மீண்டும் மன்னிப்பு… (2)

நான் என்னுடைய நிலைமையை மிகத் தெளிவாக ஒரு குழந்தைக்குக் கூட புரியும் வகையில் எழுதியிருந்தேன்.  இருந்தும் மேலும் மேலும் பிரச்சினை கொடுத்தால் நான் எவ்வளவுதான் தன்னிலை விளக்கம் கொடுப்பது என்று புரியவில்லை.  அந்த இளம் எழுத்தாளரின் நாவல் வெளியீட்டு விழாவுக்கு வந்து அந்த நாவல் பற்றிப் பேசுகிறேன் என்று ஒப்புக் கொண்டேன்.  ஒப்புக் கொண்ட போது நாவலைப் படித்திருக்கவில்லை.  ஆனாலும் ஏன் ஒப்புக் கொண்டேன் என்றால் அவர் முகநூலில் எழுதுவது எனக்கு மிகவும் பிடிக்கும்.  எனவே நாவலிலும் ரகளை செய்திருப்பார் என்று ரொம்பவே எதிர்பார்த்தேன்.  ஆர்வத்துடன் நாவலின் பிரதியையும் படித்தேன்.  பிடிக்கவில்லை.  ஐயா, எழுத்தாளரைப் பிடிக்கவில்லை என்று சொல்லவில்லை.  அந்த நாவல் பிடிக்கவில்லை.  இதற்குப் போய் “என்னை என் மனைவிக்கே பிடிக்கவில்லை; ஏன், எனக்கே என்னைப் பிடிக்கவில்லை…” என்றெல்லாம் துக்கம் கொள்ளலாமா?  நாவல்தானே ஐயா பிடிக்கவில்லை என்று சொன்னேன்?  இப்போதும் சொல்கிறேன், அவரது முகநூல் எழுத்து எனக்குப் பிடிக்கிறது. 

அந்த நாவல் ஏன் எனக்குப் பிடிக்கவில்லை, அதன் குறைகள் என்ன, நிறைகள் என்ன என்று என்னால் இரண்டு மணி நேரத்துக்கு உதாரணங்கள் காட்டி விளக்கிப் பேச முடியும்.  அதை நான் ஜனவரி பத்தாம் தேதிக்கு மேல் ஒரு காஃபி ஷாப்பில் அந்த இளம் எழுத்தாளரிடம் நேரில் விளக்கிச் சொல்வேன்.  எழுத மாட்டேன்.  தேவையில்லை என்று நினைக்கிறேன்.  ஒரு நாவல் 500 பிரதிகள் விற்கின்ற இந்த சமூகத்தில் எதிர்மறை விமர்சனம் எழுதத் தேவையில்லை என்று நினைக்கிறேன்.  சுமார் 50,000 பிரதிகள் விற்றால் நிச்சயம் ஒரு 30 பக்கத்துக்கு அந்த நாவலுக்கு விமர்சனம் எழுதுவேன்.  அப்போதுதான் அந்த எழுத்தாளருக்கு நியாயம் செய்ததாக இருக்க முடியும். 

மேலும், விழாவில் கலந்து கொள்கிறேன் என்று சொல்லி விட்டதற்காக அங்கே வந்தால் நான் என்ன பேச முடியும்? ஒன்று, பொய்யாகப் பாராட்ட வேண்டும்.  அதை என்னுடைய 60 வயது வரை செய்ததில்லை.  இலக்கியத்தில் சமரசம் என்பதே என் வாழ்வில் இல்லை.  அதை ஏன் இப்போது செய்ய வேண்டும்? இல்லையென்றால், விழாவில் கலந்து கொண்டு நாவலை விமர்சிக்க வேண்டும்.  விமர்சனம் மிக மிக மிக மிகக் கடுமையாக இருக்கும்.  தேவையா?  ஒரு தனிப்பட்ட சந்திப்பில் அந்த நண்பரிடமே நான் அதை விளக்கிச் சொல்லி விட முடியும்.  அதை ஏன் ஒரு விழாவில் வைத்துச் செய்து அவரையும் மற்ற நண்பர்களையும் புண்படுத்த வேண்டும்.

ஆனால் இதே அளவுகோலை சினிமாவுக்குப் பயன்படுத்த மாட்டேன்.  அவர்கள் கோடிகளில் கொழிக்கிறார்கள்.  அரசியல்வாதிகளை விட அதிகாரம் உள்ளவர்களாக இருக்கிறார்கள்.  நானும் அந்த இளம் எழுத்தாளரும் அறிந்த ஒரே கோடி, தெருக்கோடி தான்.  எனவே, சினிமாவுக்கு ஒரு அளவுகோல்; இலக்கியத்துக்கு வேறு அளவுகோல்தான். 

இன்னும் விரிவாக எழுதுவது தர்மம் அல்ல.  நாவல் வெளிவரும் வரை அது பற்றி நான் வாய் திறக்கக் கூடாது.  ஆனால் ஒன்று, அந்த நாவலைத் தமிழில் கொண்டாடுவார்கள்.  சாரு நிவேதிதாவின் தாக்கம் இருக்கிறது என்று கூட சொல்வார்கள்.  நூற்றுக்கு நூறு அந்த நாவலை உத்தமத் தமிழ் எழுத்தாளர் தாக்கி எழுதுவார். அதில் எனக்குச் சந்தேகமே இல்லை. உத்தமத் தமிழ் எழுத்தாளரும் நானும் எப்போதாவது சந்தித்துக் கொள்வோம்… புலிகள் விஷயத்தில் அப்படி நடந்தது. இப்போது இந்த நாவல் விஷயத்திலும் அப்படியே நடக்கும். என்ன காரணம் என்று… my dear young writer, ஜனவரியில் ஒருநாள் ஒரு காஃபி ஷாப்பில் அமர்ந்து உங்களுக்குச் சொல்கிறேன்…

Comments are closed.