ஐயோ பாவம்…

அன்பர் கமல்ஹாசனின் கவிதையை பல நண்பர்கள் அனுப்பியிருந்தனர். பலவிதமான கலவையான உணர்ச்சி ஏற்பட்டது. ஒரு மனிதன் எப்படி இந்த அளவு தனிமைப்பட்டுப் போக முடியும் என்று மிக மிக மிக வருத்தமாக இருந்தது. உலகத்தில் உள்ள முக்கியமான புத்தகங்களையெல்லாம் படித்து விட்டு, நான் விஷயமறிந்தவர்கள் என்று நினைக்கும் சிலரே கமல் நம்பமுடியாத அளவுக்கு ஒரு படிப்பாளி என்று சொல்லும்படியான பேர் வாங்கின ஒரு ஆள், இப்படியுமா கவிதை என்ற பெயரில் உளற முடியும்? உளறுவதற்கு ஒரு அளவு இல்லையா? ஞானக்கூத்தனிடம் இத்தனை பழகி இவர் எதைக் கற்றுக் கொண்டார்? கவிதை அறிய வேண்டாம், எது கவிதை இல்லை என்பதை அறிய வேண்டாமா? பாரதி இந்நேரம் உயிரோடு இருந்தால் நேராக வீட்டுக்குப் போய் திட்டியிருப்பார். இவருக்கு வைரமுத்து ஜெயமோகன் எல்லாம் நண்பர்கள் இல்லையா? அவர்களெல்லாம் போன் போட்டு இப்படியெல்லாம் பெயரைக் கெடுத்துக் கொள்ளாதீர்கள், சின்னப் பையன்களெல்லாம் சிரிக்கிறார்கள், இந்த உலகத்திலே மிகப் பெரிய அவமானம் laughing stock ஆவதுதான் என்று சொல்ல மாட்டார்களா? எம்பெருமானே, எனக்கு இப்படி ஒரு நிலைமை எக்காலத்தும் வரக் கூடாது சாமி.