அடுத்து செய்ய வேண்டியவை…

சாரு ஆன்லைன் அமைதியாக இருக்கிறது என்றால் நான் கடும் வேலையில் இருக்கிறேன் என்று நீங்கள் புரிந்து கொள்வீர்கள்.  ஏப்ரலில் இப்போது நான் எழுதி முடித்துள்ள நாவலின் வெளியீட்டு விழா சென்னைப் பல்கலைக்கழக நூற்றாண்டு மண்டபத்தில் நடைபெறும்.  கொள்ளளவு 3500.  நாவல் 1300 பக்கம்.  இப்போதைக்கு.  செப்பனிட்டுக் கொண்டிருக்கிறேன்.  பல இடங்களை மிகச் சுருக்கமாக எழுதியிருக்கிறேன்.  சற்றே விரிவாக்கினால் நாவல் 2000 பக்கம் வந்து விடும்.  ஒரு நாளில் இருநூறு பக்கம் என்று கணக்கிட்டு செப்பனிட்டுக் கொண்டிருக்கிறேன்.  பதிப்பாளரிடம் கொடுக்கும் முன் இரண்டு பேர் அதைப் படித்துப் பார்க்க இசைந்துள்ளனர்.  ஒருவர் நம் வட்டத்தைச் சேர்ந்தவர்.  இன்னொருவர், பிரபலமானவர்.  நண்பர்.  இருவரது ஆலோசனைகளையும் கேட்டிருக்கிறேன்.  நாவலுக்கு இன்னும் பெயரிடவில்லை.  ஆங்கிலத்தில்தான் வெளியிட வேண்டும் என்று எண்ணியிருந்தேன்.  ஆனால் உங்கள் அன்பு என் வைராக்கியத்தை மாற்றி விட்டது.   ஆனந்த் எழுதியுள்ள பின்வரும் குறிப்பை வாசகர் வட்டத்தில் பார்த்தேன்.

என் வீடு அருகில் உள்ள பெட்டிக்கடையில் எல்லா மாத புத்தகங்களும் கிடைக்கும். இந்த மாத உயிர்மை வந்துவிட்டதா என விசாரித்தேன். ஐந்தாம் தேதிக்கு பிறகுதான் வரும் என்றார். சரியென்று ஆ.வி வாங்கிவிட்டு நகரும்போது கடைகாரர் அழைத்து “இந்த மாத உயிர்மையில் என்ன விஷேசம்?” என்று கேட்டார். “ஏன்?” என்றேன். “இல்ல வழக்கமா உயிர்மை நாலு புக்குமேல விக்காது ஆனா இந்த மாசம் இதுவரை இருபது பேர் வந்து கேட்டுடாங்க அதான்” என்றார். “இந்த முறை சாருவின் தலைமுறைகள் விமர்சனம் வந்திருக்கு அதான்” என்று கூறிவிட்டு வந்தேன்.

இந்த அளவுக்கு என் எழுத்தின் மீது பிரியம் வைத்துள்ள உங்களுக்காக இந்தப் புதிய நாவலை தமிழில் வெளியிட முடிவு செய்து விட்டேன்.  அடுத்து சில திட்டங்கள் கீழே:

தொடர்ந்து நாம் என்னென்ன படிக்க வேண்டும் என்று நான் ஏற்கனவே சொல்லி விட்டேன்.  நேற்று கார்த்திக் சுமார் அரை மணி நேரம் பேசினார்.  Wolf Totem ஆங்கில மொழிபெயர்ப்பு படித்தாராம்.  ஆனால் அதற்கு முன்பே சீனத்து வரலாறு சுமார் 900 பக்க நூலைப் படித்து விட்டே வுல்ஃப் டோட்டத்தை எடுத்திருக்கிறார்.  எங்கள் உரையாடல் பற்றியே ஐந்து பத்து பக்கம் எழுதலாம்.  நேரம் இல்லை.  வாசகர் வட்டத்தைச் சேர்ந்த ஒவ்வொருவரும் ஸோர்போன் பல்கலைக்கழக மாணவர் போல் அல்ல, அந்தப் பல்கலைக் கழகத்தின் பேராசிரியரைப் போல் இருக்க வேண்டும் என்பது என் ஆசை.  அதற்கான முயற்சியில் நான் சிறிதளவு வெற்றியும் அடைந்து விட்டேன்.

