பந்து இப்போது என் வசம்… (உரையாடல் தொடர்கிறது)

ஒரு விளக்கம்:

சுஜாதாவைக் குறைத்து மதிப்பிட்டு விட்டதாக சில நண்பர்கள் குறிப்பிட்டிருந்தார்கள்.  அவர்களுக்கு நான் சொன்னது புரியவில்லை.  சுஜாதாவிடமிருந்து நானும் கற்றவன் தான்.  மிக சுவாரசியமாக எழுதியவர் அவர்.  ஒருமுறை ஒரு கதையில் கணேஷ் நியாட்சே புத்தகம் படித்துக் கொண்டிருப்பான்.  அந்தக் காலத்தில் ஏது இண்டர்நெட்?  கல்லூரியில் உள்ள என்ஸைக்ளோபீடியாவில் N எழுத்தில் வரும் நியாட்சே முழுவதையும் தேடினேன்.  ஜெர்மானியத் தத்துவவாதியான நீட்ஷே தான் சுஜாதாவில் நியாட்சே ஆகியிருந்தார்.  ஆனாலும் சொல்லிக் கொடுத்த வாத்தியார் சுஜாதாதானே?  ஏனென்றால், அதற்குப் பிறகு இன்று வரைக்கும் தத்துவத்தில் என் குருநாதன் நீட்ஷேதான்.  இப்படி நிறைய சொல்லிக் கொண்டு போகலாம்.  ஆனால் என் பதிலின் சாரம் அது அல்ல.  சுஜாதாவிடமிருந்து நான் கற்றது பெயர்களை, விபரங்களை, தகவல்களை, அறிவை.  சுந்தர ராமசாமியிடமிருந்து நான் கற்றது அறத்தை, தர்மத்தை, மதிப்பீடுகளை.  இதுதான் வித்தியாசம்.

சுஜாதா கணையாழியில் எழுதிக் கொண்டிருந்த போது கண்ணதாசனையும், சிவாஜியையும், பஞ்சு அருணாசலத்தையும் கன்னா பின்னா என்று கிண்டலடித்திருக்கிறார் (கடைசிப் பக்கங்கள்).  அந்தக் கணையாழி சுஜாதாவை வணிகப் பத்திரிகைகள் கொன்று விட்டன.  அதே சுஜாதா பிறகு மகா குப்பையான தமிழ்ப் படங்களை ஆகா ஓகோ என்று பாராட்டி எழுத வேண்டி வந்தது.  நான் வணிகப் பத்திரிகைகளில் எழுதினாலும்  இந்த வேலையை எப்போதுமே செய்ய மாட்டேன்.  அறம் பிறழ்ந்தார் சுஜாதா என்று சொல்ல மாட்டேன்.  வணிகப் பத்திரிகைகளின் தேவைக்கு ஏற்ப அவர் தன்னை மாற்றிக் கொண்டார். வணிகப் பத்திரிகை என்று ஒரு விவாதத்துக்குத்தான் இங்கே குறிப்பிடுகிறேன்.  வெகுஜனப் பத்திரிகை, வெகுஜன கலாச்சாரம் என்பதே இன்னும் பொருந்தும்.  மேலும், இலக்கியமும் வணிக ரீதியில் வெற்றியடைய வேண்டும் என்பதுதானே நம் ஆசை?

அய்யனார் விஸ்வநாத்:

