பூச்சி 72

ஒரு வாசகர் பின்வரும் கேள்வியை நேற்று அனுப்பியிருந்தார்.  ”நாம் ஹலோ சொல்வதற்குக் கூடத் தகுதியில்லாதவர்களையெல்லாம் சார் போட்டுப் பேச வேண்டும்.”

ஹலோ சொல்ல ஒரு மனிதனுக்கு என்ன தகுதி வேண்டும் Mr. Charu?

பாரதி மகாத்மாவை சந்தித்த அத்தியாயத்தைப் படித்தாலே இந்தக் கேள்விக்கு பதில் தெரிந்து விடும்.  இருந்தாலும் கேள்வியில் இருந்த மிஸ்டர் என்ற வார்த்தை எனக்கு அவமரியாதை போல் பட்டதால் எதுவும் பதில் எழுதவில்லை.   வெறுமனே சாரு என்று எழுதினால் எனக்கு அப்படித் தோன்றியிருக்காது.  தொண்ணூறு சதவிகிதம் பேர் சாரு என்றுதான் என்னை அழைக்கின்றனர்.  சாரு சாரை விட சாரு என்பதே எனக்குப் பிடித்தமானது.  ஆனால் இந்த மிஸ்டர் என்னைக் கொஞ்சம் பயமுறுத்தி விட்டது.  அது அப்படித்தான்.  மேற்கத்தியர்களுக்கு மிஸ்டர் மரியாதை; ஆசிய நாடுகளில் அது மரியாதைக்குரிய வார்த்தை அல்ல.  குறிப்பாக இஸ்லாமியப் பின்னணியில் வளர்ந்தவர்களுக்கு.  நாங்களெல்லாம் பிரதர் என்று சொல்லித்தான் வளர்ந்திருக்கிறோம்.  மொத்த இந்தியாவையும் சொல்கிறேன்.  இங்கே சகோதரனே என்று அழைப்பதே மரியாதை.  பெண்களாக இருந்தால் பேத்தி என்றோ, மகளே என்றோ, சகோதரி என்றோதான் அழைப்பது.  ஆனால் இப்போது அந்தப் பழக்கம் அருகி வருகிறது.  யாருக்கும் யாரையும் முறை போட்டு அழைப்பது பிடிப்பதில்லை.  அது நல்லதும் கூடத்தான்.  ஆனாலும் மிஸ்டர் இங்கே பழக்கம் இல்லை.  அதை யாரும் மரியாதையாகக் கருதுவதில்லை.  திட்டுவதாக இருந்தால்தான் மிஸ்டர் என்கிறோம்.  “மரியாதையா வெளீல போய்டுங்க மிஸ்டர், இல்லேன்னா போலீஸைக் கூப்பிட வேண்டியிருக்கும்.” 

”பிரதர், எட்டு மணி வண்டி போய்டுச்சா?”

அரபுக் கலாச்சாரத்திலும் இப்படி சகோதரனே என்றுதான் விளிப்பார்கள்.  அமெரிக்கர்களுக்கு அது ரொம்பப் புதுமையாகத் தெரியும்.  அதனால் அந்தக் கேள்வியை நான் பொருட்படுத்தவில்லை.  ஆனால் அதே வாசகரிடமிருந்து இன்று இன்னொரு மின்னஞ்சல் வந்த போது கொஞ்சம் நெகிழ்ந்து விட்டேன்.

”முன்பு அனுப்பிய மெயிலில் நான் கேட்டதற்கு என் நண்பன் விடை சொல்லிவிட்டான்.  நான் உங்களை வி ட   எந்த விதத்திலும் தாழ்ந்தவன் இல்லை என்று சொல்லத்தான் நீங்கள் அவ்வாறு கூறி உள்ளீர்கள் என்று. என் முந்தைய மெயில் உங்களைக் காயப்படுத்தி இருந்தால் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.”

