அன்புள்ள சாரு அவர்களுக்கு,
உங்கள் எழுத்தின் ரசிகன் நான். சுவைத்து சுவைத்துப் படிப்பேன். உங்கள் எழுத்தைப் படிக்கையில் தேனருவியில் நீந்துவது போல் இருக்கும்.
பித்த நிலையில் இருந்து பேரின்ப நிலைக்குத் தாவும் தன்மை உடையது உங்கள் எழுத்து. நான், உங்கள் எழுத்து மூலமாக பேரின்பத்தில் தாவிக் களியுற்று இருக்கிறேன்.
அவ்வப்போது நாக்கு சுவையற்று இருக்கும்போது இனிப்பை உண்பது போல உங்கள் ஸீரோ டிகிரியை நான் அடிக்கடி படிப்பேன். அற்புதம்!
பூச்சி தொடரையும் தொடர்ந்து வாசித்து வருகிறேன். பூச்சி 69ல் ஒருவர் சோகத்தோடு எழுதி இருந்தார். கடைசியில் நீங்கள் சொன்னீர்கள்,
“எனக்குப் பிறகு வரும் எழுத்தாளர்களின் நிலை இன்னும் கொஞ்சம் சீராகும். நிலைமை நிச்சயம் மாறும். அதுவரை என்ன காத்திருக்கவா முடியும்? கொண்டாடுவோம் வாருங்கள் வாழ்க்கையை”.
அடடடடடடா!!
உங்களிடம் ஒன்று கேட்க வேண்டும்..
உங்களுக்கு சுஜாதாவின் பத்து கட்டளைகள் தெரியும் என்று நினைக்கிறேன். அவர் கூறியுள்ளார்,
1:ஒன்றின் மேல் நம்பிக்கை வேண்டும், ஏதாவது ஒன்று. உதாரணம் கடவுள், இயற்கை,உழைப்பு, வெற்றி இப்படி எதாவது. நம்பிக்கை நங்கூரம் போல. கேள்வி கேட்காத நம்பிக்கை. கேள்வி கேட்பது சிலவேளை இம்சை. நவீன விஞ்ஞானம் அதிகப்படியாகக் கேள்வி கேட்டு இப்போது தவித்துக்கொண்டிருக்கிறது.
2: அப்பா, அம்மா இரண்டு பேரும் வேலை சொல்வது பல சமயங்களில் கடுப்பாக இருக்கும். ஒருமாறுதலுக்கு அவர்கள் சொல்வதைச் செய்துபாருங்கள். அவர்கள் கேட்பது உங்களால் செய்யக்கூடியதாகவே இருக்கும். பொடிநடையாகப் போய் 100 கிராம் காப்பி பவுடர் (அ)ரேஷன் கார்டு புதுப்பித்தல் இப்படிதான் இருக்கும்.
3:மூன்று மணிக்குத் துவங்கும் மதிய ஷோ போகாதீர்கள். க்ளாஸ் கட் பண்ண வேண்டிவரும். தலைவலி வரும். காசு விரயம். வீட்டுக்குப் போனதும் பொய் சொல்வதற்கு ரொம்ப ஞாபக சக்தி வேண்டும். இந்த உபத்திரத்துக்கு உண்மையைச் சொல்லிவிடுவது சுலபம். இளமைக்காலம்,ஒளிக் கீற்றைப் போல மிகவும் குறைந்த காலம், அதை க்யூ வரிசைகளிலும் குறைபட்ட தலைவர்களுக்காகவும் விரயம்செய்யாதீர்கள்.
4:நான்கு பக்கமாவது ஒரு நாளைக்குப் பொது விஷயங்களைப் படியுங்கள். பொது விஷயங்கள் என்றால் கதை, சினிமா, காதல் இல்லாதவை. உதாரணம் – யோக்கியமான செய்தித்தாள், மற்ற பேரைப் பற்றிக் கவலைப்படும் பத்திரிகைகள் அல்லது லைப்ரரியிருந்து ஒரு புத்தகம்.
5: ஐந்து ரூபாய் சம்பாதித்துப் பாருங்கள். சொந்தமாக உங்கள் உழைப்பில், முயற்சியில்,யோக்கியமாக, மனச்சாட்சி உறுத்தாமல்.
6: இந்தத் தகவல்களைப் படிக்கும் நிலைமைபெற்ற நீங்கள், இந்திய ஜனத்தொகையின் ஆறு சதவிகித மேல்தட்டு மக்களில் ஒருவர். அன்றாடம் சோற்றுக்காக அலையும், வசதியில்லாத கோடிக்கணக்கான மக்களைத் தினம் ஒரு முறை எண்ணிப்பாருங்கள்.
