அன்புக்கும் பிரியத்துக்கும் உரிய சமஸ் அவர்களுக்கு,
இந்தக் கடித விஷயத்தை நான் உங்களுக்கு ஒரு போன் மூலம் தெரிவித்திருக்க முடியும். ஆனாலும் இது வெளிப்படையாகத் தெரிவிக்க வேண்டிய விஷயமாகத் தோன்றியதால் திறந்த மடலாகவே எழுதி விட்டேன்.
என் வாழ்நாள் பூராவுமே மறக்க முடியாத இரண்டு நேர்காணல்கள் உண்டு. ஒன்று, முப்பது ஆண்டுகளுக்கு முன் ஒரு பத்திரிகையில் படித்த மகாப் பெரியவரின் நேர்காணல். பத்திரிகையாளர் கேட்கிறார், சுவாமி, உங்கள் வாழ்க்கையில் நிறைவேறாத ஆசை ஏதாவது உண்டா? எப்பேர்ப்பட்ட மனிதரிடம் எப்பேர்ப்பட்ட கேள்வி. அவர் ஒரு அவதாரம் என்பது பலருடைய எண்ணம். என் கருத்தும் அஃதே. அப்படிப்பட்டவர் கண்ணிமைக்கும் நேரத்தில் பதில் சொல்கிறார். ஆமாம், உண்டு. நான் சிறு பிராயத்திலேயே துறவியானவன். அதனால் யாரையும் நமஸ்கரிக்கும் பாக்கியம் கிடைக்கவில்லை. இதைப் படித்ததும் இவர் ஒரு கலைஞன், ஏதோ துறவியாகி விட்டார் என்று தோன்றியது எனக்கு. துறவிகள் யாரையும் காலில் விழுந்து நமஸ்கரிக்கக் கூடாது.
இன்னொரு மறக்க முடியாத பேட்டி. அது நீங்கள் எடுத்தது. மேலே பார்த்தவர் எல்லாம் துறந்தவர். அவர் வட துருவம் என்றால், நீங்கள் பேட்டி கண்டது தென் துருவத்தை. அவரோ துறவி, இவரோ அதிகாரத்தின் குறியீடு. ஐந்து முறை முதல் மந்திரியாக இருப்பதெல்லாம் இந்த உலகத்தில் – அதுவும் ஒரு ஜனநாயக நாட்டில் – நடக்கக் கூடிய சமாச்சாரமா? பாருங்கள், ஐந்து முறை முதல்வராக இருந்தவரின் புதல்வரால் ஒரு முறை கூட முதல்வாராக முடியவில்லை. எப்பேர்ப்பட்ட வரலாற்று முரண் இது! அதிலும் பன்னீர்செல்வம், பழனிச்சாமி போன்றவர்களெல்லாம் முதல்வராக இருக்கும்போது ஒரு மாபெரும் கட்சியின் மாபெரும் தலைவரால் முதல்வாராக முடியவில்லை. வயது எழுபது ஆகி விட்டது. ஆனால் கருணாநிதி கட்சிக்கும் தலைவர். ஆட்சியிலும் முதல்வர். அதிலும் ஐந்து முறை. அப்படிப்பட்டவரிடம் நீங்கள் கேட்கிறீர்கள். முப்பது ஆண்டுகளுக்கு முன் மகாப் பெரியவரிடம் ஒருவர் கேட்ட கேள்வியின் சாயல் கொண்ட கேள்வி உங்களுடையது.
ஐந்து முறை முதல்வராக இருந்து விட்டீர்கள். உங்கள் மனக்குறை என்று ஏதாவது உண்டா?