அந்த நண்பர் கூறியதை விடவும் பல அர்த்தங்கள் நான் சொன்னதில் உண்டு.  அவற்றை இங்கே விளக்குகிறேன். இருபது ஆண்டுகளுக்கு முன்பு நானும் அவந்திகாவும் என் தங்கை வீட்டுக்குப் போனோம்.  எனக்கு மூன்று தங்கைகள்.  அதில் ஒன்று இது.  நான் போனதே ஒரு பத்து ஆண்டுகளுக்குப் பிறகுதான்.  அப்போது என் தங்கை என்னிடம், “என்னண்ணே, வீடு கட்டிட்டீங்களா?” என்று கேட்டது.  நான் அந்தக் கேள்வியை ரசிக்காமல் “இல்லியே?” என்றேன்.  உடனே அப்போதும் அடங்காமல், “என்னண்ணே, நாங்கள்ளாம் வீடு கட்டிட்டோம்.  இவ்ளோ பெரிய ஆளா இருந்துக்கிட்டு நீங்க இன்னும் கட்டாம இருக்கீங்க?” என்றது.

அவ்வளவுதான், எனக்கு சுர்ரென்று கோபம் வந்து விட்டது.  ஆனால் காண்பித்துக் கொள்ளவில்லை.  ஐந்து நிமிடம் இருந்து விட்டுக் கிளம்பி விட்டேன்.  பக்கத்துத் தெருவிலேயே இன்னொரு தங்கையின் வீடு இருந்ததால் தப்ப முடிந்தது.  அதற்குப் பிறகு எந்த உறவினர் வீட்டுக்கும் சென்றதில்லை.  உறவினர் என்றால் சகோதர சகோதரிகள் என்று கொள்க.  மற்ற உறவினர் என் வாழ்விலேயே இல்லை.  வாழ்வு சாவே இல்லை.  கல்யாணத்துக்கும் போவதில்லை; மற்றதுக்கும் போவதில்லை.  சங்காத்தமே இல்லை.  சண்டை சச்சரவெல்லாம் இல்லை. 

இதிலிருந்து புரிகிறதா?  அண்ணன் யார், அவன் எப்படிப்பட்டவன் என்று கூடப் புரியாமல் வாழ்கின்றவர்களிடம் நான் எப்படி ஹலோ சொல்வது?  பணமே வாழ்க்கை, வீடு கட்டுவதே வாழ்வின் குறிக்கோள் என்று இருப்பவர்களிடம் நான் எப்படி ஹலோ சொல்வது?  அவர்கள் அப்படி இருக்கலாகாது என்று நான் சொல்லவில்லை.  ஆனால் அவர்களின் மதிப்பீடுகளை என் மீது திணிக்கக் கூடாது இல்லையா?  வீடு கட்டு என்று அவந்திகா என்னிடம் சொல்லவில்லை.  அது என் கொடுப்பினை.  சொல்லியிருந்தால் அவளையும் பிரிந்திருப்பேன்.  என் அதிர்ஷ்டம் அவளும் என்னை மாதிரியேதான். 

இதனால்தான் அடிக்கடி நான் ’எனக் மனிதர்களை விட பிராணிகளையே பிடிக்கும்’ என்று சொல்லி அதன்படி வாழ்ந்தும் வருகிறேன்.  என் உடன் வாழும் அவந்திகாவும் அப்படியே என்பதில் எனக்கு சந்தோஷம்தான். 

