சரியான தமிழ்

சரியான தமிழ் பற்றிய அல்லது பிழை திருத்தம் பற்றிய குறிப்புகள்: நேற்று ஒரு கதையில் சுண்ணி என்ற வார்த்தையைப் படித்தேன். இப்படி எழுதும் முன் ரெண்டு சுழியா மூணு சுழியா என்று கவனிக்க வேண்டும். அவ்வளவுதான் விஷயம். நாமே கலகமாக மாற்றுவது வேறு. ஆனால் தவறாக எழுதிவிடக் கூடாது.

சமீபத்தில் ஒரு நண்பர் சொன்னார், நீங்கள் ஸாஃப்ட் காப்பியிலேயே பிழை திருத்தம் செய்து விடுங்கள். பிழைகளை மார்ஜினிலோ அல்லது ஒரு நோட்டிலோ குறித்து விடுங்கள் என்று. மற்ற எழுத்தாளர்கள் அப்படித்தான் செய்வதாகவும் குறிப்பிட்டார் தோழர். என்னால் அப்படி முடியாது. ஒரு பக்கத்தில் 20 பிழைகள் குறைந்த பட்சம் கண்டு பிடிக்கிறேன். நான் செல்லப்பா காலத்து ஆள். அப்படித்தான் இருக்கும். என்னோடு இந்தப் பழக்கம் முடிந்து போகும். இனி வரும் புத்தகங்களில் பக்கத்துக்கு 20 பிழைகள் இருக்கும். க்ரியா புத்தகங்களில் முன்பெல்லாம் ஒரு தப்பு கண்டு பிடிக்க முடியாது. இப்போது ஐந்து பக்கத்துக்கு ஒரு பிழை இருக்கிறது. மொழிபெயர்ப்பிலேயே தப்பு இருக்கிறது. நாயக்கரின் ஃப்ரெஞ்சு – தமிழ் மொழிபெயர்ப்பு சகிக்கவில்லை. அவருக்குத் தமிழ் வரவில்லை. க்ரியா பதிப்பகம். ந. முத்துசாமியின் மேற்கத்திக் கொம்பு மாடுகள் புத்தகத்திலேயே அச்சுப் பிழை பார்த்து அரண்டு போனேன். ஆனால் மற்ற பதிப்பகங்களை விட கம்மி.

என் புத்தகங்களில் பிழை வராமல் இருக்க முழு முயற்சி எடுத்துக் கொள்கிறேன். 200 பிரதிகள் அச்சடித்து விற்கத்தான் இத்தனை பாடு. ஆனால் இப்போது பிழை திருத்தம் செய்து வைத்து விட்டால் நிரந்தரமாக இதையே வைத்துக் கொள்ளலாம் இல்லையா? இனிமேல் பதிப்பக மாற்றம் நடக்காது.

சினிமா: அலைந்து திரிபவனின் அழகியல் என்ற நூலை இப்போது பிழை திருத்தம் செய்து கொண்டிருக்கிறேன். அதில் அலெஹாந்த்ரோ ஹொடரோவ்ஸ்கி பற்றிய கட்டுரையில் பொருளடக்கத்தில் அவருடைய பெயர் மட்டும் இருந்தது. எங்கள் காலத்தில் நாங்கள் பிழை திருத்தம் செய்யும் போது ஒருவர் படிக்க ஒருவர் திருத்துவோம். இப்போது சொன்னால் விஷம் வைத்துக் கொன்று போடுவார்கள். எனவே நானே தான் படித்து நானே தான் திருத்த வேண்டும். பொருளடக்கத்தில் அலெஹாந்த்ரோ ஹொடரோவ்ஸ்கி என்று பார்த்து விட்டு ஒருக்கணம் யோசித்தேன். ஒரு கட்டுரைக்கு இப்படியா தலைப்பு வைப்பார்கள்? இருக்கவே இருக்காது. உள்ளே போய் கட்டுரையைப் பார்த்தால் அலெஹாந்த்ரோ ஹொடரோவ்ஸ்கி: கலையும் உன்மத்தமும் என்று இருந்தது. பொருளடக்கத்தில் இந்த உபதலைப்பு காணோம். அடுத்து, கட்டுரையின் உள்ளே இவர் அர்ரபாலுடன் சேர்ந்து Parlic Movement என்ற இயக்கத்தை உருவாக்கினார் என்று கண்டிருந்தது. அது தப்பு என்று சிற்றறிவுக்குத் தெரிய வேண்டும். அது பார்லிக் மூவ்மெண்ட் அல்ல. Panic movement.

இதெல்லாம்தான்.