தருமபுரி, 12..03..21
சற்றே நீண்ட கடிதம். பொறுத்துக் கொள்ளுங்கள்.
அன்புள்ள சாரு,
இக்கடிதம் பல நாட்களுக்கு முன்பாகவே தங்களுக்கு அனுப்பப்பட்டிருக்க வேண்டியது. என்னுடைய 59 வயதில் நான் தங்களுக்கு இந்தக் கடிதத்தினை எழுதுகிறேன். தங்களது வலைப்பக்கத்தில்தான் எனது நாள் துவங்குகிறது. இது எனது வழக்கம். சில நாட்களுக்கு முன்பாக வளனது கடிதத்தினைப் படித்தேன். அது அளித்த உந்துதலே இக்கடிதம். தங்களது எழுத்து யாருக்கு வாழ்வின் எப்பக்கத்தையெல்லாம் திறக்க வைக்கிறது என்பதற்கு வளனின் கடிதம் ஒரு சிறந்த உதாரணம். எனக்கும் அவ்வாறே. தாங்கள் பாரதி கூறியது போல பல பரிமாணங்களில் உணரப்படுகிறீர்கள், நல்ல நண்பனாக, ஆசானான, குருவாக, மேலும், ஞானியாகக் கூட. தங்கள் எழுத்து குறித்து எழும் விமர்சனங்களைப் பொருட்படுத்த வேண்டாம். அநித்தயமான மனித வாழ்வின் அபத்தக் கணங்களை எளிதாகக் கடந்து செல்ல உங்கள் எழுத்து உதவுகிறது. உங்களது தீர்க்கம், பற்றின்மை இன்னும் பல கூறுகளை அடக்கியது அது. சாமானியர்களுக்கு அது பிடிபடாமல் போவது இயல்பே.
உதாரணமாக, மலாவி என்றொரு தேசத்தில், ஜே.கே. மற்றும் யு.ஜி. குறித்த உங்களது கருத்துகளும், அதற்கான ஆனந்தின் கருத்துகளும் செறிவார்ந்தவை. வாழ்வினை நடைமுறையின் அடிப்படையில் பார்க்கும் உங்களது சிந்தனை, கருத்துகள் என்னை மிகவும் ஈர்த்தவை. இவ்வாறான எண்ணற்ற கருத்துப் பதிவுகளை உங்கள் நூல்கள் அனைத்திலும் உணரத்தான் முடியும். படிக்க முடியாது. தம்ரூட் கதையும் அவ்வாறானதுதான். சாதாரண வாசகனுக்கு அது மிகவும் தட்டையானதுதான். வாழ்வின் அந்தத் தருணத்தினை கொண்டாடிவிடத் துடிப்பவனுக்கு அது மிக அற்புதமானது. அந்தக் கணநேரக் கொண்டாட்டங்களே வாழ்வில் நித்தியமானவை என நான் கருதுகிறேன். நாய்கள் வளர்ப்பது குறித்த கருத்தும் அவ்வாறே. வளர்த்துப் பழகி அதனை இழந்தவர்களின் துக்கம் வெளியிலிருந்து அதனைப் பார்ப்போருக்கு எளிதானது. விலங்குகள் மனிதனைக் காட்டிலும் கூர்மையானவை. நம்முடைய மன உணர்வுகளை உணரவல்லவை. இதனை நான் வளர்த்த, வளர்த்துவரும் நாய்களிடம் கண்டிருக்கிறேன். அவற்றை நாய்கள் என்று எழுதிட கூசுகிறது. ஆகவே, அவை குறித்து ‘போரடிக்கிறது‘ என சலிப்படைபவர்களை நாம் பொருட்படுத்தாது கடந்து செல்லுதல் நலம்.
மேலும், நிறைவாக்கிட ஒன்று. கடந்த சில மாதங்களாக பணம் அனுப்பவில்லை. அதற்கான சூழல் அமையவில்லை. இன்று சொற்ப தொகையினை அனுப்பியதால் இக்கடிதம் எழுதும் எண்ணம் வலுப்பட்டது. தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம். எங்களைப் போன்றவர்கள் தங்களிடம் பெற்றுக் கொண்டதற்கு இது போன்ற சந்தாவெல்லாம் மிக அற்பமானது. உங்களுக்குத் தர வேண்டியது எங்களது கடமை என்ற உணர்வுடன் இதனை முடிக்கிறேன். வரும் மாதங்களில் தங்களுக்கு சந்தாவினைத் தவறாது அனுப்பும் சூழல் உருவாகப் பிரார்த்திக்கிறேன். முகமூடிகளின் பள்ளத்தாக்கு வாங்கிவிட்டேன். ஒரு நாளில் ஒரு பக்கம் மட்டுமே படிக்க முடிகிறது. தேர்ந்தெடுத்த கச்சிதமான சொற்கள், அருமை. 30 பக்கம் மட்டுமே படித்திருக்கிறேன். படித்ததையே மீண்டும் படித்து உள்வாங்கி அனுபவித்துப் படிக்கிறேன். அது குறித்துப் பின்னர்…..அசோகா நாவலுக்காக காத்திருக்கிறோம்.
