சினிமா: அலைந்து திரிபவனின் அழகியல் என்ற என்னுடைய நூலை பிழைதிருத்தம் செய்து கொண்டிருக்கிறேன். படுபயங்கரமான, அலுப்பான வேலையாக இருக்கிறது. ஆனால் பல பக்கங்களில் நான் கடந்து வந்த பாதையையும் திரும்பிப் பார்க்கிறேன். இந்த நூல் முதல் முதலில் வெளிவந்த ஆண்டு என்ன என்று தெரியவில்லை. கட்டுரைகளில் எழுதப்பட்ட ஆண்டு போட்டிருக்கிறது. 2007.
இந்த நூல் நல்ல சினிமாவைப் புரிந்து கொள்ள உதவியிருக்கிறது; இதன் மூலம்தான் சினிமாவை அறிந்தேன் என்றெல்லாம் பல உதவி இயக்குனர்கள் என்னிடம் சொன்னதுண்டு. ஆனால் இதுவரை ஒருமுறை கூட இந்த நூல் பற்றிய விரிவான விவாதமோ மதிப்புரையோ வந்ததில்லை.
ரித்விக் கடக் பற்றிய கட்டுரையில் இந்த இடத்தைப் பாருங்கள்:
சத்யஜித் ரேயும் ரித்விக் கடக்கும் சமகாலத்தவர்களாக இருந்தாலும் உலக அளவிலும் இந்திய அளவிலும் கொண்டாடப்பட்டவர் ரே. ரித்விக்கின் பெயர் அவ்வளவாக யாருக்கும் தெரியாது. இதன் காரணத்தை ஜேக்கப் லெவிச் விளக்குகிறார்:
Satyajit Ray is the suitable boy of Indian film, presentable, career-oriented, reliably tasteful. Ghatak, by contrast, is an undesirable guest: he lacks respect, has ‘views’, makes a mess, disdains decorum.
குடிகாரர், விளிம்புநிலையில் வாழ்ந்தவர், கலகக்காரர் என்று வாழ்ந்ததுதான் ரித்விக் புறக்கணிக்கப்பட்டதற்குக் காரணம். இதை ஏன் இங்கே இப்போது எடுத்து எழுதியிருக்கிறேன் என்று நீங்கள் புரிந்து கொள்ளலாம்.