சாரு, உங்கள் பதிலை வாசித்து மிரண்டேன். எவ்வளவு கொந்தளிப்போடு இந்தச் சொற்கள் வந்து விழுந்திருக்கும் என்பதையும் புரிந்து கொள்ள முடிகிறது. நம் முன்னோடிகளுக்கு நேர்ந்த அதே அவலம் இன்றும் தொடர்கிறது என்பதுதான் வேதனை. உலக எழுத்தாளர்களை விடுங்கள் இந்தியாவின் பிற மொழிகளில் எழுதுபவர்கள் கூட இவ்வளவு பெரிய நெருக்கடிகளை சந்தித்திருக்க மாட்டார்கள். தமிழ் சூழலில் நிலவும் புறக்கணிப்பை, குழி தோண்டிப் புதைத்தலை உங்கள் வார்த்தைகளில் சொல்லப்போனால் – Invisible Ban ஐ நானும் உணர்ந்திருக்கிறேன். எழுதுபவர்களின் மீது இவர்கள் செலுத்தும் வன்முறை அச்சத்தையும் திகைப்பையும் ஏற்படுத்துகிறது. இன்று வணிக மற்றும் இடைநிலை இலக்கியப் பத்திரிக்கைகளில் வேலை பார்க்கும் அத்தனை நபர்களும் முன்பு இணையத்தில் எழுதிப் பார்த்துக் கொண்டவர்கள்தாம். என்னோடு ஒரே சூழலில் எழுதிப் பழகி குடித்து கொண்டாடி நட்பு அன்பு மயிறு மட்டையென திரிந்த இவர்களின் இன்றைய பத்திரிக்கை முகங்கள் வேறு மாதிரியாக இருக்கின்றன.  அவரவர்கள் வேலை பார்க்கும் பத்திரிக்கைகளில் மறந்தும் கூட என்னுடைய பெயர் எங்கும் தென்பட்டுவிடாமல் வெகு ஜாக்கிரதையாகப் பார்த்துக் கொள்கிறார்கள். நல்லவேளையாக நான் தமிழ் நாட்டில் வசிக்கவில்லை. முழு நேர எழுத்தாளனும் கிடையாது என்பது இன்னொரு வசதி. இப்படி எழுத அவமானமாகத்தான் இருக்கிறது ஆனாலும் இதுதான் நிலை. ஒரு வேளை நான் தமிழ் நாட்டில் எழுத்தை நம்பி வாழ்ந்திருந்தால் – இல்லை அப்படி ஒரு பேச்சிற்கே இடமில்லை. ஆகவே உங்கள் பதிலை அதே கொந்தளிப்போடு உள்வாங்கிக் கொண்டேன்.

நீங்கள் குறிப்பிட்டிருக்கும் தி.ஜானகிராமனின் அம்மா வந்தாள் நாவல் பத்தியை வாசித்து வியப்பையும் நெகிழ்வையும் ஒரு சேர அடைந்தேன். 1998 அல்லது 99 ஆம் வருடத்தில் அம்மா வந்தாளை வாசித்துவிட்டு இதே பத்தியை என்னுடைய டைரியில் எழுதி வைத்திருக்கிறேன் சாரு. சொல்லொணா மகிழ்ச்சியும் ஏற்பட்டது. பத்தொன்பது வயதில் என் வாசிப்பு சரியாக இருந்திருக்கிறது. என் பழைய டைரிகளை தேடிப்பிடித்து நகலெடுக்க வேண்டும் என்றும் நினைத்துக் கொண்டேன். இப்படிப்பட்ட உடைப்புகளை நிகழ்த்தியதால்தான் இலக்கிய எழுத்தாளர்கள் தமிழில் இருட்டடிப்பு செய்யப்பட்டிருக்கிறார்கள். ஆனால் நமக்கு வெகு அண்மையில் உள்ள கன்னடத்தில் நிகழ்ந்ததெல்லாம் தலைகீழ். கர்நாடகத்தின் பெரும்பாலான படைப்புகளில் பார்ப்பன எதிர்ப்பும், சுயசாதி விமர்சனமும் அடிப்படையான ஒன்றாக இருந்தது. யு.ஆர்.அனந்தமூர்த்தி, பைரப்பா, மாஸ்தி வெங்கடேச அய்யங்கார், பி.லங்கேஷ், கிரீஷ் கர்னாட் என கன்னடத்தின் முதன்மையான படைப்பாளிகள் அனைவரும் பிராமண எதிர்ப்பை முன் வைத்தவர்கள்தாம். ஆனால் தமிழைப் போல அல்லாமல் அவர்கள் அங்கே கொண்டாடப்பட்டனர்.

