ArtReviewவில் என் கட்டுரை

லண்டனிலிருந்து வெளிவரும் ArtReview பத்திரிகையில் என் கட்டுரை வந்துள்ளது. நான்கு ஆண்டுகளாக ArtReview Asia பத்திரிகையில் Notes from Madras என்ற பத்தியை எழுதி வருகிறேன். ஆர்ட்ரெவ்யூ ஏஷியா என்றால் இன்னும் ஒரு பக்கம் கூட கொடுப்பார்கள். இன்னும் வலுவாக இருக்கும் கட்டுரை. இது ஆர்ட்ரெவ்யூ என்பதால் கொஞ்சம் கனம் குறைவாக இருக்கிறதோ என்று எண்ணுகிறேன். சென்ற கோடைக்காலத்து இதழின் கட்டுரையிலும் ஜெயமோகன் பற்றிக் குறிப்பிட்டேன். எதற்காக இதைச் சொல்கிறேன் என்றால் நான் எந்த வெளிநாட்டுப் பத்திரிகையில் எழுதினாலும் அதில் ஒருசில தமிழ் எழுத்தாளர்களைக் குறிப்பிடாமல் எழுதியதே இல்லை.

கட்டுரையை ஒரே நாளில் மொழிபெயர்த்துக் கொடுத்த வித்யா சுபாஷுக்கு எத்தனை நன்றி சொன்னாலும் தகும். திறமைசாலி என்பது மட்டுமல்லாமல் அவர் வேகம் என்னை எப்போதும் பிரமிக்க வைக்கும். ஒரே நாளில் மொழிபெயர்த்து அனுப்பினார். ஐரோப்பிய புத்திஜீவிகளால் விரும்பிப் படிக்கப்படும் ஓவியக் கலைக்கான ஒரு இதழில் நான்கு ஆண்டுகளாக எனக்கு மூன்று பக்கங்கள் கிடைத்துக் கொண்டிருப்பது பெரிய விஷயம். அதைவிடப் பெரிய விஷயம், நான் கேட்கும் வேகத்தில் அதை மொழிபெயர்த்துக் கொடுப்பதற்கு நண்பர்கள் கிடைப்பது. மூன்று ஆண்டுகளாக காயத்ரி மொழிபெயர்த்துக் கொடுத்தாள். இப்போது பதிப்பகம் ஆரம்பித்த பிறகு முடியவில்லை. அப்போது கடவுள் அனுப்பியவர் வித்யா சுபாஷ். எல்லாவற்றையும் விடப் பெரிய விஷயம், இவர்கள் மொழிபெயர்த்துக் கொடுத்த கட்டுரைகளில் ஆர்ட்ரெவ்யூ ஆசிரியர் அதிகம் கை வைத்ததில்லை என்பதுதான். இல்லாவிட்டால் இந்திய ஆங்கிலத்தை ”இதன் பெயர் ஆங்கிலமா?” என்று கேட்டு பிரிட்டனில் குதறித் தள்ளி விடுவார்கள். நம்முடைய கட்டுரையே நாம் எழுதியது தானா என்ற அளவுக்கு வடிவம் மாறி விடும். என்னுடைய மொழிபெயர்ப்பாளர்களின் மொழிபெயர்ப்புக்கு எப்போதுமே பிரிட்டனிலும் அமெரிக்காவிலும் பாராட்டு கிடைத்து விடுகிறது. மார்ஜினல் மேன் ஒரு உதாரணம். காயத்ரிக்கும், வித்யா சுபாஷுக்கும் நன்றி என்று சொல்வது ரொம்பக் கம்மி. வேறு என்ன சொல்வது என்று தெரியவில்லை.

https://artreview.com/notes-from-chennai-during-covid-19/