தற்கொலைக் குறுங்கதைகள் : ஒரு சிறிய மதிப்பீடு : செல்வா

ஆணும் பெண்ணும் இருவேறு துருவங்கள். அவர்கள் பூரணத்தின் சரிபாதி விகிதங்கள். ஒன்றுடன் ஒன்று இணைந்தால்தான் முழுமையுறும். இந்த ஈர்ப்பின் கிளர்ச்சியும், சூழலின் சிக்கல்களும் அவர்களுக்குள் ஏற்படுத்தும் தாக்கங்களும்தான் தற்கொலை குறுங்கதைகளின் மைய இழை.

இரண்டு பகுதிகள் தங்களின் சரிபாதியை அடையாளம் காணும் புள்ளிதான் வாழ்வின் சிக்கல் நிறைந்த இடம். அந்த சிக்கல்களைப் பேசும் கதைகளின் தொகுப்பு இது. சிறு சிறு கதைகளாகப் படித்து முடிக்கையில் அது நாவலுக்கான அனுபவத்தைத் தரும் என்கிற பார்வையில், சாரு இதை நாவல் என்றே குறிப்பிட்டார். நான் பல்வேறு மனோநிலைகளில் இந்தக் கதைகளைப் படித்திருக்கிறேன். ஆனாலும், கதை அதன் சூழலுக்குள் நம்மை ஓரிரு வரிகளில் இழுத்துவிடும்.

இதன் அட்டையும் கதையைப் பிரதிபலிக்கிறது. இரு உச்சஆளுமைகள். இணையும் வரை அவர்கள் முழுமையில்லை. இணைகிறபோது வானம் குளிர்ந்து விண்மீன்கள் ஆசிவழங்கும் அதே நேரம், எரிமலை கிளர்ந்து தகிக்கும்.

அது மட்டுமல்ல, அவரவர் அத்தனை நாள் வாழ்ந்த சமூக சூழலின் சிக்கல்கள் அவர்கள் கழுத்தை நெரிக்கிறது, உயிரையும் பறிக்கும் அளவுக்கு.

இயற்கையின் விதியோ, காமத்தின் சுவையை அவர்களுக்கு நினைவுபடுத்திக் கொண்டே இருக்கிறது.

அவர்கள் இயற்கையைப் பின்தொடரும்போதும், அல்லது தங்களின் எல்லைகளில் நின்றுவிடும்போதும் என்னென்ன நடக்கும் என்பதை தற்கொலைக் குறுங்கதைகளில் அறிய முடிகிறது.

தற்கொலைக் குறுங்கதைகள்: அராத்து : உயிர்மை வெளியீடு