எஸ்.எல். பைரப்பா தன்னுடைய ஒரு குடும்பம் சிதைகிறது நாவலில் அர்ச்சகர்களையும் பூசாரிகளையும் மக்களை ஏய்த்துப் பிழைப்பவர்களாக சித்தரித்திருப்பார். நாவலின் முதல் அத்தியாயமே ஒரு பிராமணக் குடும்பத்தின் ஏராளமான வசைச் சொற்களோடுதான் விடியும். காலையில் எழுந்த உடன் அந்த குடும்பத்தின் தாய் தன் உருப்படாத மகன்களை ”தேவடியாப் பிள்ளைகளா” என வசைவார். பதிலுக்கு மகன்கள் தாயை ”மொட்டை முண்டை”, ”கழுத முண்டை” என வசைவார்கள். அறுபதுகளில் ஒரு பிராமணக் குடும்பத்தை இப்படிச் சித்தரிக்க ஓர் அசாத்திய துணிச்சல் வேண்டும். பிராமணக் குடும்பத்தின் கதை என்றாலும் கூட மிக நேரடியான மக்கள் மொழி அதாவது மிக அசலான கிராம மொழியில்தான் மொத்த நாவலும் எழுதப்பட்டிருக்கும். பைரப்பாவின் இன்னொரு புகழ்பெற்ற நாவலான வம்ச விருக்‌ஷா பிராமணக் குலப் பெருமைகளை வேரோடு பிடுங்கிப் போடுகிறது. வம்ச விருக்‌ஷாவின் இறுதி அத்தியாயம் அல்லது கதையின் முடிவு இன்றுமே வியப்பை ஏற்படுத்தும்.

யு.ஆர் அனந்த மூர்த்தியின் பிறப்பு நாவலில் வரும் சாஸ்திரிகள் கதாபாத்திரம் இன்னொரு நேரடி உடைப்பிற்கான உதாரணம். சாஸ்திரிகள் ஆச்சாரத்துக்கு பெயர் போனவர். சாஸ்திர நெறி வழுவாதவராக, வேதங்களை ஓதுபவராக, ஹரிக் கதைகளை சொல்லும் மடியான முதியவராக சித்தரிக்கப்பட்டிருப்பார்.  ஆனால் போகப் போக சொல்லப்படும் அவரின் முன் கதை அவ்வளவு குரூரமானதாக இருக்கும் . அவர் தன் மனைவியை அடித்துக் கொன்று வீட்டின் பின்னால் குழி தோண்டிப் புதைத்திருப்பார். இப்படி ஒரு கதாபாத்திரம் எழுதப்பட்டிருக்கிறது. பிறப்பு நாவலைக் காட்டிலும் அனந்த மூர்த்தியின் புகழ்பெற்ற இன்னொரு நாவலான சம்ஸ்காராவோ பிராமண உடைப்பில் பல மடங்கு முன்னே பாய்ந்திருக்கும். பிறப்பில் சாஸ்திரிகள் என்றால் சம்ஸ்காராவின் ஆச்சாரியாரும் நாராயணப்பாவும் அந்த உடைப்பை நிகழ்த்துவார்கள்.

 நாராயணப்பா அக்கிரஹாரத்தில் வசிக்கும் பிராமணர் என்றாலும் அந்த பிராமணக் குடியிருப்பின் எல்லா மரபுகளுக்கும் எதிரானவர். குடியும் கொண்டாட்டமும் பாட்டும் கூத்தும் நட்பும் காதலுமாய் வாழ்பவர். சந்திரி என்கிற பாலியல் தொழிலாளியை தன்னோடு சேர்த்துக் கொண்டு வாழ்பவர். மற்ற பிரமணர்களின் மொத்த வெறுப்பையும் சம்பாதித்துக் கொண்ட நாராயணப்பா ஒரு நாள் இறந்து போகிறார்.  அவர் பிறப்பால் பிராமணன் என்பதாலும் அவரை அக்கிரஹாரத்தை விட்டு விலக்கி வைக்காததினாலும் இன்னொரு பிரமணனே இறுதி காரியங்களைச் செய்ய வேண்டும். ஆனால் அதை யார் செய்வது என்பதில் குழப்பம் வரும். சண்டியராகத் திரிந்ததால் பிற பிராமணர்கள் யாரும் இறுதி காரியத்தைச் செய்ய முன் வர மாட்டார்கள். கல்வி கேள்விகளில் சிறந்தும் ஊருக்கே ஒழுக்கத்திற்கு உதாரணமாய் திகழும் ஆச்சாரியார் அந்த பிரச்சினைக்கான பதிலை வேண்டி ஆஞ்சநேயரை பூஜிப்பார். பகல் இரவாய் அவர் செய்த பூஜைக்குப் பலன் கிடைக்காமல் போகும். கடவுளிடமிருந்து எந்த பதிலும் வராது. மிகுந்த ஏமாற்றத்துடன் கோவிலை விட்டு வெளியே வரும்போது பிரச்சினைக்கு காரணமான நாராயணப்பாவின் மனைவி சந்திரி கோவிலுக்கு எதிரே அமர்ந்திருப்பாள். அந்த இரவில் அதே இடத்தில் ஆச்சாரியார் சந்திரியோடு உறவு கொள்ளுவார். அக்கிரஹாரத்தில் நாராயணப்பாவின் சடலம் கிடக்கும். யோசனை செய்யவே பயங்கரமாக இருக்கிறதல்லவா.

