மீண்டும் மீண்டும் மன்னிப்பு… (3)

என்னுடைய மிக நெருங்கிய நண்பர்கள் இருவரை நான் நீண்ட காலமாக முகநூலில் block செய்து வைத்திருக்கிறேன்.  காரணம், அவர்கள் முகநூலில் எழுதுவதைப் படித்தால் மன உளைச்சல் ஏற்படுகிறது.  மேலும், இந்த முகநூலால் நட்பு கெட்டு விடக் கூடாது என்ற முக்கியமான காரணமும் உண்டு.  அந்த இருவரில் ஒருவர் மனுஷ்ய புத்திரன்.  இதை ஹமீதிடமே போனிலும் சிரித்துக் கொண்டே சொல்லி இருக்கிறேன்.

ஆனால் முகநூலில் ஒருவரை ப்ளாக் செய்தாலும் நம் நண்பர்கள் அவர்கள் எழுதுவதை மெயிலில் அனுப்பி மன உளைச்சல் ஏற்படுத்துகிறார்கள்.  சரி, ஹமீதின் கேள்விகளுக்கும் யூகங்களுக்கும் என் பதில்.

மனுஷ்ய புத்திரன்: ”இதில் ஜெயமோகனை ஏன் சாரு இழுக்கிறார் என்று யோசிக்கும்போது ஒன்றுதான் தோன்றுகிறது. ’ஒரு பிரபல எழுத்தாளருக்குப் பதில் இன்னொரு பிரபல எழுத்தாளர்’ என்று நான் வேடிக்கையாகக குறிப்பிட்டதை தனக்குப் பதில் ஜெயமோகன் என புரிந்துகொண்டார் என்று நினைக்கிறேன். தன்னுடைய ஒரெ அல்டர் ஈகோவாக அவர் ஜெயமோகனை மட்டுமே ஏன் நினைக்கிறார் என்பதை புரிந்துகொள்ள முடிகிறது.”

ஹமீதின் யூகம் தவறு.  நான் இன்னொரு பிரபல எழுத்தாளர் என்று ஒரு பெண் எழுத்தாளரைத்தான் நினைத்தேன்.  அவர்தான் இந்த நாவல் பற்றி நல்லபடியாகப் பேச முடியும்.  ஆல்டர் ஈகோவாக ஜெயமோகனா?  இதை விட மனுஷ்ய புத்திரன் எனக்கு விஷம் கொடுத்துக் கொன்றிருக்கலாம்.  அல்லது, இன்னும் அதிக தண்டனை கூடக் கொடுத்து இருக்கலாம்.  ஜெ.வை நான் ஒரு எழுத்தாளர் என்றே நினைக்கவில்லை.  அவர் ஒரு புத்திஜீவி. அதுவும் வலதுசாரி.   அவ்வளவு தான்; எழுத்தாளர் அல்ல.  அவருக்கு மிக நீண்ட பாரம்பரியமும் இருக்கிறது.  கோ.கேசவன், கைலாசபதி, அ. மார்க்ஸ், எஸ்.வி. ராஜதுரை, தமிழவன், நாகார்ச்சுனன் என்று பெரிய முன்னோடிகள் ஜெயமோகனுக்கு உண்டு.  ஒரே வித்தியாசம் மேற்குறிப்பிட்டவர்கள் இடதுசாரிகள்.  ஜெ. வலதுசாரி.   மற்றபடி ஜெ.வின் எந்தப் புனைவு எழுத்துமே எனக்கு உவப்பானது அல்ல.  நான் என் ஆல்டர் ஈகோவாக நினைப்பது ஜான் ஜெனேயைத்தான்.  தமிழில் ஒரு ஆளைக் கூட நான் என் ஆல்டர் ஈகோவாகப் பார்க்கவில்லை.  ஜெ.வை நான் ஒரு எழுத்தாளராகவே நினைக்கவில்லை.  அவர் ஒரு நல்ல வசனகர்த்தாவும் கூட.  நான் கடவுளில் அவரது வசனத்தை நான் மிகவும் ரசித்தேன்.  

இந்த விவாதத்தை இளம் எழுத்தாளரின் நாவலுக்கான விளம்பரமாக எடுத்துக் கொள்ளலாம்.  ஏனென்றால், அராத்துவின் நாவலுக்குத்தான் சர்ச்சை கிளம்பும் என்று எதிர்பார்த்தேன்.  ஆனால் அதிர்ஷ்டவசமாக இந்த நாவல் பற்றி சர்ச்சை கிளம்பி விட்டது.  நல்லதுதான்.  congrats to my dear young writer…  (அராத்துவின் தற்கொலைக் குறுங்கதைகளுக்கும் ஏதாவது ஏற்பாடு செய்ய வேண்டும்)

(தொடரும்…)

 

Comments are closed.