பூச்சி 100

என் எழுத்தைப் படித்தவுடனேயே பல கடிதங்கள் எழுதி எனக்குத் தன் கருத்துக்களைத் தெரிவிக்கும் பெரியவர் பாலசுப்ரமணியன்.  இன்று அவரிடமிருந்து ஆறு ஏழு கடிதங்கள்.  அதில் ஒன்று, அம்மா பற்றி.  என் அம்மா பற்றி ஏதோ ஒரு புத்தகத்தில் எழுதியிருந்தேன்.  அவந்திகாவை அம்மா அவமதித்து விட்டதால் பல ஆண்டுகள் அம்மாவையே பார்க்கவில்லை என்று.  ஆனால் நம் சாஸ்திரங்கள் அப்படிச் சொல்லவில்லை. அம்மா எப்படி இருந்தாலும் அம்மா அம்மாதான்.  ஒருபோதும் அம்மாவை விட்டுக் கொடுக்கக் கூடாது. 

இந்தக் கடிதத்துக்கு மட்டும் நான் பதில் எழுதி விடலாம் என நினைத்தேன்.  நான் ஒரு துறவி போன்றவன்.  எனக்கு மற்ற மனிதர்களின் மதிப்பீடுகள் அற ஒழுக்கங்கள் சம்பிரதாயங்கள் எதுவுமே பொருந்தாது.  துறவி என ஒப்புக் கொள்ள முடியாது என்றால், பைத்தியம் என்றும் வைத்துக் கொள்ளலாம்.  பைத்தியத்துக்கும் எதுவும் பொருந்தாது.  எனக்கு அம்மா அப்பா யாரும் கிடையாது.  நான் எழுத்தை வரித்துக் கொண்டவன்.  சமூகத்துக்குச் சொந்தமானவன்.  அப்பாவின் மரணச் செய்தி வந்த போது கூட கட்டுரை எழுதிக் கொடுத்து விட்டுத்தான் வர முடியும், நேரமானால் சடலத்தை எடுத்து விடுங்கள் என்று சொன்னவன்.  பத்திரிகைக்கு அவசரமாகக் கட்டுரையைக் கொடுத்தாக வேண்டும்.  அம்மா, அப்பா, குடும்பம், குட்டி எதுவும் கிடையாது.  ஆனால் பெரும் பெரும் ஞானிகளே அம்மா என்று வரும்போது அந்த உறவை விட்டுக் கொடுக்காதது பற்றி அறிவேன். பட்டினத்தடிகளை விடவா யாரும் கதறப் போகிறார்கள்?  இன்னொருவர், ஆதி சங்கரர்.  அவராவது கொடுத்த வாக்கைக் காப்பாற்ற வேண்டும் என்று ஓடி வந்தார்.  ஆனால் பட்டினத்தடிகள்… பயங்கரம்.  

எனக்கு இது போன்ற பந்தங்கள் எப்போதுமே இருந்ததில்லை.  என் மகன் கார்த்திக் மரைன் எஞ்சினியரிங் படித்த போது எக்கச்சக்கமாகக் கட்டணம் கட்ட வேண்டியிருந்தது. (என் பையன் மரைனர் என்று சொன்னால் பல நண்பர்கள் ஆ என்று வாயைப் பிளக்கிறார்கள்.  அவன் மரைனர் என்றால், அது அவன் வாழ்க்கை.  எனக்கு அவன் இதுவரை ஒரு நயாபைசா கொடுத்தது இல்லை.  நானும் கேட்டது இல்லை.  அவனுடைய ஊதியம் எவ்வளவு என்று கூட எனக்கோ அவந்திகாவுக்கோ தெரியாது.  இனிமேல் அவனால் எனக்குக் கொடுக்கவும் இயலாது.  வீடு வாங்கி விட்டான்.  ஒருவேளை அவன் என் வாசகனாக இருந்திருந்தால் கொடுத்திருக்கலாம்.  ஏனென்றால், மாதம் பதினைந்தாயிரம் ரூபாய் சம்பாதிக்கும் வாசகர்கள் கூட மாதம் ஐநூறோ முன்னூறோ அனுப்புகிறார்கள்!)

கார்த்திக்குக்காகக் கட்டணம் கட்ட முடியாத நிலையில் கடைசி மூன்று ஆண்டுகள் அமெரிக்காவில் மருத்துவம் படித்துக் கொண்டிருந்த ஒரு தமிழ் மாணவிதான் அவனுக்கான கட்டணத்தைக் கட்டினார்.  அவர் என் வாசகி என்பது தவிர அவரைப் பற்றி எனக்கு எதுவுமே தெரியாது.  கார்த்திக் படித்து முடித்ததும் அந்த வாசகிக்கும் எனக்குமான தொடர்பு விட்டுப் போயிற்று.  அவரெல்லாம் எனக்கு என்ன உறவென்று சொல்வது? தாயை விட மேலாகப் பார்க்கிறேன்.

நான் யாருடைய நம்பிக்கைகளையும் புண்படுத்த விரும்பவில்லை.  ஆனால் நான் யார் என்று சொல்கிறேன்.  அடிப்படையில் நான் இந்தியனே அல்ல என்கிறேன்.  நான் தேசமற்றவன்.  பறவையைப் போன்றவன்.  பறவைக்கு தேசம் என உண்டா?  எந்த மொழிக்கும் எந்த தேசத்துக்கும் எந்த மண்ணுக்கும் எந்தப் பண்பாட்டுக்கும் எனக்கும் எவ்வித உணர்வுபூர்வமான உறவும் என் மனதில் இல்லை.  தலித்தோடு நான் தலித்தாக உணர்கிறேன்.  பெண்களோடு பெண்ணாக உணர்கிறேன்.  முஸ்லீமோடு முஸ்லீமாக.  பிராமணனோடு பிராமணனாக. பூனையோடு பூனையாக.