 கன்னடத்தில் எப்படி இந்த உடைப்புகள் நிகழ்ந்தன என்பதைக் காட்டிலும் இதை நிகழ்த்தியவர்கள் கொண்டாடப்பட்டனர் என்பதே முக்கியமானது. மேலே குறிப்பிட்ட அத்தனை எழுத்தாளர்களும் ஞானபீட விருதைப் பெற்றார்கள். இவர்களின் தரத்தோடு ஒப்பிடுகையில் தமிழில் ஞானபீட விருதைப் பெற்ற அகிலனை சேர்த்துப் பார்க்கவே அதிர்ச்சியாக இருக்கிறது.

மெடியாவின் துயரத்தோடு தமிழ் சிறுபத்திரிக்கை இலக்கியவாதிகளை ஒப்பிட்டிருந்தது மிகவும் நியாயமானது. குறைந்தபட்சம் தனிப்பட்ட முறையில் நான், நல்ல எழுத்துக்களை தேடி வாசிக்கவும் சரியான அங்கீகாரத்தை உரியவர்களுக்கு சரியான நேரத்தில் கொடுக்கவும் வேண்டும் என நினைத்துக் கொண்டேன். இந்த அமைப்பையும் சூழலையும் மாற்றிப்போடும் வலிமை எனக்கு இருக்கிறதா என்பது தெரியவில்லை.  ஆனால் மிக ஆரோக்கியமான எழுத்து சூழலைப் பற்றிய கனவு இருக்கிறது.

 நீங்கள் குறிப்பிட்டிருந்த A Dream of Passion படத்தை தேடிப் பார்த்தேன். இணையத்தில் கிடைக்கவில்லை. கிரேக்கப் படம் என்பதால் என்னுடைய பழைய சேகரிப்பைத் துழாவிக் கொண்டிருந்த போது Eleni Karaindrou வின் இசைக்கோர்வைகள் மேலெழுந்து வந்தன. கிரேக்கத்தின் மிகச் சிறந்த இசைக் கலைஞரான Eleni Karaindrou தான் இயக்குனர் தியோ ஆஞ்சியோபெளலோஸின் பெரும்பாலான படங்களுக்கு இசையமைத்தவர். தியோவின் படங்களில் இருக்கும் கனவுத் தன்மைக்கான காரணம்  எலனியின் இசையாகத்தான் இருக்க முடியும். குறிப்பாக தியோவின் Eternity And A Day திரைப்படத்தில் வரும் by the sea ஒலிக்கோர்வை எப்போது கேட்டாலும் உயிரைக் கரைக்கும். இந்த இசையைக் கேட்டு கண்ணீரும் நிறைவுமாய் தளும்பிய இரவுகள் ஏராளம் உண்டு.

எனக்குப் பெரிய இசையறிவு கிடையாது. உலக இசை உங்கள் வழியாகத்தான் அறிமுகம். பத்து வருடங்கள் ஆகியிருக்கலாம் என நினைக்கிறேன்.  கோணல் பக்கங்களில் Gloomy Sunday பாடல்  குறித்து எழுதி இருந்த கட்டுரை வழியாகத்தான் இசை கேட்க ஆரம்பித்தேன். Gloomy Sunday பித்து பிடிக்க வைத்தது. அடுத்து அடுத்து என தொடர்ந்து இசையின் உலகில் என்னைக் கரைத்துக் கொள்ள முடிந்தது. இனி என் கேள்வி

உங்கள் இசை அனுபவங்களை இங்கும் அங்குமாய் வாசித்திருந்தாலும் மீண்டும் இசை குறித்து நீங்கள் பேச வேண்டும் என்பது என் விருப்பம். நாகூரிலிருந்து இலத்தீன் அமெரிக்கா வரைக்குமான இசையை அதன் ஆன்மாவை ஆளுமைகளை குறித்துப் பேசுங்கள்.

பதில் நாளை எழுதுகிறேன். (சாரு)