163. சாரு கனிந்து விட்டார்? – வளன் அரசு

இப்போதுதான் கிண்டிலில் வாசிக்கப் பழகினேன். உண்மையில் அட்டகாசமாக இருக்கிறது. சாருவின் நாடோடியின் நாட்குறிப்புகள் மற்றும் நிலவு தேயாத தேசம் ஆகிய இரு நூல்களையும் வாசித்து முடித்தேன் (நாட்குறிப்புகள் அரை நாள், அடுத்த ஒரு நாள் நிலவு தேயாத தேசம்). இவ்விரண்டு நூல்களையும் படித்த பிறகு சாருவின் எழுத்துக்கள் குறித்து எழுத வேண்டும் என்ற எண்ணம் மனதில் திரண்டு கொண்டேயிருந்தது. இதற்கிடையில் லக்ஷ்மி சரவணகுமாரின் ‘ரூஹ்’ என்ற அடுத்த அற்புதத்தில் சிக்கிக்கொண்டேன்.

நிலவு தேயாத தேசத்தை ஒரே நாளில் படித்து முடித்துவிட்டேன் என்று சொல்வது அந்த நூலுக்குச் செய்யும் அவமரியாதையாகவே கருதுகிறேன். எனக்கு இருக்கும் பொறுப்புகளில் இருந்துகொண்டு முழுமையாக அதை வாசிக்க எனக்கு எப்படியும் ஐந்து வருடங்களாவது ஆகும். எத்தனை எத்தனை பாடல்கள்! எத்தனை எத்தனை நூல்கள்! இதைத் தட்டச்சு செய்து கொண்டிருக்கும் போது உடல் சிலிர்க்கிறது.

சினிமா பாடகர் பாலசுப்ரமணியம் இறந்த சமயம் சாருவின் கருத்துக்களை விமர்சித்த நண்பனுக்கு மிக நீண்ட விளக்கங்கள் அளித்து எழுதினேன். நண்பனோடு உரையாடிய வகையில் ஒன்று தெரிந்து கொண்டேன்: இப்போதெல்லாம் சாருவை வாசிப்பதை நிறுத்திவிட்டிருக்கிறான். எல்லோரும் சொல்லும் ‘சாரு இப்போதெல்லாம் கனிந்துவிட்டார்’ என்ற காரணத்தைக் கொடுத்தான். மீண்டுமாக இப்பதிவின் மூலம் அந்த நண்பனுக்கு நாடோடியின் நாட்குறிப்புகளை வாசிக்கக் கேட்டுக்கொள்கிறேன்.

‘சாரு கனிந்துவிட்டார்’ என்ற வாதத்தை என்னால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. சாருவின் எழுத்தில் தொடர்ந்து ஓர் அற்புதம் நிகழ்ந்துகொண்டேயிருக்கிறது. அதை நாம் கவனிக்கத் தவறி சாரு கனிந்துவிட்டார் என்கிறோம். உண்மையில் நாம் சாருவின் எழுத்துகளை ஏற்றுக்கொள்ள முடியாதவாறு ‘கனிந்து கொண்டிருக்கிறோம்’.

சாரு எனக்கு அப்பா. அவர் மீதான பிரியங்களில் நான் இதை எழுதவில்லை. ஆனால் சாருவின் எழுத்துகளை யாரும் தவறவிட்டுவிடக் கூடாது என்ற அக்கறையில் எழுதுகிறேன். சாருவின் எழுத்து ஒரு மாபெரும் விடுதலையை தருகிறது. இதுவரை நாம் பயணிக்காத அதிசய உலகின் கதவுகளை வார்த்தைகளால் திறந்துவிடுகிறார் சாரு. ஹிருதய சூத்ரம் சமீபத்திய உதாரணம்.