7: வாரத்தின் ஏழாவது தினமான ஞாயிறன்று என்ன செய்தாலும் காதல் பிஸினஸ் வேண்டாம். காதலுக்கு ரொம்பச் செலவாகும். பொய் நிறைய சொல்ல வேண்டும். வினோதமான இடங்களில் காத்திருக்க வேண்டும். இந்த வயதில் நாசமாய்ப்போன படிப்புத்தான் உங்களுக்கு முக்கியம்.
8:எட்டு முறை மைதானத்தைச் சுற்றி ஓடினால், எந்த சீதோஷ்ணமாக இருந்தாலும் நெற்றி வியர்வை அரும்பும். எதாவது தேகப் பயிற்சி செய்யவும். கடிகாரத்துக்குச் சாவி கொடுப்பதோ சீட்டாடுவதோ தேகப் பயிற்சி ஆகாது. எதையாவது தூக்குங்கள், எதையாவது வீசி எறியுங்கள். உங்கள் உடலில் ஊறும் உற்சாகத்துக்கு ஓர் ஆரோக்கியமான வடிகால் தேவை. ராத்திரி சரியாக தூக்கம் வரும். கன்னாபின்னா எண்ணங்கள் தவிர்க்கப்படும். ஒழுங்காக சாப்பிடத் தோன்றும்.பொதுவாகவே சந்தோஷமாக இருக்கும்.
9:ஒன்பது மணிக்குள் வீட்டுக்கு வரவும். மிஞ்சிப்போனால் ஒன்பது மணி இரண்டு நிமிடம்.
10: படுக்கப்போகும் முன் பத்து நிமிஷமாவது அம்மா, அப்பா, அண்ணன், தங்கை யாருடனாவது பேசவும் (பேசுவது என்று சொன்னவுடன் காதலியுடன் என்று நினைக்க வேண்டாம், நான் சொன்னது குடும்பத்தினருடன் மட்டும்). எதாவது ஒரு அறுவை ஜோக் அல்லது காலேஜில் நடந்த நிகழ்வுகள். சப்ஜெக்ட் முக்கியமில்லை. பேசுவதுதான்.
இந்த பத்தில் தினம் ஒன்று என்று முயற்சி செய்துதான் பாருங்களேன்…
ஜெயமோகனும் இது போல் பத்து கட்டளைகள் எழுதியுள்ளது என் கண்ணில் பட்டது.
நீங்கள், இப்பொழுது உள்ள இளைஞர்களுக்கு பத்து கட்டளைகள் கூறுவீர்களானால் அது என்னவாக இருக்கும்.
தெரிந்து கொள்ள ஆவலோடு இருக்கின்றேன்.
இப்படிக்கு உங்கள் வாசகன்,
தினேஷ்
சுஜாதா எழுதியதும் தெரியாது. ஜெ. எழுதியதும்
தெரியாது. என் எழுத்தைத் தொடர்ந்து வாசித்தால்
இளைஞர்கள் என்னென்ன செய்யக் கூடாது என்று நூறு விஷயங்களை எடுக்கலாம். உங்களுக்காக சுருக்கமாக பத்து சொல்கிறேன்.
1.எந்த வயதிலும் யாரையும் சார்ந்து இருக்காதீர்கள்.
அதற்காக நாலு வயதில் என்ன செய்ய முடியும்? பெற்றோரைத்தான் சார்ந்து இருக்க வேண்டியிருக்கும். ஆனால் கைகாலெல்லாம் நன்றாக வேலை செய்கின்ற நிலையில், பதினைந்து வயதில் அம்மாவை சோறு ஊட்டி விடச் சொல்வதெல்லாம் அராஜகம். இந்திய ஆண்கள் பெண்களை அட்டை போல் ரத்தத்தை உறிஞ்சிக் கொண்டிருக்கிறார்கள். அதிலும் இளைஞர்கள்தான் அநியாயம். இன்னும் காண்டம் வாங்கிக் கொடு என்றுதான் சொல்லவில்லை. தடிமாடு தடிமாடாக அம்மா ஸ்கூட்டர் ஓட்ட பின்னால் உட்கார்ந்து பள்ளிக்குப் போகிறார்கள். பெரிய வேலைக்குப் போய் சம்பாதிக்கலாம். ஆனால் உருப்பட மாட்டார்கள். அவர்களால் சமூகத்துக்கும் பயனில்லை; அவர்களுக்கும் பயனில்லை. அவர்களால் சந்தோஷத்தையே அனுபவிக்க முடியாது. பள்ளிக்கூடம் போகக்கூட அம்மாவை எதிர்பார்த்துக் கொண்டிருந்தால் அவனால் அல்லது அவளால் என்ன சாதிக்க முடியும்? சென்ற தலைமுறையில் நாலைந்து கிலோமீட்டர் தூரமெல்லாம் நடந்தே பள்ளிக்கூடம் சென்றார்கள். அப்படி இப்போது நாங்கள் போக முடியுமா என்று கேட்கலாம். கடின உழைப்பு இருந்தால் மட்டுமே பின்னால் மகிழ்ச்சியைப் பார்க்க முடியும். இது என் அனுபவம்.