ஒருமுறை ஒரு நண்பர் ஒரு பொது நிகழ்ச்சியில் கமல்ஹாசனை எனக்கு அறிமுகம் செய்து வைத்தார்.  எனக்கு முன்னே நின்று கொண்டிருந்த ஞாநியை அறிமுகம் செய்த போது ஞாநியிடம் நின்று இரண்டொரு நிமிடம் பேசிய கமல், அந்த நண்பர் என்னையும் கமலிடம் அறிமுகம் செய்த போது நான் கைகுலுக்க கையை நீட்டிய போது – அப்போதெல்லாம் கொரோனா இல்லை – கையை வெடுக்கென்று இழுத்துக் கொண்டு கடுகடுவென்ற முகத்துடன் அந்த இடத்தை விட்டு நகர்ந்து விட்டார்.  யாருக்கு அவமானம்?  எனக்கா?  இல்லவே இல்லை.  ஊடக வெளிச்சத்துக்கு முன்னே நூறு பேருக்கு முன்னே இது நடந்தது.  கமலுக்குத்தான் அவமானம்.  தசாவதாரம் விமர்சனத்தால் அவர் கோபத்தில் இருந்திருக்கலாம்.  நான் என்ன செய்ய முடியும்?  நான் என்ன அவருடைய கைத்தடிகளில் ஒருவனா, அவருக்கு ஜால்ரா அடிப்பதற்கு?  என்னுடைய நண்பர் ஒருவர் கமலுக்கு நெருக்கமான வட்டத்தில் இருப்பவர்.  தினந்தோறும் கமலை சந்திப்பவர்.  நண்பர் ஃப்ரெஞ்ச் நன்கு தெரிந்தவர்.  ஆனால் கமலோ பொதுமேடையில் ஃப்ரெஞ்ச் திரைப்பட இயக்குனர் Godardஐ கோடார்ட் என்கிறார்.  எதுவுமே படித்திராத ஒரு பாமரன் தான் இன்று கோடார்ட் என்று சொல்வான்.  எனக்கு என்ன ஆச்சரியம் என்றால், ஃப்ரெஞ்ச் தெரிந்த நண்பரால் கமலைத் திருத்த முடியவில்லை.  அதற்கான ‘இடம்’ அந்த எழுத்தாள நண்பருக்கு கமலிடம் இல்லை.  இதை எதற்கு சொல்கிறேன் என்றால், அவரோடு பழகினால் ஜால்ரா மட்டும்தான் அடித்துக் கொண்டிருக்க முடியும்.  ஒரு தப்பைக் கூடத் திருத்த முடியாத நிலையில்தான் திரைப்பட ஹீரோக்கள் தங்களைச் சுற்றி ஒரு வளையம் போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.  பேண்ட் ஜிப்பே போட மறந்து போயிருந்தால் கூட உடன் இருப்பவர்களால் சொல்ல முடியுமா என்று எனக்குத் தெரியவில்லை.  ஆக, இப்படிப்பட்ட கைத்தடிகளை மட்டுமே உடன் வைத்திருப்பவர்களுக்கு நான் எப்படி ஹலோ சொல்ல முடியும்?  நான் ஹலோ சொல்லும் தகுதி இவர்களுக்கு இருக்கிறதா? அதை விடுங்கள்.  பாரதிக்கு வருவோம்.  மஹாத்மாவுக்கு முன்னாலேயே மகாத்மாவின் கட்டிலில் கால் மேல் கால் போட்டுக் கொண்டு மிஸ்டர் காந்தி என்று அழைத்தது போல் கமல் அலுவலகத்தில் கமலுக்கு முன்னே நான் கால் மேல் கால் போட்டுக் கொண்டு மிஸ்டர் கமல் என்றோ அல்லது வெறுமனே கமல் என்றோ         அழைக்க முடியுமா?  

இன்னொரு முறை இன்னொரு பிரமுகரிடம் அப்படி நடந்தது.  அவரது சமூகநீதிக் கட்டுரைகள் எனக்கு ரொம்பப் பிடிக்கும்.  ஒரு நிகழ்ச்சியில் அந்த மனிதர் தனியாக நின்று கொண்டிருந்ததால் அவரை அணுகி உங்கள் கட்டுரைகள் எனக்கு மிகவும் பிடிக்கும் என்று சொல்லிக் கை கொடுத்தேன்.  உடனடியாக அவர் கையை உதறிக் கொண்டு அப்பாலே போய் விட்டார்.  அப்போது என் அருகில் இருந்த அராத்து இதைப் பார்த்து மிரண்டு போனார்.  இப்போது கமல் பெயரை மட்டும் குறிப்பிட்டு விட்டு இவர் பெயரைக் குறிப்பிடாமல் இருப்பதற்கும் ஒரு காரணம் உண்டு.  இந்தச் சம்பவம் நடந்து சில மாதங்கள் சென்று வேறொரு நிகழ்ச்சியில் அன்னாரைக் கண்டு நான் ஒதுங்கிய போது அவரே என் அருகில் வந்து பேசினார்.  முன்னால் நடந்த சம்பவத்துக்கு வருத்தம் தெரிவிக்கவில்லை என்றாலும் நட்பாகப் பேசிக் கொண்டிருந்தார்.  அதற்குப் பிறகும் மைலாப்பூரில் என்னைப் பார்த்தால் காரை நிறுத்தி இரண்டொரு வார்த்தை பேசி விட்டுப் போவார்.  நானும் முன்பு நடந்ததை மறந்து விட்டேன்.  

