அடுத்த நூற்றாண்டின் கவிதை

இந்த நூற்றாண்டின் கவிதை என்பார்கள் இல்லையா, அதுபோல இது அடுத்த நூற்றாண்டின் கவிதை…

30)மேக் புக் ப்ரோ

குப்பையான அறையில் அமர்ந்து
நள்ளிரவில்
எழுதிக்கொண்டு இருந்தேன்.

எங்கிருந்தோ ஓடி வந்த பூரான் ஒன்று
மேக் புக் ப்ரோவின் பின் பதுங்கிக்கொண்டது.

பூரான் தூங்கும் நேரம் பற்றி
ஒருக்கணம் சிந்தித்தாலும்,
அதைக் கொல்ல முடிவு செய்தேன்.

அறையெங்கும் தேடினாலும்,
புத்தகத்தைத் தவிர வேறெதுவும்
அடிக்க அகப்படவில்லை.

ஒரு க்ளாஸிக் புத்தகத்தை
எடுத்துக்கொண்டு மேக் புக் ப்ரோவின் பின்னால் வந்தேன்.

பூரான் இல்லை !

மேக் புக் ப்ரோவை தூக்கிப் பார்த்தேன் ,
பூரான் இல்லை.

அது எங்குமே தப்பித்துப் போயிருக்க வாய்ப்பில்லை.

மேக் புக் ப்ரோவுக்குள்
புகுந்து விட்டது என்ற முடிவுக்கு வந்தேன்.

ஆப்பிள் கால் செண்டருக்கு கால் அடித்து
சம்பவத்தை விளக்கினேன்.

பூரான் புகுமளவுக்கு மேக் புக் ப்ரோ டிசைன்
அனுமதிக்கிறதா என்று கேட்டேன்.

ஐ ஆம் வெரி சாரி, ஐ கேன் அண்டர்ஸ்டேண்ட் யூர் இஷ்யூ
ஐ நோ ஹௌ மச் யூ அண்ட் தட் பூரான் சஃபர் என்று
ஆரம்பித்த கஸ்டமர் கேரான்,

உள்ளே நுழைந்த பூரானுக்கும் , மேக் புக் ப்ரோவுக்கும்
எந்த பாதிப்பும் இல்லாமல் சரி செய்து விடலாம் என்றான்.

முக்கியமாக மேக் புக் ப்ரோ டிசைன் பூரானுக்கு
எந்த பாதிப்பும் ஏற்படாதவாறு வடிவமைக்கப்பட்டுள்ளது
என்றான்.

நாளை சர்வீஸ் செண்டருக்கு போகுமாறு பணித்தான்.

அவனுடனான உரையாடலை முடித்து விட்டு,
மேக் புக் ப்ரோவை தட்டிப் பார்த்தேன்.

பூரான் வெளியேறவில்லை.

இந்த கவிதையை மேக் புக் ப்ரோ மூலம்
பூரான் தான் எழுதியது என்றால் யார் நம்பப் போகிறார்கள்.

சொர்க்கத்திலும் தாடி இருக்குமெனில் ,
தாடியைத் தடவிக்கொண்டு ஸ்டீவ் ஜாப்ஸ் மட்டும்
சிரித்துக்கொண்டு இருக்கலாம்.
அராத்து