எதெல்லாம் உங்களால் முடிகிறதோ அதையெல்லாம் நீங்களே செய்து கொள்ளுங்கள். அம்மா அப்பாவை தம்பி தங்கையை எதிர்பார்க்காதீர்கள். திருமணம் ஆன பிறகு மனைவியைச் சார்ந்து இருக்காதீர்கள். இதையேதான் பெண்களுக்கும் சொல்வேன்.
எல்லாவற்றையும் விட முக்கியம், வயதான காலத்தில் யாரையும் சார்ந்து இருக்காதீர்கள். அப்படி மற்றவர்களைச் சார்ந்து இருக்கும் பல முதியவர்களைப் பார்க்கிறேன். பரிதாபமாக இருக்கிறது. ஆரோக்கியம் நன்றாக இருக்கும் வரை எல்லோரையும் அமட்டிக் கொண்டு இருக்கிறார்கள். மனைவி இறந்து, ஆரோக்கியமும் போன பிறகு சொந்தக்காரர்களின் வீட்டில் போய் உட்கார்ந்து கொண்டு அந்த வீட்டுப் பெண்களின் உயிரை எடுக்கிறார்கள். யாரும் இல்லையென்றால், எத்தனையோ முதியோர் இல்லங்கள் இருக்கின்றன. நான் அனாதை இல்லங்களைச் சொல்லவில்லை. நட்சத்திர ஓட்டல் மாதிரியெல்லாம் முதியோர் இல்லங்கள் உள்ளன. கையில் பணம் வேண்டும். கையில் இருக்கும் காசில் மகன் பேரில் வீட்டை வாங்கி விட்டு, மருமகள் கையால் செருப்படி வாங்கிக் கொண்டிருக்கும் பல முதியோர்கள். அந்த வீட்டைப் பணமாக வைத்திருந்தால் முதியோர் இல்லத்தில் சேர்ந்து செருப்படி வாங்காமல் சிறப்பாக வாழலாம் இல்லையா? இப்படி லோல்பட்டுக் கொண்டிருந்த வயதான கேஸ் ஒருவர் என் சொந்தக்காரர். இது நடந்து பதினைந்து ஆண்டுகள் இருக்கும். மகன் வீட்டில் இருந்தார். மகன் என்றால் தன் தம்பி மகன். அவன் மனைவிக்கும் இவருக்கும் ஆகவில்லை. எப்படி ஆகும்? ஒரு பொருளை இந்த இடத்தில் இருந்து எடுத்து அந்த இடத்தில் வைப்பதில்லை. தண்ணீர் வேண்டும் என்றால் கூட தண்ணி குடும்மா. ஒருநாள் மேஜையில் சாப்பாட்டை எல்லாம் செய்து வைத்து விட்டு சாப்பிடுங்கள் மாமா என்று சொல்லி விட்டு மருமகள் குளிக்கப் போய் விட்டாள். வந்து பார்த்தால் கிழம் சாப்பிடவில்லை. ஏன் மாமா என்று கேட்டால், சாதக் கரண்டி இல்லியே என்று பதில். இதை அந்தப் பெண் சொல்லக் கேட்டதும் என் வாயால் அடி செருப்பால என்று வந்து விட்டது. இப்படிப்பட்ட அயோக்கிய சிகாமணிகள்தான் பெருசு என்ற பெயரில் பல வீடுகளில் இளசுகளின் ரத்தத்தை உறிஞ்சிக் கொண்டிருக்கின்றன. இதுகளையெல்லாம் வீட்டை விட்டு அடித்துத் துரத்த வேண்டும்.
