பூச்சி 52

முன்பே இதை எழுத வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தேன்.  இப்போதுதான் இதற்கான நேரம் அமைந்தது.  மோடி ஒரு ஃபாஸிஸ்ட் என்பதற்கான காரணங்களை எழுதியிருந்தேன்.  ஃபாஸிஸத்தின் முக்கியமான அடையாளங்களில் ஒன்று, ஒழுக்கம்-கலாச்சாரம் ஆகியவற்றின் பேரில் மனித உடலை ஒடுக்குவது.  ஒரு பிரிவினரின் உணவுப் பொருட்களில் ஒன்றாக மாட்டுக் கறியை உண்பதற்கு அச்சப்படும் நிலையை உருவாக்கியதை இங்கே நினைவுபடுத்திக் கொள்ளலாம்.  வட இந்தியாவில் மாட்டுக் கறி உணவுக்குப் பேர் போன உணவகங்கள் பல கோழிக் கறிக்கு மாறியது பற்றியும் நான் ஏற்கனவே எழுதியிருந்தேன்.  அதே ரீதியில் நீங்கள் மதுவையும் எடுத்துக் கொள்ளலாம்.  ஒரு சமூகத்தில் குடிக்காதவர் எண்ணிக்கை எத்தனை?  பெண்களையும் சேர்த்தால் முப்பது சதவிகிதம் இருக்கலாம்.  இது ஊருக்கு ஊர் மாறுபடும்.  இருந்தாலும் எழுபது சதவிகிதத்தினர் குடிக்கின்ற ஒரு பொருளை ஒருசிலர் – தில்லி ஸௌத் ப்ளாக்கில் அவர்களின் எண்ணிக்கை – மோடியையும் சேர்த்து – ஒரு நூறு பேர் இருக்கலாம் – அத்தகைய சிறுபான்மையினரான ஒரு கூட்டம்  ஒட்டு மொத்த தேசத்தின் குடி பானத்தைத் தடை செய்ததைப் பார்த்தோம்.  மொத்தம் 45 நாட்கள் இந்த தேசம் முழுவதும் மதுக்கடைகள் மூடப்பட்டன.  இதற்கு எதிராகக் குரல் எழுப்பிய ஒரே நபர் கேரள முதல்வர் பினரயி விஜயன் மட்டும்தான்.  அவர் குரலையும் அமுக்கி விட்டார்கள்.  தினமும் 50 கோடி வருமானம் வருகின்ற ஒரு வழியை மூடி விட்டு, தமிழக முதல்வர் ”இதுவரை 120 கோடி ரூபாய் நிவாரண நிதி மக்களிடமிருந்து வந்திருக்கிறது” என்று அறிவித்தது ஒரு ட்ராஜிக்-காமெடியாகத்தான் இருந்தது.  150 கோடி ஜனத்தொகையில் ஒரு 120 கோடி பேராவது குடிப்பார்கள் இல்லையா?  அப்படியானால் அத்தனை பேர் குடிக்கக் கூடிய பானம் ஒன்றைத் தடை செய்வதற்கு யாருக்கு அதிகாரம் இருக்கிறது?  குடி நாட்டுக்கும் வீட்டுக்கும் கேடு என்று மதுக்கடை வாசலில் அரசாங்கமே எழுதி வைத்திருக்கிறது.  அப்படியானால் அப்படிக் கேடு செய்யும் ஒரு பொருளை நீ ஏன் விற்கிறாய் என்று மதுவுக்கு எதிரானவர்கள் கேட்கிறார்கள்.  தப்பான விஷயத்தைப் போட்டால் தப்பான கேள்விதானே வரும்?  நீங்கள் நல்ல சரக்கை விற்றால் ஏன் நாட்டுக்கும் வீட்டுக்கும் கேடு வருகிறது?  கர்னாடகா மதுவைக் குடித்து யாருக்காவது கேடு வந்திருக்கிறதா?  அலோபதி மருந்துகளை உட்கொள்கிறோமே, அவற்றால் வராத பக்க விளைவுகளா மதுவினால் ஏற்படுகிறது?  ஏற்பட்டால் நூறு வயது வரை வாழ்ந்த குஷ்வந்த் சிங் எப்படி ஒருநாள் கூட விடாமல் தினமும் குடித்தார்?  சாகின்ற தினம் கூட அவர் விஸ்கி குடித்தார் என்றுதான் அவரது வீட்டார் கூறியிருக்கின்றனர்.  மது என்ன விஷமா குடித்ததும் சாவதற்கு?  அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்றுதானே தமிழில் பழமொழியே இருக்கிறது?  எனக்குப் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு பைபாஸ் சர்ஜரி செய்த போது அங்கே என்னுடன் சர்ஜரி செய்து கொண்டு படுத்திருந்த அறுபது வயதுக்கு மேற்பட்ட தோழர்களை ஒவ்வொருவராகக் கேட்டேன், நீங்கள் மது அருந்துவீர்களா என்று.  நாங்கள் மொத்தம் பனிரண்டு பேர்.  என்னைத் தவிர மற்ற பதினோரு பேருமே அந்தப் பழக்கம் இல்லை என்றே கூறினர்.  முக்கால்வாசி மைலாப்பூர் பிராமணர்கள்.  அப்பளமும் ஆவக்காய் ஊறுகாயும் சாப்பிட்டே இதயக் குழாய் அடைபட்டிருக்கும். 

