கிசுகிசு

குமுதம் கிசுகிசு பற்றி ராஜநாயஹம் முகநூலில் எழுதியிருக்கிறார். நான் கொஞ்ச காலம் பிக்பாக்கெட்டாக இருந்தேன் இல்லையா? அதற்குப் பிறகோ அல்லது முன்போ அல்லது அந்த நேரத்திலேயோ கிசுகிசு எழுத்தாளனாகவும் இருந்தேன். எல்லாம் வயிற்றுப்பாட்டுக்கு. நண்பர்களிடம் பிச்சை கேட்டு சாப்பிட்டுக் கொண்டிருந்த காலத்தில். இதெல்லாம் ராஜநாயஹத்தின் இந்தக் குறிப்பைப் படித்த போது ஞாபகம் வந்தது. அந்தக் காலத்தில் என்னை எதிரியாக நினைத்தவர்கள் என்னைத் திட்டுவதற்குப் பயன்படுத்திய சொல், கிசுகிசு எழுத்தாளன். அப்படியே வாழ்ந்து விடுவேன் என்று நினைத்தார்கள். அவர்கள் எதிர்பார்ப்பு நடக்கவில்லை.
இந்த வாரம் குமுதம் கிசுகிசு சிறப்பிதழ். பயங்கர பயங்கரமான கிசுகிசு மேட்டர்கள் இருந்தன. ஆனால் ஒரு கிசுகிசு கூட புரியவில்லை.
நம்பர் நடிகைகண்ணாடி இயக்குனர்வாரிசு நடிகர்குதிரை நடிகைதள நடிகர்பொக்கிஷ இயக்குனர்சைக்கிள் நடிகர்பூ நிறுவனம்
இப்படியே நூற்றுக் கணக்கில் போகிறது. சில மேட்டரைப் படித்த போது இதயம் தாறுமாறாக எகிறியது. யார் சார் என்று எடிட்டருக்கே போன் போடலாமா என்று யோசிக்கிற அளவுக்கு ஆகி விட்டது. ஆனால் மூன்று ஷா நடிகை, பைக் நடிகர் என்று ரொம்ப சிம்பிளான கிசுகிசுக்களும் இருந்தன. இம்மாதிரி சிம்பிள் க்ளூவெல்லாம் புரிந்து விட்டன. த்ரிஷா, அஜித். இதுவா தெரியாது ஹா? இன்னொரு விஷயம். நான் கிசுகிசு எழுத்தாளனாக ரொம்பப் பரிணமிக்க முடியவில்லை. அதில் எனக்குப் படுதோல்விதான். ஏனென்றால், என் கிசுகிசுக்கள் எல்லாம் மூன்று ஷா நடிகை, பைக் நடிகர் ரேஞ்சில்தான் இருக்கும். ஒருமுறை பிரம்மானந்தம் என்பவர் பற்றிய கிசுகிசுவில் பிரம்மத்தையும் ஆனந்தத்தையும் பெயரில் வைத்திருக்கும் ஒரு அதிகாரி என்று எழுதி விட்டேன். எதற்காக அந்தக் கிசுகிசு எழுதினேனோ அது வெற்றிகரமாக நடந்தது. ஆனால் எடிட்டர்தான் சொன்னார், இன்னும் கொஞ்சம் உங்களை இம்ப்ரூவ் பண்ணிக்கோங்க என்று.