கண்ணிமைக்கும் நேரத்தில் பதில் சொன்னார் திமுக தலைவர். எப்படிப்பட்டவர் அவர் என்று பார்க்க வேண்டும். வெறுமனே முதல்வர் மட்டும் அல்ல. கட்சித் தலைவர் மட்டும் அல்ல. தமிழ் சினிமாவின் மறக்க இயலாத கதை வசனகர்த்தா. பராசக்தியில் அவர் எழுதிய வசனம் தமிழன் ரத்தத்தில் ஊறியது. மட்டும் அல்ல. மிக மிக வயதான காலத்திலும் ராமானுஜரின் வாழ்க்கையை தொலைக்காட்சித் தொடராக ஸ்ரீவைஷ்ணவர்களே வியக்கும் வகையில் எழுதியவர். அவர் மாதிரி நகைச்சுவை உணர்வுடன் பேச ஆள் இல்லை. அவர் மாதிரி timing senseஉடன் பதில் சொல்ல யாராலும் முடியாது. இது போதாது என்று பழந்தமிழ் அறிஞர். தொல்காப்பியத்துக்கும் குறளுக்கும் உரை எழுதியவர். சங்க இலக்கியத்தைக் கரைத்துக் குடித்தவர். அவர் உங்களிடம் சொல்கிறார். ஆமாம், எனக்கு ஒரு மனக்குறை உண்டு. என்ன? எல்லோரும் என்னை ஒதுக்குகிறார்கள்.
உங்களுக்குப் புரியவில்லை. எங்களுக்கும்தான். என்ன இது? அதிகாரத்தின் குறியீடாக விளங்கும் ஒருத்தரை யார் ஒதுக்க முடியும்? ஆமாம், என் சாதி குறித்த நினைவுடனேயே என்னை அணுகுகிறார்கள். அவர்களால் அதைத் தாண்டவே முடியவில்லை. சமீபத்தில் ஒரு பெண் கர்னாடக சங்கீதம் பாடியதை யாரோ ஒருவர் நாலு நல்ல வார்த்தை சொல்லிப் பகிர்ந்ததைப் பார்த்தேன். அந்தப் பெண்ணின் சருமம் கருப்பு. சமூகத்தின் ஏழ்மை நிலையில் இருப்பவரான தோற்றம். அதைப் பகிர்ந்தவரின் நல்ல வார்த்தை என்ன தெரியுமா? திறமை சாதியை வைத்து வருவதில்லை. அதாவது, கருத்த தோல் உள்ளவர்களுக்குக் கூட கர்னாடக சங்கீதம் வருகிறதாம். இது போன்ற subtleஆன வழிகளில்தான் கருணாநிதியை அவமதித்திருப்பார்கள். அம்மாதிரியான தீண்டாமையை இப்போது கூட உணர்கிறேன் என்று சொன்னார் கருணாநிதி. இதுதான் கருணாநிதி கொடுத்த கடைசிப் பேட்டியாக இருக்கும். அதற்கு மேல் அவருக்கு நினைவு தப்பி விட்டது. ஐந்து முறை முதல்வராக இருந்த ஒருத்தர் தன் 95 வயதில் இப்படிச் சொல்கிறார் என்றால், சமூக ஒதுக்கலைப் பார்த்துக் கொள்ளுங்கள்.
இதை ஏன் உங்களிடம் சொல்கிறேன் என்றால், அதுவும் ஒரு திறந்த மடலில், அவரைப் போலவேதான் இந்த 66 வயதிலும் நான் உணர்கிறேன். சாதி ரீதியாக அல்ல. வேறு எப்படி என்று இந்தக் கடிதம் முடிந்த பிறகு உங்களுக்குத் தெரிந்தால் எனக்குச் சொல்லுங்கள். கேட்டுக் கொள்கிறேன். ஏனென்றால், எத்தனை யோசித்தும் எனக்குத் தெரியவில்லை. உங்களுக்குத் தெரியலாம்.