சாரு கனிந்துவிட்டார் என நாம் சொல்வதற்கு காரணம் என்ன? முடிந்த வரை புரிகிறது போல விளக்கப் பார்க்கிறேன். வாழ்வின் இரண்டு துருவங்கள் என்னவாக இருக்க முடியும்? கிடைக்கும் எல்லா வாய்ப்புகளையும் மறுத்து ஒடுங்கிய வாழ்வு. இதில் தவறொன்றும் இல்லை. இப்படியான ஒரு வாழ்வை ஒருவர் வாழும் போது மகாத்மாவாகக்கூட மாற முடியும். அதற்கு நேரெதிர் இருப்பது சாகச வாழ்வு. வாய்ப்புகள் கொட்டிக்கிடக்க அதில் விருப்பமானதைத் தேர்ந்து வாழும் ராஜ வாழ்வு. நம் எல்லோரின் வாழ்வும் இதற்கு இடையில்தான் இருக்கிறது. இயல்பாகவே பலர் மிகவும் பாதுகாப்பான ஒரு வாழ்க்கை முறையையே தேர்ந்தெடுப்போம். அதாவது மகாத்மாக்களின் வாழ்வு. ஒடுங்கிய வாழ்வு. மதம், மொழி, இனம், குடும்பம், பல்வேறு இசங்கள் இப்படியான பல்வேறு விஷயங்கள் நம்மை மகாத்மாக்களாக மாற்ற உதவுகிறது. ஆனால் சாரு காட்டுவது சாகசத்தின் வாழ்வு. மாபெரும் சுதந்திரம். இந்திய பண்பாட்டை வியந்து எழுதுவதால் இந்திய தொன்மங்களின் எழுத்தாளர் என்று சாருவை வகைப்படுத்த முடியாது. காரணம், அடுத்த நொடியே அந்த வகைமையை மீறி இந்தியாவின் சீரழிவை எழுதுவார். மகாத்மாக்களாகிய நாம் இச்சுதந்திரத்தை எப்படிப் பார்ப்போம்? கட்டுப்பாடுகள் இன்றி கெட்டுப்போகிறார் என்று குறை கூறுவோம் அல்லது கொள்கைகளை மறுத்துக் கனிந்துவிட்டார் என்போம்.

சாருவின் எழுத்தை கனிந்துவிட்டதாகக் கூறும் அனைவரும் பத்து வருடங்களுக்கு முன் சாருவிடம் இருந்த தணல் இப்போது இல்லை என்று கூறினால் நாம் பத்து வருடங்கள் தேங்கிவிட்டோம் என்று பொருள். விலங்கிலிருந்து மனிதர்களை வேறுபடுத்துவது தேர்ந்தெடுக்கும் திறன். அதன் அத்தனை சாத்தியக்கூறுகளையும் முயற்சித்துப் பார்ப்பவர் சாரு என்று தோன்றுகிறது. நான் ஏற்கனவே சொன்னது போல மொழி, இனம் போன்றவைகள் நாம் விரும்பாவிட்டாலும் நம் பிறப்பின் வழியாக ‘கொடுக்கப்படுகிறது’. ஏதோ ஒரு வகையில் எனக்குக் ‘கொடுக்கப்படுவது’ என்னை அடக்கிவிடுகிறது. விவரம் அறிந்து நாம் தேர்ந்தெடுக்கும் இசங்களும் இதைத்தான் நமக்குச் செய்கிறது. ‘மார்க்ஸிஸம்’ வரலாற்றை ஆளும் வர்க்கம் மற்றும் உழைக்கும் வர்க்கத்தின் மோதலாக மட்டுமே பார்த்தது. அதை மீறிய ஒரு பார்வை ‘கொடுக்கப்படவில்லை’. ஆனால் நாம் நினைத்தால் இத்தடைகளை அடுத்த கட்டத்திற்குச் செல்லும் ஒரு படியாக மாற்ற முடியும். ஹெகலின் தத்துவத்தின் மீது மார்க்ஸியம் கட்டப்பட்டது போல. சாருவின் எழுத்தும் அதைத்தான் செய்கிறது. முன்பு சாரு எழுதிய ஒரு விஷயத்தை அவரே மறுத்து இப்போது அதன் மீது ஏறி வேறொரு அதிசயத்தை நமக்குத் தருகிறார். உதாரணம், புதுமைப்பித்தன் மீதான நிலைப்பாடு. இது கனிதல் அல்ல, நகர்வு. இன்று சாருவை வாசிக்கப் போகும் புதிய வாசகனுக்கு சாருவின் எழுத்து நெருக்கமாக இருக்கப் போவதற்கான காரணமும் இதுதான்.

