லெபனான் – 2

லெபனான் என்ற தலைப்பில் உள்ள முந்தைய கட்டுரையைப் படித்தால்தான் இது உங்களுக்குப் புரியும். அந்தக் கட்டுரை வந்ததுமே அது பற்றி சீனி பேசினார். அதில் வரும் இரண்டு நண்பர்களுக்கும் பெயர் வைத்துக் கொள்வோம். ஒருத்தர் பெயர் கோபால். இன்னொருத்தர் பெயர் சுப்ரா. இதில் கோபால் இந்தச் சம்பவத்தில் நேரடியாக சம்பந்தப்படவில்லை. லெபனான் கதையை என்னிடம் கேட்டவர் சுப்ரா. அவர்தான் வேறொரு மைலாப்பூர்வாசி மூலம் 35 ஆண்டுகளுக்கு முன்பு எனக்கு அறிமுகம் ஆனவர். அறிமுகம்தான். பெயர் தெரியும். தொலைக்காட்சிப் பிரமுகர். என்னிடம் தொலைக்காட்சி இல்லாததால் அவர் பேசியதை நான் கேட்டதில்லை. நான் ஒரு நூறு புஸ்தகங்கள் எழுதியிருக்கிறேன். அவரும் அதில் ஒன்றைக் கூட படித்ததில்லை. அது எப்படி உனக்குத் தெரியும் என்று கேட்கிறீர்களா? சில விஷயங்களை விளக்க முடியாது. அப்படித்தான். நான் எழுதியுள்ள நூறு புத்தகங்களில் அவர் ஒன்றைக் கூட படித்திருக்க வாய்ப்பில்லை. சீனி, உங்களுடைய லெபனான் கட்டுரையைக் கூட அவர் படித்திருக்க மாட்டார் என்றார். அதில் சந்தேகம் என்ன என்று கேட்டேன். நான் ப்ளாகில் எழுதுகிறேன் என்பது கூட அவருக்குத் தெரிந்திருக்க நியாயம் இல்லை. இவர்களெல்லாம் தினசரிகள் படிப்பார்கள்; தொலைக்காட்சி மூலம் செய்திகளை அறிந்து கொள்வார்கள். அவ்வளவுதான்.

ஆகா, கதையில் சம்பந்தப்பட்ட சுப்ரா படிக்காவிட்டாலும் பரவாயில்லை, கோபால் படிக்கட்டுமே என்று கோபாலின் போன் நம்பரை நேற்று கேட்டேன். லெபனான் கட்டுரை லிங்க்கை அவருக்கு அனுப்பலாம் என்று திட்டம். நேற்று நேரமில்லை. இன்று ராமசேஷன் ஆர்வமாக கோபாலுக்கு அனுப்பி விட்டீர்களா, என்ன சொன்னார் என்று கேட்டார். அவர் கொடுத்த உத்வேகத்தில் உடனடியாக இன்று காலை பார்க்கிலிருந்தே கோபாலுக்கு லிங்க் அனுப்பினேன். பிறகு வழக்கம் போல் எட்டு மணிக்கு நானும் சேஷனும் ராகவனும் பாரதி மெஸ் போனோம்.கபாலி கோவில் வாசலில் இருக்கிறது பாரதி மெஸ்.

பாரதி மெஸ் ஒரு சூப்பர் மெஸ். ஆனால் இட்லியில்தான் என்னை டார்ச்சர் செய்கிறார்கள். இட்லி சூடா இருக்கா?சூடா இருக்கு சார்.சரி, ஒரு ப்ளேட் குடுங்க. ராகவனுக்கு ராகி கஞ்சி. சேஷன் ஒரு நாளைக்கு ஒரு மாதிரி. நான் மட்டுமே இட்லி பக்கி.இட்லியைக் கொண்டு வந்து இலையில் வைப்பார் பரிசாரகர். தொட்டால் ஆறி இருக்கும். இப்படியே நாலைந்து நாட்களாக ஓடிக் கொண்டிருந்ததால் இன்று கொலைவெறியில் இருந்தேன். இன்றும் அதேபோல் இலையில் விழுந்தது ஆறின இட்லி. இலையில் விழுந்ததைத் திருப்பிக் கொடுக்க முடியாதே?

அப்போதுதான் பக்கத்து இருக்கையில் உட்கார்ந்தார் ஒரு தம்பி.

இட்லி இருக்கா?

இருக்கு சார்.

சூடா இருக்கா?

சூடா இருக்கு சார்.

இங்க பாரு. சூடுன்னு சொல்லி ஆறுன இட்லிய வைக்கக் கூடாது. சூடுன்னா ஆவி பறக்கணும். தெரியுதா? அப்டி இருக்கா?

அப்டி இல்ல சார். கொஞ்சம் நேரம் ஆவும்.

அப்போ வெய்ட் பண்றேன்.

எனக்கு அந்த இளைஞனைப் போய்க் கட்டிக் கொள்ள வேண்டும் போல் இருந்தது. அப்புறம் அந்தப் பரிசாரகரை அழைத்து சூடு என்றால் ஆவி பறக்க வேண்டும் என்றும் இனிமேல் இப்படித் தவறாகச் சொல்லக் கூடாது என்றும் அறிவுறுத்தினேன்.இந்த முக்கியமான உரையாடல் நடந்து கொண்டிருக்கும் போதே எப்போதும் போல் கோபாலும் சுப்ராவும் வந்தனர். சனி, ஞாயிறு தவிர மற்ற நாட்களில் தினமும் அவர்களை பாரதி மெஸ்ஸில் பார்ப்பது வழக்கம். ஹலோ ஹலோ. ஹலோ ஹலோ. எப்போதாவது கருணாநிதி, ஜெயலலிதா என்று சுப்ரா ஆரம்பித்தால், நான் தமிழில்தான் பேசுகிறேன், எழுதுகிறேனே தவிர எனக்கும் தமிழ்நாட்டு அரசியலுக்கும் சம்பந்தமே இல்லை சுப்ரா என்று சொல்லிவிட்டு விலகி விடுவேன்.