பல முறை எழுதி விட்டேன்.  தமிழ்நாட்டில் கிடைக்கும் மது மிகவும் மட்டமானது.  அதைக் குடித்தால்தான் கேடு.  ஆனால் டாஸ்மாக்கும் காலத்துக்குத் தகுந்தபடி மிகவும் முன்னேறி விட்டது.  அங்கேயும் பலவிதமான நல்ல சரக்குகள் வந்து விட்டன.  கம்மி விலையுள்ள, அதிகம் விற்கக் கூடிய ஓல்ட் மாங்க் போன்ற மதுவகைகளில்தான் கலப்படம் இருக்கிறது என்று நினைக்கிறேன்.  நாம் பேசிக் கொண்டிருப்பது அது அல்ல.  இந்த முப்பது சதவிகிதக் கூட்டம் மீதி எழுபது சதவிகிதத்தினரின் உணவுப் பொருளைத் தடை செய்வதற்கு என்ன உரிமை இருக்கிறது?  இதுதான் ஃபாஸிஸம் என்கிறேன்.  ஒரு நபர் கடற்கரையில் முன்பு உண்ணாவிரதம் இருந்தார்.  பிறகு உடல் நலிவடைந்து செத்துப் போனார்.  அவரும் ஒரு ஃபாஸிஸ்ட்தான்.  டாஸ்மாக்கை மூட வேண்டும் என்று பட்டினிப் போராட்டம் நடத்தி இறந்தார் அவர்.  நான் போய் மெரினா பீச்சில் அமர்ந்து கொண்டு யாரும் சிகரெட் குடிக்கக் கூடாது என்று சொல்லி உண்ணாவிரதம் இருக்கவா?  பைபாஸ் சர்ஜரி சமயத்தில் என்னைப் பரிசோதித்த அத்தனை மருத்துவர்களும் – சுமார் இருபது பேர் இருக்கும் – நீங்கள் புகைப்பீர்களா என்றே கேட்டார்கள்.  ஒருத்தர் கூட குடிப்பீர்களா என்று கேட்கவில்லை.  அதனால் ஆச்சரியம் அடைந்த நான் ஒரு மருத்துவரிடம் குடி கெடுதல் என்கிறார்களே, நீங்கள் யாருமே அதை என்னிடம் கேட்கவில்லையே என்று கேட்ட போது சிரித்துக் கொண்டே, குடி பர்ஸுக்குத்தான் கெடுதல் என்று ஜோக் அடித்து விட்டுப் போனார். 