மேற்கண்ட இரண்டு சம்பவங்களும் நடந்து ஐந்தாறு ஆண்டுகள்தான் இருக்கும்.  ஆனால் அது என் பழக்கவழக்கத்தைக் கொஞ்சம் மாற்றி விட்டது.  நேர்வாழ்விலும் கொஞ்சம் கரடுமுரடாகி விட்டேன்.  யாரிடமும் நானாகப் போய்ப் பேசுவதில்லை.  என் அனுமதி இல்லாமல் எந்த ஒரு நண்பரும் என்னை யாரிடமும் அறிமுகப்படுத்தக் கூடாது.  இதில் என்ன சிக்கல் என்றால், நீங்கள் உங்களுடைய மைத்துனரிடம் என்னை ஒரு எழுத்தாளர் என்று அறிமுகப்படுத்தினீர்கள் என்றால் அவர் உடனே என்னிடம் எந்தப் படத்துக்கு எழுதுகிறீர்கள் என்கிறார்.  மைத்துனரை விடுங்கள்.  ஆனானப்பட்ட கமலே – சே, என் நண்பர்கள் பலரும் கமல் நண்பர்கள், அவர்களின் பொல்லாப்பை எல்லாம் வாங்கிக் கட்டிக் கொண்டு திரும்பத் திரும்ப கமலையே இழுக்க வேண்டியிருக்கிறது – ஒரு நிகழ்ச்சியில் இயக்குனர் ஷங்கரை எழுத்தாளர் ஷங்கர் என்று திரும்பத் திரும்ப இரண்டு முறை வலியுறுத்திச் சொன்னதால் இந்த ஒட்டுமொத்த தமிழ்ச் சமூகத்துக்கே எழுத்தாளர் என்றால் யார் என்று தெரியவில்லை என்ற முடிவுக்கு வர வேண்டியிருக்கிறது.  சமீபத்தில் சோ. தர்மன் பல்வலிக்காக மருந்துக் கடைக்குப் போன போது நடந்த சம்பவத்தை நீங்கள் அறிந்திருக்கலாம்.  இரவு நேரம்.  ஊரடங்கு அமலுக்கு வந்த ஆரம்பக் காலகட்டம்.  போலீஸ் நிறுத்தி விட்டது.  நீ வா போ தான்.  கிராமத்துப் போலீஸ் வேறு.  நகரப் போலீஸ் வேறு.  தர்மன் உடனே தனக்குத் தெரிந்த போலீஸ் சூப்பிரண்டெண்டெண்ட்டை அழைத்து விஷயத்தைச் சொல்கிறார்.  அதிகாரி அந்தக் காவலர்களிடம் பேச, சார் நீங்கள் ரைட்டர்னு முதல்லியே சொல்லிருக்கலாமே சார் என்றார்களாம்.  அதோடு முடிந்திருந்தால் விசேஷம் இல்லை.  இவர் கிளம்ப எத்தனிக்கையில் நீங்கள் எந்த ஸ்டேஷனில் ரைட்டர் சார் என்று கேட்டிருக்கிறார்கள் போலீஸ்காரர்கள்.  ”ஏதோ ஒரு போலீஸ் ஸ்டேஷனைச் சொல்லி, நான் தான் என்கவுண்ட்டர் எமதர்மன்” என்று சொல்லிவிட்டு வந்திருக்கிறார்.  விறைப்பாக சல்யூட் அடித்திருக்கிறார்கள் போலீஸ்காரர்கள்.  இப்படிப்பட்ட பைத்தியக்கார நாடு இந்தத் தமிழ்நாடு.  டாக்டர் என்றால் தெரியும்.  எஞ்ஜினியர் என்றால் தெரியும்.  காண்ட்ராக்டர் என்றால் தெரியும்.  நடிகன் தெரியும்.  இசையமைப்பாளர் தெரியும்.  ஆசிரியர் தெரியும்.  எழுத்தாளர் என்றால் உலக இலக்கியம் படிக்கிறவருக்கே தெரியாது. காமன்மேனோ போலீஸ் ஸ்டேஷன் ரைட்டர் என்று நினைத்துக் கொள்கிறான்.  இந்த நிலையில்தான் என்னை யாருக்கும் ரைட்டர் என்றோ, எழுத்தாளர் என்றோ அறிமுகப்படுத்தாதீர் என்று முன்கூட்டியே எச்சரிக்கை கொடுத்து விடுகிறேன்.  இப்படி அடையாளமே தெரியாதவர்களிடம் ஹலோ சொல்லிப் பயன் இல்லை.

