே?  அப்படியென்றால் உன் பணமும் அந்தஸ்தும் எனக்கு என்னவென்று அர்த்தமாகும், சொல் பதரே?  ஒரு மணி நேரத்துக்கு பதினைந்து லட்சம் என்பது உன் அடையாளம் என்றால் என் அடையாளம் உன் தலையில் என் பாதங்களை வைத்து ஆசி வழங்குவதுதான்.  பணத்தால் இது எவ்வளவு பெறும் என்று பணத்தில் நிபுணனான நீயே கணக்குப் போட்டுக் கொள்.”

அய்யனார், திரும்பவும் நம்முடைய விவாதத்துக்கு வருவோம்.  ஒரு இலக்கியப் படைப்பு சொதப்பலாக இருக்கலாம்.  ஒரு வணிக எழுத்து இலக்கியமாகத் தேறலாம்.  இரண்டு நாவல்களைச் சொல்லலாம்.  சுந்தர ராமசாமியின் ஜே.ஜே. சில குறிப்புகள் ஒரு போலியான படைப்பு என்று எழுதினேன்.  அதே சமயம் சுஜாதாவின் கனவுத் தொழிற்சாலை இலக்கியப் படைப்பாகத் தேறக் கூடியது.  ஆக, இந்த இரண்டு எதார்த்தங்களும்தான் அந்த இரண்டு பேரின் இடத்தையும் தீர்மானிக்கிறதா?  சுஜாதா சு.ரா. பற்றி எத்தனையோ கட்டுரைகளில் எழுதியும் எவ்வளவோ பாராட்டியும் சு.ரா. சுஜாதா பற்றி ஒரு வார்த்தை எழுதியதில்லை.  சுஜாதா சு.ரா.வைப் பார்க்க முயற்சித்தும் சு.ரா. அதற்கு எந்த எதிர்வினையும் அளிக்கவில்லை.  சந்திக்கவில்லை.  ஏன் என்றால், இரண்டு பேரும் கொண்டிருந்த மதிப்பீடுகள்.  அகிலனுக்கு ஞானபீடப் பரிசு கிடைத்த போது அகிலன் மலக்கிடங்கு என்று எழுதினார் சு.ரா.  அதனால்தான் சு.ரா. என் ஆசான்.  இன்று நான் இத்தனை பேசுகிறேன் என்றால் அங்கே சு.ரா. என்ற என் ஆசான் தான் நிற்கிறான்.  அசோகமித்திரன் என் ஆசான் அல்ல.  அவன் எனக்குத் தொழில் கற்பித்தவன்.  ஆனால் ஞானத்தை போதித்தவன் சு.ரா.  சு.ரா.வின் ஒரு எழுத்து எனக்குப் பிடிக்காது.  சு.ரா. என் எதிர்நிலையில் இருப்பவர்.  அவர் எழுத்தை நான் ரசித்ததே இல்லை.  சு.ரா.வின் மரணச் செய்தியை தழுதழுத்த குரலில் ஒரு கவிஞர் என்னிடம் போனில் சொன்ன போது அப்படியா சரி என்றேன்.  ஆனால் அசோகமித்திரனின் சாவுக்கு நான் போவேனா என்றே சந்தேகம் இருந்தது.  ஒரு பிணத்தின் மேல் இன்னொரு பிணம் விழுந்து விடுமே என்று சொன்னேன்.  அசோகமித்திரனின் மரணத்தை என்னால் தாங்கிக் கொள்ளவே இயலவில்லை.  ஆனால் அசோகமித்திரனிடம் அகிலன் பற்றிக் கேட்டால் அதுக்கென்னப்பா, அவரும் ஞானபீடம் வாங்கிக்கட்டுமே, நமக்கு என்ன என்பார்.  அவரிடம் அந்த ரௌத்திரம் கிடையாது.  ஆனால் சு.ரா. எனக்கு மதிப்பீடுகளைக் கற்பித்தவர்.  நாமார்க்க்கும் குடியல்லோம்; நமனை அஞ்சோம் என்று அறிவித்த பரம்பரை சு.ரா.  அதனால்தான் அசோகமித்திரனால் என்னைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை.  இந்த சாரு நிவேதிதா எங்க ஆத்துல வெடிகுண்டு வச்சுடுவாரோன்னு பயமா இருக்கு என்று அந்தப் பூஞ்சையான பிராமண மனம் அஞ்சியது.  எஸ். ராமகிருஷ்ணன் சினிமாவில் நுழைந்திருந்த நேரம்.  கோமல் சுவாமிநாதனின் சுப மங்களாவில் ஒரு பேட்டியில் ரஜினி சார் ரஜினி சார் என்றே எஸ்.ரா. குறிப்பிட்டிருந்தார்.  உடனே மிகவும் கோபப்பட்டு நான் ஒரு கடிதம் எழுதினேன்.  நாம் என்ன கார்ல் மார்க்ஸ் சார், ரமணர் சார் என்றா குறிப்பிடுகிறோம் என்று ஒரு நீண்ட கடிதம் எழுதினேன்.  ஆச்சரியகரமாக அதே மாதிரி ஒரு கடிதம் சு.ரா. பெயரில் வந்திருந்தது.  நான் யாரையெல்லாம் குறிப்பிட்டிருந்தேனோ அதே பெயர்களையே சு.ரா.வும் குறிப்பிட்டிருந்தார். 

வணிக எழுத்துக்கும் இலக்கியத்துக்குமான அடிப்படை முரண், மதிப்பீடுகள் சார்ந்தது.  அவர்கள் சோறு நிதம் தின்று வெட்டிக் கதைகள் பேசி பிறர் வாடப் பல செயல்கள் புரிந்து நரை கூடிக் கிழப் பருவம் எய்தி கொடும் கூற்றுக்கு இரையாகும் வேடிக்கை மனிதர்கள்.  ஆனால் நாமோ ஒரு மொழியையும் அதன் மணத்தையும் மாண்பையும் கலாச்சாரத்தையும் அடுத்தடுத்த நூற்றாண்டுகளுக்குக் கடத்தும் கலைஞர்கள்.  மரணத்தை வென்றவர்கள்.  அந்த வேடிக்கை மனிதருக்கு எதெல்லாம் ப்ரீதியானதோ அதையெல்லாம் நாம் இடதுகாலால் எட்டி எறிகிறோம்.

தொடரும்…