சில ஆண்டுகளுக்கு முன்னால் டெக்கான் கிரானிகிளின் அகில இந்தியப் பதிப்பான ஏஷியன் ஏஜ்-இல் நான் இரண்டு வாரங்களுக்கு ஒருமுறையான பத்தி எழுதினேன். நான்கு ஆண்டுகள் எழுதினேன். சென்னை உட்பட இந்தியாவின் எல்லா நகரங்களிலும் என் கட்டுரை வந்தது. ஏஷியன் ஏஜுக்கு லண்டன் பதிப்பும் உண்டு. ஆக, லண்டன் பதிப்பிலும் என் கட்டுரை இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை வந்தது. அப்போது சென்னையில் இருந்த பிரிட்டிஷ் தூதர் ஒரு விருந்து கொடுத்தார். அவர் என்னுடைய ஸீரோ டிகிரி நாவலைப் படித்திருந்ததால் எனக்கு நண்பரானார். மேலும், திருவனந்தபுரத்தில் நடக்கும் Hay Festivalஐத் தொடங்கும் விதமாக சென்னையில் அவரது தூதரகத்தில் என்னுடைய மார்ஜினல் மேன் நாவலிலிருந்து ஒருசில பகுதிகளைப் படிக்கும் நிகழ்ச்சியின் மூலமாக அவருக்கு நான் பரிச்சயமாகி இருந்தேன். விருந்தில் எனக்குத் தெரிந்தவர் யாரும் இல்லை. அப்போது நான் மது அருந்துவதை நிறுத்தி இருந்ததால் இங்கே ஏன் வந்தோம் என்பது போல் ஒரு ஓரமாக நின்று கொண்டிருந்தேன். அப்போது அந்தப் பக்கம் வந்த இந்து ராமைப் பார்த்துப் புன்னகைத்தேன். அருகில் வந்தார். அறிமுகப்படுத்திக் கொண்டேன். அவர் டெக்கான் கிரானிகிளில் என் கட்டுரைகளைப் படித்திருந்தார். அது மட்டும் அல்ல. அகில இந்தியப் பதிப்பில் என் கட்டுரைகள் வருவது தெரிந்திருந்தது என்பது அவருடைய அடுத்த கேள்வியில் தெரிந்தது. அவர் கேட்டார்: ஆங்கிலத்திலேயே அனுப்பி விடுகிறீர்களா அல்லது மொழிபெயர்த்துப் போடுகிறார்களா? இங்கே கருணாநிதி சொன்னதை நினைவு கூருங்கள் சமஸ்.
இந்த ஏஷியன் ஏஜ் தினசரியில் நான் எழுத ஆரம்பித்தது ஒரு கதை. அதன் தில்லி ஆசிரியர் ஸீரோ டிகிரியின் ரசிகை. அவர் ஒருமுறை ஜெய்ப்பூர் இலக்கிய விழாவில் என் பேச்சைக் கேட்டு விட்டு மிகத் தீவிர ரசிகை ஆகி விட்டார். எங்கள் தினசரியில் பத்தி எழுதுகிறீர்களா என்று கேட்டார். சரி என்றேன். அது டிசம்பர் மத்தி. ஜனவரி முதல் தேதியிலிருந்து தொடங்கலாம் என்றார். சென்னை டெக்கான் கிரானிகிள் அலுவலகத்துக்கு அனுப்பி விடுங்கள் என்றார். ஒரு குறிப்பிட்ட அண்ணனின் நம்பரும் கொடுத்தார். அண்ணன் என்று ஏன் சொல்கிறேன் என்று பின்னால் வரும். நான் ரெண்டே நாளில் கட்டுரையை எழுதி அண்ணனுக்கு அனுப்பி விட்டு அண்ணனையும் போனில் கூப்பிட்டு சொல்லி விட்டேன். அதற்குப் பிறகு அண்ணனிடமிருந்து எனக்குத் தகவலே இல்லை. ஒரு வாரம் ஆயிற்று. அண்ணனின் உதவியாளரை அழைத்தேன். அவர் என் மீது கொலைவெறியில் இருக்கும் இலக்கிய ஆர்வலர் என்பது எனக்கு அப்போது தெரியாது. இன்ன மாதிரி மேட்டர், என் மேட்டர் அண்ணனிடம் இருக்கிறது, தில்லிக்குப் போய் விட்டதா என்று கேட்க வேண்டும். கேட்டுச் சொல்கிறேன். இன்னொரு வாரமும் போனது. மீண்டும் அண்ணனுக்கே போன் போட்டேன். எடுத்தார். விஷயத்தைச் சொன்னேன். என் மனைவிக்கு உடம்பு சரியில்லை, மருத்துவமனை வந்திருக்கிறேன் என்றார். சரி எப்படியோ போகட்டும் என்று அந்த விஷயத்தையே மறந்து விட்டேன்.