ஆக, எந்த இடத்திலும் ஒரு வேர் இல்லாததால் என்னை எந்த தர்ம சாஸ்திரமும் ஈர்க்கவோ கட்டுப்படுத்தவோ இல்லை.  இங்கே இருந்த சாதிப் பிரிவினை இந்திய சாஸ்திரங்களுக்கு ஒரு சவால்.  எனவே சாஸ்திரம் சொல்வது எதையுமே நான் பின்பற்றுவதில்லை.  மேலும், நான் இந்திய மனோதர்மத்துக்கே மாறுபாடானவன்.  சென்ற அத்தியாயத்திலேயே குறிப்பிட்டேன்.  இந்தியாவில் பிறந்தாலும் நான் ஒரு ஐரோப்பிய மனநிலை கொண்டவன்.  அங்கெல்லாம் பதினெட்டு வயதானால் வீட்டை விட்டுக் கிளம்பி விடுவார்கள் பிள்ளைகள்.  அதற்கப்புறம் அம்மாவும் அப்பாவும் கிறிஸ்துமஸ் அன்றைக்குத்தான்.  நானும் அப்படித்தான்.  நான் குடும்ப அமைப்பிலிருந்தே விலகினவன்.   என் வீட்டு விசேஷங்களில் என் குடும்பத்தினர் அநேகமாக இருக்க மாட்டார்கள்.  வருகின்ற எல்லோரும் என் இலக்கிய நண்பர்கள் மட்டுமே.   லௌகீகமான எந்த சட்டதிட்டங்களும் எனக்குப் பொருந்தாது.  சார்ல்ஸ் ப்யூகோவ்ஸ்கி ரோட்டோரத்தில் பியர் பாட்டில்களோடு வாழ்ந்தார்.  நான் என் புத்தகங்களோடும் அவந்திகாவோடும் ஒரு வீட்டில் வசிக்கிறேன்.  அந்த வித்தியாசத்தைத் தவிர மனோபாவம் இருவருக்கும் ஒன்றுதான். 

மேலும், அவந்திகா மீது எனக்குப் புகார்கள் இருந்தாலும் ஒரு அய்யங்கார் வீட்டுப் பெண் செய்கிற காரியங்களையா அவள் எனக்காகச் செய்கிறாள்?  எனக்குக் கருவாடு பிடிக்கும் என்பதற்காக அவளே மார்க்கெட்டுக்குப் போய் மீன் வாங்கி வந்து கழுவி, கருவாடு போட்டு, காய வைத்து, குழம்பு வைத்துக் கொடுப்பதெல்லாம் காவியங்களில் மட்டுமே படிக்கக் கூடியது.  அதிக பட்சம் மீன் வாங்கிக் கொடுத்தால் சமைத்துக் கொடுப்பார்களாயிருக்கும்.  இவளே அல்லவா மார்க்கெட்டுக்குப் போய் வாங்கிக் கொண்டு வந்து கருவாடு போடுவது என்றால்?  யாருக்காவது இந்தக் காலத்தில் கருவாடு போடத் தெரியுமா?  மீன் விற்கும் பெண்களுக்குத் தெரியும்.  அய்யங்கார் பெண்ணுக்கு?  ஏன் இத்தனை கஷ்டப்படுகிறாய், கருவாடுதான் கடையில் கிடைக்கிறதே என்றால், ”உனக்கு ரத்த அழுத்தம்,  கடை கருவாட்டில் உப்பு அதிகம் இருக்கும்,  நான் போட்டால்உனக்கு ஏற்றாற்போல் மிதமாகப் போடுவேன்” என்று பதில் வரும்.  இவளுமே எனக்குத் தாயைப் போன்றவள்தான் என்பது என் கருத்து. 

மேலும், நான் எப்படிப்பட்ட காலத்தில் பூனைகளுக்கு உணவு இடுவதற்காக கீழே போகிறேன்?  வேறு எந்தக் காரணத்துக்காகவும் வீட்டை விட்டுச் செல்வதில்லை.  கேட்டிலிருந்து வீட்டுக்கு வந்தாலே மூச்சு விட முடியாமல் மூச்சுத் திணறல்.  அப்படிப்பட்ட நான் கொரோனா தொற்றினாலும் மயிரே போச்சு என்று கீழே இறங்கிப் போவது ஏன்?  அந்தப் பூனைகளை என் குழந்தைகளாகப் பார்க்கிறேன்.  எல்லாவற்றிலும் பிரம்மத்தைப் பார் என்றால் வெறும் வார்த்தைகளா அவை?  நான் அதைச் செயல்படுத்திக் கொண்டிருக்கிறேன்.  எனக்குத் தனிப்பட்ட முறையில் அம்மா அப்பா யாரும் கிடையாது.  அது மட்டும் அல்ல.  உறவு பந்தம் பாசம் எல்லாவற்றையும் அறுத்தவன் நான்.