ஆனால் நாணயத்தின் இன்னொரு பக்கமும் உள்ளது. ஒரு அத்தியாயத்தில் தகப்பனைப் பிச்சை எடுக்க வைத்து விட்டு முஸ்லீமாக மாறிய ஆறுமுகத்தைப் பற்றி. அதுவும் அநேகம். ஒரு பையன். மகாத்மா புத்திரன். ஆனால் அவனுக்காகவே வாழ்ந்த, கணவனை இழந்த தாயை நடுத்தெருவில் விட்டு விட்டு வெளிநாடு ஓடி விட்டான். அது கூடப் பரவாயில்லை. சல்லிக்காசு அனுப்புவதில்லை. இத்தனைக்கும் அவன் வேலைக்குப் போன பிறகு எம்.பி.ஏ. படிப்பதற்குக் கூட அந்தப் பெண்மணிதான் லட்சங்களாகக் கொடுத்தாள். ஏதோ தனியார் துறையில் சொற்ப சம்பளம். இப்போது அவள் கையில் ஒரு பைசா இல்லை. சேர்த்த பணத்தையெல்லாம் பையனின் படிப்புச் செலவுக்கு ஆக்கி விட்டாள். ஏரோநாட்டிகல் எஞ்சினியரிங் படிக்க வைத்தாள். என்னம்மா, உன் பையன் பணம் அனுப்புகிறானா என்று கேட்டால் ஏன் அனுப்ப வேண்டும், என் கடமையைத்தானே செய்தேன் என்கிறாள். அந்தப் பையனை நினைத்தால் எனக்குப் பிணந்தின்னும் கழுகுதான் மனதில் வருகிறது. வெளிநாட்டுக் குடும்ப அமைப்பு வேறு. இந்தியாவில் பெற்றோர்தான் பிள்ளைகளுக்காகத் தங்கள் வாழ்க்கையையே தியாகம் செய்ய வேண்டியிருக்கிறது. அப்படிப்பட்ட பெற்றோருக்கு அவன் தன் கடனைத் தீர்க்க வேண்டாமா?
அறுபத்தைந்து வயதான நண்பர் ஒருவர் ஒருநாள் என்னிடம் I am done, இனிமேல் மேலே போகத் தயார் என்றார். இதை அவர் விரக்தியாகச் சொல்லவில்லை என்பதுதான் விசேஷம். சாப்பிட்டு முடித்து திருப்தியாகச் சொல்வோம் இல்லையா, அப்படிச் சொன்னார். என்ன இது, இன்னும் நீங்கள் ஆரம்பிக்கவே இல்லையே என்றேன். ஏனென்றால் அவர் 30 வயது வரை மகளுக்காக வாழ்ந்தார். மகளைப் படிக்க வைத்து, திருமணம் செய்து கொடுத்து, இப்போது பேரப் பையன். இப்போது பேரனுக்காக வாழ்கிறார். ஒருநாள் கூட அவர் தனக்காக வாழ்ந்ததில்லை. இனிமேலும் தனக்காக வாழ்வதற்கான வெளிச்சம் ஏதும் தெரியவில்லை என்பதால் இப்போதே கிளம்பலாம் என்கிறார். அடப்பாவிகளா, குடும்பம் என்றால் இப்படியா ஒருத்தரின் மொத்த வாழ்க்கையையே உறிஞ்சி எடுப்பீர்கள்? ஏன் உங்கள் குழந்தையை குழந்தைகள் காப்பகத்தில் வைத்துக் கொள்ள மாட்டார்களா? அமெரிக்காவில் உள்ள இந்தியர்கள் இந்தியாவிலிருந்து தங்கள் பெற்றோரை சம்பளம் இல்லாத பேபி சிட்டர்ஸாக வரவழைத்து ரத்தம் உறிஞ்சுகிறார்கள். அப்படி பேபி சிட்டர்களாகச் செல்பவர்கள் எல்லாம் என்னிடம் ரத்தக் கண்ணீர் விடுகிறார்கள். அங்கே விமான நிலையத்திலேயே மாதிரி இந்தியர்களைக் காறித்துப்புகிறார்கள். என்ன, பேபி சிட்டர் வேலைக்கு வந்து விட்டீர்களா என்றே கேட்டு அவமானப்படுத்துகிறார்களாம் குடியுரிமை முத்திரை குத்தும் இடத்தில். இப்படியெல்லாம் யாரையும் அண்டிப் பிழைப்பதில்லை என்று உறுதி எடுத்துக் கொள்ளுங்கள்.
2. அப்பன் காசில் டோட்டா விளையாடாதீர்கள்.