பார்க்கில் ஒருநாள் ஒரு நண்பர் என்னை மைலாப்பூர் எம்மெல்லே நடராஜிடம் அறிமுகப்படுத்தினார்.  அவர் போலீஸ் கமிஷனராக இருந்து அரசியலுக்கு வந்தவர். என் பெயரைக் கேட்டதும் அவர் நான் என்ன செய்கிறேன் என்று கேட்டார்.  இதுவே எனக்கு அநாவசியம்.  பிற்பாடு அந்த நண்பரிடம் என்ன வெங்காயத்துக்கு அவரிடம் என்னை அறிமுகப்படுத்தினீர், இனிமேல் இது போன்ற தப்புக் காரியத்தை செய்யக் கூடாது என்று கண்டித்தேன்.  கதை இன்னும் முடியவில்லை.  அதற்குள்ளாகவே நண்பர் இவர் ஒரு ரைட்டர் சார் என்றார்.  எம்மெல்லே என் பெயரை மீண்டும் கேட்டார்.  சாரு நிவேதிதா என்றேன்.  உடனே ஓ, சாருலதாவா? கல்கியில் உங்க கதை நிறைய படித்திருக்கிறேன் என்றார். 

அடக் கடவுளே, நடராஜ் இத்தனைக்கும் ஒரு பிராமணர்.  திராவிடக் கொழுந்துகளைப் பார்த்து “நீங்கள் மட்டும்தானா ஃபிலிஸ்டைன்?  இதோ நாங்களும் வருகிறோம்” என்று ஒட்டு மொத்த பிராமண சமூகமே ஃபிலிஸ்டைனாக மாறி விட்டது போல் ஒருக்கணம் என் கண் முன்னால் ஒரு காட்சி வந்து போனது. 

சரி, இலக்கியம் கலை எதுவும் வேண்டாம்.  ஒரு காமன்மேன் என்ன பாவம் பண்ணினான்?  அவனிடம் ஏன் ஹலோ சொல்வதில்லை?  ஹலோ சொன்னதும் போதும், மடை திறந்த வெள்ளம் போல் ஏதேதோ உளறுகிறார்கள்.  மெண்டல் அஸைலத்திலிருந்து தப்பி வந்தவர்களைப் போல் உளறிக் கொண்டே இருக்கிறார்கள்.  ஒரு உதாரணம்:  காலைலயே குடிச்சிருவீங்களா சார்?