பொலிவியாவில் நிற்க முடியாமல் மூச்சுத் திணறல் ஏற்பட்டது.  14000 அடி உயரம்.  குஸ்கோ என்ற ஊர்.  மாச்சுபிச்சு அருகே உள்ள ஊர்.  இனிமேல்தான் பொலிவியாவைச் சுற்ற வேண்டும்.  இனிமேல் செல்லும் ஊர்கள் அதற்கும் மேல் உயரம்.  பொலிவிய பயணத்தை ரத்து செய்து விட்டு சீலே கிளம்பி விட்டேன்.  எட்டு தினங்கள் சீலேவில் தனியாகச் சுற்ற வேண்டும்.  அதற்கென்று தனியாக ஐந்து லட்சம் ஆனது.  அவ்வளவா என்று இப்போது மலைப்பாக இருக்கிறது.  ஆனால் அத்தனை இடங்களைப் பார்த்தோம், நானும் ரொபர்த்தோவும். மேலும், ஒரு குழுவாகப் போனால் செலவு குறையும்.  நான் ஒற்றை ஆளாகப் போனேன்.  மற்றும் திடீர் விமானச் செலவு வேறு.  அந்த ஐந்து லட்சத்தையும் அனுப்பி வைத்தது தனித்தனியாக என் வாசகர்கள்தான்.  அதுவும் ஒருசில நாட்களில்.  அதில் ஒரு நண்பர் ஐம்பதாயிரம் அனுப்பியிருந்தார்.  அதற்கு முன் பழக்கம் இல்லை.  அதற்குப் பின்னரும் தொடர்பு இல்லை.  சென்ற வாரம் எனக்கு திடீரென்று தோன்றி அவருக்கு போன் செய்து நகுலன் சந்திப்புக்கு வந்தீர்களா என்று கேட்டதும் திக்குமுக்காடிப் போய் விட்டார்.  அப்போது நான் சீலேவில் எனக்கு ஐம்பதாயிரம் அனுப்பியது பற்றிக் குறிப்பிட்ட போது அவருக்கு மேலும் திகைப்பு.  அதையெல்லாமா ஞாபகம் வைத்திருக்கிறீர்கள்?  உங்கள் லெபனான் பயணத்துக்கு உதவ முடியாமல் போய் விட்டதே என்று வருத்தப்பட்டார்.     இதெல்லாம் வேறு யாருக்காவது கிடைக்குமா என்று தெரியவில்லை.  இவர்களெல்லாம்தான் என் உறவுக்காரர்கள். 

நேற்று சீனியிடம் (அராத்து) பேசினேன்.  க்ஷேம லாபம் விசாரித்த போது அவர் ஒரு நாவலின் முதல் பாகத்தை எழுதி முடித்து விட்டதாகச் சொன்னார்.  கதை என்ன என்று அவரே சொன்னார்.  ரொம்ப குழப்பமான கதை.  அப்படியா, என்ன கதை?  ஒருத்தன் சென்னைலேர்ந்து லே போறான்.  அதுலயே 150 பக்கம் வந்துடுச்சு.  ஓ, சென்னைலேர்ந்து லேக்கு நடந்தே போறானா?  இல்ல சாரு, ஃப்ளைட்லதான் போறான்.  அதுக்கே 150 பக்கம் வந்துடுச்சு.  எனக்கே என்னடா இது ஜெயமோகன் மாதிரி ஆய்ட்டமோன்னு பயமா ஆய்டுச்சு, அதான் முதல் பாகம்னு போட்டுட்டேன். 

ஆஹா, எனக்குப் பொறாமையா இருக்கே சீனி?  நான் நேற்று ஒரு அத்தியாயம் எழுதினேன்.  ஒரு போர்க் காட்சி.  இருபது பக்கம் எழுதணும்.  இந்தப் பக்கம் ஒரு லட்சம் பேர்.  அந்தப் பக்கம் ஒரு லட்சம் பேர்.  ஒரு பக்கம் ஜெய்ச்சுடுச்சு.  அத்தியாயமே ரெண்டு வரிதான் வந்துச்சு.

அப்புறம் சீனி எனக்கு தைரியம் சொன்னார்.  அதற்காக இதைச் சொல்லவில்லை.  அந்த முதல் பாகத்தைக் கொடுங்கள், படித்துப் பார்க்கிறேன் என்று சொன்னபோது அவர் சொன்ன வார்த்தைகளில் தாய்மை பொங்கியது.

”தோ பாருங்க சாரு.  நீங்க உங்க நாவலை எங்க கிட்ட மேனுஸ்கிரிப்டா குடுத்தீங்கன்னா அது எங்களுக்கு கௌரவம்.  நாங்க உங்க கிட்ட குடுத்தா அது கௌரவம் இல்ல.  துன்பம்.  அயோக்கியத்தனம்.  உங்க நேரத்தை நாங்க திருடினா மாதிரி.  இந்த நாவல் வெளியீட்டு விழாவுக்குக் கூட நீங்க இதைப் படிச்சுட்டு வரக் கூடாது.  நீங்க பாட்டுக்கு வந்து உங்களுக்குப் பிடிச்சதைப் பேசணும்.  நீங்க எப்ப இதைப் படிக்கலாம்னா இது பற்றி வெளீல பெரிய அளவுல பேசி ஏதாவது விவாதம் வந்தாத்தான் நீங்க படிக்கணும்.”