எனக்குத் தெரிந்த ஒரு பையன் 23 வயதில் வேலைக்குப் போய் இரண்டு லட்சம் சம்பாதிக்கிறான். சென்னையில். ஐஐடியில் படித்தான். படிக்க வேண்டிய வயதில் படித்தான். டோட்டா ஆடவில்லை. இப்போதுதான் ஆடுகிறான். பல மாணவர்கள் டோட்டா அடிக்டுகளாக மாறி வருகிறார்கள். இதன் காரணமாக, ஏதோ ஒரு மோசமான வேலையில் சேர்ந்து வாழ்நாள் பூராவும் சிரமப்படுகிறார்கள். 25 வயதுக்குள் கடுமையாக உழைத்தால்தான் பின்னாளில் சோத்துக்கு சிங்கி அடிக்காமல் வாழ முடியும். இல்லாவிட்டால் வாழ்க்கை பூராவும் நரகம்தான். அதேதான் குடிக்கும். குடிக்காதீர்கள் என்று சொல்ல மாட்டேன். அப்பன் காசில் குடிக்காதீர்கள். அப்படிக் குடித்தால் அடுத்தவன் தயவில் வாழ்வது பழக்கமாகி விடும். கடைசி நாள் வரை நாம் ஒட்டுண்ணி என்பதே நமக்குத் தெரியாமல் போய் விடும். ஊரே நம்மைத் தூற்றும். நாம் சந்தோஷமாக வாழ முடியாது. வாழ்க்கை படுதோல்வியில் முடியும்.
3. அப்பனைப் பார்த்து உங்கள் வாழ்க்கையின் முடிவை எடுக்காதீர்கள்.
அப்பன் உங்களை அடிப்பான். முரடன். அதெல்லாம் உங்கள் மனதில் ஆழப் பதியும். உங்கள் மகனை உங்கள் அப்பன் உங்களை வளர்த்த மாதிரி வளர்க்காமல் செல்லம் கொடுப்பீர்கள். அது ட்ரக் அடிக்ட் ஆகும். செல்லம் கொடுத்து வளரும் பிள்ளைகள் உருப்பட்டு நான் பார்த்ததே இல்லை. அதற்காக அடித்து உதையுங்கள் என்று சொல்லவில்லை. குழந்தைகளை சொந்தக் காலில் நின்று வளரப் பழக்குங்கள்.
4. திருமணம் செய்து கொள்ளாதீர்கள்
திருமணத்துக்கு மாற்று என்ன என்று எனக்குத் தெரியவில்லை. திருமணம் செய்து கொண்டால் ஆண் பெண்ணை அடிமைப்படுத்துகிறான். இல்லாவிட்டால் பெண் ஆணை அடிமைப்படுத்துகிறாள். லிவிங் டுகெதர் பரவாயில்லை என்று தோன்றுகிறது. வத வத என்று குழந்தை பெற்றுக் கொள்ளாதீர்கள். குழந்தையே பெற்றுக் கொள்ளவில்லை என்றால் இன்னும் சிறப்பு. அதற்காகத் தத்துக் குழந்தையை வளர்க்காதீர்கள். அதைவிட நாய் வளர்ப்பது பரவாயில்லை. தத்துக் குழந்தைகளின் பின்னணி தெரியாது. அதன் அப்பன் கொலைகாரன் என்றால், குழந்தையும் கொலைகாரனாக இருக்கும் என்று சொல்லவில்லை. ஆனால் நிச்சயமாக ஞானவானாக இருக்க வாய்ப்பு இல்லை. அதன் தாய் வயிற்றில் வளரும்போது அதன் தாயின் இருப்பு எப்படி இருந்திருக்கும் என்றெல்லாம் தெரியாது. அதை விட வாராவாரம் அனாதை இல்லங்களுக்குப் போய் அங்குள்ள குழந்தைகளை உங்கள் குழந்தைகளாக நினைத்து உதவி செய்யலாம்; அவைகளோடு பேசிக் கொண்டிருக்கலாம்; உறவு கொண்டாடலாம். அது பரவாயில்லை.
5. கோவிலுக்குப் போகாதீர்கள்.
கோவில்கள் இப்போது வணிகக் கூடங்களாக மாறி விட்டன. அதை விட அத்தனை கூட்டம் கூடாத கோவில்களுக்குப் போகலாம். அல்லது, வெளியூர்ப் பயணம் செய்யலாம். எவ்வளவு பயணம் முடியுமோ அவ்வளவு பயணம் நலம். ஆனால் இதற்கெல்லாம் பணம் வேண்டும். அப்பன் காசில் செய்வது அதர்மம். நீங்களே சம்பாதித்த பிறகுதான் செய்ய வேண்டும்.
