பூச்சி 110

க.நா.சு.வைப் படித்துக் கொண்டிருக்கிறேன்.  இப்போது வேறு எதையும் தொடக் கூடாது.  ஆனால் நான் பெருந்தேவியின் கவிதைகளுக்குப் பெரும் ரசிகன்.  ஏற்கனவே பெருந்தேவியின் கவிதை பற்றிப் பலமுறை எழுதியும் இருக்கிறேன்.  இப்போது இந்தக் கொரோனா ஊரடங்கு காலத்தில் வீட்டுக்குள் மாட்டிக் கொண்ட அவர் உரைநடையாக எழுதித் தள்ளுகிறார்.  குறுங்கதைகள்.  ஏற்கனவே சில கதைகளைப் படித்து “ஏன் என்னிடம் முன்னரே சொல்லவில்லை?” என்று அவரிடம் சண்டை போட்டிருக்கிறேன்.  அதனால் இப்போது சில இணைப்புகளை அனுப்பியிருந்தார்.  உடனே அவசர அவசரமாகப் படித்தேன்.  எனக்குப் பிடித்த கவிஞரின் புனைகதை எப்படி இருக்கிறது என்று தெரிந்து கொள்ள வேண்டும்.  ஒரே வார்த்தையில் சொன்னால், பிரமாதம்.  தங்குதடையில்லாத ஆற்றொழுக்கான நடை.  ஒரு துப்பறியும் நாவலுக்கு உள்ள விறுவிறுப்பு.  மௌனி கதைகளைப் போல் உள்ளார்ந்ததொரு தத்துவ நீரோட்டம்.  வெளிப்படையாகத் தெரியாது.  அனாவசியமாக ஒரு வார்த்தை இல்லை.  சிந்தனையில் பின்நவீனத்துவமும் மொழியில் கிளாஸிஸமும் கலந்து காக்டெயில் விருந்தாக நம்மைத் தூக்கி அடிக்கிறது.  அதிலும் அந்தப் பெயராய்ப் பின்தொடர்தல் என்ற கதையின் புதிர்த்தன்மை எனக்குள் பல்வேறு வாசிப்பு ஞாபகங்களை இழுத்து வந்து போட்டது.