இப்போது நான் ஒன்றும் குடிக்கு வக்காலத்து வாங்கிப் பேசவில்லை.  சரியாகப் புரிந்து கொள்ளுங்கள்.  குடி கெடுதலா இல்லையா என்பது பற்றியும் நான் பேச வரவில்லை.  ஆனால் மிகப் பெரும்பான்மையினர் உட்கொள்ளும் ஒரு உணவுப் பொருளை அவர்களிடமிருந்து பறிக்க நீங்கள் யார் என்றே கேட்கிறேன்.  உங்களுக்கு அதற்கு என்ன உரிமை இருக்கிறது?  பச்சையாகக் கேட்கிறேன்.  நான் என்ன சாப்பிட வேண்டும், சாப்பிடக் கூடாது, என்ன குடிக்க வேண்டும், குடிக்கக் கூடாது என்று சொல்ல நீங்கள் யார்?  அதுதான் என் கேள்வி.  ஊரடங்கு அமலில் இருக்கும் போது மதுக்கடைகளில் தள்ளுமுள்ளுக் கூட்டம் இருந்தால் கொரோனா தொற்றாதா என்பது அவர்களின் வாதம்.  அப்படிப் பார்த்தால் காய்கறிக்கடைகளில் தேர்த் திருவிழா போல் கூட்டம் அள்ளுகிறதே, எல்லா காய்கறிக் கடைகளையும் மூடச் சொல்லி கமல்ஹாசன் உயர்நீதி மன்றம் போவாரா?  (கமல்ஹாசனின் மய்யத் கட்சிதான் இந்த நீதிமன்றத் தடைக்கான மனுதாரர் என்பதால் கமலை இழுக்க வேண்டியிருக்கிறது.)  மய்யத் கட்சியை ஆரம்பிப்பதற்கு முன் விஸ்கி என்ன பாலிடாலா குடித்ததும் சாவதற்கு என்று கேட்டவரே அவர்தான்.  கட்சி ஆரம்பித்ததும் ஆள் மாறிவிட்டார்.  சரி, அவர் இந்த நாற்பத்தைந்து நாளும் குடிக்காமல்தான் இருந்தாரா?  கடவுள் மீது – ஸாரி, பெரியார் மீது சத்தியம் செய்யச் சொல்லுங்கள், பார்ப்போம்.  இந்த நாற்பத்தைந்து நாட்களும் இந்த சினிமா நடிகர்களுக்கு ரெமி மார்ட்டின் எப்படிக் கிடைத்தது என்பது என்னுடைய பெரிய சந்தேகமாக இருந்தது.  அப்புறம் வழக்கம் போல் சீனிதான் சந்தேகத்தைத் தீர்த்து வைத்தார். 

இப்போது டாஸ்மாக் வாசலில் மைல் கணக்கில் நின்ற கியூவைப் பார்த்துத்தான் இந்த டாஸ்மாக் மூடல் முடிவு எடுக்கப்பட்டிருக்கிறதாக யூகிக்கிறேன்.  அவர்கள் என்ன கியூவில்தானே நின்றார்கள்?  திறக்கப்பட்ட ஆயிரம் கடைகளில் பத்து இருபது கடைகளில் தள்ளுமுள்ளு இருந்திருக்கலாம்.  மற்ற கடைகளில் வேகாத வெய்யிலில் மணிக்கணக்கில் நின்று தானே மது வாங்கினார்கள்?  ஏனய்யா, குறைந்த பட்சம் நூறு ரூபாய்க்கு மது வாங்கும் ஒரு மனிதனை இப்படியா வதைத்துச் சாகடிப்பீர்கள்?  அப்படி என்ன அபூர்வமான பொருளா அந்த மது?  மலேஷியா என்ன மாதிரியான நாடு?  இஸ்லாமியர் பெரும்பான்மையாக வாழும் ஒரு இஸ்லாமிய நாடு.   அங்கே ஒவ்வொரு பெட்டிக் கடையிலும் பியரும் விஸ்கியும் மற்றும் இன்னோரன்ன மது பானங்களும் கிடைக்கின்றன.  ஒவ்வொரு டிபார்ட்மெண்டல் ஸ்டோர்களிலும் பியரும் விஸ்கியும் மற்றும் இன்னோரன்ன மதுபானங்களும் கிடைக்கின்றன.  அங்கே யாரும் மதுவுக்கு இப்படி ஒரு கிலோ மீட்டர் இரண்டு கிலோமீட்டர் தூரம் கியூவில் நிற்கவில்லையே?  அப்புறம் இந்தியாவுக்கு மட்டும் என்ன வந்தது?  இந்தக் கொரோனா ஊரடங்கு காலத்தில் கூட மலேஷியாவில் ஸ்டோர்களிலும் மளிகைக்கடைகளிலும் பெட்டிக்கடைகளிலும் எல்லா வகையான மதுபானங்களும் கிடைத்தன.  ஏனென்றால், அவர்கள் மதுவை ஒரு அத்தியாவசிய consumable product-ஆகக் கருதுகிறார்கள்.  சவூதி அரேபியா மற்றும் அது போன்ற ஒருசில நாடுகளைத் தவிர்த்து உலகம் பூராவும் அப்படித்தான் கருதுகின்றன.  உலகம் பூராவுமே கொரோனா ஊரடங்கு காலத்தில் மதுபானம் டிபார்ட்மெண்ட்டல் ஸ்டோர்களிலும் மளிகைக்கடைகளிலும் கிடைத்தன.  பார்களும் பப்களும் மட்டுமே மூடப்பட்டிருந்தன.  குடிப்பதை யாரும் கொரோனா பெயரைச் சொல்லித் தடை செய்யவில்லை.  அதனால்தான் சொல்கிறேன்.  இந்தியா ஒரு ஃபாஸிஸ்ட் தேசம்.  இங்கே வாழும் இந்துவும் முஸ்லீமும் கம்யூனிஸ்டும் ஆர்.எஸ்.எஸ்.ஸும் எல்லோருமே ஒரே அஜெண்டாவைத்தான் வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.  ஒழுக்கரீதியாக இவர்கள் எல்லோருடைய மேனிஃபெஸ்ட்டோவும் ஒன்றுதான்.  அது குடிக்கக் கூடாது.  இப்படிச் சொல்லும் இவர்கள் எத்தனை பேர் என்று பார்த்தால் நூற்றுக்கு இருபது பேர்.  முப்பது பேர் என்பது கூடப் பிழை என்று நினைக்கிறேன்.  இந்த இருபதே பேர் எண்பது பேரின் உடலைக் கட்டுப்படுத்துகிறார்கள்.   எதை உட்கொள்வது, எதை உட்கொள்ளக் கூடாது என்று அறிவுறுத்துவதன் மூலம் இந்த இருபது சதவிகித ஃபாஸிஸ்டுகள் எண்பது சதவிகித மக்களை ஒடுக்குகிறார்கள். 