எப்படி இருக்கிறது பாருங்கள்!  இதற்கும் என்னை கட்டாயப்படுத்தி வெளியீட்டு விழாவுக்கு அழைத்து – அதுவும் எப்படி?  புத்தக விழா நடந்து கொண்டிருக்கிறது.  புத்தக விழாவில் என்னுடைய புதிய புத்தகங்கள் ஒன்று கூட இல்லாத நிலையில் ஒரே ஒரு புத்தகத்தை ராப்பகலாக பிழைதிருத்தம் செய்து கொண்டிருக்கிறேன், என்னை யாரும் புத்தக விழாவுக்கு அழைக்காதீர்கள் என்று சொல்லியும் கேட்காமல், காலில் விழாத குறையாக என்னை அழைக்காதீர்கள் என்று கெஞ்சிக் கேட்டுக் கொண்டும், வற்புறுத்தி, கட்டாயப்படுத்தி, என் பெயரை அழைப்பிதழில் போட்டு, விழாவுக்கு நான் அந்தப் புத்தகத்தைப் படிக்கவில்லையே, அப்படி வருவது தப்பில்லையா என்று கேட்டால், நீங்கள் வந்தால் போதும் அது ஒன்றே போதும் என்று சொல்லி, அங்கே போய்ப் பார்த்தால், ஒரு விடியோ பதிவு செய்யக் கூட ஆள் இல்லாமல் – என்னிடம் சொல்லியிருந்தால் கூட கபிலனை வரவழைத்திருப்பேன், அதைக் கூட செய்யவில்லை – அந்த விழாவில் நான் இப்படியெல்லாம் புத்தக வெளியீட்டு விழா நடத்தக் கூடாது தம்பி, அராத்துவைப் பார், எப்படி தன் புத்தகத்தை ப்ரமோட் செய்கிறார் என்று பேசினால், என் புத்தக விழாவுக்கு வந்து சாரு அராத்து புத்தகத்தைப் பற்றிப் பேசினார் என்று அவதூறு செய்து கொண்டிருக்கும் நபர் எங்கே?  ஏய்யா, அறிவாளி, என் புத்தகத்துக்குப் பிழை திருத்தம் செய்து கொண்டிருக்கிறேன், என்னைத் தொந்தரவு செய்யாதே, நான் இந்த நாட்களில் உன் புத்தகத்தைப் படித்தால் என் புத்தகமே வராது என்று சொல்லியும் நீ அழைக்கிறாய் என்றால், என் புத்தகத்தை விட உன் புத்தகத்தைத்தானே முக்கியமாக நினைக்கிறாய் என்று பொருள்?  இப்போது என்ன ஆயிற்று?  நட்பே காலி.  அந்த நபரின் முந்தின புத்தகம் பற்றி நான் பேசிய ஒரு மணி நேர உரைக்கு மதிப்பே இல்லை.  எது நிற்கிறது தெரியுமா?  என்னை வலுக்கட்டாயப்படுத்தி அழைத்துப் போய் அவமானப்படுத்தியதும் இல்லாமல் என் மீது அவதூறு வேறு.  என்ன அவமானம் தெரியுமா?  ஒளிப்பதிவு செய்ய ஏற்பாடு செய்யாதது மட்டும் அல்ல.  அங்கே நாலே நாலு பேர்தான் அமர்ந்திருந்தார்கள்.  யாருக்குமே சொல்லவில்லை.  இதுவாய்யா எனக்குக் கொடுக்கும் மரியாதை?  மேலே சீனி சொன்னதைப் படியுங்கள்.  என் புத்தகத்தை நீங்கள் படிக்கவே கூடாது.  உங்கள் வேலையைச் செய்யுங்கள்.  அதுதான் எங்களுக்கு வேண்டும்.  அதுதான் எங்களுக்கு முக்கியம்.  அவன் நண்பனா, இவன் நண்பனா? 

இரண்டு தினங்களாக பூச்சி பக்கமே வரவில்லை.  இரண்டு வேலைகள்.  ஒன்று, வாழ்க்கையின் கடைசி எடிட்டிங்.  நெருங்கிய நண்பனுக்காக.  அதற்காக காலையில் நான்கு மணி நேரம்.  மொத்தம் 600 பக்கம்.  ஒரு மணி நேரத்தில் நாலு பக்கம் போகிறது.  எனில் 150 மணி நேரம்.  ஒரு மாதத்தில் முடிக்க வேண்டும். 

