அத்தியாயம் 51

நான்தான் ஔரங்கசீப்… நாவலின் 51ஆவது அத்தியாயம் பற்றி முகநூலில் ஒரு வரி எழுதியிருந்தேன்.  அந்த அத்தியாயம் அந்த நாவலின் உச்சங்களில் ஒன்று என.  இதே போன்ற இடங்கள் நாவலில் வேறு சில பகுதிகளிலும் உண்டு.  உதாரணமாக, நாதிரா பானு தன் மார்பகங்களை நீரில் கழுவி “இதையே தாய்ப் பாலாகக் கொள்ளுங்கள்” என்று தன் கணவன் தாராவுக்காக இன்னொருவரிடம் கையேந்தும்போது சொல்லும் இடம். 

நான்தான் ஔரங்கசீப்… நாவலை அந்த நாவல் புத்தகமாக வரும்போது படிக்க இருப்பதாகப் பல நண்பர்கள் என்னிடம் சொன்னார்கள்.  இப்படி அத்தியாயம் அத்தியாயமாக விட்டு விட்டுப் படிக்க இயலவில்லை.  நானுமே அப்படித்தான் செய்திருப்பேன்.  ஆனால் சுவாரசியமாக இருந்தால் அத்தியாயம் அத்தியாயமாகவும் படிப்பேன்.  நான்தான் ஔரங்கசீப்… நாவலை புத்தகமாகப் படிக்க இருப்பவர்கள் ஒரு விஷயத்தை இழக்கிறார்கள்.  காரணம், புத்தகமாக வரும்போது நாவலின் நடை வேறாக இருக்கும்.  வாக்கியத்துக்கு வாக்கியம் மாறுபடும்.  ஒரு உதாரணம் சொல்லலாம்.  உர்தூவில் பெரியவர்கள் ஹம் என்றே பேசுவார்கள்.  தமிழில் வரும்போது “நாங்கள் என்ன யோசிக்கிறோம் என்றால்…” என்று ஆகும்.  நான் என்ன யோசிக்கிறேன் என்றால்… தமிழில் கூட பெரிய மனிதர்கள், பண்ணையார்கள், சந்நிதானங்கள் எல்லாம் அப்படித்தான் பேசுவார்கள்.  தமிழவன் கூட முப்பது ஆண்டுகளுக்கு முன் ஒரு பேட்டியில் “நான் 1948இல் பிறக்கிறேன்” என்று சொன்னார்.  உடனே நான் ஒரு தமிழ்ப் பேராசிரியருக்கு இறந்த காலம், நிகழ் காலம் தெரியவில்லை பாருங்கள் என்று கிண்டலாக எழுதினேன்.  அவருக்கு எல்லாம் தெரியும்.  எல்லாம் தெரியும் என்ற மமதையே அந்த இடத்தில் கடந்த காலம் நிகழ் காலமாக மாறியது.  இதற்குத்தான் காலவழுவமைதி என்பார்களோ?  எனக்கு இலக்கணம் தெரியாது. 

ஒரு இயக்குனர் ஒரு தயாரிப்பாளரிடம் பேசிக் கொண்டிருந்த போது கவனித்தேன், நாம எத்தனைப் படம் பண்ணிருக்கோம் என்று கேட்டார்.  மிரண்டு போனேன்.  இயக்குனர் அன்றைய தினம்தான் அந்தத் தயாரிப்பாளரையே சந்திக்கிறார்.  இவர்கள் எப்படி சேர்ந்து தயாரித்தார்கள்?  உடனே எனக்குப் புரிந்து விட்டது.  தயாரிப்பாளரை இயக்குனர் நீங்கள் எத்தனைப் படம் பண்ணியிருக்கிறீர்கள் என்று கேட்கக் கூடாது.  நீங்கள் என்பது மரியாதைக் குறைவு.  அதனால்தான் நீங்கள் நாம் ஆயிற்று.  இப்படியாக ஔரங்கசீப் நாவல் அச்சுக்குப் போகும்போது நடையில் பெரிய மாற்றங்கள் இருக்கும்.  இது ஒரு சின்ன உதாரணம்தான்.  நாவலே கூட வேறு மாதிரி மாறலாம்.  நான் தொடர்ந்து மாற்றி மாற்றி எழுதிக் கொண்டிருக்கும் ஆள் என்பதை மறந்து விடாதீர்கள்.  எனவே bynge.in இல் வரும் இந்த வடிவம் அச்சு நூலில் இருக்காது. 

இனி ஔரங்கசீப் பற்றி சில கடிதங்கள்:

சாரு,

ஒரு இடத்தில் முராத் பக்‌ஷ் யார் நல்லவர் யார் கெட்டவர் என்றெல்லாம் நியாயப்படுத்திப் பேசுவது போல் உள்ளது. இந்த நாவலே வேறு லெவல். காகிதத்தில் இது நீக்கப்பட வேண்டும் என்பது எனது தாழ்மையான வேண்டுகோள். ஹனுமார் பகுதியும் அஃதே. பொழிப்புரை வேண்டாம் ப்ளீஸ்.

