ரஜினியின் சினிமா வாழ்க்கையில் ஒரு காலகட்டத்தில் ஒரே சமயத்தில் 25 படங்களில் நடித்துக் கொண்டிருந்ததாக நாம் அறிந்திருக்கிறோம் அல்லவா, அப்படியான காலகட்டம் இப்போது எனக்கு. அத்தனை வேலைகள். அத்தனை வேலைகளுக்கு நடுவே நண்பர் கமல் வேறு இந்த வேலையைக் கொடுத்திருக்கிறார். கடுப்பாக இருக்கிறது. ஆனால் கமல் கொடுத்த வேலையை மறுக்க முடியுமா?
கமல் மீது எனக்கு மிகுந்த அன்பு உண்டு என்றால் நீங்கள் யாருமே நம்ப மாட்டீர்கள். தெரியும். அவருடைய மகாநதி, குணா, சதிலீலாவதி, உத்தம வில்லன் போன்ற படங்களுக்கு நான் எழுதிய மதிப்புரையைப் படித்தால் உங்களுக்கு அது புரியும். நிகழ மறுத்த அற்புதம் என்ற என் கட்டுரையிலேயே அவர் பற்றிய என் பாராட்டுகளை எழுதியிருக்கிறேன். ஆனாலும் எல்லா மனிதர்களுக்கும் எதிர்மறையான விஷயங்களும் இருக்கும்தானே? எனக்கும் இருக்கிறது. அதை நான் என் புதினங்களில் எழுதித் தாண்டி விடுகிறேன். அல்லது, எழுதித் தீர்த்து விடுகிறேன். என் ஆன்மீகத் தேட்டத்தின் மூலம், பிற உயிர்களுக்குச் செய்யும் சேவையின் மூலம் அந்த எதிர்மறைப் பக்கங்களின் இருளை விலக்க முயற்சி செய்கிறேன். ஆனால் கமலோ அந்த எதிர்மறை விஷயங்களையும் தன் சாதனைகளாக நினைக்கிறார். அதுதான் பிரச்சினை. அதனால்தான் அவர் பற்றி நான் தொடர்ந்து எழுத வேண்டிய அவசியம் ஏற்படுகிறது.
எனக்கு முறையான கல்வி இல்லை. கமலுக்கும் அப்படியே. இருவரும் நாங்களாகவே கற்றவர்கள். முறையான கல்வி இல்லாமல் போனாலும் கமல் மேட்டுக்குடியைச் சார்ந்தவர் என்பதால் அவருக்கு ஆங்கிலம் நன்கு தெரியும். நல்ல, சரளமான ஆங்கிலத்தில் பேசவும் எழுதவும் அவருக்குத் தெரியும். ஆனால் தமிழ் தெரியாது. 99 சதவிகித தமிழர்களைப் போலவே அவருக்கும் தமிழில் சரியான முறையில் எழுதத் தெரியாது. அது அவர் அவ்வப்போது எழுதும் ட்விட்டர் மற்றும் கவிதை என்ற பெயரில் வரும் gibberish மூலம் தெரிய வருகிறது. நாலு வரி எழுதினாலும் அதில் எக்கச்சக்கமான இலக்கணப் பிழைகளும் ஒற்றுப் பிழைகளும் மலிந்திருக்கின்றன. ஆனால் அவர் ஆங்கிலம் பிழையற்றது. அதேபோல் எனக்குத் தமிழ் நன்றாக வரும்; ஆங்கிலம் வராது. இங்கே எனக்கும் கமலுக்கும் என்ன வித்தியாசம் என்றால், எனக்கு ஆங்கிலம் எழுதத் தெரியாது என்ற விஷயம் தெரியும். ஆங்கிலத்தில் நான் எழுதிய கவிதையைப் பாருங்கள் என்றெல்லாம் இலக்கணப் பிழைகளோடு போட்டு பீற்றிக் கொள்ள மாட்டேன். பலருடைய நகைப்புக்கும் ஆளாக மாட்டேன்.