மதியத்துக்கு மேல் இன்னொரு எழுத்து வேலைக்கு ஆறு மணி நேரம்.  அதில்தான் அந்தப் போர்க் காட்சி.  ரெண்டு வாக்கியத்துக்கு மேல் போகவில்லை.  இப்போதைய போர் என்றால் சுலபமாக, விபரமாக, நேரில் பார்த்தது போல் எழுதலாம்.  ஒருத்தனிடம் கொண்டை ஊசி உள்ளது.  அந்தக் கொண்டை ஊசியால் உன் கழுத்தில் குத்திக் கொன்று விடுவேன், நேராகப் போய் அந்த இரட்டைக் கோபுரத்தில் மோது என்றான் தீவிரவாதி.  விமானி அந்தப்படியே செய்தான்.  3000 பேர் காலி. இது இந்நாளைய போர்.  இல்லாவிட்டால் இருக்கவே இருக்கிறது கொரோனா.  சீனாவில் ஒரு ஆய்வுக்கூடத்தில் பல விஞ்ஞானிகள் ஒரு உயிர்க்கொல்லி நுண்ணியிரியை உருவாக்கி விட்டார்கள்.  நோக்கம், அமெரிக்காவின் மீதான பயலாஜிகல் வார்.  நுண்ணியிரியை உருவாக்கும்போது அது ஒரு விஞ்ஞானி மூலமாக சீனாவுக்குள்ளேயே பரவி அது உலகம் முழுக்கவும் பரவி உலகமே காலி.  இப்படியெல்லாம் இந்தக் காலத்துப் போர் என்றால் குழப்பமே இல்லாமல் எழுதலாம்.  இந்தப் பக்கம் ஒரு லட்சம் பேர்.  அந்தப் பக்கம் ஒரு லட்சம் பேர்.  போர்.  என்னய்யா எழுதுவது?  பதினைந்தாம் நூற்றாண்டில் போர்கள் எப்படி நடந்தன என்று நீலகண்ட சாஸ்திரி எதாவது புக் போட்டிருக்கிறாரா என்று அர்ஜுன் மோகனைக் கேட்டேன். தெரியவில்லை.  உடனே ஒரு ஐடியா தோன்றியது.  சாண்டியல்யனின் கடல் புறாவையும் ஜெயமோகனின் விஷ்ணுபுரத்தையும் எடுத்தேன்.  இதோ பாருங்கள், ஜெயமோகனை சாண்டியல்னோடு சேர்த்து விட்டேன் என்று புரிந்து கொள்ளாதீர்கள்.  நாம் இப்போது technicality of  text making என்பது பற்றிப் பேசுகிறோம்.  போர் என்ற விஷயத்தையே மறந்து விடுவோம்.  ஒரு கருப்பொருளை பைங்கிளி எழுத்தாளர் ஒருவரும் இலக்கியவாதி ஒருவரும் எப்படி விவரிக்கிறார்கள்?  அந்தத் தொழில்நுட்பம் என்ன?  நான் தொண்ணூறு வயது வரை வாழ்ந்தால் அது வரைக்கும் ஒரு மாணவன் தான்.  விஷ்ணுபுரம் வெளிவந்தபோது படித்தேன்.  ஆனால் அப்போது நான் கம்யூனிஸ் அனுதாபி.  அப்போது படித்த விதமே வேறு.  ஆனாலும் அந்த நாவல் படிப்பதற்கு மிகவும் அலுப்பைத் தந்தது என்று நினைவு.  ஆனாலும் படிக்க வேண்டியிருந்தது.  ஏனென்றால், அந்த நூலைப் பற்றிக் கருத்து கூறாவிட்டால் நீங்கள் எழுத்தாளனே இல்லை.

அப்படி மூன்று புத்தகங்களைச் சொல்லலாம்.  ஜேஜே சில குறிப்புகள்.  ஸீரோ டிகிரி.  விஷ்ணுபுரம்.  ஜேஜேவை எல்லோரும் பாராட்டினார்கள்.  கொண்டாடினார்கள்.  இப்படி ஒரு நாவல் வந்ததே இல்லை என்றார்கள்.  இரண்டு பேர் மட்டும் விமர்சித்தார்கள்.  தருமு சிவராமு, அடியேன்.  ஸீரோ டிகிரியை எல்லோரும் படித்தார்கள்.  பாதிப் பேர் ஆபாசம், சரோஜாதேவி என்றார்கள்.  பாதிப் பேர் கள்ள மௌனம்.  ஒரே ஒருவர் மட்டும் சிலாகித்துப் பேசினார்.  இந்திரா பார்த்தசாரதி.  அவரைத் தவிர வேறு ஒரு எழுத்தாளரும் அந்த நாவலைப் பாராட்டவில்லை.  விஷ்ணுபுரத்தையும் எல்லோரும் படித்தார்கள்.  பெரிதும் விவாதித்தார்கள். பாதிப் பேர் விமர்சித்தார்கள்.  பாதிப் பேர் காவியம் என்றார்கள்.  அசோகமித்திரன் கடந்த நூறு ஆண்டுகளில் இப்படி ஒரு நாவல் தமிழில் வந்ததில்லை என்று ஆங்கில ஹிண்டு தினசரியில் எழுதியிருந்தார்.

இப்போது என் வேலை தொழில்நுட்பம்.  போர்க்காட்சியை எப்படி இருபது பக்கம் எழுதுவது?  பார்க்கலாம், தோற்கிறேனா வெல்கிறேனா என்று.  ம், இன்னொரு விஷயம்.  விஷ்ணுபுரம் என் பிரதி பழசாகி விட்டது.  ஒரு அமெரிக்க நூலகத்திலிருந்து தரவிறக்கம் செய்து கொண்டேன்.  நீங்கள் இப்படிச் செய்யாதீர்கள்.  காசு கொடுத்து வாங்குங்கள்.  நான் ஏற்கனவே 10000 புத்தகங்களைக் காசு கொடுத்து வாங்கி விட்டேன்.  மேலும், இந்தக் கொரோனா காலத்தில் புத்தகத்துக்கு வீட்டுக்குள் அனுமதி இல்லை.  மஞ்சள் நீரில் குளிப்பாட்டிக் காய வைத்துத் தரவா என்கிறாள் அவந்திகா.  அதனால்தான் நூலகத்திலிருந்து எடுத்தேன். 