ஒரு மாதம் கழித்து ஜனவரி முடிவில் தில்லி ஆசிரியரிடமிருந்து எனக்குக் கடிதம். ஒரு பிரபல நாளிதழின் அகில இந்தியப் பதிப்பில் பத்தி எழுதுவது என்றால் உமக்குக் கசக்கிறதா? அதுவும் லண்டன் பதிப்பிலும் வரும். உம்மிடமிருந்து ஒரு வார்த்தை கூட வரவில்லையே? ஆசிரியர் என் நண்பராகவும் ஆகி விட்டதால் உரிமையோடு திட்டியிருந்தார். எனக்கு விஷயம் புரிந்து விட்டது. இங்கேயே – சென்னை அலுவலகத்திலேயே sabotage செய்து என் கட்டுரையைப் புதைத்து விட்டார்கள். மனம் விட்டு சொல்லுங்கள் சமஸ், ஒரு பத்திரிகையாளனாக இப்படிப்பட்ட விஷயங்களைக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? எனக்கு யாரும் உதவி செய்ய வேண்டாம். இவர்களின் தலைமையகத்தில் என்னை ”பத்தி” எழுதத் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். இவர்கள் அதை சதி செய்து அமுக்குகிறார்கள் என்றால், இவர்கள் என் சோற்றில் விஷம் கூட வைப்பார்கள் என்றுதானே அர்த்தம்? இவர்களின் எதிர்பார்ப்பு என்னவென்றால், நான் சாக வேண்டும்; இல்லாவிட்டால் தருண் தேஜ்பால் போல் ரேப் கேஸில் ஜெயிலுக்குப் போய் அவமானப்பட்டு ஒழிய வேண்டும். இதைத்தான் இங்கே பலரும் எதிர்பார்க்கிறார்கள். இதனாலேயே நான் ராமகிருஷ்ண பரமஹம்சரைப் படித்து அவர் வழியில் பெண்களையெல்லாம் அம்மா அம்மா என்று அழைத்துக் கொண்டிருக்கிறேன். இவர்களுக்கு இதுதான் திட்டம் என்றால், நாம் சாமியாராகி விடுவோம். என்ன சொல்கிறீர்கள் சமஸ்?
அப்படி என்னை அமுக்கிய அதே அண்ணன் தான் இப்போது ஆங்கில ஹிண்டுவில் இருக்கிறார். ஜெயமோகனின் 60 சிறுகதைகள் முடிந்த போது முதல் பக்கத்தில் நாலு பத்தியில் செய்தி போட்டது இதே அண்ணன் தான். போடட்டும். இப்போதாவது தமிழ் எழுத்தாளன் கவனிக்கப்படுகிறானே என்று மகிழ்ச்சிதான். ஆனால் அதே நாளில்தான் நானும் 60 அத்தியாயங்கள் பூச்சி எழுதி முடித்திருந்தேன். அது செய்தி இல்லையா? இல்லை. நான் ஏதாவது பொம்பளை கேஸில் மாட்டினால் இதே அண்ணன் நாலு பத்தியில் ஏதோ ஆட்டோ ஷங்கர் கேஸ் போல் செய்தி போடுவார். இதை ஏதோ ஒரு தன்னிரக்கத்தால் எழுதவில்லை. என் அளவுக்கு ஜெயமோகனை வெறுக்கும் கும்பலும் இருக்கிறது. கடவுளே வந்தாலும் ஜெயமோகனை பொம்பளை கேஸில் மாட்ட வைக்க முடியாது என்பதால் மளிகைக்கடை விவகாரம், ராஜதுரை விவகாரம், ராஜன் குறை விவகாரம் என்று பெட்டிக்கடை பிரச்சினைகளில் அவர் பெயரை இழுத்துக் கல்லால் அடிக்கிறார்கள்.
