நான் முகநூல் பக்கங்களில் அதிக நேரம் செலவழிப்பதில்லை. ஐந்து பத்து நிமிடங்களோடு சரி. sting operation எல்லாம் நடப்பதால் வந்த அலர்ஜியும் ஒரு காரணம். பெண் பெயரில் வரும் யாரோடாவது எப்போதாவது உரையாடல் செய்தாலும் தத்துவம், இசை, இலக்கியம், குறிப்பாக தேவ தச்சன், தேவ தேவன் என்றுதான் உரையாடுகிறேன். assholes, இதை வெளியிடுங்கடா என்று அப்போது நினைத்துக் கொள்வதுண்டு. கொஞ்ச நேரத்துக்கு முன்பு சவூதியில் வசிக்கும் என் நண்பர் கார்ல் மார்க்ஸ் ஷோபா சக்தி எழுதிய இந்தப் பதிவை அனுப்பியிருந்தார். படித்தேன். சுவாரசியமாக இருந்ததால் உங்களோடும் பகிர்ந்து கொள்ள வேண்டும் போல் இருந்தது. ஷோபா சொல்வதில் பலதிலும் உடன்படுகிறேன். ஆனால் எக்ஸைல் காம வறட்சியால் எழுதியது என்பதை ஒரு மூடன் கூட சொல்ல மாட்டான். எக்ஸைல் முழுவதும் காமம் ததும்பித் ததும்பி வழியும். எப்படியிருந்தாலும் ஷோபா என்னிடமிருந்து ஒரு செக்ஸி நாவலை எதிர்பார்க்கிறார் என்றே இதை எதிர்பார்க்கிறேன். எழுதுகிறேன். ஆனால் மற்ற நண்பர்கள் அதை போர்னோ என்று சொல்லி விடுவார்களே? ஷோபா எழுதியதில் நான் ரசித்த அட்டகாசமான விஷயம் அவர் அ. மார்க்ஸோடு ஜெயமோகனையும் சேர்த்தது. நேற்றுதான் எழுதியிருந்தேன். இன்று நடந்து விட்டது. பின்வருவது ஷோபா சக்தி:
நான் ‘இளம்’ எழுத்தாளராக இருந்தபோது எனது ‘கொரில்லா’ நாவலுக்கு சென்னையில் விமர்சனக் கூட்டம். அப்போதெல்லாம் எனக்கும் சாருவுக்கும் ‘தளபதி’ ரஜினி – மம்முட்டி ரேஞ்சில் நட்பு. (இப்போது ‘ஞானஒளி’ சிவாஜி -மேஜர் சுந்தரராஜனளவு நட்பு). கூட்டத்தில் சாரு நாவலை ‘இது இலக்கியமேயில்லை வெறும் தகவல் தொகுப்பே’ என்று கறாராகப் பேசினார். அந்தக் காலகட்டத்தில்தான் சாரு ‘ஸீரோ டிகிரி’ ஈழப் பிரச்சினையை மையமாக வைத்து எழுதப்பட்டது என வார்த்தையை விட்டிருந்தார். எனவே நானும் பதிலுக்கு ‘ஈழப் பிரச்சினையை ஸீரோ டிகிரி மாதிரி எழுதுமளவிற்கு எனக்கு இன்னும் அனுபவம் போதாது, மன்னித்துவிடுங்கள்’ என்று சாருவை கூட்டத்திலேயே வாரிவிட்டேன்.
அதற்குப் பிறகு ‘ராசலீலா’ பிரச்சினையில் இருவருக்கும் முட்டிக்கொண்டது. சண்டையென்றால் அப்படியொரு சண்டை. பாரிஸில் நடுத்தெருவில் நின்று சண்டை போட்டுக்கொண்டோம். ராசலீலா கொடுத்த கொதிப்பில், சாருவுக்கு பாலியல் குறித்த அறிவே கிடையாது. அவர் எழுதுவதெல்லாம் பாலியல் வறுமையால் உழல்பவனின் வக்கிரம் மட்டுமே என நான் எழுதப்போக, அவரோ ‘என்னுடைய பாலியல் அறிவைப் பற்றி என்னுடைய மனைவியிடம் ஷோபா கேட்டுத் தெரிந்துகொள்ளட்டும்’ என்று பதில் சொல்லி நான் சொன்னதை முழுவதுமாக நிரூபித்தார். எக்ஸில், காமரூபக் கதைகள், தேகம் எனத் தொடர்ச்சியாக எழுதி நான் சொன்னதையே அவர் மறுபடிம் மறுபடியும் நிரூபித்துக்கொண்டிருந்தார்.
எனது நாவல்களை கடுமையாக விமர்சித்ததால் நான் அவருடன் உறவை முறித்துக்கொண்டேன் என எழுதத் தொடங்கினார். அவ்வளவும் பச்சைப் பொய் என வைத்துக்கொள்ளுங்கள். அவர் உறவு முறிந்துவிட்டது எனத் திரும்பத் திரும்ப கோணல் பக்கங்களில் எழுதிக்கொண்டிருந்த போதுதான் நான் அவரது பிரான்ஸ் விசாவுக்கு ‘ஸ்பொன்சர் பத்திரம்’ தயாரித்துக் கொடுத்தேன். அவருடைய பாபா,நித்தியானந்தா, நல்லி குப்புசாமி, துக்ளக், மோடி பஜனையால்தான் நான் அவரிடமிருந்து தெறித்து ஓடினேன்.
எதுவாகயிருந்தாலும் சாருவின் முதலிரண்டு நாவல்களும் அவருடைய பாசாங்கான மொழியும் (ஆம் பாசாங்கான மொழிதான்- அதுதான் இலக்கியத்திற்கு அவசியம்) தமிழ் இலக்கியத்திற்கு ஒரு திறப்பு. அ.மார்க்ஸ், ஜெயமோகன் போன்ற கூர்மையான விமர்சகர்கள் கூட இதை மறுப்பதில்லை. என்னைப் போல அன்றைய பல இளம் எழுத்தாளர்கள் அவரது எழுத்துகளிற்கு பரம அடிமைகளாகக் கிடந்தோம் என்பதை இன்று ‘முதிய’ எழுத்தாளர்களாயிருக்கும் எங்களது ‘செட்’டில் என்னைத் தவிர வேறுயாரும் பொதுவில் சொல்வதில்லை என்றே நினைக்கிறேன்.
தல சொல்லும் பொய்களை, தல மீறும் வாக்குறுதிகளை, தல சொல்லும் முன்பின் முரண்களை எல்லாம் நான் இலக்கியமாகவே எடுத்துக்கொள்வதுண்டு. இலக்கியத்தில் தர்க்கத்தை எதிர்பார்ப்பவன் நானல்ல. எனவே இளம் எழுத்தாளத் தோழர்களே, ஒரு அன்னப் பறவையைப் போல நீங்கள் சாருவைப் பருகவேண்டும். அவர் தண்ணிகாட்டுவார்தான். ஆனால் நீங்கள் பாலை மட்டுமே பருகுங்கள். தக்கன பிழைக்கும் என்பதுதானே பிரபஞ்சத்தின் ஆகப்பெரிய மெய்யியல்.
Comments are closed.