டாஸ்மாக்கில் ஏன் இத்தனை கூட்டம்?  அவர்களின் அத்தியாவசிய உணவுப் பொருள் ஒன்றை நீங்கள் நாற்பத்தைந்து நாட்கள் தடை செய்து வைத்திருந்தீர்கள்.  கூட்டம் கூடாதா?  கூட்டத்தை எப்படித் தவிர்த்திருக்கலாம்.  உலகம் பூராவிலும் உள்ளபடி பியர் பாட்டில்களை மட்டுமாவது டிபார்ட்மெண்டல் ஸ்டோர்களில் விற்பனைக்கு வைத்திருக்கலாம்.  தெருவுக்கு ஒரு டிபார்ட்மெண்ட்டல் ஸ்டோர் இருக்கிறது.  இப்படி சிகரெட் கிடைப்பது போல் எல்லா இடத்திலும் எல்லா டிபார்ட்மெண்டல் ஸ்டோரிலும் மது கிடைத்தால் அவர்கள் ஏன் இப்படி வேகாத வெயிலில் ரெண்டு கிலோமீட்டர் தூரம் க்யூவில் நிற்கப் போகிறார்கள்?  குறித்து வைத்துக் கொள்ளுங்கள்.  இன்னும் பத்து ஆண்டுகளில் இது நடக்கும்.  நான் முன்கூட்டியே சொல்கிறேன்.  ஆக, உங்களுடைய விநியோக முறையில் பிழையை வைத்துக் கொண்டு டாஸ்மாக் வாசலில் கூட்டம் என்று சொல்லி டாஸ்மாக் கடைகளை மூடுவது ஜனநாயக விரோதமானது; மனித உரிமைக்கே எதிரானது.  இங்கே என்ன தாலிபான் ஆட்சியா நடந்து கொண்டிருக்கிறது?  யாரும் மது அருந்தலாகாது என்று நம் அரசியல் சட்டத்தில் சொல்லியிருக்கிறதா என்ன?  பெரும்பான்மையான மக்கள் உட்கொள்ளும் ஒரு பானத்தை 45 தடை செய்ததே மனித உரிமை மீறல் என்ற நிலையில் அதை மீண்டும் தடை செய்திருப்பது மிக மிக மோசமான மனித உரிமை மீறல் என்றே சொல்ல வேண்டியிருக்கிறது.  இதற்குக் கமல்ஹாசனே துணை போயிருப்பது மிகப் பெரிய துரதிர்ஷ்டம்.  மேலும், ஒருவர் குடிக்கலாம் குடிக்கக் கூடாது என்று சொல்ல குடிப்பழக்கம் இல்லாதவர்களுக்கு என்ன உரிமை இருக்கிறது?  ஒட்டு மொத்த இந்தியாவிலிருந்தும் தமிழ்நாடு மட்டும் பைத்தியக்காரத்தனத்தில் முன்னணியில் நிற்கிறது.   டாஸ்மாக் தடையை ஆதரிப்பவர்கள் கொஞ்சம் வெளி மாநிலங்களை, வெளிநாடுகளைப் பாருங்கள் என்று கேட்டுக் கொள்கிறேன்.  கமல்ஹாசனும் எல்லா அரசியல்வாதிகளையும் போல் மாறி விட்டார், நல்லது.  இந்த நாட்டை யாராலும் காப்பாற்ற முடியாது.