அதிலும் ஆட்டோ டிரைவர்களிடம் ஹலோ சொன்னீர்கள், செத்தீர்கள்.  அப்படித்தான் ஒருத்தரிடம் நட்பாக ஹலோ சொல்லி விட்டு ஏறினேன்.  பக்கத்தில் இன்னொரு ஆட்டோக்காரர்.  காசை முதலிலேயே கொடுத்து விடுங்கள் என்று சொன்னதால் (ஹலோ சொன்னதுக்குத் தண்டனை) பணத்தை எடுத்து நீட்டினேன்.  அப்போது இன்னொரு ஆட்டோக்காரர் – என் கையில் இருந்த பத்து ரூபாய்த் தாளைப் பார்த்து – அப்போதுதான் மோடி புதிய பத்து ரூபாயை வெளியிட்டிருந்தார் – சார், புதுசா சார் நோட்டு, ஒரு நிமிஷம் பாத்துட்டுக் குடுத்துட்றேன் சார்  – என்று வாங்கிப் பார்த்து விட்டு, நானே வச்சுக்கவா சார் என்கிறார்.  அடப் பிச்சைக்காரப் பயலே என்று நினைத்துக் கொண்டேன்.  அந்த ஆள் எனக்கு ஆட்டோ ஓட்டுபவர் கூட இல்லை.  அடுத்த ஆட்டோ.  ஆனால் பிச்சை எடுக்கத் துணிகிறான்.  இப்படி காமன்மேனிலிருந்து படித்தவன் வரை ஏடாகூடமாகவே இருக்கும்போது என்னைப் போன்ற ஒரு ஆள் ஹலோ சொல்வதற்குக் கூட யோசிக்கத்தான் வேண்டியிருக்கிறது.  மேலும், பணத்தையும் அதிகாரத்தையும் வைத்து மட்டுமே ஆளை எடை போடுகின்ற ஒரு சமூகத்தில் என்னைப் போன்ற ஒரு ஆள் எல்லோரிடமும் சரிசமமாகவோ ஜனநாயக பூர்வமாகவோ பழகிக் கொண்டிருக்க முடியாது. 

என்னைப் போன்ற ஆள் என்றால் என்ன பொருள்?  உற்றம் சுற்றம் உறவு பந்தம் பாசம் எல்லாவற்றையும் விட்டவன் நான்.  பொருள் மீதான ஆசையும் இல்லை.  மரண பயத்தையும் விட்டாயிற்று.  இன்னும் என்ன இருக்கிறது?  இப்படிப்பட்ட ஒரு ஆளை எனக்குப் பரிச்சயமானவர்கள் என்ன பாடு படுத்துகிறார்கள் தெரியுமா?  யாராவது தெரிந்தவரைப் பார்த்தாலே பக்கத்து சந்தில் புகுந்து போய் விடத் தோன்றுகிறது.  தவறிப் போய் ஆள் பார்த்து விட்டால் பக்கத்தில் வந்து ஏதோ சாகக் கிடப்பவனை விசாரிப்பது போல், ”சாரு ஹெல்த் எப்டி இருக்கு?” என்று கேட்டு டார்ச்சர் செய்கிறார்கள்.  “ஏன், நல்லாத்தானே இருக்கு?” என்றால், பதிலுக்கு, “போன மாசம் ஹார்ட் அட்டாக்னு கேள்விப்பட்டேனே?” என்று குறுவாளால் சொருகுகிறார்கள். 

உண்மையிலேயே மனிதர்களைக் கண்டால் பயமாகத்தான் இருக்கிறது. 

***

Xoom.com மூலம் பணம் அனுப்ப என் முகவரி தேவை எனில் எனக்கு எழுதுங்கள். அனுப்புகிறேன். charu.nivedita.india@gmail.com