இனி நாம் கவனம் செலுத்த வேண்டியது சினிமா.  ஹாலிவுட் சினிமா அல்ல.  ஹாலிவுட் சினிமா பற்றி இந்தியாவில் ஐம்பது ஆண்டுகளாகப் பேசித் தீர்த்து விட்டனர்.  எனவே நாம் ஒரு ஆண்டுக்கு நம் பாடத்திட்டத்தில் ஹாலிவுட் சினிமாவைப் புறக்கணிப்போம்.  இப்போது நாம் கவனிக்க வேண்டியது ஐரோப்பிய, தென்னமெரிக்க  சினிமா.  முதலில் ஜெர்மன், ஹங்கேரி, இத்தாலி, கூபாவிலிருந்து துவங்குவோம்.  நான் ஏற்கனவே பலமுறை பார்த்ததுதான்.  ஆனால் பார்த்து 25 ஆண்டுகளுக்கு மேல் ஆகி விட்டது.  எனவே உங்களோடு சேர்ந்து நானும் பார்க்கிறேன்.  நம் சந்திப்பின் போது இது பற்றி விவாதிப்போம்.  ராஜேஷும் நேரில் வராவிட்டாலும் இந்த ஏற்பாட்டில் கலந்து கொள்ள வேண்டும் என்று விரும்புகிறேன்.   ஒவ்வொரு இயக்குனரின் எல்லா படங்களையும் பார்த்து விடலான் என்பது என் கருத்து.  1. Reinhard Hauff – ஜெர்மன்.  இவருடைய Slow Attack என்பது முக்கியமான படம்.  கிட்டத்தட்ட ஜெனேவின் நாவலைப் படிப்பது போல் இருக்கும்.  2. Zoltan Fabri – ஹங்கெரி.  இவருடைய எல்லா படங்களையும் பார்க்க வேண்டும்.  3. Glauber Rocha இவர் ப்ரஸீல்.  இவருடைய படங்கள் சப் டைட்டிலுடன் கிடைக்குமா என்று தெரியவில்லை.  டரண்டினோ, ஸ்கார்ஸஸே போன்றவர்களை க்ளாபர் ரோச்சாவோடு ஒப்பிட்டால்…  வேண்டாம், ரோச்சா மிகப் பெரிய உயரத்தில் இருப்பவர்.  எனக்கு என்ன மனக்குறை என்றால், க்ளாபர் ரோச்சாவின் பெயர் கூட இந்தியாவில் யாருக்கும் தெரியவில்லை.  ஆனால் அவரோடு ஒப்பிடக் கூட முடியாத ஹாலிவுட் வெண்ணைகளையெல்லாம் பற்றி இந்தியாவில் கூ கூ என்று கத்திக் கொண்டிருக்கிறார்கள்.  Fernando Solanas என்று ஒரு அர்ஜெண்டீனிய இயக்குனர் இருக்கிறார்.  Hour of the Furnaces என்ற படத்தின் இயக்குனர்.  அந்தப் படத்தை ஒரு தட்டிலும்   இதுவரை எடுக்கப்பட்ட எல்லா ஹாலிவுட் படங்களையெல்லாம் தராசின் இன்னொரு தட்டிலும் வைத்தால் ஸொலானாஸ் படம் கீழே நிற்கும்.  Hour of the Furnaces போன்ற ஒரு படம் சினிமா வரலாற்றிலேயே எடுக்கப்பட்டதில்லை.  அது ஒரு ஆவணப் படம்.   ஒரே ஒரு படத்தை அதோடு ஒப்பிடலாம்.  அது Battle of Chile.  சரி, நாம் எடுத்த எடுப்பில் இவ்வளவு ஆழமாகப் போக வேண்டாம்.    ரோச்சா சப்டைட்டிலோடு கிடைக்காவிட்டால் லூயி புனுவெல் படங்களைப் பார்க்கலாம்.  இவரது எல்லா படங்களையும் பார்க்க முடியாவிட்டாலும் தேர்ந்தெடுத்துப் பார்க்கலாம்.

எனக்கு ஒரு யோசனை சொல்லுங்கள்.  உலக சினிமா டிவிடிக்கள் எங்கே கிடைக்கும்?  வாசகர் வட்டத்தை ஒரு இயக்கமாக மாற்ற நினைக்கும் என் முயற்சிக்கு ஆதரவு தருவீர்கள் என்று நம்புகிறேன்.  எழுதுங்கள்…  charu.nivedita.india@gmail.com

Comments are closed.