6. Don’t judge others.
மற்றவர்களை நியாயத் தராசில் நிறுத்தி நீதி வழங்குவதை எப்போதும் செய்யாதீர்கள். யாரைப் பற்றியும் அப்படிச் செய்ய உங்களுக்கு உரிமை இல்லை. அப்படிச் செய்தால் உங்கள் வாழ்க்கை மகிழ்ச்சியுற இருக்காது.
7. மனைவியின் கௌரவத்துக்குப் பங்கம் வராமல் இருங்கள். இதுவே பெண்களாக இருந்தால் கணவரின் கௌரவத்துக்கு…
அதாவது, உங்கள் பெற்றோரிடம் உங்கள் வாழ்க்கைத் துணையை விட்டுக் கொடுக்காதீர்கள். அதில் கறாராகவே இருங்கள். பெற்றோர் உங்கள் மரியாதைக்கு உரியவர்கள்தான். அதற்காக உங்கள் மனைவியை அவர்கள் துன்புறுத்தினால் அதை ஒருபோதும் அனுமதிக்காதீர்கள்.
8. சோம்பேறியாய் இருக்காதீர்கள்.
இந்தக் காலத்து இளைஞர்கள் முழுச் சோம்பேறிகளாகவும் ஒழுங்கீனமாகவும் இருக்கிறார்கள். அப்படி இருப்பவர்கள் உருப்பட மாட்டார்கள். இரண்டு உதாரணங்கள் தருகிறேன். ஒருவரை ஒரு வீட்டு வேலை சம்பந்தமாக அழைத்திருந்தேன். என் வாசகரும் கூட. புதன்கிழமை வருவதாகச் சொல்லியிருந்தார். அவர் வார்த்தை தவறாதவர் என்ற அபிப்பிராயத்தை என்னிடம் உருவாக்கினதில்லை என்பதால் சந்தேகத்துடனேயே செவ்வாய்க்கிழமை இரவு போன் செய்து நாளை வருகிறீர்கள்தானே என்று கேட்டேன். சார், நாளை வர முடியாது, திங்கள்கிழமை வருகிறேன் என்றார். அந்தத் தகவலை அவர் அல்லவா என்னிடம் போன் செய்து சொல்லியிருக்க வேண்டும்? சொல்ல மாட்டார். திங்கள் கிழமைக்கு முதல்நாள் போன் செய்து நாளை வருகிறீர்கள்தானே என்று கேட்டேன். வருகிறேன் என்றார். வந்தார். தகவல் பரிமாற்றத்தில் கூடத் தோல்வியுற்று நமக்கு மன உளைச்சலை உண்டு பண்ணுகிறார்கள்.
இன்னொருத்தர். அவரிடம் ஒரு விஷயம் கேட்க வேண்டுமாய் இருந்தது. போன் செய்தேன். நாளை அழைக்கிறேனே என்று எஸ்ஸெம்மெஸ் வந்தது. மறுநாள் அழைக்கவில்லை. நானும் அழைக்கவில்லை. ஆனால் முகநூலில் அவர் லைக் போடாத, காமெண்ட் போடாத பதிவுகளே இல்லை எனும் அளவுக்கு ஆள் படுபிஸியாக இருந்தார். மூன்று தினங்கள் கழித்து சார்… என்று அழைத்து எஸ்ஸெம்மெஸ் வந்தது. யெஸ் என்று பதில் அனுப்பினேன். அதற்கு பதிலே இல்லை. அதற்குள் நான் அவருடைய முதலாளிக்கே போன் செய்து விபரத்தைத் தெரிந்து கொண்டேன். அன்பரின் முதலாளியும் என் நண்பர்தான். ஆனால் முகநூலில் நான் என்ன எழுதினாலும் அன்னாரின் லைக் இல்லாமல் இருக்கவே இருக்காது. இவர்களைத்தான் முகநூல் போராளிகள் என்கிறேன். இவர்களால் எதையுமே சாதிக்க முடியாது.
வாழ்க்கையில் கறாராக இருங்கள். தீர்மானமாக இருங்கள். முடியாததைச் சொல்லாதீர்கள். ஒருத்தரோடு பேச விருப்பம் இல்லாவிட்டால் அவரை உங்கள் வாழ்க்கையிலிருந்து ஒதுக்கி விடுங்கள். ஏன் முகநூலில் நண்பர் போல் பாவ்லா காண்பித்து விட்டு நேர்வாழ்வில் ஓடி ஒளிகிறீர்கள்?
