புத்தக விழா 5

வரும் 18-ஆம் தேதி மாலை ஏழு மணிக்கு சென்னை புத்தக விழாவின் எழுத்தாளர் முற்றம் என்ற அரங்கில் என் எழுத்துலகை அறிமுகம் செய்து வைத்து காயத்ரி பேசுவார். நானும் பேசுவேன். கலந்துரையாடலும் நடக்கும். நேற்று வரை நடந்த எழுத்தாளர் அறிமுக நிகழ்வுகளில் ரெண்டு மூணு பேர் மட்டுமே வந்திருக்கிறார்கள். அதனால் நிகழ்வுகள் எப்படி இருந்திருக்கும் என்று உங்கள் யூகத்துக்கே விட்டு விடுகிறேன். இதெல்லாம் எழுத்தாளர்களை அவமானப்படுத்தும் விஷயம் இல்லையா? இந்த நிகழ்ச்சியை ஒருங்கிணைக்கும் பாரதி புத்தகாலய நண்பர்கள் இதற்கும் மேல் என்ன செய்ய முடியும்? இப்படி ஒருங்கிணைப்பதே பெரிய விஷயம். ஆட்களையுமா பிடித்து வர முடியும்? சரி, 18-ஆம் தேதி மாலை என் நண்பர்கள் அங்கே வந்து ஆஜர் ஆகாவிட்டால் அவர்களை என் நட்பு வட்டத்திலிருந்து ப்ளாக் செய்து விடுவேன். வாட்ஸப், போன், முகநூல் எல்லாவற்றிலிருந்தும் ப்ளாக்தான். நட்பாக இருந்து கொண்டு இதைக் கூட செய்ய முடியாவிட்டால் அப்புறம் என்ன? அராத்து விதிவிலக்கு அல்ல.

என் மேல் அன்பு கொண்ட பலப் பல வாசகர்கள் இருக்கிறார்கள். இல்லை என்று சொல்லவில்லை. பலரும் கையெழுத்து வாங்குகிறார்கள். ஆனால் எல்லா ஸ்டால்களும் காலியாகவே உள்ளன. போன ஆண்டு கூட காப்பி கடைகளில் தள்ளுமுள்ளாக இருக்கும். அங்கே கூட இந்த ஆண்டு ஈ ஓட்டுகிறார்கள்.

இதெல்லாம் எனக்குச் சிறிதும் சம்பந்தம் இல்லாத விஷயம். இந்த ஆண்டு இன்னும் தீவிரமாக இயங்குவேன்.