நான் என்ன பார்க்கின்றவர்களிடம் எல்லாம் தமிழ்ப் பிரபாவின் பேட்டை பற்றியும் அய்யனாரின் ஓரிதழ்ப் பூ பற்றியுமா பேசிக் கொண்டிருக்கிறேன்? பூனைக்குட்டிகள் சாப்பாட்டுக்குக் காத்துக் கொண்டிருக்கும். ராகவனுக்கு சஹானா காத்துக் கொண்டிருப்பாள். ஸ்கூலுக்கு அவர்தான் கொண்டு விட வேண்டும். அல்லது, ஸ்கூல் பஸ்ஸில் ஏற்றி விட வேண்டும். ஜென்ரல் நாலட்ஜ் எனக்குக் கம்மி. டான் என்று அவர் 8.25க்குக் கிளம்ப வேண்டும். நான் உட்கார்ந்து கருணாநிதி, ஜெயலலிதா பற்றிப் பேசிக் கொண்டிருக்க முடியுமா?
கோபால் அமர்க்களமாகச் சொன்னார் என்னிடமும் சுப்ராவிடமும் ஒருசேர.

”சாரு லெபனான் பற்றி எழுதியதை எனக்கு அனுப்பியிருக்கிறார். அதை நான் உங்களுக்கு (சுப்ராவிடம்) ஃபார்வேர்ட் பண்ணி விட்டேன்.”

அடப்பாவி! தப்புக்கு மேல் தப்பு நடக்கிறதே! என்னுடைய intellectual propertyயை என்னிடமே கேட்டு களவாட முயற்சித்ததே தவறு. அது பற்றிய என் தாக்கீதை ப்ளாகில் எழுதி – அதையும் சம்பந்தப்பட்டவர்கள் படிக்காததால் நானே வேலை மெனக்கெட்டு லிங்க் அனுப்பினால் அதையும் படிக்காமல் – படிக்காமலேயே சுப்ராவுக்கு ஃபார்வேர்ட் பண்ணியிருக்கிறார். அதோடு முடியவில்லை. என்னிடமும் சொன்னார். சாரு, நீங்கள் லெபனான் பற்றி எழுதினதை சுப்ராவுக்கு அனுப்பி விட்டேன்.அடப்பாவி. அதை நானே சுப்ராவுக்கு அனுப்பி இருக்க முடியாதா?

இப்போது சுப்ரா என்னிடம் வந்தார். சாரு, லெபனான் பற்றி எல்லாமே இந்தக் கட்டுரையில் எழுதி விட்டீர்களா?

ஆமாங்க. (வேறு என்ன சொல்ல முடியும்?)

அப்போ பிரச்சினை இல்லை. நான் உங்கள்ட்ட போன் பண்ணி நோட்ஸ் எடுத்துக்க வேண்டிய அவசியம் இருக்காது. ஆமா, இதை நீங்க பத்திரிகைல எழுதுவீங்களா?

ஆமாங்க.

ஓ. (ரொம்ப ஏமாற்றமான தொனி) சரி வர்றேன். படிச்சிர்ரேன்.

அடக் கடவுளே என்று நினைத்துக் கொண்டேன். இனி சுப்ராவின் hit listஇலும் நான் இருப்பேன். சாருவா, அவர் வில்லங்கமான ஆள்ப்பா.

ஒரு நண்பரிடம் கேட்டேன், ஆமா, நாயகரோட படம் பண்ணப் போனீங்களே என்ன ஆச்சு?

குனிஞ்சுக்கோன்னார். சரி, சீனியராச்சேன்னு குனிஞ்சேன். அப்புறம் ஸ்கர்ட்டைத் தூக்குன்னார். ஐயையோன்னு பயந்துகிட்டு திரும்பிப் பார்த்தேன். அவர் பேண்ட் ஜிப்பைக் கழட்ட முயற்சி பண்ணிட்டிருந்தார். பழைய ஜிப் போல. மாட்டிக்கிட்டா மாதிரி தெரிஞ்சுது. அப்படியே ஓட்டம் பிடிச்சு ஓடி வந்துட்டேன்.

இதை அப்படியே வார்த்தைக்கு வார்த்தை அர்த்தப்படுத்திக் கொள்ளாதீர்கள். Symbolic. அப்படித்தான் இந்த பாரதி மெஸ் சம்பவமும். குனிஞ்சுக்கிட்டு ஸ்கர்ட்டைத் தூக்கு என்பார்கள். தூக்கவில்லையானால் வில்லங்கமான ஆள்.

(இன்று கோபால் மட்டும் நான் அனுப்பிய லிங்க்கை சுப்ராவுக்கு ஃபார்வேர்ட் பண்ணியிருக்காவிட்டால் இந்தப் பதிவை எழுதியிருக்க மாட்டேன். சிறுகதை எழுதினால் அதைத் தொடர்கதை ஆக்குகிறார்கள். தப்பு பண்ணினால் அதற்கு மேலும் மேலும் தப்பு செய்வார்கள் என்று எழுதியிருக்கிறேன் அல்லவா, அது இதுதான். நாளை என்ன நடக்கிறது பார்ப்போம். சேஷனும் ராகவனும் ரொம்ப ஆர்வமாக இருக்கிறார்கள். ஆனால் இதற்குப் பயந்து கொண்டு பாரதி மெஸ் ஆறின இட்லியை விட்டு விட முடியுமா என்ன?)