சினிமா: அலைந்து திரிபவனின் அழகியல்

மேற்கண்ட நூல் இன்னும் சுமார் 15 தினங்களில் அல்லது அதிக பட்சம் ஒரு மாதத்திற்குள் உங்கள் கைகளில் கிடைக்கும். இப்போது பிழை திருத்தம் செய்து கொண்டிருக்கிறேன்.

Ulrike Ottinger என்று ஒரு ஜெர்மானிய இயக்குனர் இருக்கிறார். இவரைப் பற்றி சினிமா: அலைந்து திரிபவனின் அழகியல் நூலில் விரிவாக எழுதியிருக்கிறேன். 11 ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட கட்டுரை. இந்த நூல் என் சினிமா பற்றிய எழுத்துக்களில் மிக மிக முக்கியமானது. இந்தக் கட்டுரையைப் படிக்க வேண்டுமானால் ஒட்டிஞ்ஜரின் படங்களைப் பார்க்க வேண்டும். அவர் 21 படங்கள் எடுத்திருக்கிறார். ஒவ்வொரு படமும் குறைந்த பட்சம் எட்டு மணி நேரம். அவர் வயது இப்போது 77. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அலாஸ்காவுக்குப் பயணம் செய்து 12 மணி நேரப் படத்தை நான்கு பாகங்களாக எடுத்திருக்கிறார். இவர் பயணம் செய்த இடங்களுக்கு நாமும் பயணம் செய்ய வேண்டுமானால் நாமே ஒட்டிஞ்ஜராக மாற வேண்டும். வடக்கு மங்கோலியாவின் பனிப் பிரதேசங்களில் இரண்டு வருடத்துக்கு மேல் தங்கி அவர் படமாக்கியது Taiga. எட்டரை மணி நேர ஆவணப்படம். 2004 என்று நினைக்கிறேன். எனக்கு பைபாஸ் சர்ஜரி நடந்து மருத்துவமனையிலிருந்து வீட்டுக்கு வந்து ஓய்வில் இருக்கிறேன். அப்போது என் தோழி போன் செய்தாள். ஏய் சாரு, உங்களுக்குப் பிடித்த ஒட்டிஞ்ஜரோடு இப்போது நான் பேசிக் கொண்டிருக்கிறேன். பார்க் ஷெரட்டனில் இருக்கிறோம். உடனே வாருங்கள். நான் எங்கிருந்து வர? என்னால் நடக்கவே முடியவில்லை.

பிறகு பல ஆண்டுகள் கழித்து ஒட்டிஞ்ஜருக்கு எழுதிக் கேட்டேன். தைகா டிவிடி கிடைக்குமா என்று. இந்தியப் பணத்தில் 25000 ரூ. என்றார். விட்டு விட்டேன். அய்யனார், நம் வட்டத்தில் ஏதாவது ஏற்பாடு செய்து தைகா அல்லது அவரது சமீபத்திய படமான Chamisso’s Shadow இரண்டில் ஒன்றை நாம் துபயில் பார்க்க ஏற்பாடு செய்ய முடியுமா? 12 மணி நேரப் படம் என்பதால் இரண்டு தினங்களில் கூட பார்க்கலாம். ஆனால் டிவிடி விலைதான் பயங்கரமாக இருக்கிறது. நாலைந்து பேர் கூட்டாகச் சேர்ந்து வாங்கலாம். பார்க்கலாம். அதை விட முக்கியம்: சினிமா: அலைந்து திரிபவனின் அழகியல் என்ற நூல். அதில் ஒட்டிஞ்ஜர் பற்றியும் ஹொடரோவ்ஸ்கி பற்றியும் இரண்டு மிக மிக முக்கியமான கட்டுரைகள் உள்ளன. இப்போதைய இளம் எழுத்தாளர்கள் யாரும் படித்திருக்க வாய்ப்பு இல்லை என்று நினைக்கிறேன்.

அமீரக வாசகர் வட்டத்தின் மூலம் இந்த ஸ்க்ரீனிங் ஏற்பாடு செய்தால் நான் அங்கே நான்கு நாள் பயணமாக வரலாம்.