இன்னொன்றையும் சொல்லிவிட வேண்டும். பாதுகாப்பான வாழ்வு வாழ்வதை நான் தவறென்று சொல்லவில்லை. அந்த வாழ்வு வாழ்பவர்களுக்கு சாருவின் எழுத்து ஒத்துவராது என்பதையும் சொல்லவில்லை. நாம் எப்படியானவர்களாக இருந்தாலும் சாருவின் எழுத்தோடு நாம் நேசம் கொள்ள முடியும். அதற்கு நாம் செய்ய வேண்டியது கொஞ்சம் ரசனையோடு வாழ்வை எதிர்கொள்வது மட்டுமே.

எழுத்தாளன் என்பவனை கொள்கைகளுக்கு கட்டுப்பட்டவனாக பார்த்து வளர்ந்த ஒரு சமூகத்தில் சாருவின் நகர்வு சரியாக புரிந்துகொள்ள முடியாதுதான். நம்மவர்களைப் பொறுத்தவரை எழுத்தாளர்களின் பெரிய நகர்வு பேனாவில் இருந்து கணினிக்கு மாறியதாகத்தான் இருக்க முடியும். ஆனால் சாரு அப்படியல்ல. சாருவின் எழுத்துக்கள் எண்ணிலடங்கா சாத்தியங்களைக் கொண்டது. கொஞ்ச நாளுக்கு முன்னால் வினித்திடம் பேசிக்கொண்டிருந்த போது ஒரு வித்தியாசமான ஆசையை முன் வைத்தேன். இசை நன்கு அறிந்த யாரேனும் சாருவின் புனைவுகளில் உள்ள இசை லயத்தைக் கண்டுபிடித்துச் சொல்ல வேண்டும். உதாரணமாக, சாருவின் ஏதோ ஒரு கதையில் உள்ள வார்த்தைகளின் விகுதிகளை மட்டும் பிரித்துப் பார்த்து, அதைக் கொண்டு மட்டும் இசையமைத்துப் பார்க்க வேண்டும். அல்லது சாருவின் புனைவுகளை Rap இசையாக மாற்ற முனையலாம்.

இப்படி பல ஆராய்ச்சிகள் சாருவின் எழுத்தில் நிகழ வேண்டும். இன்னொரு ஆசையும் இருக்கிறது. சாருவின் எல்லா புத்தகங்களுக்கும் நல்ல index தயாரிக்க வேண்டும். உதாரணமாக, பாடகி செஸாரியா எவோரா குறித்து சாரு எந்தப் புத்தகத்தில் எத்தனையாவது பக்கத்தில் குறிப்பிட்டிருக்கிறார் என்பதை இண்டெக்ஸ் பார்த்துக் கண்டுபிடிக்கிற வகையில் அமைய வேண்டும்.

ஒவ்வொரு முறை சாருவின் எழுத்துக்களை வாசிக்கும் போதும் மாபெரும் ஒரு சாகச விளையாட்டை விளையாடுவது போல தோன்றுகிறது. கொஞ்சம் தத்துவப் பின்புலத்தில் வாசிக்கும் போது சாருவை சொந்தம் கொள்ள இந்தியாவுக்கும் தமிழகத்தும் என்ன தகுதியிருக்கிறது என்று கேட்கத் தோன்றுகிறது. போற்றுவார் போற்றினாலும் தூற்றுவார் தூற்றினாலும் நான் தொடர்ந்து சாருவை கொண்டாடுவேன்.

வளன் அரசு