***

www.charuonline.com என்ற இந்த இணையதளம் 2002-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.  சினிமா, இசை, அரசியல், இலக்கியம் போன்ற தலைப்புகளில் இதில் இத்தனை ஆண்டுகளாகத் தொடர்ந்து எழுதி வருகிறேன்.  இந்த இணையதளத்தை ஒரு மாதத்தில் 60000 பேர் வாசிக்கிறார்கள்.  தமிழில் எழுத்தாளர்கள் இணையத்தில் எழுத ஆரம்பிப்பதற்கு வெகுகாலம் முன்னரே ஆரம்பிக்கப்பட்ட பழைய இணைய தளம் இது.  அப்போது விகடன், தினமலர் போன்ற பத்திரிகைகளின் இணைய தளங்கள்தான் இருந்தன.  இப்போது இந்த இணையதளத்தைக் கட்டணம் செலுத்திப் படிக்கும் தளமாக மாற்றலாமா என யோசித்தேன்.  அறுபது ஆயிரத்தில் ஆறு பேர் கூட எஞ்ச மாட்டார்கள்.  முன்பே அதைப் பரிசோதித்துத் தோற்றிருக்கிறேன்.  எனவே மீண்டும் அந்தச் சோதனையில் ஈடுபட மாட்டேன்.  ஆக, இப்போது என் வேண்டுகோள் என்னவெனில், இதை வாசிக்கும் அன்பர்களில் விருப்பமுள்ளவர்கள் தாமாகவே முன்வந்து கட்டணம் செலுத்தலாம்.  விருப்பம் இல்லாதவர்கள் கட்டணம் செலுத்தாமலும் படிக்கலாம்.  அவரவர் விருப்பம்.  பணம் எப்போதும் என் சிந்தனையில் இருந்ததில்லை.   இனிமேலும் இருக்காது.  பணம் பற்றி யோசிக்காமல் இருக்கக் கூடிய சூழல் இருந்தது.  யோசிக்காமல் இருந்தேன்.  இப்போது நிலைமை மாறி விட்டதால் பணத்துக்கான ஒரு சிறிய ஏற்பாடு இது.  எவ்வளவு கட்டணம் என்பதும் அவரவர் விருப்பம்.  மாதாமாதம் அனுப்ப முடியாவிட்டால் மூன்று மாதத்துக்கான தொகையை அனுப்பலாம். கட்டணம் செலுத்தவில்லையே, படிக்கலாமா கூடாதா என்ற அறம் சம்பந்தமான கேள்விக்குள் நுழைந்து விடாதீர்கள்.  அது 60000 என்ற வாசகர் எண்ணிக்கையைக் குறைத்து விடும்.  முடிந்தவர்கள் கட்டணம் செலுத்துங்கள்.  முடியாவிட்டால் எந்தப் பிரச்சினையும் இல்லை.

ஓரிரு நண்பர்கள் paypal மற்றும் google pay மூலம் பணம் அனுப்பலாமா என்று கேட்டார்கள்.  நான் paypal-இல் இருக்கிறேன்.  Paypal மூலம் அனுப்ப முடியாவிட்டால் Xoom.com மூலமும் அனுப்பலாம். பேபாலின் கிளை நிறுவனம்தான் அது. கூகிள்பே மூலம் அனுப்ப என் தொலைபேசி எண் வேண்டும் என்று நினைக்கிறேன்.  மின்னஞ்சல் செய்தால் தொலைபேசி எண் தருகிறேன்.  பொதுவில் போட இயலாது.  தொலைபேசி எண் இல்லாமலும் கூகுள்பே மூலம் அனுப்பலாம். அதற்குத் தேவையான என் UPI ID:

charu.nivedita.india@okaxis

இந்த ஒரு விபரம் இருந்தாலே கூகுள்பே மூலம் பணம் அனுப்பி விடலாம். தொலைபேசி எண்ணும் தேவையெனில் எழுதுங்கள்:

charu.nivedita.india@gmail.com

கட்டணம் செலுத்துவதற்கான வங்கிக் கணக்கு விவரம்:

UPI ID: charunivedita@axisbank

பெயர்: K. ARIVAZHAGAN

Axis Bank Account No. 911010057338057

Dr Radhakrishnan Road, Mylapore

IFSC No. UTIB0000006

ஒரு நண்பர் பெயரில் உள்ள K என்பதன் விரிவு என்ன என்று கேட்டிருந்தார்.  அவர் வங்கியில் கேட்கிறார்களாம்.  Krishnasamy.  என் தந்தையின் பெயர்.  ஆக்ஸிஸில் அனுப்ப முடியாவிட்டால் என் ஐசிஐசிஐ கணக்கு விபரம் கீழே:

K. ARIVAZHAGAN

ICICI a/c no.  602601 505045

MICR Code: 600229065

IFS Code ICIC0006604

T. NAGAR BRANCH chennai