புத்தகக் காட்சி

முந்தாநாள் புத்தகக் காட்சிக்கு திடீரென்று சென்றிருந்தேன்.  உயிர்மை ஸ்டாலில் ஒரு மணி நேரம் இருந்தேன்.  ரெண்டு பேருக்குக் கையெழுத்துப் போட்டுக் கொடுத்தேன்.  பக்கத்தில் எஸ்.ராமகிருஷ்ணன் சுமார் ஐம்பது பேருக்கும், அராத்து சுமார் இருபது பேருக்கும் கையெழுத்துப் போட்டுக் கொண்டிருந்தார்கள்.  சந்தோஷமாக இருந்தது.  ஏன் என்றால் ஒருமுறை திருவனந்தபுரத்தில் Hey Literary Festival -இல் கலந்து கொள்ள அழைக்கப்பட்டிருந்தேன்.  அது ஒரு சர்வதேச விழா.  திருவனந்தபுரத்தில் எனக்கு ஒரு சினிமா நடிகருக்கு உரிய வரவேற்பு உண்டு.   என்னோடு புகைப்படம் எடுத்துக் கொள்ள கல்லூரி மாணவர்கள் முண்டியடித்துக் கொண்டு வந்தனர்.  புகைப்பட கலாட்டா எல்லாம் முடிந்த பின்னர் விழாவின் மதிய வேளையில்  தருண் தேஜ்பாலும் நானும் அருகருகே அமர்ந்து எங்கள் நாவல்களுக்குக் கையெழுத்துப் போட்டுக் கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.    என் முன்னே ஸீரோ டிகிரி ஆங்கில மொழிபெயர்ப்பு.  தருணுக்கு முன்னே Story of My Assassins.  தருணிடம் கையெழுத்து வாங்க வரிசை உருவானது.  என்னிடம் ஓரிரண்டு பேர் கையெழுத்து வாங்கினர்.  அதோடு சரி.  உடனே டி.ஸி. பதிப்பகத்தின் உரிமையாளர் ரவி அவரிடமிருந்த 20 ஸீரோ டிகிரி பிரதிகளை என்னிடம் கொடுத்து கையெழுத்துப் போடச் சொன்னார்.

ஒரு ஆண்டு கழித்து என் நண்பருக்குப் பரிசு கொடுப்பதற்காக Blaft Publishers-இடமிருந்து (அவர்கள் தான் ஸீரோ டிகிரி ஆங்கில மொழிபெயர்ப்பை வெளியிட்டவர்) ஒரு பிரதி வாங்கினேன்.  காசு கொடுத்து.  அந்தப் பிரதியில் என் கையெழுத்து இருந்தது.  திருவனந்தபுரத்தில் போட்டது.

ஒருமுறை – மூன்று ஆண்டுகளுக்கு முன்பு – நானும் ஒரு மூத்த எழுத்தாளரும் உயிர்மை ஸ்டாலில் அருகருகே அமர்ந்து பேசிக் கொண்டிருந்தோம்.  என்னிடம் கையெழுத்து வாங்க வரிசை.  மூத்தவரிடம் யாரும் வாங்கவில்லை.  அப்போது ஒரு அழகிய இளம்பெண் அந்த மூத்த எழுத்தாளரிடம் வந்து கையெழுத்து வாங்கினார்.  அப்புறம்தான் தெரிந்தது அது மனுஷ்ய புத்திரன் செய்த ஏற்பாடு என்று.  நல்லவேளை.  மனுஷ் முந்தாநாள் அப்படி எதுவும் செய்து என்னைக் கலாய்க்கவில்லை.  நன்றி.

நாளை மாலை ஐந்து மணி அளவில் உயிர்மை ஸ்டாலுக்கு வருவேன்.  அராத்துவோடு வர மாட்டேன்.  காரணம், என்னதான் நான் நல்லவன் என்றாலும் முகநூலில் அவருக்கு 300 லைக்கும் எனக்கு மூணு லைக்கும் வரும் போது ஙே என்று ஆகி விடுகிறது.

இன்னொரு முக்கியமான விஷயம்.  ஸீரோ டிகிரி கிழக்கு பதிப்பகத்தில் கிடைக்கும்.  அதேபோல் எக்ஸைலும், கோணல் பக்கங்கள் மூன்று தொகுதிகளும் கிழக்கு பதிப்பகத்தில் கிடைக்கும்.  மற்ற புத்தகங்கள் அனைத்தும் உயிர்மையில் கிடைக்கும்.  எக்ஸிஸ்டென்ஷியலிஸமும் ஃபேன்ஸி பனியனும் கிடைக்காது.  காரணம், நேரில் சொல்கிறேன்.

இன்று ராயல்டி பற்றி தி ஹிந்துவில் ஒரு கட்டுரை வந்துள்ளது.  என் பிரச்சினை என்னவென்றால், முன்னணி எழுத்தாளனின் புத்தகமே ஆயிரம் பிரதிகள் விற்றால் அப்புறம் என்ன ————  ராயல்டியாகக் கொடுக்க முடியும் என்பதுதான்.  கோடிட்ட இடத்தில் ஒரு ஆபாச வார்த்தையைப் போட்டுக் கொள்ளுங்கள்.  என் நாவல் ஒரு லட்சம் பிரதி விற்றால் எந்தப் பதிப்பகமாவது ராயல்டி தொகையில் குளறுபடி செய்ய முடியுமா?  சொல்லுங்கள்…

இப்போது ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் புதுயுகம் தொலைக்காட்சி சேனலில் நிகழ்ச்சிக்காக என்னுடைய ஒரு முழு நாள் வீணானது.  ஒரு பைசா கொடுக்கவில்லை.  இவ்வளவுக்கும் புதிய தலைமுறை சேனல் சிறப்பு விருந்தினருக்கு சன்மானம் கொடுக்கும் சேனல்.  என்னோடு கலந்து கொண்டவர்கள் அராத்து, தங்கர் பச்சான்.  தங்கர் சினிமாவில் இருப்பவர்.  அவர் ஓசியில் தலை காட்டலாம்.  சினிமா கலைஞர்களுக்கு சம்பளம் கோடியில்.  ஒரு நடிகரின் சம்பளம் 40 கோடி.  நானோ ஒரு பிச்சைக்காரன்.  நானும் ஓசியில் தான் உழைக்க வேண்டுமா?  அதனால்தான் என் வாசகர்களிடம் காசு கேட்கிறேன்.  முடிந்தால் தாருங்கள்.  முடியாவிட்டால் ஸலூட்.

Account holder’s Name: K. ARIVAZHAGAN

Axis Bank Account number: 911010057338057

Branch: Radhakrishnan Salai, Mylapore

IFSC UTIB0000006

MICR CODE: 600211002

***

ICICI account No. 602601 505045

Account holder’s name: K. ARIVAZHAGAN

T. Nagar branch.  chennai

IFSC Code Number: ICIC0006026

Comments are closed.