இன்று அப்படி காலையில் நான்கு மணிக்கே அமர்ந்தேன்.  எனக்கு நன்றாக எழுதக் கூடிய நேரம் காலை நான்கிலிருந்து பத்து மணி வரை.  அற்புதமான நேரம்.  வீட்டுக்குள்ளேயே வாக்கிங்.  Infinite walking.  பத்து அடி இருந்தால் போதும். இரண்டு ஸ்டூலை எதிரெதிரே போட்டு எட்டு போல் நடக்க வேண்டும்.  ஐந்து நிமிடத்துக்கு ஒருமுறை திசையை மாற்ற வேண்டும்.  என்ன நன்மை என்றால், பாட்டுக் கேட்டுக் கொண்டே நடந்தேன்.  மாடியில் பாட்டு கேட்க முடியவில்லை.  இண்டர்நெட் வேலை செய்ய மாட்டேன் என்கிறது.  ஆனால் மாடியில் வேறு வித அழகுகள்.  ஏராளமான கிளிகள்.  அதில் ஒன்று பஞ்சவர்ணக் கிளி.  அதனோடு பேசவே மாடிக்குப் போவேன்.  ஒருநாள் புகைப்படம் எடுத்து இங்கே பகிர்கிறேன்.

இன்றைய தினம் மேற்படி ஷெட்யூலுக்கு இடைஞ்சல்.  ஒன்பது மணிக்கு சாரூ… என்று அவந்திகாவின் குரல்.  நல்லவேளை, நான் கழிப்பறையில் இல்லை.  இல்லாவிட்டால் பீசூத்தோடு ஓடியிருக்க வேண்டும்.  வேறு வழியே இல்லை.  உயிர்.  என் உயிரின் உயிர் பரணில் ஒரு கால், ஏணியில் ஒரு காலாக மின்விசிறியைத் துடைத்துக் கொண்டிருந்தது.  ஏணி ஆடுகிறது.  உயிர்ப் பிரச்சினையா இல்லையா சொல்லுங்கள்.  நல்லவேளை, நான் கழிப்பறையில் இல்லை.  ஒன்பதிலிருந்து பத்து வரை சமையலறை சுத்தம்.  அவள் மேலேயிருந்து துடைக்க வேண்டியது.  நான் அவள் கொடுக்கும் அழுக்குத் துணியை அலசி அலசிக் கொடுக்க வேண்டியது.  வசிக்கின்ற இடம் சுத்தமாக இருக்க வேண்டும் சாரு.  ஆமாம்மா.  எனக்கு அவளை மேலே பார்த்துப் பார்த்து தலையே சுற்ற ஆரம்பித்து விட்டது.  ரத்த அழுத்தமோ என்ன கண்றாவியோ.  ஆமாம், எனக்கு ஒரு சந்தேகம்.  இத்தனை ஆண்டுகளாக இந்த வேலையையெல்லாம் யார் செய்தார்?  மேலே இருக்கிறேன்.  எனக்கு டென்ஷன் குடுக்காதே சாரு.  26 வருஷமா நான் தான் செய்யுறேன்.  ஏன் என்னைக் கூப்பிடலை.  வேலைக்காரப் பெண்ணை வைத்துக் கொண்டு செய்வேன்.  அடப் பாவிகளா, நான் பார்த்தது கூட இல்லையே?  அப்படி வைத்திருக்கிறேன் உன்னை.  அப்படிப் போடு. 

அதற்குப் பிறகு பாத்திரம்.  அதற்குப் பிறகு காய் திருத்தல்.  சும்மா இல்லை.  பொன்னாங்கண்ணிக் கீரையை இரண்டு பேருமாக ஆய்ந்தோம்.  பிறகு ஏதோ ஒரு வேலை.  வந்து எழுத உட்கார இரண்டு மணி ஆகி விட்டது. 

***

ஜெயகாந்தன் எழுதிய ஒரு இலக்கியவாதியின் கலை உலக அனுபவங்கள் புத்தகத்தை உடனே படிக்க வேண்டும்.   நான் சினிமா உலகில் நுழையவில்லை.  இனிமேல் நுழைவதற்கான எந்த சாத்தியமும் இல்லை.  ஆனாலும் – உள்ளே நுழையாமலேயே – வண்டி வண்டியாக அனுபவம் கிடைக்கிறது.  சென்ற வாரம் ஒருத்தர் வெளிநாட்டிலிருந்து அழைத்தார்.  ஏற்கனவே நான் எப்படி வேலை செய்து கொண்டிருக்கிறேன் என்று விவரித்திருக்கிறேன்.   அவர் ஒரு தமிழ்ப் படம் தயாரிக்கப் போகிறேன், நீங்கள் கதை, திரைக்கதை, வசனம் எழுதுவீர்களா என்றார்.  .  கதை மட்டும் சுருக்கமாகச் சொன்னார்.  மிகவும் நன்றாக இருந்தது.  அவரும் தெளிவாகப் பேசினார்.  சரி என்றேன்.  பட்ஜெட் எவ்வளவு ஆகும் என்று உத்தேசமாக விசாரித்துச் சொல்லுங்கள் என்றார்.  சரி என்றேன்.  பட்ஜெட் பற்றி இயக்குனராக இருக்கும் என் நண்பரிடம் விசாரித்தேன்.  அதில் அரை மணி நேரம்.  வெளிநாட்டுக்காரரிடம் பேசியதில் அரை மணி நேரம்.  இப்படி நான் நிறைய அனுபவப்பட்டிருப்பதால் மறுநாள் என் ஊதியம் எவ்வளவு என்று கேட்டேன்.  படத்தில் ஐந்து பகுதிகள்.  அதில் மூன்று பகுதியை அவர் எழுதுவார்.  நான் இரண்டு பகுதிக்குக் கதை, திரைக்கதை, வசனம் மூன்றையும் எழுத வேண்டும்.  சரி.  ஊதியம்?  ஒரு பகுதிக்கு 20,000 ரூ.  ரூபாய்?  ஆமாம்.  பிறகு போன் செய்தார்.  நான் எடுக்கவில்லை.  ஏழெட்டு முறை செய்திருப்பார்.  ஏழெட்டு முறையும் எடுக்கவில்லை.  அனாவசியமாக என்னுடைய ஒரு மணி நேரம் வீண்.  இனிமேல் சினிமா சம்பந்தமாகப் பேசுவதற்குக் கூட முன்பணம் கொடுத்தால்தான் பேச வேண்டும் என்று முடிவு செய்து விட்டேன்.  ஏனென்றால், இயக்குனரின் அரை மணி நேரத்தை வேறு வீணடித்திருக்கிறேன்.  