ஆனால் கமல் தன்னை ஒரு (தமிழ்) எழுத்தாளன் என்றும் கவிஞன் என்றும் நம்புகிறார். அவர் மிகப் பிரபலமான மனிதர் என்பதால், நடிப்பில் பெரிய சாதனைகளைச் செய்தவர் என்பதால் அவர் எழுதும் கவிதைக் குப்பைகளைப் பற்றி அவர் அருகில் இருக்கும் உண்மையான கவிஞர்களும் கண்டிப்பதில்லை; கண்டிப்பது இருக்கட்டும்; கண்டு கொள்வது கூட இல்லை. அவர் பெயரில் அவர் படத்தோடு பத்திரிகைகளில் வரும் கவிதைகள் எல்லாம் குப்பைகள் என்பது அவருக்குத் தெரியாது என்பதே என் கணிப்பு. தெரிந்திருந்தால் அவற்றை அவர் வெளியிடுவாரா? எனக்கு Astrophysics தெரியாது. படித்ததில்லை. அப்படியிருக்கும்போது அஸ்ட்ரோஃபிஸிக்ஸ் அறிஞர்கள் கூடியிருக்கும் சபையில் – நான் ஒரு பிரபலமான எழுத்தாளன் என்ற தகுதியை வைத்துக் கொண்டு – அஸ்ட்ரோஃபிஸிக்ஸில் என் ஞானத்தை வெளியிடலாமா? அவர்கள் சிரிப்பார்கள்தானே? இதைத்தான் கமல் பல ஆண்டுகளாகத் தொடர்ந்து தமிழ் எழுத்து வெளியில் செய்து கொண்டிருக்கிறார்.
பொதுவாக தமிழ்நாட்டில் சினிமா நடிகர் என்றால் தெய்வம் மாதிரி. யோகி பாபுவே இங்கே தெய்வம்தான். அப்படியிருக்கும்போது கமல் எல்லாம் ஆதி சிவன், பிரும்மா, விஷ்ணு ரேஞ்ச். அவருடைய ஒரு பார்வைக்கு ஏங்கிக் கிடக்கும் கோடானுகோடி பேர் இங்கு உண்டு. அவரோடு கை குலுக்க, அவரோடு செல்ஃபி எடுத்துக் கொள்ள, அவர் கன்னத்தில் முத்தமிட இங்கே மூணு நாலு கோடி பெண்களும் ஆண்களும் உண்டு. அப்படிப்பட்ட ஒருவரை சினிமா உலகில் எப்படி மதிப்பார்கள்? கடவுள். கடவுள். கடவுள். அவர் ஒரு விஷயத்தைச் சொன்னால் “சார், நீங்க சொல்றது தப்பு சார்” என்று ஒரு பயல் பேச முடியுமா? வாய் வருமா? அவர் பேசினால் ஆதி சிவன் பேசினதைப் போல. பிரும்மா பேசினதைப் போல. அது தப்பா சரியா என்று யோசிப்பது கூட ஹராம். பாலச்சந்தர், பாரதிராஜா போன்றவர்களே கமலுக்கு முன்னால் அப்படித்தான் இருந்திருப்பார்கள் என்பது என் யூகம்.
பாலச்சந்தர் சபா நாடகங்களிலிருந்து வந்தவர். பாரதிராஜா கிராமத்திலிருந்து வந்தவர். இரண்டு பேரிடமும் கமல் 25 வயதுச் சிறுவனாக இருந்த போதே கூட பெர்க்மன், ஃபெலினி, ஃபாஸ்பைண்டர் என்று பேசினால் அவர் மிரண்டு போவார்கள்தானே? ஜீனியஸ் பையன் என்றுதான் நினைத்திருப்பார்கள். பாரதிராஜா கமல் பெயரை உச்சரிக்கும் போதே ஒரு reverence தெரிகிறது. நேர்ப்பேச்சிலேயே பார்த்திருக்கிறேன். அவ்வளவு ஏன்? மகாநதி வந்த புதிதில் கமல் எனக்கு எழுதிய கடிதம் ஒன்றில் கூப இயக்குனர் Tomas Aleaவின் அப்போது வெளிவந்திருந்த படத்தைப் பற்றிக் குறிப்பிட்டு அதைப் பாருங்கள் என்று எழுதியிருந்தார். எத்தனை ஆண்டுகளுக்கு முன் என்று பார்த்துக் கொள்ளுங்கள்.