9. தேகநலன் பேணுங்கள்
ஜிம்முக்குப் போகவே போகாதீர்கள். அதற்கும் ஆரோக்கியத்துக்கும் சம்பந்தமே இல்லை. பெண்கள் தொப்பையைக் குறைக்கலாம். மற்றபடி வேறு பயன்கள் இல்லை. ஜிம்முக்குப் போவதை நிறுத்தினால் தொப்பை மீண்டும் அதிவேகத்தில் வரும். அதை விட சூரிய நமஸ்காரம் செய்யலாம். ஆரம்பத்தில் மூன்று கூட செய்ய முடியாது. பழகப் பழக நூற்றியெட்டு செய்யலாம். அது ஒன்றே போதும். பிராமணர்கள் சந்தியா வந்தனம் செய்யலாம். முஸ்லீம்கள் தொழுகை செய்தால் போதும். தொழுகைக்கு இணை தொழுகைதான். அதை விட உடல் நலன், மனநலன் பேணுவது வேறு எதுவும் இல்லை. தியானம், யோகா, சில முத்திரைகள் செய்யலாம். இதெல்லாம் இணையத்திலேயே கொட்டிக் கிடக்கிறது. பாபா ராம்தேவ் நல்ல யோகா ஆசிரியர். அவருடைய அரசியல் எல்லாம் நமக்குத் தேவை இல்லை. யோகாவுக்கு அவர்தான் மாஸ்டர்.
10. ஆணுக்கும் பெண்ணுக்கும் செக்ஸ் லைஃப் முக்கியம். பெண்களுக்கு இயற்கை அதை வாரி வழங்கியிருக்கிறது. ஆண்கள்தான் அவர்களுடைய ஒழுங்கீனமான வாழ்க்கை முறையால் சரிவர செயல்பட முடியாமல் போய் விடுகிறார்கள். அதற்கு 25 வயதிலிருந்தே அஸ்வகந்தா மற்றும் நிலப்பனைக் கிழங்கு கேப்ஸ்யூல்களைச் சாப்பிட ஆரம்பிக்கலாம். தினம் ஒன்று போதும். இது இரண்டையும் அடித்துக் கொள்ள உலகத்திலேயே வேறு அஃப்ரோசிஸியாக் கிடையாது. நிலப்பனைக் கிழங்கை மருந்துக் கடையில் முஸ்லி என்று சொல்வார்கள். நாட்டுமருந்துக் கடையில் சல்லிசாகக் கிடைக்கும்.
11. கொசுறாக ஒன்றிரண்டு. இலக்கியம் படியுங்கள் என்று சொல்ல மாட்டேன். ஏனென்றால், ஒருத்தர் கூட செய்ய மாட்டீர்கள். ஆனால் இலக்கியம் படிக்காவிட்டால் கண்கள் இருந்தும் வாழ்நாள் பூராவும் கண்களைக் கட்டிக் கொண்டு வாழ்ந்தவன் மாதிரிதான். உங்களை நினைத்துப் பரிதாபப்படுவதைத் தவிர வேறு வழியில்லை.
12. இனிமேல் இந்தியாவில் வாழ்வது கடினம். எனவே ஆங்கிலம் தவிர ஜேப்பனீஸ் அல்லது ஜெர்மன் கற்றுக் கொள்ளுங்கள். எப்படியாவது ஜப்பானிலோ ஸ்காண்டிநேவிய நாடுகளிலோ குடியேறி விடுங்கள். பூலோக சொர்க்கம் என்றால் அந்த நாடுகள்தான். ஸ்காண்டிநேவிய நாடுகளில் ஆங்கிலம் ஒரு வார்த்தை பயன்படாது. ஆனால் ஜெர்மன் ஓரளவு செல்லுபடியாகும். ஜெய்ஹிந்த்!
