அடியேனைப் பற்றி அராத்து

என்னைப் பற்றி எழுதப்பட்டவற்றிலேயே ஆகச் சிறந்தது:

சாருவும் பொய்யும் இது கொஞ்சம் காம்ப்ளெக்ஸான போஸ்ட்தான். கவனமாகப் படிக்கவும். சாருவே தான் பொய் சொல்வதாகச் சொல்லப்படுவதைப் பற்றி விளக்கமாக எழுதி இருக்கிறார். ஆனால் அது தப்பு. அவருக்கு அவரைப் பற்றி தெரியாது. யாருக்குத்தான் யாரைப்பற்றி தெரிகிறது

🙂

சாருவுக்கு பொய் சொல்லத் தெரியாது. உண்மையும் சொல்லத் தெரியாது. குழப்பமாக இருக்கிறதா ? அவர் டிக்‌ஷனரியில் உண்மை , பொய் என்ற பூலியன் அல்ஜீப்ரா கிடையாது. அது வேறு மாதிரி செயல்படும். உதாரணம் 1 : ஒரு நண்பர் , சாருவிடம் வேறொரு நண்பரைக் குறிப்பிட்டு அந்த நண்பரின் வீட்டுக்குப் போனீங்களா என்று கேட்கிறார். சாரு அவர் வீட்டுக்கெல்லாம் போய் ஒரு வருஷம் இருக்கும் என்கிறார். உடனே இந்த நண்பர் பொய் சொல்லாதீங்க சாரு என்கிறார்.பொய்யா , நான் ஏங்க பொய் சொல்லணும் ? இல்ல , போன வாரம் அந்த நண்பர் வீட்டுக்கு வந்தேன். நீங்க வெளியேறி போய்க்கிட்டு இருந்தீங்க. நான் சாரு , சாருன்னு கூப்டேன். உங்க காதில் விழலை. நீங்க போய்ட்டீங்க .நானே கண்ணால பாத்தேன். அப்ப பொய்தானே சொல்றீங்க? இதை சாரு என்னிடம் இப்படிச் சொன்னார் :- சீனி , ஒருத்தர் வீட்டுக்குப் போறதுன்னா , அவங்க வீட்டுக்குள்ள போய் ,ஒக்காந்து பேசிட்டு கொஞ்ச நேரம் இருந்துட்டு வர்ரது. இதான் என் மைண்ட்ல இருக்கும். நான் எதோ புக் குடுக்கவோ , வாங்கவோ வாசல் வரைக்கும் அந்த வீட்டுக்கு போய்ட்டு வந்திருப்பேன். அது என் மைண்ட்லயே இல்ல. எனக்கு அந்த நண்பர் வீட்டுக்கு போய் ஒரு வருஷம் ஆன மாதிரிதான் இப்பவும் இருக்கு. இதை பொய்யின்னு சொல்றாங்க.–உதாரணம் 2 : சீனி அந்தப் பொண்ணுக்கு உங்களைப் பிடிக்காது.அவ கேட்டா , சீனிதான் உங்களுக்குப் பிடிக்குமான்னு ! நான் தந்திரமா பொய் சொல்லிட்டேன். அவன்லாம் ஒரு ஆளா ? அவனை எல்லாம் எவனுக்காச்சும் புடிக்குமா ? எதோ தேவையான போது அப்பப்போ ஐடியா குடுத்துட்டு இருக்கான். அதனால அப்டியே ஓடிட்டு இருக்கு. அவன் கூடல்லாம் பழக முடியாதுன்னு சொல்லிட்டேன் சீனின்னு சொல்லிட்டு சிரிப்பார். அவளிடம் பொய் சொல்லிவிட்டேன் என்று என்னிடம் உண்மையைப் போட்டு உடைத்துக்கொண்டு இருப்பார்

🙂

இது அவருக்குத் தெரியவே தெரியாது. —-அவரின் சில டயலாக்குகளைத் தருகிறேன்.

1) அந்தாளு டீட்டோட்டலரு. சும்மா பீர் , வைன் மட்டும் குடிப்பாரு. எப்பவாச்சும் ரெமி மார்ட்டின் அடிப்பாரு. அப்ப மட்டும் சிகரட் குடிப்பாரு.

2)அவன் சரியான திருட்டுப்பய . அதுக்காக திருடன்னு சொல்ல வரலை. இதுவரைக்கும் திருடனதும் இல்லை. எப்ப வேணா திருடுவான். பல்க்கா திருடிட்டு போயிடுவான்.

