மனுஷ்ய புத்திரனின் கவிதை வெளியீட்டு விழாவுக்குப் போகாதது சற்று ஏமாற்றமாக உள்ளது. சூரியனுக்கு அருகில் ஒரு வீடு இன்னும் படிக்கவில்லை. படிக்க வேண்டும். அதற்கு இடையில் அதில் உள்ள கடைசியாக என்ற கவிதையை எடுத்து ரொம்பப் பிடித்தது என்று சொல்லி கணேஷ் அன்பு வாசகர் வட்டத்தில் பகிர்ந்து இருந்தார். உடனே Guru Manutd என்ற வாசக நண்பர் அந்தக் கவிதை போலவே அமேலி என்ற பிரபலமான ஃப்ரெஞ்ச் படத்தில் வருகிறது என்று சொல்லி அந்த வசனத்தையும் எழுதியிருந்தார். முதலில் கவிதையையும் அமேலி வசனத்தையும் படியுங்கள். பிறகு சொல்கிறேன்.
Amelie still seeks solitude. She amuses herself with silly questions about the world below… such as, “how many couples are having an orgasm right now?”
கடைசியாக
இந்த மழையில்
இந்தக் குளிரில்
இந்த இரவில்
தனது
கடைசிப் புணர்ச்சி
எவ்வளவு காலத்திற்கு முன்பு
நிகழ்ந்தது என
இந்த நகரத்தில்
இன்னும் எவ்வளவு பேர்
யோசித்துக்கொண்டிருப்பார்கள்
நான் ஏற்கனவே எழுதியிருக்கிறேன்… உங்களுக்கு ஞாபகம் இருக்கலாம். கடைசிக் கொப்பை என்று மனுஷ்ய புத்திரன் ஒரு கவிதை எழுதியிருக்கிறார். அதே தலைப்பில் சிலே கவிஞர் Nicanor Parra-வும் ஒரு கவிதை எழுதியிருக்கிறார். நான் அந்த இரண்டு கவிதைகளை எடுத்துப் போட்டு மனுஷின் கவிதை நிகானோர் பார்ராவின் கவிதையை விட எவ்வளவு சிறப்பாக உள்ளது என்று எழுதியிருந்தேன். நிகானோர் பார்ராவை மனுஷ் நிச்சயமாகப் படித்திருக்க மாட்டார். இங்கே எல்லோருக்கும் பாப்லோ நெரூதாவைத்தான் தெரியும். இப்படி இரண்டு கலைஞர்கள் ஒரே விதமாக சிந்திப்பது உலகில் தொடர்ந்து நடந்து கொண்டிருப்பதுதான். மௌனியின் மிகப் புகழ்பெற்ற வாசகம் “எவற்றின் நடமாடும் நிழல்கள் நாம்?” என்பது. இது அப்படியே ஷேக்ஸ்பியரில் வருகிறது. ஒன்றும் பிரச்சினை இல்லை. மனுஷ்ய புத்திரன் அவ்வளவாக உலக சினிமா பார்ப்பதில்லை என்பது என் கணிப்பு. எனவே அமேலியிலிருந்து தான் அவர் இந்தக் கருத்தைப் பெற வேண்டும் என்ற அவசியம் இல்லை. சொல்லப் போனால் இன்றைய எந்திர மயமான உலகில் ஒவ்வொரு நாட்டிலுமே ஒவ்வொரு கவிஞன் இப்படி ஒரு கவிதையை எழுதியிருக்க முடியும்.
இவ்வளவுக்கும் மனுஷ்ய புத்திரனின் எழுத்தாளர் பட்டியலில் என் பெயர் இல்லை என்பதை நீங்கள் ஞாபகம் வைத்துக் கொள்ள வேண்டும். அவர் ரசனையில் நான் குறுக்கிட்டு கழுத்தை நெரித்து என் பெயரையும் சொல் என்று சொல்வது அராஜகம். அவர் பயின்றது சு.ரா. பள்ளியில். எனவே உத்தமத் தமிழ் எழுத்தாளன் எவ்வளவுதான் அவரை அவமானப் படுத்தினாலும் அவருக்கு உ.த.எ. எழுத்துதான் பிடிக்கும். எனக்கெல்லாம் தமிழில் முன்னோடியே இல்லை. என்னுடைய transgressive writing பாணியில் எழுதுபவர்கள் உலகிலேயே நான்கைந்து பேர் தான் இருக்கிறார்கள். ஒருநாள் தருணிடம் சொன்னேன், உன்னுடைய valley of masks போன்ற நாவலை ஒரு மனிதனால் எழுதவே முடியாது என. அதற்கு தருண் சிரித்துக் கொண்டே ஒரு பஞ்சாபி கெட்ட வார்த்தையைச் சொல்லி, கிண்டல் செய்யாதே… உன்னுடைய ஸீரோ டிகிரியை என்னால் கற்பனை கூட செய்ய முடியாது என்றார். அதுதான்யா நான் எழுதியதிலேயே சாதாரணம், நீ ராஸ லீலாவைப் படிக்க வேண்டும் என்றேன்.
அநேகமாக நான் இப்போது எழுதியிருக்கும் நாவல் மனுஷ்ய புத்திரனுக்குப் பிடிக்கலாம் என்று நினைக்கிறேன். அது baroque பாணியில் எழுதப்பட்டது. 300 பக்கம் செக்ஸ். மீதி 1000 பக்கம் மரம் செடி கொடிகள் மற்றும் மிருகங்கள். இன்னும் பெயர் வைக்கவில்லை. மார்ச்சில் வெளிவரும்.
Comments are closed.