சரி, இதையெல்லாம் ஏன் என்னிடம் சொல்கிறீர்கள் என்று நீங்கள் கேட்கலாம். எனக்கு என்ன சாபம் என்றால், என் எதிரியும் என்னைப் புறக்கணிக்கிறார். என் நண்பரும் என்னைப் புறக்கணிக்கிறார். மேலே உள்ள கருணாநிதி மேற்கோளை நினைவு கூருங்கள். உங்களுக்கு என் எழுத்து பிடிக்காமல் இருக்கலாம் சமஸ். உங்களுக்குப் பிடித்த எழுத்தாளர் ஜெயமோகன் என்பதும் எனக்குத் தெரியும். ஆனால் நீங்கள் நடுநிலைமையானவர் இல்லையா? பத்திரிகை தர்மம் என்ற ஒன்று இருக்கிறது இல்லையா? நேற்றோ முந்தாநாளோ முகநூலில் ஒரு தமிழ் இந்து செய்தியைப் பகிர்ந்திருந்தார்கள். என் நண்பர் ராம்ஜியின் புகைப்படத்தைப் பார்த்ததால் உள்ளே போனால் மன உளைச்சல். பிள்ளையார் சுழி போல் ஜெயமோகன் பெயரைப் போட்டு விட்டுத்தான் கட்டுரையையே ஆரம்பிக்கிறார் தம்பி கே. கணேஷ் குமார். (தம்பியாகத்தான் இருக்கும். என் வயதில் பத்திரிகையில் ஓய்வு கொடுத்து விடுவார்களே?) அது என்ன பிள்ளையார் சுழி? இதுதான்:
”இந்த பொதுமுடக்கக் காலத்தைப் பயன்படுத்தி ஜெயமோகன் போன்ற பிரபல எழுத்தாளர்கள் சிறுகதைகளாக எழுதிக் குவித்துக்கொண்டிருக்க, வாசகப் பரப்பிலிருந்து சிலர் எழுத்தாளர்களாகத் தங்களை அழுத்தம் திருத்தமாக முன் வைத்திருக்கிறார்கள்.”
இந்த நாலு வரிகளுக்குள் என் பெயரும் இருக்கிறது, கண்டு பிடித்தால் உங்களுக்கு ஒரு பரிசு காத்திருக்கிறது சமஸ்.
