To You Through Me – 13

Dear Charu

This one interview of yours is a Ph.D. thesis material. As a researcher who dwelt extensively on one material (Oxide material) and spent my entire life in that, I can visualize the benefits and pleasures. I’m sure, one day a thesis will be made on your writings. The real issue for a true READER is, the allotment of time required to follow your writings!

By the way, do you know why I’m mailing you now?

This morning, when I woke up by 7 am. I was having a horrifying feeling that I missed your talk about KaNaSu, which would have started by 6 am. I was trying to search for the link, then only realised its Thursday!!

Anyhow, waiting for Sunday. I doubt I won’t be having proper sleep until then!!

anbudan

Krishna
(Dr.D.Krishnamurthy)

இது போன்ற ஒரு கடிதம் போதும், ராப்பகலாகப் படிக்கவும் எழுதவும்.  க.நா.சு. பற்றிய உரைக்காகப் படித்துக் கொண்டிருக்கிறேன்.  எனக்கு வேண்டிய புத்தகங்கள் சிலவற்றை நண்பர் செந்தில் குமார் பிடிஎஃப்பாக அனுப்பி உதவுகிறார்.  செந்தில் குமார் போலீஸ் துறையில் உயர் அதிகாரியாக இருப்பவர்.  அதிலும் அவ்வளவாக யாரிடமும் இல்லாத ஒரு புத்தகத்தை அனுப்பினார்.   தஞ்சை ப்ரகாஷ் சாகித்ய அகாதமிக்காக எழுதிய க.நா.சு. பற்றிய வாழ்க்கை வரலாறு.  அந்த நூல் மிகவும் உதவியாக இருந்தது.  சென்ற வாரம் ராமகிருஷ்ணன் போன் செய்து ஏதாவது உதவி வேண்டுமா என்று கேட்டார்.  போலீஸ் துறையில் அதிகாரி.  பெரும் படிப்பாளி.  இவரைப் பற்றி ஏற்கனவே எழுதியிருக்கிறேன்.  பார்த்தால் பெரிய ஆன்மீக சொற்பொழிவாளர் மாதிரி இருப்பார்.  பேச்சு மணி ரத்னம் மாதிரி.  இவரை எப்படி போலீஸ் துறையில் – அதுவும் உயர் அதிகாரியாக வைத்திருக்கிறார்கள் என்று ஆச்சரியப்படுவேன்.  இவரைப் பார்க்க ஒருமுறை இவரது அலுவலகத்துக்குச் சென்ற போது ஒரு பெரிய மாலை போட்டு வரவேற்றார்.  மிகவும் கூச்சமாகப் போய் விட்டது.  எழுத்தாளர்களைக் கொண்டாடும் செந்தில் குமார், ராமகிருஷ்ணன் போன்ற அதிகாரிகள் இருந்தால் சமூகத்தின் அன்றாட இக்கட்டுகளிலிருந்து மீள கொஞ்சம் வசதியாக இருக்கும்.  இல்லாவிட்டால் எந்த நேரத்தில் எவன் நம் மேல் கை வைப்பான் என்றே சொல்ல முடியவில்லை.  அந்த வகையில் ஜெயமோகன் சம்பவம் என்னை ரொம்பவே உளவியல் ரீதியாக பாதித்து விட்டது. 

