கிசுகிசு – 2

சரி, கிசுகிசு பற்றி எழுதிவிட்டு புதிய கிசுகிசு சொல்லாமல் விடலாமா? இது ஒரு இலக்கியக் கிசுகிசு. பலராலும் விரும்பப்படும் பலராலும் வெறுக்கப்படும் ஒரு எழுத்தாளர் எழுதிக் கொண்டிருக்கும் நாவலின் முதல் ரெண்டு அத்தியாயத்தைப் படித்தேன். சுவாரசியமாக இருந்தது. இதில் என்ன பெரிய விஷயம் இருக்கிறது? இருக்கிறது. அந்த நாவலை அவர் புதூஊஊஊ மாதிரியான எழுத்து ஸ்டைலில் எழுதியிருக்கிறார். அது என்ன ஸ்டைல் என்பதுதான் சஸ்பென்ஸ். பயங்கரமாக இருந்தது. தமிழில் இது புதிய முயற்சி.

நகுலனும் என்னைப் போலவே ஒரு கிசுகிசு விரும்பி. நான் அவரைச் சந்திக்கப் போன போது அவர் என்னைக் கேட்ட முதல் கேள்வி, நீ பாப்பானா?

இல்ல நகுலன். (நகுலனுக்கும் எனக்கும் 30 வயது வித்தியாசம் இருக்கும். ஆனால் அந்தக் காலத்தில் எழுத்தாளர்களை யாரும் சார் போட்டு விளிப்பதில்லை. சுந்தர ராமசாமியையே எல்லோரும் சுரா என்றுதான் அழைப்பர்)

நகுலனின் அடுத்த கேள்வி. ஆமா, எக்ஸும் ஒய்யும் ஸீங்கற பொண்ணோட சேர்ந்து வாழறாளாமே, கேள்விப்பட்டேன். அது உண்மையா?

அவர் பெயர் சொல்லித்தான் கேட்டார். நான் தான் எக்ஸ், ஒய் என்று எழுத்தைப் போட்டிருக்கிறேன்.