அதிர்ஷ்டவசமாக – அதாவது நான் தில்லியில் இருந்திருந்தபடியால் அந்தப் படத்தை நான் தில்லியில் பார்த்திருந்தேன். அதனால் அவரிடம் அந்தப் படத்தைப் பார்த்து விட்டேன் என்று சொல்லி அவரை அசத்த முடிந்தது. இப்படி உலக சினிமாவைத் தேடித் தேடிப் பார்க்கும் என்னையே பிரமிக்க வைக்கக் கூடிய ஒருவர் ஒன்றுமே தெரியாத தமிழ் சினிமா அசடுகளை எந்த அளவுக்கு மிரட்சி கொள்ள வைத்திருக்க முடியும் என்று யோசித்துப் பாருங்கள். அப்போதைய உதவி இயக்குனர்களெல்லாம் சொல்வார்கள், அவர் கையில் எப்போதும் கோணங்கி என்பவரின் புத்தகம்தான் இருக்கிறது. அதெல்லாம் உங்களுக்குப் புரியாது என்று சொல்லி விடுவார். ஆக, சினிமா உலகமே பார்த்து மிரளும் ஜீனியஸ் கமல்.
எவனாவது அவர் சொல்வதை எதிர்த்துப் பேசவோ விமர்சனம் பண்ணவோ முடியும்? அப்படி நினைத்துக் கூட பார்க்க முடியாது. ஆக, இப்படியே ஒரு 50 ஆண்டுகள் வாழ்ந்த ஒருவர் – நீங்கள் பெர்னார்தோ பெர்த்தோலுச்சியின் The Last Emperor என்ற படத்தைப் பார்த்திருக்கிறீர்களா? மூன்று வயதுச் சிறுவன் சீனா என்ற மாபெரும் தேசத்தின் பேரரசனாகிறான். அரச சபையில் எல்லோருக்கும் முன்னே தங்கத் தாம்பாளத்தில் மூத்திரம் அடிப்பான். மந்திரிகள் அதைத் தூக்கிச் செல்வர். கம்யூனிஸம் வரும். பேரரசனைத் தூக்கி ஜெயிலில் போட்டு விடுவார் மா சே துங். பேரரசன் இப்போது திருடர்களோடும், பிக்பாக்கெட்காரர்களோடும், கற்பழித்தவர்களோடும் சிறையில் கிடப்பான். சாதாரண ஒரு கைதி. இரவில் அவன் சிறுநீர் கழிக்கும் சத்தம் மற்ற கைதிகளுக்கு இடைஞ்சலாக இருக்கும். உடனே சிறை அதிகாரி டேய் மூடா, மற்றவர்களுக்குத் தொந்தரவு இல்லாமல் உன்னால் சிறுநீர் கழிக்கத் தெரியாதா என்று திட்டி, பாத்திரத்தின் உள் ஓரத்தில் படுமாறு சிறுநீர் கழி என்று கண்டித்து அனுப்புகிறான்.
கமல், நீங்கள் The Last Emperor படத்தில் வரும் பேரரசன்தான். சினிமாத் துறை என்பதால் மா சே துங் பற்றிய எந்தக் கவலையும் இல்லாமல் நீங்கள் கோலோச்சலாம். சினிமாத் துறையில் ஆயுள் உள்ளளவும் பேரரசன் தான். யாராலும் அசைக்க முடியாது. ஆனால் அந்தக் கண்ணாடி மாளிகையை விட்டு வெளியே போய், அங்கே போயும் பேரரசன் போல் நடந்தால் கல்லடி விழும். கமலை யாருமே 40 ஆண்டுகளாக எதிர்த்துப் பேசியது இல்லை. பாலச்சந்தர் உட்பட. காரணம், கமல் ஜீனியஸ். அப்படி வாழ்ந்த ஒருவர் வெளியே வருகிறார். புத்தர் வந்தார் அல்லவா, அப்படி. ரஜினி வந்தார் அல்லவா, அப்படி. ரஜினிக்கு என்ன கிடைத்தது? நீங்க யாரு என்ற கேள்வி. கமலுக்குக் கிடைத்தது அதை விட அவலமான பரிசு. ஸ்ம்ருதி இரானி என்ற முன்னாள் மாடல், முன்னாள் தொலைக்காட்சி நடிகையுடன் கமல் உரையாடல். அந்த உரையாடல் எப்படி இருந்தது தெரியுமா? பின்வரும் இணைப்பில் உள்ள சில புகழ்பெற்ற Knock-outsஐப் பாருங்கள்,