***
Xoom.com மூலம் பணம் அனுப்ப என் முகவரி தேவை எனில் எனக்கு எழுதுங்கள். அனுப்புகிறேன். charu.nivedita.india@gmail.com
***
www.charuonline.com என்ற இந்த இணையதளம் 2002-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. சினிமா, இசை, அரசியல், இலக்கியம் போன்ற தலைப்புகளில் இதில் இத்தனை ஆண்டுகளாகத் தொடர்ந்து எழுதி வருகிறேன். இந்த இணையதளத்தை ஒரு மாதத்தில் 60000 பேர் வாசிக்கிறார்கள். தமிழில் எழுத்தாளர்கள் இணையத்தில் எழுத ஆரம்பிப்பதற்கு வெகுகாலம் முன்னரே ஆரம்பிக்கப்பட்ட பழைய இணைய தளம் இது. அப்போது விகடன், தினமலர் போன்ற பத்திரிகைகளின் இணைய தளங்கள்தான் இருந்தன. இப்போது இந்த இணையதளத்தைக் கட்டணம் செலுத்திப் படிக்கும் தளமாக மாற்றலாமா என யோசித்தேன். அறுபது ஆயிரத்தில் ஆறு பேர் கூட எஞ்ச மாட்டார்கள். முன்பே அதைப் பரிசோதித்துத் தோற்றிருக்கிறேன். எனவே மீண்டும் அந்தச் சோதனையில் ஈடுபட மாட்டேன். ஆக, இப்போது என் வேண்டுகோள் என்னவெனில், இதை வாசிக்கும் அன்பர்களில் விருப்பமுள்ளவர்கள் தாமாகவே முன்வந்து கட்டணம் செலுத்தலாம். விருப்பம் இல்லாதவர்கள் கட்டணம் செலுத்தாமலும் படிக்கலாம். அவரவர் விருப்பம். பணம் எப்போதும் என் சிந்தனையில் இருந்ததில்லை. இனிமேலும் இருக்காது. பணம் பற்றி யோசிக்காமல் இருக்கக் கூடிய சூழல் இருந்தது. யோசிக்காமல் இருந்தேன். இப்போது நிலைமை மாறி விட்டதால் பணத்துக்கான ஒரு சிறிய ஏற்பாடு இது. எவ்வளவு கட்டணம் என்பதும் அவரவர் விருப்பம். மாதாமாதம் அனுப்ப முடியாவிட்டால் மூன்று மாதத்துக்கான தொகையை அனுப்பலாம். கட்டணம் செலுத்தவில்லையே, படிக்கலாமா கூடாதா என்ற அறம் சம்பந்தமான கேள்விக்குள் நுழைந்து விடாதீர்கள். அது 60000 என்ற வாசகர் எண்ணிக்கையைக் குறைத்து விடும். முடிந்தவர்கள் கட்டணம் செலுத்துங்கள். முடியாவிட்டால் எந்தப் பிரச்சினையும் இல்லை.
ஓரிரு நண்பர்கள் paypal மற்றும் google pay மூலம் பணம் அனுப்பலாமா என்று கேட்டார்கள். நான் paypal-இல் இருக்கிறேன். Paypal மூலம் அனுப்ப முடியாவிட்டால் Xoom.com மூலமும் அனுப்பலாம். பேபாலின் கிளை நிறுவனம்தான் அது. கூகிள்பே மூலம் அனுப்ப என் தொலைபேசி எண் வேண்டும் என்று நினைக்கிறேன். மின்னஞ்சல் செய்தால் தொலைபேசி எண் தருகிறேன். பொதுவில் போட இயலாது. தொலைபேசி எண் இல்லாமலும் கூகுள்பே மூலம் அனுப்பலாம். அதற்குத் தேவையான என் UPI ID:
charu.nivedita.india@okaxis
இந்த ஒரு விபரம் இருந்தாலே கூகுள்பே மூலம் பணம் அனுப்பி விடலாம். தொலைபேசி எண்ணும் தேவையெனில் எழுதுங்கள்:
charu.nivedita.india@gmail.com
கட்டணம் செலுத்துவதற்கான வங்கிக் கணக்கு விவரம்:
UPI ID: charunivedita@axisbank
பெயர்: K. ARIVAZHAGAN
Axis Bank Account No. 911010057338057
Dr Radhakrishnan Road, Mylapore
IFSC No. UTIB0000006
ஒரு நண்பர் பெயரில் உள்ள K என்பதன் விரிவு என்ன என்று கேட்டிருந்தார். அவர் வங்கியில் கேட்கிறார்களாம். Krishnasamy. என் தந்தையின் பெயர். ஆக்ஸிஸில் அனுப்ப முடியாவிட்டால் என் ஐசிஐசிஐ கணக்கு விபரம் கீழே:
K. ARIVAZHAGAN
ICICI a/c no. 602601 505045
MICR Code: 600229065
IFS Code ICIC0006604
T. NAGAR BRANCH chennai