***

வளன் அரசு குறிப்பிட்டிருக்கும் இந்த அய்யங்கார் விஷயம் என்னவென்றால், நான் ஒன்றும் அய்யங்கார்களைப் பற்றி உசத்தியாக எழுதவில்லை.  பொறாமையில் வெந்து தணிந்தேன், அவ்வளவுதான்.  ஏனய்யா, ஒருத்தரைப் பார்த்துப் பொறாமைப்படுவது கூடவா தப்பு?  சுந்தர் பிச்சையைப் பார்த்து, சரி நம் தலித் மக்களுக்கும் விடுதலை கிடைத்து விட்டது, இப்பேர்ப்பட்ட இடத்தைப் பிடித்து விட்டார்களே என்று ராகவனிடம் ஒருநாள் சொன்னேன்.  என்னது உங்க ஆளா, அவர் என் சொந்தக்காரர்ங்க என்றார்.  என்னது, சுந்தர் பிச்சை அய்யங்காரா? பின்னே?  பிச்சை என்று இருக்கிறதே?  அய்யங்காரில் பிச்சை என்று வைப்பார்கள்.  அப்படியே உட்கார்ந்து அழுது விட்டேன்.  அடப்பாவிகளா, இந்த ஆட்களுக்கு மட்டும் மரபணுவிலேயே ஏதோ சேர்த்து அனுப்பியிருக்கிறான்  போலிருக்கிறதே கடவுள்!  பிச்சையை விட ஆச்சரியம் சீனிதான் (அராத்து).  படித்தது ஆதி திராவிடர் நலப் பள்ளி.  நானெல்லாம் அங்கே படித்திருந்தால் புழல் சிறையில்தான் இருந்திருப்பேன்.  பின்னே என்ன?  ஆதி திராவிடர் பள்ளி இங்கே உள்ள DAV மாதிரியா இருக்கிறது?  இங்கே ஐஐடியில் எத்தனை தலித் மாணவர்கள் இருக்கிறார்கள்?  இதெல்லாம் பிராமண சதி என்று சொன்னால் மடத்தனம்.  ஏன் நம்மால் வர முடியவில்லை என்பதே கேள்வி.  மூளை இல்லை, தலித் பொறுக்கி, பெண்கள் பின்னால் சுற்றுபவன், ரவுடி என்று”கள ஆய்வு” செய்து சொல்ல நான் ஒன்றும் ராஜன் குறை என்ற அய்யங்கார் புத்திஜீவி இல்லை.  ஏன் வர முடியவில்லை, ஏன் அய்யங்கார்கள் மட்டும் மேலே மேலே போய்க் கொண்டிருக்கிறார்கள் என்ற பொறாமை உணர்வால் எழுதிய விஷயம்.  அதற்கு அர்த்தம் அய்யங்கார் உசத்தி, மற்றவர் மட்டம் என்று அர்த்தம் அல்ல.  ராஜன் குறை மாதிரி அமெரிக்க நிறுவனத்திடம் பணம் வாங்கிக் கொண்டு இங்கே வந்து தலித் பொறுக்கி என்று சொல்லி இடைநிலைச் சாதிகளுக்கு இண்டெலக்சுவல் கூலி வேலை செய்வதை விட நான் மக்காகவே இருந்து கொள்வேன்.  ஆனாலும் ராஜன் குறை போன்ற விஷமிகள், சமூக விரோதிகள், ஃபாஸிஸ்டுகள் எந்த சாதியிலும் இருப்பார்கள்.   அவர் அய்யங்காராக இருப்பது ஒரு விபத்து, அவ்வளவுதான்.  ஆனாலும் ஒரு முட்டாள் விஷமியாக இருக்க முடியாது.  எங்கேயோ ஆரம்பித்து எங்கேயோ வந்து விட்டேன்.  நான் கிண்டலாக எழுதுவதை அந்தக் கிண்டலோடு புரிந்து கொள்ளுங்கள்.  நான் தாய்ப்பாசத்தையே கடந்து விட்டேன் என்கிறபோது இந்த அற்ப ஜாதி விஷயத்திலா ஈடுபாடு காட்டுவேன்?  எனக்கு எந்த ஜாதியும் உசத்தி இல்லை.  தாழ்த்தி இல்லை.  என்னை அவ்வப்போது விளையாடவும் அனுமதியுங்கள்.     

***

மாதாந்திர சந்திப்புகளுக்கு எவ்வளவு பணம் அனுப்பலாம் என்று சில நண்பர்கள் கேட்டிருந்தனர். இது நன்கொடைதான். நன்கொடை எவ்வளவு கொடுக்கலாம் என்பதைப் பெறுபவர் சொல்ல இயலாது. இருந்தாலும் சில நண்பர்கள் கேட்பதால் சொல்கிறேன். இந்தியக் காசுக்கு குறைந்த பட்சம் 300 ரூ. இருக்கலாம். அமெரிக்கக் காசுக்குக் குறைந்த பட்சம் பத்து டாலர். நன்கொடை என்பதால் இது குறைந்த பட்சம். அதிக பட்சம் என்பது அவரவர் பிரியம்.