அப்படித்தான் இருந்தது. ஒரே குத்தில் வீழ்ந்து விட்டார் கமல். பாக்ஸிங்கிலாவது ஆள் விழுந்ததும் போட்டி முடிந்து விடும். ஆனால் கமல் – இரானி போட்டியில் இரானி கடைசி வரை கமலைக் குத்திக் கொண்டே இருந்தார். கமலிடம் எதிர்ப்பே இல்லை. காரணம், நாற்பது ஆண்டுகளாக ஆமாஞ்சாமி தீனி போட்டு அவரைக் கொழுக்க வைத்திருக்கிறார்கள் சினிமாத்துறையினர். என்ன செய்வார் பாவம்? ஸ்ம்ருதி இரானி அவருடைய ஜால்ரா இல்லையே? அடி பின்னியெடுத்து விட்டார். ராகவன் சொன்னார், கமலுக்கு ஆங்கிலம் தெரியவில்லை, அதனால்தான் என்று. சேச்சே. கமல் பிரமாதமாக ஆங்கிலம் பேசுவார். என்ன நடந்தது என்றால், ’ஸ்ம்ருதி இரானி தானே, முன்னாள் மாடலுக்கு என்ன தெரியும்? முன்னாள் தொலைக்காட்சி நடிகைக்கு என்ன தெரியும்?’ என்று ஜாலியாகப் போயிருப்பார் கமல். ஆனால் இரானியோ சிறுவயதிலிருந்தே ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் இருந்து பயிற்சி எடுத்தவர். அந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் யாரும் காமா சோமா ஆட்களாக இருக்க மாட்டார்கள். இரானியின் எந்தக் கேள்விக்குமே கமலுக்கு பதில் தெரியவில்லை. மட்டுமல்ல, இரானி கேட்பதே கமலுக்குப் புரியவில்லை. இப்படி ஒரு பொது விவாதத்தில் கமல் படுதோல்வி அடைந்தது பற்றி வட இந்திய ஊடகங்கள் மிகவும் ஆச்சரியப்பட்டு எதிர்வினை செய்தார்கள். கழுவிக் கழுவி ஊற்றினார்கள் என்று எழுதினால்தான் சரியாக இருக்கும். கீழே வரும் இணைப்பைப் பாருங்கள். இந்தி தெரிந்தவர்களுக்கு மட்டுமே புரியும்.
கமல் – இரானி விவாதம்.
கமல் ஒரு ஜீனியஸ் என்று நான் வெகுவாக மதிக்கும் இரண்டு பேர் சொல்லியிருக்கிறார்கள். ஒரு ஜீனியஸுக்குத் தனக்கு எது தெரியவில்லை என்று தெரிந்திருக்க வேண்டும். ஸ்ம்ருதி இரானியோடு வாதம் செய்ய ஒரு ராமச்சந்திர குஹாவோ, ஒரு ஆஷிஷ் நந்தியோ அல்லது இவர்களைப் போன்ற புத்திஜீவிகளோதான் சென்றிருக்க வேண்டுமே அன்றி 40 ஆண்டுகள் ஜால்ராக் கூட்டத்தாலேயே வளர்க்கப்பட்ட ஒரு சினிமா நடிகர் சென்றிருக்கக் கூடாது. என்னால் அந்த விவாதத்தைத் தொடர்ந்து பார்க்கவே முடியவில்லை. ஒரு பயில்வான் ஒரு பொடியனைப் போட்டு அடி அடி என்று மிதிமிதியென்று போட்டுப் புரட்டிக் கொண்டிருப்பதை எப்படி நீங்கள் பார்க்க முடியும்? ரொம்ப வேதனையாக இருந்தது.