கண்டு பிடித்து விட்டீர்களா? கொஞ்சம் தலைமறைவாக இருக்கிறேன். அவ்வளவுதான். போன்ற என்ற வார்த்தைக்குள் என் பெயர் இருக்கிறது. என்ன அழுவாச்சியாக வருகிறது என்றால், கடந்த நாற்பது ஆண்டுகளாகவே என் புனைப்பெயர் இந்த “போன்ற” தான். கருணாநிதி தன் 95ஆவது வயதில் சொன்னதை இங்கே நினைவு கூருங்கள். 100 புத்தகங்களை எழுதியுள்ள 66 வயதான நான் ஒரு சின்னஞ்சிறிய தம்பிக்குக் கூட ”போன்ற” தான். கொரோனா ஆரம்பித்த நாளிலிருந்து தினந்தோறும் – ஒரு நாள் விடாமல் பூச்சி தொடர் வந்து கொண்டிருக்கிறது. அது கட்டுரைத் தொடர் அல்ல. பழுப்பு நிறப் பக்கங்கள்தான் கட்டுரை. மெதூஸாவின் மதுக்கோப்பைதான் கட்டுரை. பூச்சி ஒரு autobiographical notebook. Autofiction இலும் சேராத ஃபிக்ஷனில் சேராத கட்டுரையிலும் சேராத ஒருவகை சுயசரிதைத்தன்மை வாய்ந்த தொடர் இது. நேற்றோடு 100 நாள். நூறு நாளில் நூறு அத்தியாயம். என் நண்பரிடம் இது பற்றிக் குறைப்பட்டு, இங்க்லீஷ் ஹிண்டுவில்தான் அண்ணன் ஜி இருக்கிறார் என்று பார்த்தால் நம் தமிழ் இந்துவிலும் இந்த மாதிரிப் பண்ணுகிறார்களே என்றேன். உடனே நண்பர் “அது ஒண்ணும் இல்ல சார், நீங்க ஒரு தப்பு பண்ணிட்டீங்க. ஜெயமோகன் ஒவ்வொரு கதைக்கும் தலைப்பு வைக்கிறார். நீங்க நம்பர் மட்டும்தானே போடுறீங்க. தலைப்பு வச்சிருக்கணும்” என்றார். நான் இருந்த நாலாவது மாடியிலிருந்து குதித்திருப்பேன். கடவுள்தான் காப்பாற்றினார். இலக்கியத்தில் இப்படிப்பட்ட வெகுளிகளும் இருக்கிறார்கள் பாருங்கள்.
இதையெல்லாம் படித்து ஜெ. மீது பொறாமையால் எழுதியிருக்கிறேன் என்று தயவுசெய்து நினைத்துவிட வேண்டாம். சத்தியமாக அப்படி இல்லை. தமிழில் நான் பொறாமைப்படும் ஒரே நண்பர் பெருமாள் முருகன் தான். ஏனென்றால், படைப்புரீதியாக எந்தத் திறமையும் இல்லாமல் ஒருவர் நோபல், புக்கர் ரேஞ்சுக்குப் போவதென்றால், ஜாதகத்தில் விபரீத ராஜ யோகம்தானே இருக்க வேண்டும்? நம் தேவ கௌடா பிரதம மந்திரி ஆனது மாதிரி. அவரை அந்த உசரத்துக்கு அனுப்பியது அந்தக் குறிப்பிட்ட ஜாதி சங்கம்தான். அதனால் நானும் சில ஜாதி சங்கத் தலைவர்களிடம் பேசினேன். பெருமாள் முருகனுக்கு விட்டது போல் எனக்கும் கொஞ்சம் கொலை மிரட்டல் விடுங்களேன் என்றேன். கோவில் திருவிழாவில் க்ரூப் செக்ஸ் நடக்கிறது, அதற்கு வரலாற்று ஆதாரம் உண்டு என்று எழுதுங்கள். கொலை மிரட்டல் தானாக வரும் என்றார்கள். நமக்குப் பெருமாள் முருகன் மாதிரி வரலாறு வராது என்பதால் விட்டு விட்டேன்.