அன்புடன்,
ஸ்ரீதர் மணியன்
அன்புள்ள திரு ஸ்ரீதர்,
பொதுவாக இளைஞர்களிடமிருந்தே எனக்குக் கடிதம் வருவது வழக்கம். இப்படி ஒரு கடிதம் ஒரு நடுத்தர வயது நண்பரிடமிருந்து வருவது அரிது. மிகவும் நன்றி.
சந்தா/நன்கொடை பற்றியெல்லாம் அந்த அளவு யோசிக்க வேண்டாம்.
முகமூடிகளின் பள்ளத்தாக்கை யாரும் இன்னும் முழுதாகப் படிக்கவில்லை போல் தெரிகிறது. நான் அதை ஆங்கிலத்தில் படித்த போது ஒரே அமர்வில் படித்தது ஞாபகம் வருகிறது. இத்தனைக்கும் நான் மிக மிக மெதுவாகப் படிக்கக் கூடியவன். ஒருமுறை படு வேகமாகப் படித்து விட்டு, அதன் சஸ்பென்ஸுக்காக – பிறகு இன்னொரு முறை நிதானமாகப் படித்தேன். மொழிபெயர்ப்புக்காகப் பல முறை படித்தது வேறு கதை. உங்களுக்கு எப்படி வசதியோ அப்படிப் படியுங்கள். ஆனால் அனுபவித்து அனுபவித்துப் படித்தால் நேரம்தான் ஆகும். சந்தேகம் இல்லை. இன்னும் அந்த நாவலுக்கு மதிப்புரை எதுவும் வரவில்லை.
அடியேன்,
சாரு
பின்வருவது சிவசக்திவேல் நயினார் முகநூலில் எழுதியது:
சாருவை வாசித்தல் எப்படி என்று சமீபத்தில் அபிலாஷ் சந்திரன் ஒரு காணொலியில் விரிவாகப் பேசியிருக்கிறார் . அதில் அவர் முதன்மையாக சாரு அவரையே புனைவதை விவரித்திருப்பார். சாருவின் கதைகள் வடிவமற்றவை, அவருடைய நாட்குறிப்புகளை நாவலாக்குவார் என்றெல்லாம் அந்த உரை நீளும்.
சமீபத்தில் நான் வாசித்த சாருவின் “நாகூர் தம்ரூட்டும், ஆட்டையாம்பட்டி முறுக்கும்” என்ற சிறுகதை அபிலாஷின் உரையை நினைவுபடுத்தியது. சாருவின் கதைகளில் அவரே கதை சொல்வதாக இருக்கும் கதைகளை வாசிப்பதில் எனக்குக் கூடுதல் ஆர்வம் உண்டு.
“முள்”, “மயக்கம்”, “ப்ளாக் நம்பர் 27, திர்லோக்புரி” , “இந்த ஊரில் எப்படி வாழ்கிறீர்கள்?” இந்த வரிசையில் தான் தம்ரூட் கதை.
இந்த தம்ரூட் கதையை வேறு எந்தத் தமிழ் எழுத்தாளரும் எழுத முடியாது. வாழ்வின் அனுபவங்களை புனைவதை மட்டும் வைத்து இந்த முடிவுக்கு வந்திடவில்லை. அது தொட்டுச் செல்லும் ஆழங்களும் அதற்காக அவர் எந்தக் கதாபாத்திரங்களையும் புனையாமல் புனைந்த விதமும்தான் என்னை இந்தக் கதையை மீண்டும் வாசிக்கத் தூண்டுகிறது. இந்தக் கதை பற்றி ஸ்ரீராம் இப்படிச் சொல்கிறார் “‘குடும்ப அமைப்பு’ என்ற ‘புனிதத்தின்’ மீது மூத்திரம் பெய்கிறது இந்தக் கதை.” இது தான் இந்தக் கதையின் பலம்.
சாருவின் தளத்தை வழக்கமாக வாசிப்பவர்கள் இந்தக் கதையின் சில திருப்பங்களை முன்னரே உணர்ந்திருப்பர். இதைத்தான் சாருவின் புனைவு உண்மைக்கு நெருக்கமானது என்று சொல்கிறார்கள்.
சாருவின் பெரும்பாலான கதைகளை ஒரு வடிவத்திற்குள் அடக்கமுடியாது. ஆனால் இந்தக் கதையின் வடிவம் பெரும்பான்மையான எழுத்துலகம் வரையறுத்திருக்கும் வரையறுப்பான, கதை துவங்கி நேர்கோட்டில் பயணித்து முடிவு என்ற ஒன்றை அடையும் பாணியைப் பின்பற்றியிருக்கிறது.