வலி, வேதனை, கொண்டாட்டம்…

சாரு அராத்துவைப் ப்ரமோட் செய்வதைப் பார்க்கையில்,  முன்பு கலைஞர் ஸ்டாலினைப் ப்ரமோட் செய்ததில்  தவறு இல்லையோ என்று தோன்றுகிறது.  வைகோவாக அராத்து மாறுவார் என்று அனுமானம் செய்து இருந்தேன் . ஆனால் வி மு வைகோ வாகி விட்டார்.   கனிமொழி, அழகிரி வகையறாக்களுக்கு செல்வகுமார், கணேசன் அன்பு ஆகியோர் இருக்கிறார்கள்.   கலைஞர் பட்ட வலி, வேதனை இப்போது சாருவும் உணர்வார் என்று நினைக்கிறேன்.

மேலே கண்டுள்ள வரிகள் ராம்ஜி யாஹூ தன் முகநூல் பக்கத்தில் எழுதியிருந்தது.  இது எனக்கு சற்று ஆச்சரியத்தை அளித்தது.  சினிமாவும் அரசியலுமே வாழ்க்கை என்ற கலாச்சாரத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருப்பதன் வெளிப்பாடே மேலே உள்ள கருத்து என்று எனக்குத் தோன்றுகிறது.  சாரு வாசகர் வட்டம் என்பது ஒரு பள்ளி.  இந்தப் பள்ளியின் மாணவர் அராத்து.  ஆக, என் மாணவரை நான் பிரபலப்படுத்துவதில் என்ன தவறு இருக்க முடியும் என்றே தெரியவில்லை.  ராம்ஜியின் அரசியல் பார்வையும் தவறு.  கருணாநிதி ஸ்டாலினுக்கு நன்மை செய்யவில்லை.  கருணாநிதி ஸ்டாலினை சென்ற முறையே முதல்வர் ஆக்கியிருக்க வேண்டும்.  அதற்கான எல்லா தகுதியும் ஸ்டாலினுக்கு உண்டு.  ஆனால் கருணாநிதி அதைச் செய்யவில்லை.  கட்சித் தலைவர் என்ற முறையிலும் ஒரு தகப்பன் என்ற முறையிலும் கூட அவர் தன் கடமையைச் செய்யாமல் சுயநலமாக இருந்து விட்டார்.  மேலும், அரசியல்வாதிகள் யாருக்கும் சமூக நலன் நோக்கமாக இருந்தது கிடையாது.  (நரேந்திர மோதி போன்ற ஒரு சிலர் விதி விலக்கு) ஆனால் இலக்கியம் என்பது வேறு.  முழுக்க முழுக்க தன்னை மெழுகுவர்த்தியாய் எரித்துக் கொண்டு சமூகத்துக்கு ஒளி கொடுக்க வேண்டிய ஒரு வேலை.  ஒரு பிரயோஜனமும் இருக்காது.  புகழ் மட்டுமே கிடைக்கும்.  அந்தப் புகழும் நிலையில்லாதது.  தருணுக்கு நடந்ததை நினைத்துப் பாருங்கள்.  ஷேக்ஸ்பியர் அளவுக்கு ஆங்கிலத்தை வளப்படுத்திய, அதி அற்புதமான மூன்று நாவல்களை எழுதியும் மண்ணில் குழி தோண்டிப் புதைத்து விட்டார்கள்.  ஆக, அரசியலோடு இலக்கியத்தை சேர்ப்பது, ஒப்பிடுவது மிகவும் தவறு.

வாசகர் வட்டத்தை நான் சாக்ரடீஸின் மாணவர் குழாமோடு மட்டுமே ஒப்பிடுவேன்.   சாக்ரடீஸின் மாணவர் குழுவையும் ஏதென்ஸ் நகரில் அசிங்க அசிங்கமாகத்தான் திட்டிக் கொண்டிருந்தார்கள்.  செல்வாவையும் கணேஷையும் வேறு இரண்டு அரசியல்வாதிகளோடு ஒப்பிடுகிறார் ராம்ஜி.  நல்ல புத்தகங்களைப் படியுங்கள், நல்ல சினிமாவைப் பாருங்கள், நல்ல இசையைக் கேளுங்கள் என்று மட்டுமே நண்பர் ராம்ஜிக்கு நான் அறிவுரை கூற முடியும்.  இன்னும் மூன்று மாதங்களில் தமிழுக்கு ஒரு அருமையான பயணக் கட்டுரை புத்தகத்தைத் தருவார் கணேஷ்.  செல்வாவின் கவிதைகள் அருமையாக இருக்கின்றன.  உரைநடையும் அவருக்கு பிரமாதமாக வருகிறது.  அராத்துவின் நாவலுக்கு செல்வா எழுதியுள்ள மதிப்புரை ஒரு சான்று.

கருணாநிதிக்கு ஏற்பட்ட வலியையும் வேதனையையும் நான் ஏன் உணர வேண்டும்?  கருணாநிதியால் அழகிரியும், ஸ்டாலினும் படும் வேதனையும் வலியும்தான் அதிகம்.  மேலும், எனக்கு ஒரே ஒரு வேதனைதான்.  வேதனை என்பதை விட பொறாமை என்று சொல்லலாம்.  பெண்கள் யாரும் இப்போது என்னிடம் பேசுவதில்லை.  அராத்துவிடம் தான் பேசுகிறார்கள்.  இதனால் பொறாமை.  இன்னொன்று.  எக்ஸைல் வெளியீட்டு விழாவில் நிகழ்ச்சியை ஒருங்கிணைக்க ஒரு பெண் கிடைக்க மாட்டாரா என்று உருண்டு புரண்டு தேடினேன்.  ஒருவர் கூட கிடைக்கவில்லை.  கடைசியில் நானே தான் நிகழ்ச்சியை ஒருங்கிணைக்க வேண்டியிருந்தது.  ஆனால் அராத்து புத்தக வெளியீட்டு விழாவுக்கு தமிழகத்தின் மிகப் பிரபலமான ஆர்ஜேவான  கண்மணி கிடைத்திருக்கிறார்.  இதெல்லாம்தான் பொறாமை.  வலியோ வேதனையோ இல்லை.  மேலும், தன் மொழியையும் கலாச்சாரத்தையும் தொலைத்து விட்டு, தாங்கள் எதைத் தொலைத்தோம் என்பதைக் கூட அறிந்து கொள்ளாமல் கேவலமாக வாழ்ந்து கொண்டிருக்கும் தமிழ்ச் சமூகத்தில் மீண்டும் தமிழிலேயே புத்தகம் வெளியிட வேண்டி ஆகி விட்டதை  எண்ணித்தான் நான் வலியும் வேதனையும் அடைகிறேன்.  என் நூல்கள் குறைந்த பட்சம் லட்சம் பிரதிகள் விற்க வேண்டும்.  3000 விற்கிறது.  இதை விட வலியும் வேதனையும் வேறு என்ன இருக்க முடியும்?  ஆனாலும், என்னுடைய 3000 வாசகர்களின் அளவிட முடியாத அன்பினால் என் நாவலை மார்ச்சில் வெளியிட முடிவு செய்திருக்கிறேன்.  உலகில் வேறு யாருக்கும் இவ்வளவு வெறித்தனமான வாசகர்கள் இருக்க முடியாது.  அதுதான் நான் மேலே குறிப்பிட்ட வலியையும் வேதனையையும் மறக்கச் செய்கிறது.