சக்ரவாகம்

ஒரு முதிர்ந்த அல்லது இப்படி சொல்லலாம் ஒரு பழுத்த பெண்ணுடன் முயங்கியிருக்கிறீர்களா? முயங்கலில் அங்கமெங்கும் ஒளிந்துகிடக்கும் அவள் இளமையை தேடித்தேடி வேட்டை நாய்போல் அவள் தேகமெங்கும் நாவால் அலைந்துண்டா?

அவ்விளமையைத் தேடிக்கண்டடைந்ததுண்டா?

பாவாடை சட்டையிலிருந்து தாவணிக்கு மாறிய காலத்திலிருந்து இன்று வரையான அவளுடைய சரீரத்தின் ஒவ்வவொரு இனுக்குககளையும் பரவசத்தோடு சுவைத்ததுண்டா?

அப்படியானால் நீங்கள் தைரியமாக ந. சிதம்பர சுப்பிரமணியனின் “சக்ரவாகம் ” என்கிற சிறுகதைத் தொகுப்பை வாசிக்கத்தொடங்கலாம்.

அவருடைய “மண்ணில் தெரியுது வானம்” என்கிற புதினத்தை விடுங்கள், மனிதன் சிறுகதைகளில் அந்தக்காலத்தில் பேயாட்டம் ஆடியிருக்கிறார்.

இன்றைக்கு தமிழ் சிறுகதை வேறு ஒரு வளர்ச்சியடைந்த நிலையில் தன்னை நிறுவிக்கொண்டிருக்கிறது.

ஆனால் சிதம்பரசுப்பிரமணியன் வாழ்ந்த காலத்தில் இந்த சிறுகதைகள் ஒரு புரட்சிமாதிரிதான் இருந்திருக்க வேண்டும்.

சமஸ்கிருதமும் தமிழும் கலந்த அந்த நடை ஒரு மயக்கத்தை கூட்டுகிறது.

“தரிசன தாகம் ” என்கிற ஒரு சிறுகதையில் அகதரிசனம் என்கிற ஒரு விஷயத்தை லோகனாதன் என்கிற ஒரு சிறுவன் மூலம் லேசாக ஒரு கோடிழுத்துவிட்டுப்போகிறார்.

எதோ ஒரு சினிமா நிறுவனத்தில் வேலையிலிருந்திருக்கார் போல “தாய் நட்சத்திரம் ” என்கிற ஒரு சிறுகதையில் அழும் குழந்தையை விட்டுவிட்டு ஒரு காதல் காட்சியில் நடிக்க வேண்டிய நடிகையின் எண்ண ஓட்டங்களைப் பேசுகிறார்.

“பாட்டி ” என்றொரு கதை.
அந்தக்காலத்தில் இரண்டாம்தாரம் மூன்றாம்தாரம் எல்லாம் வெகுவியல்பாக நடந்த காலமில்லையா, அப்படி தங்கம் என்கிற சிறு பெண் நாற்பது வயது மனிதருக்கு இரண்டாம்தாரமாகப்போகிறாள். அந்த நாற்பது வயது மனிதரின் மகள் திருமணம் முடிந்து கைக்குழந்தையுடன் கல்யாணத்திற்கு வந்திருக்கிறாள். அவளுக்கும் அவளுடைய சிற்றன்னை தங்கத்திற்கும் நிகழும் அந்த சிறு உரையாடல்தான் கதை.
வாசித்துப்பாருங்கள்.

“அன்னதான சமாஜம் ” என்கிற சிறுகதையில் ஒரு குறைநலமுடைய குழந்தையை கட்டை என்று எழுதுகிறார், அதிர்ந்து போன வார்த்தையாடல் அது. கதையை வாசிக்கும்போது நீங்கள் புரிந்துகொள்ளமுடியும்.

லக்ஷயவாதியென்று ஒரு சிறுகதை அப்படி போகிற போக்கில் ஒரு எழுத்தாளனின் அன்றைய நிலையை சொல்லிவிடுகிறார்.

இந்தத் தொகுப்பு முழுக்க ஒரு பரவசத்தைத் கொடுத்தது.

இத்தனை வருடங்களில் தமிழில் சிறுகதை வடிவம் எத்தனையோ மாற்றங்களையும் பல பதிய வடிவங்களை கொண்டிருந்தாலும் இந்த பழுத்தபேரழகியுடன் முயங்குவது அத்தனைப் பரவசமாயிருக்கிறது.

வேண்டியவர்கள் வாங்கிப் படிக்க

எழுத்துப்பிரசுரம்.

விலை ₹190