– ப்ரஸன்னா

டியர் ப்ரஸன்னா,

இந்த நாவல் முழுவதுமே என்னுடைய குரல் என்பது எங்குமே இல்லை.  ஔரங்கசீப் தன்னை ஒரு உத்தமனாகவே நினைத்தார்.  அதைப் போலவேதான் ஒவ்வொருவரும் நினைக்கிறார்கள்.  நான் என் நண்பன் ஒருத்தனை அவன் இருந்த சிறைச்சாலைக்குப் போய் சந்தித்தேன்.  அப்போது அவன் சொன்ன விஷயம் எனக்குப் பெரும் ஆச்சரியத்தை அளித்தது.  உன்னோடு எத்தனை பேர் இருக்கிறார்கள் என்று கேட்டேன்.  ஆறு பேர் என்றான்.  என்னென்ன குற்றம்?  ஒருத்தன், குழந்தைகளுக்கான உணவில் (அல்லது மருந்தில், எது என்று இப்போது ஞாபகம் இல்லை) கலப்படம் செய்து, அதனால் சில குழந்தைகள் இறந்து போனதால் சிறையில் இருக்கிறான்.  (இது அப்போது இந்தியாவில் மிகவும் பிரபலமான செய்தி).  இன்னொருத்தன், வங்கி மோசடி.  இப்படி ஆறு பேர்.  என் நண்பன் மீதும் படு பயங்கரமான குற்றச்சாட்டுதான்.  ஆட்கள் எப்படி என்று கேட்டேன்.  ”ஐயோ, ஒவ்வொருத்தனும் மகாத்மா மாதிரி பேசுகிறான்.  அது மட்டும் அல்ல, இந்த ஜெயிலில் ஒருத்தன் கூட குற்றவாளி அல்ல, எல்லாருமே நிரபராதிதான்.”  அட்டகாசமாகச் சிரித்தபடி சொன்னான் நண்பன்.  இப்படித்தான் ஔரங்கசீப் நாவல் முழுவதுமே.  ஒரு வாசகனாகத்தான் நான் இதை எழுதிக் கொண்டிருக்கிறேன்.  ஒவ்வொருத்தர் பற்றி எழுதும் போதும் நான் அவர்களாக மாறி விடுகிறேன்.  அவ்வளவுதான். 

என் நண்பர் கிருஷ்ணா இப்படி எழுதுகிறார்:  இந்த அத்தியாயத்தை எழுதும்போது நீங்கள் எப்பேர்ப்பட்ட வலியை உணர்ந்திருப்பீர்கள் என்பதை நினைத்துக் கொண்டே படித்தேன்.  இப்படிப் படிப்பது இதுவே முதல் முறை.  முராதின் வேதனையும் அதை எழுதும்போது உங்கள் வலியும் சேர்ந்து எனக்குள் மின்சாரம் பாய்வது போல் பாய்ந்தது.  Conducted into me என்று ஆங்கிலத்தில் எழுதியிருந்தார்.  என்னால் முடிந்த வரை தமிழில் எழுதினேன். 

சாரு

அத்தியாயம் 51 பற்றி ப்ரஸன்னா பிஞ்ஜ் செயலியிலேயே சிலதை எழுதியிருக்கிறார்:

அற்புதமாக இருந்தது சாரு! கவிதை வாசிப்பில் எனக்கு ரசனையோ அனுபவமோ இல்லை.  ஆனால் அந்த அத்தியாயம் ஒரு கவிதை மாதிரி – Dark Poem மாதிரி – இருந்தது. இதுவரை வந்த அத்தியாயங்களின் உச்சம் அத்தியாயம் 51!

தவிர, முராத்தின் வரலாற்றை பல வருடங்களுக்கு முன்பு ஹாய் மதன் ஒரு புத்தகத்தில் எழுதியிருந்தார். அதைத் தவிர வேறு எதுவும் தெரியாது. ஆனால் இங்கு இது ஒரு நாவல், புனைவு. அதை ஒரு காவியம் போல் எழுதியிருக்கிறீர்கள். என்னுடைய அவதானம் சரியா என்று தெரியவில்லை, வரலாற்றையும் புனைவையும் எந்த அளவுக்குப் பிரிக்கவியலா நுட்பங்களுடன் கலந்தால் காவியம் பிறக்கும் என்பதற்கு அத்தியாயம் 51 ஒரு ஆகச் சிறந்த உதாரணம்!

ப்ரஸன்னா.

நன்றி ப்ரஸன்னா, நன்றி கிருஷ்ணா.