3)பெங்களூர்ல ஒரு சூப்பர் பிரியாணி கடை இருக்கு, ஹைதராபாத்தா கூட இருக்கலாம்….அது இல்ல விஷயம்

4) அவ பேரழகி . உடனே கிண்டல் பண்ணாதீங்க சீனி , நான் வழக்கமா சொல்ற அந்த பேரழகி இல்ல , நிஜமாவே பேரழகி . ஆனா முன்ன சொன்னனே ஒருத்தி , அந்த மாதிரி பேரழகி இல்ல.

5)எனக்கும் அவளுக்கும் சின்ன வயசில லவ்வுல்லாம் இல்ல . சும்மா மடில படுத்துக்குவோம், கிஸ் அடிச்சிப்போம்.லவ் யூ சொல்லிப்போம். ஒரு நாள் கூட பாக்காம இருக்க முடியாது.

6)அவன் கூட கடைசியா பேசி நாலைஞ்சி மாசம் இருக்கும். நாலைஞ்சி வருஷம் கூட இருக்கலாம்.

7)அவன் ஒரு லட்சம் கடன் வாங்கினான். கடன்னு கூட சொல்ல முடியாது. திருப்பித்தரேன்னு வாங்கினான். இல்ல இல்ல , திருப்பித் தரேன்னு கூட அவன் சொல்லலை. அந்த மாதிரி ஒரு இது…கேட்டான் குடுத்தேன்.

8) அது இருக்கா , இது இருக்கான்னு என்னென்னமோ கேட்டானுங்க. அதெல்லாம் என்னன்னு கூட எனக்குத் தெரியலை. எதுக்கு வம்புன்னு இல்லைன்னு சொல்லிட்டேன்.

9)இல்ல ஹார்ட் டிரிங்க்ஸ் குடிக்கறது இல்லன்னு சொன்னீங்களே சாரு?

அட , ஆமாங்க , ஒரு பாட்டிலா கவுத்துக்கறேன். இது என்ன ஐயப்ப விரதமா ? ஒரு ரவுண்ட் அடிக்கிறதுல என்னங்க ?

10) சீனி இது ரொம்ப கான்ஃபிடன்ஷியல் , யாருக்கும் சொல்லக்கூடாது. ஆனா நம்ப செல்வா , சத்யா ,ஶ்ரீ ராம் , குமரேசன் , இவங்க மாதிரி நம்ம ஆளுங்க கிட்ட சொல்லலாம்.இது பெரிய ரகசியமும் இல்லை. நானே ராம்ஜி கிட்ட , ராகவன் கிட்ட சொல்லிட்டேன். வெளிய தெரிஞ்சாலும் பிரச்சனை இல்லை. நானே நாளைக்கு எழுதிடுவேன்….இருந்தாலும் இப்ப சொல்றேன் , கான்ஃபிடன்ஷியலா வச்சிக்கோங்க.

11) அவரு யார் கிட்டயும் பேச மாட்டாருங்க. ஊமை மாதிரி . ஃபுல்லா அடுத்தவங்க சொல்றதைத்தான் கேப்பாரு. எப்பவாச்சும் மேடையில பேசுவாரு. மோட்டிவேஷன் ஸ்பீச் குடுப்பாரு. நல்லா ஜாதகம் பாப்பாரு.நல்ல லாயர்.

இதைப்போல அடுக்கிக்கொண்டே போகலாம். அவன்லாம் எதிரி என்பார். அடுத்த நாளே அவனுடன் கட்டிப்பிடித்து போஸ் குடுப்பார். என்னான்னு கேட்டால் , எதிரின்னா எனிமி இல்ல சீனி என்பார்

அப்ஸல்யூட் பொய் , அப்ஸல்யூட் உண்மை என்று ஏதேனும் இருக்கிறதா ? பரிபூர்ண உண்மையைச் சொல்ல நாம் எல்லாம் என்ன எய்ன்ஸ்டீனா ? அவரே கடலின் முன்னே அமர்ந்து ஒரு துளியை கண்டு பிடித்து இருக்கிறேன் என்கிறார். பொய் சொல்ல நல்ல நியாபக சக்தி வேண்டும் . உண்மையைச் சொல்ல அது தேவையில்லை என்பார்கள். சாரு உண்மையையே மறந்து விடுவார். தான் மொழிபெயர்த்த கதையையே வேறொருவன் மொழி பெயர்த்தது என்பார்.எழுத்தாளன் என்ன டேட்டா பேங்கா ? அவன் , அவனுக்கு அப்போது என்ன தோன்றுகிறதோ அதைப் பேசிக்கொண்டு இருப்பான். அவனுக்கு நிகழ்காலம் , இறந்தகாலம் , எதிர்காலம் என ஏதும் கிடையாது. உங்களிடம் இருக்கும் உளுத்துப்போன லை டிடெக்டரை வைத்து அவனிடம் சுரண்ட முடியாது. செய்யாத கொலையையே , தான் தான் செய்தேன் என்பான் அவன் .