கிருஷ்ணாவின் கடிதம் படித்தீர்களா?  ஜப்பானில் 15 ஆண்டுகள் வசித்தவர் என்பதால் அவருக்கு ஒரு வேலை வைத்திருக்கிறேன்.  ஒரு இருபது ஆண்டுகளாகவே ஜப்பான் போக வேண்டும் என்று ஆசை.  சிவகாமி ஜப்பானில் சுற்றுலாத் துறை பொறுப்பு அதிகாரியாக ஐந்து ஆண்டுகள் இருந்த போதே ஒரு வார்த்தை சொல்லியிருந்தால் நடந்திருக்கும்.  இத்தனைக்கும் சிவகாமி என்னுடைய நீண்ட நாள் சிநேகிதி.  ஆனால் கேட்கவில்லை.  அவர் ஐஏஎஸ் வேலையை விட்ட பிறகுதான் போன் செய்தேன்.  என்னவோ நான் அப்படித்தான் இருக்கிறேன்.  ஆனால் வயது ஆகிக் கொண்டே போவதால் இனிமேலும் வாய் திறக்காமல் இருக்கக் கூடாது என்பதால் கிருஷ்ணாவிடம் கேட்டு விட்டேன்.  இந்தக் கொரோனா முடிந்ததும் – அது இருக்கு, இன்னும் ஒரு ஆண்டு – இரண்டு பேரும் ஜப்பான் கிளம்புகிறோம், ஒரு பதினைந்து நாள் என்று சொல்லி விட்டேன்.  வருகிறீர்களா என்று கேட்கவெல்லாம் இல்லை.  கிளம்புகிறோம்.  அவ்வளவுதான். ஒத்திப் போட நேரம் இல்லை. 

நாம் பாட்டுக்கு டிக்கட் வாங்கிக் கொண்டு ஜப்பான் போய் டூரிஸ்டுகளோடு டூரிஸ்டாக சுற்றுலாத் தளங்களைப் பார்த்து வருவதில் எனக்கு இஷ்டம் இல்லை.  தென்னமெரிக்க விஷயம் வேறு.  அது என் தாய் வீட்டைப் போல.  அங்கே என் கால் பதிந்தால் போதும், சுற்றுலா கைடுகளுக்கு நான் சொல்லிக் கொடுப்பேன்.  ஆனால் ஜப்பான் போன்ற நாடுகளை அங்கேயே வாழ்ந்தவர்களோடுதான் பார்க்க வேண்டும். 

இன்றுதான் ஞாயிற்றுக் கிழமை என்று பதறி அடித்து எழுந்து கொண்டதாக எழுதியிருக்கிறார்.  எனக்கும் அப்படித்தான்.  இரவெல்லாம் க.நா.சு.வின் வாழ்க்கை படம் மாதிரி ஓடிக் கொண்டே இருக்கிறது.  சொல்லப் போனால் கடந்த இருபது ஆண்டுகளாக கனவுகள் இல்லாத ஒரு இரவைக் கூட கழித்ததில்லை.  முன்பெல்லாம் ரெமி மார்ட்டின் அருந்திக் கொண்டிருந்த போது கனவு இருந்ததில்லை.  அதை நிறுத்தியதும் இரவை கனவுகள்தான் நிரப்புகின்றன.  அநேகமாக எல்லாம் கொடுங்கனவுகள்தான். பகல் எனக்கு எத்தனை ஜோராகப் போகிறதோ அதற்கு நேர் எதிர் இரவு.  ஒரே கொடுங்கனாக்கள்தான்.  ஆனால் அதெல்லாம் என் கையில் இல்லாததால் என்னால் ஒன்றும் செய்ய முடியவில்லை.  நேற்றுதான் வித்தியாசமாக க.நா.சு. இரவாகப் போயிற்று. 

தயாராகுங்கள்.  இந்திய நேரம் ஞாயிறு காலை ஆறு மணி.  26-ஆம் தேதி. ஆமாம், ஒரு விஷயம்.  கலந்து கொள்கிறவர்கள் – முடிந்தால் – சதீஷ்வரிடம் நீங்கள் எந்த நாட்டிலிருந்து பார்க்கிறீர்கள் என்று தெரிவிக்க முடியுமா?  எனக்கு ஒரு விபரத்துக்காக இது தேவைப் படுகிறது.  ஊர் பெயரெல்லாம் வேண்டாம்.  எந்த நாடு?  போதும்.  ஆனால் இது நீங்கள் என் உரையைக் கேட்பதற்கோ சதீஷுக்கோ தொந்தரவாக இருக்கக் கூடாது.  இருக்கும் எனில் இந்த விபரம் எனக்கு வேண்டாம். 

சந்திப்போம்.