இந்த நோபல், புக்கர் எல்லாம் எதற்கு என்றால், பணத்துக்கு அல்ல. அல்லவே அல்ல. ஏதாவது சர்வதேசப் பரிசு என்றால்தான் நம்மைத் திரும்பியே பார்க்கிறான். எனக்கு இத்தாலோ கால்வினோ, மிலன் குந்தேரா மாதிரி ஐரோப்பிய வாசகரிடையே பரவலாகத் தெரிய வர வேண்டும் என்று விருப்பம். அது புக்கர் கிக்கர் நடந்தால்தான் சாத்தியம். அதற்காகத்தான் அதில் கண். மற்றபடி தமிழ் இந்துவில் பெயர் இல்லையே என்பது பிரச்சினையே இல்லை. இருந்தாலும் இதை எழுதியதன் காரணம், ஏற்கனவே குறிப்பிட்டது போல பத்திரிகை தர்மம் என்ற ஒன்று இருக்கிறதே? சமஸ் என்றால் கொஞ்சம் சமத்துவம் பேண வேண்டும்தானே? ஐயோ, இந்துவில் வரும் கட்டுரையெல்லாம் என் பார்வைக்கு வராதே என்று நீங்கள் சொல்லலாம். உண்மைதான். எனக்கும் அது தெரியும். ஆனால் ஜெயமோகன் பெயரைப் பிள்ளையார் சுழியாகப் போடும் பழக்கத்தையே நீங்கள்தானே ஆரம்பித்தீர்கள் சமஸ்? மேலே குறிப்பிட்ட கருணாநிதி நேர்காணலுக்கே போவோம். அந்த நேர்காணலும் ஜெயமோகன் பெயரைப் பிள்ளையார் சுழியாகப் போட்டுத்தான் ஆரம்பிக்கிறது. தலைவரின் மேஜையில் ஜெயமோகனின் அறம் இருக்கிறது என்று தொடங்குகிறது உங்கள் நேர்காணல். அப்படித் தொடங்கியதன் காரணம், தலைவருக்குப் பழந்தமிழ் இலக்கியம் மட்டும் அல்ல; சமகால இலக்கியமும் தெரிந்திருக்கிறது என்பதற்கான ஒரு ருசுதான் அறம் தொகுப்பு. ஜெயமோகனின் ஒட்டு மொத்த இலக்கிய இயக்கத்துக்கு நோபல் பரிசே கொடுக்கப்பட வேண்டும். அதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. ஆனால் அப்படி நாலைந்து பேர் தமிழில் இருக்கிறார்கள். 90 வயது ஆன இந்திரா பார்த்தசாரதியிலிருந்து எஸ். ராமகிருஷ்ணன் வரை. எஸ்.ரா. உயிர்மையில் எழுதிய சிறுகதைகள் எல்லாம் உலகத் தரமானவை. உ-ம். பதினெட்டாம் நூற்றாண்டில் பெய்யும் மழை. இன்னொரு விஷயம். எஸ்.ரா.வும் இந்த நூறு நாள் ஊரடங்கில் நூறு குறுங்கதைகள் முடித்து விட்டார். ம். அதுதான் தம்பி அவர் பெயரையும் “போன்ற”வில் அடக்கி விட்டாரே?
கருணாநிதியின் மேஜையில் எத்தனையோ சமகால இலக்கியக்கர்த்தாக்களின் புத்தகங்கள் இருக்கும். எனக்குத் தெரியும். அதெல்லாம் பிள்ளையார் சுழியாக வர வாய்ப்பு இல்லை. ஏனென்றால், சமஸுக்குப் பிடித்த எழுத்தாளர் ஜெயமோகன். இதைத்தான் தம்பி கே. கணேஷ் குமாரும் பின்பற்றியிருக்கிறார். பேசாமல் ஒன்று செய்யலாம் சமஸ். நம் ஆட்டோக்காரர்கள்தான் சமத்துவத்தில் கிங். பார்த்திருப்பீர்கள். தவறாமல் மூன்று படம் இருக்கும். சிவ பெருமான், 786, சிலுவை. அதே சமத்துவத்தை நீங்களும் கே. கணேஷ் குமாரும் பின்பற்றலாம். நல்லவேளை, நாங்களும் மூவராகத்தான் இருக்கிறோம்.
இன்னொரு சந்தேகம் சமஸ். எனக்கு ஒருவேளை புக்கர் கிக்கர் கிடைத்தால் செய்தி போடுவீர்களோ?
அடியேன்
சாரு நிவேதிதா