PayPal மூலம் பணம் அனுப்ப என் மின்னஞ்சல் முகவரி மட்டும் போதும். charu.nivedita.india@gmail.com

Xoom.com மூலம் பணம் அனுப்ப என் முகவரி தேவை எனில் எனக்கு எழுதுங்கள். அனுப்புகிறேன். charu.nivedita.india@gmail.com

***

www.charuonline.com என்ற இந்த இணையதளம் 2002-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.  சினிமா, இசை, அரசியல், இலக்கியம் போன்ற தலைப்புகளில் இதில் இத்தனை ஆண்டுகளாகத் தொடர்ந்து எழுதி வருகிறேன்.  இந்த இணையதளத்தை ஒரு மாதத்தில் 60000 பேர் வாசிக்கிறார்கள்.  தமிழில் எழுத்தாளர்கள் இணையத்தில் எழுத ஆரம்பிப்பதற்கு வெகுகாலம் முன்னரே ஆரம்பிக்கப்பட்ட பழைய இணைய தளம் இது.  அப்போது விகடன், தினமலர் போன்ற பத்திரிகைகளின் இணைய தளங்கள்தான் இருந்தன.  இப்போது இந்த இணையதளத்தைக் கட்டணம் செலுத்திப் படிக்கும் தளமாக மாற்றலாமா என யோசித்தேன்.  அறுபது ஆயிரத்தில் ஆறு பேர் கூட எஞ்ச மாட்டார்கள்.  முன்பே அதைப் பரிசோதித்துத் தோற்றிருக்கிறேன்.  எனவே மீண்டும் அந்தச் சோதனையில் ஈடுபட மாட்டேன்.  ஆக, இப்போது என் வேண்டுகோள் என்னவெனில், இதை வாசிக்கும் அன்பர்களில் விருப்பமுள்ளவர்கள் தாமாகவே முன்வந்து கட்டணம் செலுத்தலாம்.  விருப்பம் இல்லாதவர்கள் கட்டணம் செலுத்தாமலும் படிக்கலாம்.  அவரவர் விருப்பம்.  பணம் எப்போதும் என் சிந்தனையில் இருந்ததில்லை.   இனிமேலும் இருக்காது.  பணம் பற்றி யோசிக்காமல் இருக்கக் கூடிய சூழல் இருந்தது.  யோசிக்காமல் இருந்தேன்.  இப்போது நிலைமை மாறி விட்டதால் பணத்துக்கான ஒரு சிறிய ஏற்பாடு இது.  எவ்வளவு கட்டணம் என்பதும் அவரவர் விருப்பம்.  மாதாமாதம் அனுப்ப முடியாவிட்டால் மூன்று மாதத்துக்கான தொகையை அனுப்பலாம். கட்டணம் செலுத்தவில்லையே, படிக்கலாமா கூடாதா என்ற அறம் சம்பந்தமான கேள்விக்குள் நுழைந்து விடாதீர்கள்.  அது 60000 என்ற வாசகர் எண்ணிக்கையைக் குறைத்து விடும்.  முடிந்தவர்கள் கட்டணம் செலுத்துங்கள்.  முடியாவிட்டால் எந்தப் பிரச்சினையும் இல்லை.

ஓரிரு நண்பர்கள் paypal மற்றும் google pay மூலம் பணம் அனுப்பலாமா என்று கேட்டார்கள்.  நான் paypal-இல் இருக்கிறேன்.  Paypal மூலம் அனுப்ப முடியாவிட்டால் Xoom.com மூலமும் அனுப்பலாம். பேபாலின் கிளை நிறுவனம்தான் அது. கூகிள்பே மூலம் அனுப்ப என் தொலைபேசி எண் வேண்டும் என்று நினைக்கிறேன்.  மின்னஞ்சல் செய்தால் தொலைபேசி எண் தருகிறேன்.  பொதுவில் போட இயலாது.  தொலைபேசி எண் இல்லாமலும் கூகுள்பே மூலம் அனுப்பலாம். அதற்குத் தேவையான என் UPI ID:

charu.nivedita.india@okaxis

இந்த ஒரு விபரம் இருந்தாலே கூகுள்பே மூலம் பணம் அனுப்பி விடலாம். தொலைபேசி எண்ணும் தேவையெனில் எழுதுங்கள்:

charu.nivedita.india@gmail.com

கட்டணம் செலுத்துவதற்கான வங்கிக் கணக்கு விவரம்:

UPI ID: charunivedita@axisbank

பெயர்: K. ARIVAZHAGAN

Axis Bank Account No. 911010057338057

Dr Radhakrishnan Road, Mylapore

IFSC No. UTIB0000006

ஒரு நண்பர் பெயரில் உள்ள K என்பதன் விரிவு என்ன என்று கேட்டிருந்தார்.  அவர் வங்கியில் கேட்கிறார்களாம்.  Krishnasamy.  என் தந்தையின் பெயர்.  ஆக்ஸிஸில் அனுப்ப முடியாவிட்டால் என் ஐசிஐசிஐ கணக்கு விபரம் கீழே:

K. ARIVAZHAGAN

ICICI a/c no.  602601 505045

MICR Code: 600229065

IFS Code ICIC0006604

T. NAGAR BRANCH chennai