கமல் ஒரு ஜீனியஸ் என்றே ஒரு காமன்மேன் நம்புகிறான். அந்த இடத்திலிருந்தேதான் அவர் போடும் ட்வீட்டுகள் புரியவில்லை என்று புலம்புகிறேன். ஏன் எப்போதும் சாக்ரடீஸ் மாதிரியே பேசுகிறீர்கள், எங்களைப் போன்ற சாமான்யர்களுக்கும் புரிவது போல் பேசுங்களேன் என்பதுதான் எல்லோருடைய வேண்டுகோளும். பத்திரிகைகளும் அதேபோல் அவரிடம் வேண்டுகோள் விடுக்கின்றன. இந்த வேண்டுகோள் கமலின் ஈகோவுக்குத் தீனி போடுகிறது. அதனால் குஷியாகி மேலும் மேலும் அப்படியே பேசுகிறார். உண்மையில் அவர் ட்விட்டரில் எழுதுவது பெரும்பாலும் உளறல். அதில் உள்ள கடினமான வார்த்தைகளையெல்லாம் எடுத்து விட்டு எளிமையான வார்த்தைகளைப் போட்டால் அதில் எதுவுமே இருக்காது. அது மட்டுமல்லாமல் வாக்கிய அமைப்பில் கோளாறு. வார்த்தைக்கு வார்த்தை ஒற்றுப் பிழை. தமிழே தெரியாதவர்கள்தான் இப்படி அச்சுப்பிச்சுவென்று எழுதுவார்கள். இப்படி கமல் ட்விட்டரில் உளறுவதைத்தான் எல்லோரும் கமல் புரியாமல் எழுதுகிறார் என்கிறார்கள். அவர் யாருக்கும் புரியாமல் எழுதவில்லை. தமிழ் தெரியாமல் எழுதுகிறார்.
கமல் தன்னைப் பெரியாரிஸ்ட் என்று அடிக்கடி சொல்லிக் கொள்கிறார். பிராமணரைக் குறிக்க வேண்டுமானால் பார்ப்பான் என்கிறார். பொதுவாக பெரியாரை யார் குழி தோண்டிப் புதைக்கிறார்கள் என்றால் பெரியாரிஸ்டுகள்தான். பெரியார் குலாபிமானம், பாஷாபிமானம், தேசாபிமானம் கூடாது என்றார். ஆனால் பெரியாரிஸ்டுகள்தான் தமிழ் fanatics-ஆக இருக்கிறார்கள். தமிழ் இனவாதிகளாகவும் இருக்கிறார்கள். அவர் எதை ஆவேசமாக எதிர்த்தாரோ அதை இவர்கள் வெறித்தனமாக ஆதரிக்கிறார்கள். அந்தப் பெரியாரிஸ்டுகளின் வழியிலேயே கமலும் இப்போது நடந்து கொள்கிறார். அவர் தன் தந்தைக்கு சிலை வைப்பது அவருடைய சொந்த விஷயம். ஆனால் ஒரு பெரியாரிஸ்ட் சிலை வைக்கக் கூடாது. சிலைகளையெல்லாம் அடித்து நொறுக்குங்கள் என்றார் பெரியார். பெரியாருக்கே சிலை வைத்தார்கள். இப்போது பெரியாரிஸ்ட் கமல் தன் தந்தைக்கு சிலை வைக்கிறார். நல்லது. அது அவர் சொந்த விஷயம். ஆனால் அதில் ஒரு கல்வெட்டு வைத்திருக்கிறார். அதில் உள்ள வாசகமும் அவருடைய ட்விட்டர் வாசகங்களைப் போல் ஒரே தப்பும் தவறுமாக உள்ளது. கல்வெட்டில் கூடவா உளற வேண்டும்? கீழே பாருங்கள்.
இதில் பணித்தாயே என்று இருக்க வேண்டும். பணிந்தாயே என்று உள்ளது. எப்பேர்ப்பட்ட பிழை இது? இது கமலின் தந்தையாரின் சிலைக்குக் கீழே கல்வெட்டாகப் பதியப்பட்டுள்ளது. அது மட்டுமல்ல; இந்த அசிங்கம் சுவரொட்டியாகவும் அச்சிடப்பட்டு தமிழ்நாடு பூராவும் சுவர்களில் ஒட்டப்பட்டுள்ளது. கல்வெட்டு செய்யும் போது நடந்த பிழை என்று கமல் சொல்லலாம். ஆனால் அவர் பக்கத்தில் உள்ள கு. ஞானசம்பந்தன், சிநேகன் போன்ற தமிழறிஞர்களெல்லாம் என்ன செய்து கொண்டிருந்தார்கள்? அவர்களாலேயே கூட கமல் கவிதையில் நடந்துள்ள மிகப் பெரிய தவறை அவரிடம் சுட்டிக்காட்ட முடியவில்லையா? முடியவில்லையானால் அப்புறம் என்ன நட்பு? நட்பா அல்லது பண்ணையார் Vs அடிமை விவகாரமா? அல்லது, அறிஞர்கள் அனைவரும் பூஜா குமாரைப் பார்த்துக் கொண்டிருந்தார்களா?